Tuesday, October 14, 2014

உலக மன நல தினம்

மனநோய் என்றாலே அடிப்பதும், கடிப்பதும், தெருவில் ஓடுவதும் தான் என்ற எண்ணத்தை, மக்கள் மனதில் முத்திரையாக குத்தியுள்ளனர். இதை தீவிர மனநோய், மனச்சிதைவு நோய் (சிசோபெர்னியா) என்பர். இந்த ஆண்டு, உலக சுகாதார நிறுவனத்தின் உலக மனநல தினத்திற்கான மந்திர வார்த்தை... 'மனச்சிதைவு நோயுடன் வாழ்வது' குறித்து தான்.தன்னுணர்வின்றி தெருவில் திரிவதோ, குழப்பமான மன நிலையோ தான் இதற்கு காரணம்.

எல்லா மனநோய்களையும் இந்த வகையில் சேர்க்கமுடியாது. உலகம் முழுவதிலுமே இந்நோயால் பாதிக்கப்பட்டவர்கள் ௧ சதவீதம் பேர் உள்ளனர். தமிழகத்திலும் இதே சதவீதம் பேர் உள்ளனர். கஞ்சா புகைப்பவர்களுக்கு மூளையில் செயற்கை ரசாயனம் சுரப்பதால், மனச்சிதைவு நோய் ஏற்படும் வாய்ப்பு அதிகம். இது நோயை நாமே விரும்பி வரவழைப்பதற்கு சமம்.மனநோயைப் பொறுத்தவரை உடல் நோய்களைப் போலவே மிதமான நோய், தீவிரமான நோயாக பிரிக்கலாம். மனப்பதட்டம், மனச்சோர்வு போன்ற மிதமான மனநோய்களுக்கு 'கவுன்சிலிங்' மூலமும், மாத்திரைகளின் மூலமும் எளிதில் குணப்படுத்தலாம்.

தனிமையைத் தேடும்: மனச்சிதைவு நோய்க்கு காரணம், மூளையில் ஏற்படும் ரசாயன மாற்றம் தான். மூளையில் சுரக்கும் 'டோப்பமின்' ரசாயனம் சமநிலையின்றி குறையும் போதோ, அதிகமாகும் போதோ சிக்கல் வருகிறது. ரசாயனம் குறையும் போது எதிர்மறையான சிந்தனைகள் ஏற்படுகின்றன. எதிலும் நாட்டமில்லாத நிலை, ஆர்வமற்ற நிலை, தனிமையை விரும்புவது, குறிக்கோள் இன்றி இருப்பது, தன்னைத் தானே கவனித்துக் கொள்ளாமல் இருப்பது போன்றிருப்பர்.

மாயக்குரல் கேட்குதே : 'டோப்பமின்' ரசாயனம் அதிகரிக்கும் போது வேறுவிதமான பிரச்னைகள் ஏற்படும். காதில் யாரோ பேசுவது போலவும், சத்தம் போடுவது, திட்டுவது போன்று உணர்வர். யாரோ தன்னைப் பின்தொடர்வது போன்று நினைப்பர். செய்வினை வைத்துள்ளதாக பயப்படுவர். தெருவில் செல்பவர்கள் தன்னைப் பற்றி தான் பேசுகின்றனர் என தவறாக நினைப்பர். கணவன், மனைவிக்குள் சந்தேகம் அதிகமாவதும் இதனால் தான். யாரோ பேசுவது போல உணர்ந்து தனக்குத் தானே பேசிக் கொள்வர்.
இரையாகும் விடலைப்பருவம்: தாயின் கருவில் இருக்கும் போது வைரஸ் தாக்குதல், சத்தான உணவு எடுத்துக் கொள்ளாதது போன்றவையும் காரணமாக இருக்கலாம். ஆனால் இதுதான் காரணம் என்று சொல்லமுடியாது.
கருவிலேயே இப்பிரச்னை ஆரம்பித்து விடும் என்றாலும் மழலைப் பருவத்தில் வெளியே தெரியாது. அமைதியான ஆட்கொல்லி போல, வளர்இளம் பருவம் வரும் போது தன் வேலையை காண்பித்து விடும்.
ஆண்களுக்கு 16 முதல்18 வயதில் இப்பிரச்னை ஆரம்பிக்கிறது. 'என் மகன் பத்தாவதில் நன்றாக படித்தான். நிறைய மார்க் எடுத்தான். பிளஸ்௨ வில் படிக்க மாட்றான். பேச மாட்றான். தனியாவே இருக்கான்' என்று சொல்லி, 'கவுன்சிலிங்' வருபவர்கள் அதிகம். உண்மையில் இதற்கு 'கவுன்சிலிங்' மட்டுமே சிகிச்சை அல்ல.

பேய் கோளாறா : பெண்களுக்கு 25 வயதிலும், சிலநேரங்களில் அதற்கு முன்பாகவும் இப்பிரச்னை வரும். அதனால் தான் திருமணமான பெண்களுக்கு, 'கல்யாணத்துக்கு முன்னால் நல்லாத் தான் இருந்தா... இப்பத்தான் இப்படி ஆயிட்டா' என்று சொல்வதைக் கேட்டிருப்போம். இதை பேய் கோளாறு, எங்கேயோ போய் பயந்துட்டா... செய்வினைக் கோளாறு என்று தவறாக சொல்கின்றனர்.

100 நோயாளிகளில் 50௦ பேரே சிகிச்சைக்கு வருகின்றனர். அதுவும் முற்றிய நிலையில் வருகின்றனர். குடும்பத்தினரை அடித்தாலோ, காயப்படுத்தினாலோ, துாங்கவிடாமல் தொந்தரவு செய்தால் தான் மனநோய் என்று நினைக்கின்றனர்.

அமைதியே ஆபத்து :ஆனால் யாரையும் தொந்தரவு செய்யாமல், யாரிடமும் பேசாமல் அமைதியாக இருந்தால் கண்டு கொள்வதில்லை. இதுதான் ஆபத்தான நிலையின் துவக்கம். இந்த நிலையில் உடனடியாக மருத்துவ சிகிச்சை அளிப்பதே நல்லது.

ஆணோ, பெண்ணோ ஆரம்ப கட்டத்திலேயே சிகிச்சை பெறவந்தால் மூளையின் ரசாயன மாற்றத்தை மருந்துகளின் மூலம் சரிசெய்யலாம். முற்றிய நிலையில் குணப்படுத்தமுடியாது. நோயின் தீவிரத்தை கட்டுப்படுத்த முடியும்.

பெற்றோரில் யாருக்காவது ஒருவருக்கு இப்பிரச்னை இருந்தால் மரபணு ரீதியாக வருவதற்கு வாய்ப்பு உண்டு. இருவருக்குமே இருந்தால், பிறக்கும் குழந்தைகளும் 50௦ சதவீதம் பாதிக்கப்பட வாய்ப்புண்டு.நோய் முற்றிய பின் அவர்களை புறக்கணிக்கும் போது தான் வீதியில் நடை பிணங்களாக உலாவுகின்றனர். அவர்களும் நம்மைப் போல மனிதர்களாக வாழ... ஆரம்பநிலையிலேயே மனநோயைக் கண்டறிவோம்... மனநிம்மதியுடன் வாழ வழிசெய்வோம்.
-டாக்டர் ஜி.ராமானுஜம், மனநல பேராசிரியர்,அரசு மருத்துவக் கல்லுாரி, திருநெல்வேலி.

No comments:

Post a Comment