Friday, November 7, 2014

''அணிலே, அணிலே, ஓடிவா!
அழகு அணிலே ஓடிவா!
கொய்யா மரம் ஏறிவா!
குண்டுப்பழம் கொண்டு வா!
பாதிப் பழம் உன்னிடம்
பாதிப் பழம் என்னிடம்
கூடிக்கூடி இருவரும்
கொறித்துக் கொறித்துத் தின்னலாம்”

********************************

மாம்பழமாம் மாம்பழம் மல்கோவா மாம்பழம்
சேலத்து மாம்பழம் தித்திக்கும் மாம்பழம்
அழகான மாம்பழம் அல்வா போல் மாம்பழம்
தங்க நிற மாம்பழம் உங்களுக்கும் வேண்டுமா?
இங்கு ஓடி வாருங்கள்;பங்கு போட்டுத் தின்னலாம்.

*******************************

''வட்ட மான தட்டு.
தட்டு நிறைய லட்டு.
லட்டு மொத்தம் எட்டு.
எட்டில் பாதி விட்டு,
எடுத்தான் மீதம் கிட்டு.
மீதம் உள்ள லட்டு
முழுதும் தங்கை பட்டு
போட்டாள் வாயில் பிட்டு.
கிட்டு நான்கு லட்டு;
பட்டு நான்கு லட்டு.
மொத்தம் தீர்ந்த தெட்டு.
மீதம் காலித் தட்டு!”

********************************

''ஞாயிற்றுக்கிழமை பிறந்த பிள்ளை
நன்றாய்ப் பாடம் படித்திடுமாம்.
திங்கட்கிழமை பிறந்த பிள்ளை
தினமும் உண்மை பேசிடுமாம்
செவ்வாய்க்கிழமை பிறந்த பிள்ளை
செய்வதை ஒழுங்காய்ச் செய்திடுமாம்
புதன்கிழமை பிறந்த பிள்ளை
பெற்றோர் சொல்படி நடந்திடுமாம்
வியாழக்கிழமை பிறந்த பிள்ளை
மிகவும் பொறுமை காட்டிடுமாம்.
வெள்ளிக்கிழமை பிறந்த பிள்ளை
வேண்டும் உதவிகள் செய்திடுமாம்
சனிக்கிழமை பிறந்த பிள்ளை
சாந்தமாக இருந்திடுமாம்
இந்தக் கிழமை ஏழுக்குள்
எந்தக் கிழமை நீ பிறந்தாய்?”

*******************************

''தோலை உரித்த பிறகு தான்
சுளையைத் தின்று பார்க்கலாம்!
ஓட்டை உடைத்த பிறகு தான்
உள்ளே பருப்பைக் காணலாம்!
உலையில் அரிசி வெந்து தான்
உண்டு பசியைப் போக்கலாம்! …
பாடு பட்ட பிறகு தான்
பலனைக் கண்டு மகிழலாம்!”

No comments:

Post a Comment