Wednesday, July 30, 2014

வேளாண் பொருளாதாரம் என்ற படிப்பை அறிவோமா?

அக்ரிகல்சுரல் எகனாமிக்ஸ் என்ற பெயரை கேட்டதும், பலருக்கும் ஒரு விஷயம் புரிந்திருக்கும். வேளாண்மை மற்றும் பொருளாதாரம் ஆகிய இரண்டு துறைகளின் அம்சங்களும் கலந்த ஒரு துறை என்பதுதான் அது.

வேளாண் வணிகத்தில் சிறப்பான முடிவுகளை மேற்கொள்வது, உற்பத்தி முறைகள் மற்றும் வேளாண் வணிகத்தில் நிலவும் சிக்கல்களை தீர்ப்பது போன்றவற்றில், பொருளாதார கோட்பாடுகளை பயன்படுத்துவதுதான் அக்ரிகல்சுரல் எகனாமிக்ஸ். இப்படிப்பு, அக்ரோனாமிக்ஸ் என்றும் அழைக்ப்படுகிறது. இது ஒரு முதுநிலைப் பட்டப் படிப்பு.

இருபதாம் நூற்றாண்டின் திருப்பத்தில், அக்ரோனாமிக்ஸ் படிப்பு பிரபலமடைந்தது. வேளாண் பொருட்களுக்கான சந்தை மதிப்பு மற்றும் தேவையை கணித்தல், பயிர்களை மேற்பார்வையிடுதல், விலைகளை நிர்ணயித்தல், கால்நடைகளின் நலனை கவனித்தல் ஆகிய பணிகளோடு,
உபகரணங்கள், ஏற்றுமதி - இறக்குமதி மற்றும் உற்பத்தி தொடர்பான புதிய முறைகள் போன்றவற்றையும் வேளாண் பொருளாதார நிபுணர் (Agricultural Economist) கவனிக்கிறார்.

தற்போதைய காலகட்டத்தில், இத்துறைக்கான வாய்ப்புகள் மிகவும் அதிகம்.
கிராமப்புற நிதி மற்றும் நிறுவனங்கள், உணவு மற்றும் ஊட்டச்சத்து பொருளாதாரம், சுற்றுச்சூழல் மற்றும் இயற்கை வள பொருளாதாரம் ஆகியவை பல்வேறு பிரிவுகளை இத்துறை உள்ளடக்கியுள்ளது. வேளாண் உற்பத்தி சார்ந்த அறிவோடு, நன்கு பயிற்சிபெற்ற மாணவர்களின் தேவை, இத்துறையில் பெரியளவில் அதிகரித்து வருகிறது. இதன்மூலம், இத்துறையில் கூடுதல் பணி வாய்ப்புகள் ஏற்படுகின்றன. வேளாண் உற்பத்தி, சந்தைப்படுத்தல், நிதி, பாதுகாப்பு உள்ளிட்ட பிரிவுகளில், பப்ளிக் சர்வீஸ் பணி வாய்ப்புகள், தேசிய, மாநில மற்றும் உள்ளூர் நிலைகளில் கிடைக்கப் பெறுகின்றன.

அக்ரிகல்சுரல் எகனாமிக்ஸ் படித்த மாணவர்கள், கமர்ஷியல் மற்றும் பண்ணை வங்கிகள் போன்ற கடன்தரும் நிறுவனங்களிலும் பணி வாய்ப்புகளைப் பெறலாம். பொருளாதார தாராளமயமாக்கல் உலகில், சர்வதேச நிறுவனங்கள் பெருகி வருவதால், சர்வதேச வேளாண்மை மற்றும் மேம்பாட்டு துறையில் கிடைக்கும் பணி வாய்ப்புகள் அதிக சம்பளம் நிறைந்தவை. எனவே, இந்த வாய்ப்புகளைப் பெறுவதற்கு மாணவர்கள் பெரிதும் விரும்புகிறார்கள்.

சில முக்கிய இந்திய கல்வி நிறுவனங்கள்
தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம் - கோயம்புத்தூர்
பிர்சா வேளாண் பல்கலை - ராஞ்சி, ஜார்க்கண்ட்
சந்திரசேகர் ஆசாத் வேளாண் மற்றும் தொழில்நுட்ப பல்கலை - கான்பூர், உத்திரப் பிரதேசம்
வேளாண்மை கல்லூரி - பீகானீர், ராஜஸ்தான்
கேரள வேளாண்மை பல்கலை - திருச்சூர்
சர்தார் வல்லபாய் பட்டேல் வேளாண்மை மற்றும் தொழில்நுட்ப பல்கலை - மீரட், உத்திரப் பிரதேசம்
வேளாண் அறிவியலுக்கான பல்கலை - பெங்களூர்
சத்ரபதி சாகுஜி மகராஜ் பல்கலை - கான்பூர், உத்திரப்பிரதேசம்
இந்திரா காந்தி வேளாண் பல்கலை - ராய்ப்பூர்
அலகாபாத் பல்கலை - அலகாபாத், உத்திரப் பிரதேசம்
இந்திய வேளாண் ஆராய்ச்சி கல்வி நிறுவனம் - டில்லி
பனாரஸ் இந்து பல்கலை - பனாரஸ்
ஆச்சார்யா என்.ஜி. ரங்கா வேளாண் பல்கலை - ஐதராபாத்.

No comments:

Post a Comment