Monday, February 4, 2013

சடுகுடு:

இவ்விளையாட்டு பலிஞ்சடுகுடு எனவும், பலீன் சடுகுடு எனவும் வழக்கில் வழங்கப் பெறும். பலிஞ்சப்பளம் என ஆந்திராவிலும், வங்காளத்திலும், குடுடுடூ என மகாராட்டிரத்திலும் அழைக்கப்பட்டு வருகிறது.

பழந்தமிழ்நாட்டில் அரசர்களிடையே நிரைகளைக் கவருபவர் (வெட்சித்திணை) கவரப்பட்ட நிரைகளை மீட்பவர் (கரந்தைத் திணை) என இரு கட்சியினர் இருந்தனர். இது தரப்பினருக்குமிடையே அவரவர் நாட்டின் எல்லைக் கோடு அமைந்திருக்கும். நிரை கவர வருபவர்களை வரவிடாமல் வீரர்கள் காவல் காத்து நிற்பர்.

 
காவலைக் கடந்து நிரையினைக் கவர்ந்து வருதல் வேண்டும். நிரைகளை (மாட்டு மந்தையை) கவர வருபவர் தம்மை வளைத்துப் பிடிக்கும் எதிர்கட்சி வீரரிடம் போரிட்டுத் திரும்ப மீள்வர். மீறிவந்து தம் நாட்டு எல்லையினை அடைந்து விட்டால் எதிர்படையினர் ஒன்றும் செய்ய இயலாது. மாறாக, எல்லைக் கோட்டை அடையும் முன் பிடிபட்டு விட்டால் சிறையிலிடப்படுவார். போர் முடிந்தவுடன் சிறைபட்ட வீரர் மறுபடியும் தம் நாட்டை அடைவர். நிரைகவர அல்லது நிரை மீட்கச் சென்றதால் ஏற்பட்ட போரின் முடிவு வெற்றி அல்லது தோல்வியில் முடிவுறும். போருக்கு செல்வதற்கு முன் தங்கள் பக்கமே வெற்றி கிட்ட வேண்டுமென்று இருதரப்பினருமே காளியை வணங்கினர். இச்சமயம் சடுகுடுப்பை அல்லது குடுகுடுப்பை என்ற பறையால் ஒலியெழுப்பி, பலி கொடுத்து வழிபட்டனர். இப்போர்ச் செயல் பாட்டின் தொடர்ச்சியால் பலிஞ்சடுகுடு என்ற பெயர் கொண்ட விளையாட்டு பழந்தமிழரிடையே உருவானது. இன்றும் தமிழ்நாட்டு கிராமங்களில் விளையாடப்படுகிறது.
வரையறுக்கப்பட்ட ஆடுகளத்தில் இருகட்சியினரையும் பிரிக்கும் விதமாய் நடுக்கோடு வரையப்பட்டிருக்கும். விளையாடுகையில் சடு...குடு...குடு என்றோ கிராமத்துப் பாடல்களையோ, வேறு நையாண்டிப் பாடல்களையோ மூச்சை அடக்குவதற்காகப் பாடுவது மரபாக உள்ளது. நடுக் கோட்டிலிருந்து பாடிப் போகிறவரை எதிர்கட்சிக்காரர்கள் பிடித்து விட்டால் அவர் களத்திலிருந்து வெளியேறி விடவேண்டும். பாடிப்போனவர் எதிர்க்கட்சிக்காரரைத் தொட்டு விட்டு பிடிபடாமல் மூச்சடக்கி வந்து நடுக்கோட்டினைத் தொட்டு விட்டால், தொடப்பட்டவர் களத்திலிருந்து வெளியேறிக் கொள்ள வேண்டும்.

இவ்விளையாட்டு இரு அணிகளுக்கு இடையே நிகழும் ஆட்களைப் பிடிக்கும் ஒரு போட்டி. ஒவ்வொரு அணியிலும் ஏழு பேர் இருப்பர். மொத்த விளையாட்டு நேரம் 40 மணித்துளிகள் (நிமிடங்கள்). இவ்வாட்டம் விளையாட வெறும் நீள்சதுரமான (ஆடுகளம்) இடம் இருந்தால் போதும். இந்த ஆடுகளத்தை ஒரு நடுக்கோட்டால் இரண்டாக பிரித்து ஒருபக்கத்துக்கு ஒரு அணியாக இரு அணியினரும் இருப்பர். ஆட்டக்காரர்கள் எப்பொழுதும் புற எல்லைக்கோடுகளைத் தாண்டி செல்லலாகாது. இவ்விளையாட்டுக்கு ஒரு நடுவரும் தேவை.

ஒரு அணியில் இருந்து யாரேனும் ஒருவர் புறப்பட்டு நடுக்கோட்டைத் தொட்டுவிட்டு ஒரே மூச்சில் "கபடிக் கபடி" (அல்லது "சடுகுடு") என்று விடாமல் கூறிக் கொண்டே எதிர் அணியினர் இருக்கும் பகுதிக்கு சென்று எதிர் அணியினரைக் கையாலோ, காலாலோ தொட்டுவிட்டுப் எதிர் அணியினரிடம் பிடிபடாமல் நடுக்கோட்டைத் தாண்டி தம் அணியிடம் திரும்பிவரும் ஒரு வகை விளையாட்டு. தொடுபட்டவர் ஆட்டம் இழப்பார். ஆனால் எதிரணியினர் சூழ்ந்து பிடிக்க வருவர். மூச்சு விடாமல் 'கபடிக் கபடிக்" என்று சொல்லிக்கொண்டே எதிராளியைத் தொட்டுவிட்டு அகப்படாமல் திரும்பிவரவேண்டும், அகப்பட்டால் சென்றவர் ஆட்டமிழப்பார். மூச்சு விடாமல் 'கபடிக் கபடிக்' என்று சொல்வதற்குப் பாடுதல் என்று பெயர். தம் அணிக்குத் திரும்பும் முன் பாடுவர் பாட்டை நிறுத்தினாலும் ஆட்டம் இழப்பர்.
ஆண்களுக்கான சடுகுடுவும், பெண்களுக்கான சடுகுடுவும் சற்று வேறுபடும்.

ஆடுகளம்
ஆடுகளம், மேடு பள்ளம் இல்லாத ஒரு சமதளமாக இருக்க வேண்டும். ஆட்கள் கீழே விழுவதும், இழுக்கப்படுவதும் நிகழ்வதால், தரை மண் அல்லது மரத்தூள், மணல்,பஞ்சு மெத்தை பரப்பியதாக இருக்கவேண்டும். கட்டாந்தரையாக (காங்க்கிரீட்டாக) இருப்பது நல்லதல்ல. ஆண்கள் ஆடும் களம் 12.5 மீ x 10 மீ பரப்பு கொண்டதாகும். பெண்கள் ஆடும் களம் 11 மீ x 8 மீ ஆகும். ஆடுகளத்தின் எல்லைகளக் குறிக்கும், கோடுகளும் மற்றும் களத்தைப் பிரிக்கும் கோடுகளும் 2 அங்குல (5 செ.மீ) அளவினதாக இருக்க வேண்டும்.

 சடுகுடு உலகக் கோப்பை
ஆடவர் விளையாட்டான சடுகுடு சிறுவர்களிடையேயும் இடம் பெறுகிறது. பழந்தமிழர் காலத்திலிருந்து விளையாடப் பெறும் சடுகுடுவின் தொடர்ச்சியாய் தற்போதைய விளையாட்டான கபடி விளங்குகிறது. கபடி விளையாட்டு இப்போது உலகம் முழுவதும் விளையாடப்படுகிறது. விளையாடுகையில் மூச்சினை அடக்குவதற்கு கபடி....கபடி என்ற பொருளற்ற சொல் பாடப்படுவதால் இவ்விளையாட்டு கபடி என்று பெயர் பெற்றது. உலகப் பொதுவான விதிமுறைகள் கொண்டு கபடி விளையாட்டு திகழ்கிறது. இந்திய கபடி அணியில் இடம் பெற்றிருக்கும் தலைச்சிறந்த வீரர்கள் தமிழ்நாட்டைச் சாந்தவர்களாகவே உள்ளனர். இந்திய அணி தற்போது உலகிலேயே முதலிடம் வகிக்கும் சிறந்த அணியாக தொடர்ந்து திகழ்ந்து வருகிறது. தமிழ் நாட்டு கபடி வீரர்களின் பங்கேற்பால் இந்தியணி உலக அளவில் விளையாடி பலமுறை தங்கப்பதக்கங்களை வென்றுள்ளது.

மகளிர் சடுகுடு
சடுகுடு உலகக்கோப்பை முதன்முதலாக 2004ஆம் ஆண்டில் ஆடப்பட்டது. பின்னர் 2007ஆம் ஆண்டிலும் 2010ஆம் ஆண்டிலும் ஆடப்பட்டன. இதுவரை இந்தியாவே வெல்லப்படாத உலகக்கோப்பை வாகையாளராக இருந்து வருகிறது. இருமுறை இரண்டாவதாக வந்து அடுத்த மிகப்பெரும் வெற்றியை ஈரான் பெற்றுள்ளது. 2010ஆம் ஆண்டு உலகக்கோப்பையில் பாக்கித்தான் இரண்டாவதாக வந்தது.

No comments:

Post a Comment