Sunday, December 29, 2013

உலக சிக்கன தினம் 30-08-13

இந்த பழக்கம் உங்களிடம் இருந்தால், எதிர்காலத்தில் என்ன நடந்தாலும் உங்களுக்கு கவலையே ஏற்படாது. அது தான் சேமிப்பு.

1924 அக்., 31ல், இத்தாலியின் மிலன் நகரில், சர்வதேச சேமிப்பு வங்கிகளின் மாநாடு நடந்தது. இதில் பல நாடுகளைச் சேர்ந்த, வங்கிகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். சிக்கனத்தின் உன்னதத்தை உலகுக்கு உணர்த்தும் வண்ணம், அக்.31ம் தேதி உலக சிக்கன தினம் கடைப்பிடிக்க முடிவு செய்யப்பட்டது.

எது சிக்கனம்?

சேமிப்பின் அடிப்படையே சிக்கனம் தான். வளங்களை வீணடிக்காமல், திறமையாக கையாள்வதை இது குறிக்கும். அதாவது அவசிய தேவைகளை மட்டும் நிறைவேற்றிக்கொள்வது. சிக்கனமும், சேமிப்பும் ஒரு குடும்பத்துக்கு மட்டும் பயன் அளிப்பதில்லை. நாட்டின் பொருளாதார வளர்ச்சியிலும் முக்கிய பங்கு வகிக்கிறது. இதனாலேயே வங்கிகள், சேமிப்பு கணக்குக்கு அதிக வட்டி அளித்து ஊக்கப்படுத்துகின்றன. சிக்கனமாக சேமிக்கப்பட்ட பணம் தான், எல்லா தொழில்களுக்கும் மூலதனம்.

என்ன வித்தியாசம்?

பொதுவாக, செலவு செய்வதை கஞ்சத்தனம், சிக்கனம், ஆடம்பரம், ஊதாரித்தனம் என நான்கு வகையாக பிரிக்கலாம். (i) கஞ்சத்தனம் என்பது, அவசிய தேவைகளைக்கூட நிறைவேற்ற மனம் இல்லாதவர்களைக் குறிக்கும். இது அவர்களின் வாழ்க்கையில் பல பிரச்னைகளை ஏற்படுத்தும். (ii) சிக்கனம் என்பது தகுதியறிந்து செலவு செய்வது. இது சுமூகமான வாழ்க்கைக்கு சிறந்த வழி. (iii) மூன்றாவதாக ஆடம்பரம் என்பது, மற்றவர்களிடம் வசதியானவன் எனக் காட்டுவதற்காக தகுதி மீறி செலவு செய்வது. (iv) நான்காவதாக உள்ள ஊதாரித்தனம் என்பது, கண்மூடித்தனமாக தேவையில்லாத செலவுகளை செய்வது. இது அழிவுப்பாதைக்கு அழைத்துச் செல்லும்.

சேமிப்பு பழக்கத்தை எறும்பு, தேனீக்கள் ஆகியவற்றிலிருந்து கற்றுக்கொள்ளலாம். நமது முன்னோர் இப்பழக்கத்தை சரியாக செய்தனர். அவர்கள் பணத்தை மட்டுமல்லாமல், பண்டங்களையும் சேமித்தனர். எதிர்கால தேவையை கருத்தில் கொண்டு, இருக்கும்போதே சேமித்துக்கொள்ளும் பழக்கத்தை, சிறு வயது முதல் ஏற்படுத்த வேண்டும். குடும்பத்தில் அனைவரும் சிக்கனமாக இருந்தால் தான் சேமிப்பு உருவாகும். இன்று வரை சிக்கனம் என்றால் என்ன என்று கேட்பவராக இருந்தாலும் பரவாயில்லை. இனியாவது சேமிக்க தொடங்குங்கள். மகிழ்ச்சியாக வாழலாம்.

No comments:

Post a Comment