Sunday, December 29, 2013

மறதியை அதிகரிக்கும் உணவுகள்:

சத்தான உணவை, சரியான அளவு எடுத்துக்கொண்டால் உடலில் நோய்க்கு இடமில்லை. அனைத்து மருத்துவ முறைகளும் வலியுறுத்துவது இதைத் தான். இப்போதெல்லாம், எது கிடைத்தாலும் உட்கொள்வது வழக்கமாகி விட்டது. அதிலும் "பாஸ்ட் புட்" வகைகள் எந்த சுவையிலிருந்தாலும் தயவு தாட்சண்யம் இல்லாமல் "உள்ளே" தள்ளுகிறோம். இதனால் உடற்பருமனில் துவங்கி, எல்லா வகையான வியாதிகளும் வரிசைகட்டி நிற்கின்றன.சமீபத்தில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில், சில வகை உணவுகளை உட்கொள்வதால் அறிவு மழுங்குகிறது எனவும் மறதி அதிகரிக்கிறது எனவும் தெரிய வந்துள்ளது. அவை:

இனிப்பு வகைகள்:

இனிப்பு பதார்த்தங்கள், பல வியாதிகளை உடலுக்கு கொண்டு வருகின்றன. மூளை, ஞாபக சக்தி ஆகியவற்றை கெடுக்கிறது. இனிப்பை தொடர்ந்து அதிகமாக எடுத்துக் கொள்பவர்களுக்கு, நரம்பியல் கோளாறுகளும் ஏற்படுகிறது. குழந்தைகளுக்கு கற்பதில் குறைபாடு உண்டாகிறது. இனிப்பினால் சர்க்கரை நோய் மட்டுமல்ல, மேற்கூறிய வியாதிகள் அனைத்தும் வருகின்றன. பாக்கெட்டில் அடைக்கப்பட்ட பண்டங்கள், இனிப்புகள், செயற்கை ஜூஸ் வகைகளையும் தவிர்ப்பது நலம். உடல் எடையை குறைக்க விரும்புபவர்கள் செயற்கை இனிப்புகளை நாடுகின்றனர். அதில் குறைந்த அளவு கலோரிகள் இருப்பதால் எடை குறைய வாய்ப்புண்டு. இருப்பினும் உடலுக்கு வேறு பல தீங்குகள் ஏற்படுகின்றன. மூளை பாதிப்பு, செயல்பாட்டில் மந்தம் ஆகியவை ஏற்படுகின்றன.

ஜங் புட்:

கனடாவில் உள்ள மான்டெரல் பல்கலைக்கழகத்தில், சமீபத்தில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில், "ஜங் புட்"களை அதிகம் உட்கொள்வதால், மூளையில் வேதியியல் மாற்றம் ஏற்பட்டு மன அழுத்தம், பதட்டம், உடற்பருமன் ஏற்படுகிறது என தெரிய வந்துள்ளது. இந்த வகை உணவுகள் அதிகம் கொழுப்புச்சத்து கொண்டவை. குழந்தைகளுக்கு கற்றல் குறைபாடு, மறதி, விழிப்பு நிலை குறைபாடு, புலன் உணர்வு செயல்பாட்டில் மந்தம் ஆகியவையும் ஏற்படுகின்றன.

வறுத்த உணவுகள்:

வறுத்த உணவு வகைகளில் சுவைக்காக செயற்கை பொருட்கள், ரசாயனம், உணவுக்கு நிறமேற்ற சாயப்பொருட்கள் ஆகியவை சேர்க்கப்படுகின்றன. இதனால் குழந்தைகள், பெரியவர்களுக்கு பழக்க வழக்கத்தில் மாற்றம் ஏற்படுகிறது. மூளையில் உள்ள நரம்பு செல்களை மெதுவாக பாதித்து அழிக்கிறது. வறுப்பதற்காக பயன்படுத்தப்படும் சில எண்ணெய் வகைகள் நச்சுத்தன்மை வாய்ந்தவை. இதனால் சிறந்த எண்ணெய் வகைகளை தேர்ந்தெடுத்து பயன்படுத்த வேண்டும்.

பதப்படுத்தப்பட்ட உணவுகள்:

பதப்படுத்தப்பட்ட உணவுகள், ஏற்கனவே சமைக்கப்பட்டு பாக்கெட்டுகளில் அடைக்கப்படுகின்றன. வறுத்த உணவுகளால் ஏற்படும் அனைத்து பாதிப்புகளும் இதிலும் ஏற்படுகின்றன. இந்த வகை உணவுகள் உடலின் நரம்பு மண்டலத்தை பாதிக்கின்றன. இதனால் அல்சீமர்ஸ் போன்ற மறதி நோய்களும் ஏற்பட வாய்ப்புள்ளது. அவசர உலகில் பாக்கெட் உணவுகளை பயன்படுத்துவது அதிகரித்து வருகிறது. இதனை தவிர்த்து சுத்தமான உணவுகளை உண்ண வேண்டும்.

அதிக உப்புள்ள உணவுகள்:

உப்பு மனிதனின், ரத்த அழுத்தத்தை அதிகரிக்கும். இதயம் இயங்குவதில் சிக்கலை ஏற்படுத்தும். அதிகப்படியான உப்புள்ள உணவுகளை தொடர்ந்து உட்கொண்டால் அறிவாற்றல், சிந்தனைத்திறன், புத்திக் கூர்மை ஆகியவை பாதிக்கும். போதைப் பொருட்கள் பயன்படுத்துவோருக்கு ஏற்படும் பாதிப்புகள், அதிக உப்பை பயன்படுத்துவோருக்கும் உண்டாகும். இதனால் உப்பின் அளவை சிறுவயதிலிருந்தே குறைத்து உண்டு வர வேண்டும். வயதானவர்கள் உப்பை முழுவதுமாக தவிர்த்து விடுதல் நலம். அதிலும் சிறந்த உப்பை தேர்ந்தெடுத்து பயன்படுத்த வேண்டும்.

பதப்படுத்தப்பட்ட புரோட்டின் உணவுகள்:


உடலின் செயல்பாட்டுக்கும், தசை வளர்ச்சிக்கும் புரோட்டின் முக்கியம். இருப்பினும் பதப்படுத்தப்பட்ட புரோட்டின் உணவுகளை தவிர்ப்பது நல்லது. இயற்கையான புரோட்டின் உணவுகளே உடலுக்கு நன்மை பயக்கும். செயற்கை புரோட்டின் உணவுகள் நரம்பு மண்டலத்தை பாதிக்கும். மூளை செயல்பாட்டில் மாற்றத்தை ஏற்படுத்தி ஞாபக மறதியை அதிகரிக்கும்.

கொழுப்பு உணவுகள்:

அறிவை மழுங்கடிக்கும் உணவுகளில் முதன்மையானது கொழுப்புகள். அதிக உடல் எடை மற்றும் இதய நோய்களுக்கு முக்கிய காரணம் கொழுப்பு உணவுகளே. எனவே கொழுப்பு எந்த வடிவத்திலிருந்தாலும் அதை தவிர்க்க வேண்டும். கொழுப்பு, மாரடைப்பு ஏற்பட முக்கிய காரணமாகவும், மூளையை சுருங்கவும் செய்கிறது. உடலுக்கு அனைத்து வகையான தீங்குகளையும் கொண்டு வருகிறது. இன்றைய காலகட்டத்தில் இளைய தலைமுறையினருக்கு அதிக பாதிப்பை ஏற்படுத்துவது கொழுப்பு உணவுகள். முறையற்ற உணவுப்பழக்கத்தால் கொழுப்பு கூடுகிறது. உணவில் கட்டுப்பாட்டை கடைபிடித்து, உடற்பயிற்சி, யோகா மற்றும் தியானத்தில் இளைஞர்கள் ஈடுபட வேண்டும்.

சோடா:

சோடா, குளிர்பானங்களை அதிகளவு அருந்துவது உடலுக்கு தீங்கு விளைவிக்கும். ஞாபக மறதியை அதிகரிக்கும். இதில் சேர்க்கப்பட்டுள்ள செயற்கையான இனிப்புகள் உடலின் எடையை கூட்டும். அதிக குளிர்ச்சி மற்றும் சோடாவில் உள்ள ஆசிட் பற்கள், கிட்னியை பாதிக்கும். நுரையீரலில் பாதிப்பை உண்டாக்கி ஆஸ்துமா மற்றும் இதயநோய்கள் ஏற்படவும் வழிவகுக்கும். எலும்புகள் வலுவிழந்து போகும். சோடாவில் உள்ள வேதிப்பொருட்கள் மூளையில் மாற்றத்தை ஏற்படுத்தும் தன்மை வாய்ந்தவை. சோடா அருந்துவதால் பசியின்மை, மந்தம் ஆகியவையும் ஏற்படும். இயற்கையான பழரசங்களை அருந்துவதே உடலுக்கு நன்மை. கண்ணைக் கவரும் வண்ணத்தில் கிடைக்கும் பானங்களால் தீமையே ஏற்படும்.

நிகோடின்:

நிகோடின் உணவு வகையைச் சேர்ந்தது இல்லை. இருப்பினும் புகையிலைப் பொருட்களை பயன்படுத்துவதால், மூளையில் பல்வேறு மாறுதல்கள் ஏற்படுகின்றன. மூளைக்கு செல்லும் ஆக்சிஜன் மற்றும் குளுக்கோஸ் அளவை நிகோடின் தடுக்கிறது. நுரையீரல் புற்றுநோய், சுவாசக் கோளாறுகள் ஏற்பட வழிவகுக்கிறது. நிகோடின் ரத்தக்குழாய்களில் பாதிப்பை ஏற்படுத்தி, மூளை செயல்பாட்டை தடுக்கிறது. புகைபிடிப்பதால் உடலுக்கு தீமை மட்டுமே ஏற்படுகிறது. இருப்பினும் அதை தொடர்ந்து செய்வது, நமது உடலுக்கு நாமே தீ வைத்துக் கொள்வதற்கு சமம்.

ஆல்கஹால்:

நவீன உலகில் மது அருந்துவது புது கலாசாரமாக மாறி விட்டது. இது மிகவும் அபாயகரமானது. மது அருந்துவதால் உடல் நலம் மட்டுல்லாது மனநலமும் பாதிக்கப்படும். மது அருந்துவது முதலில் கல்லீரலை பாதித்து, ஆயுட்காலத்தை குறைக்கிறது. மூளையில் ரசாயன மாற்றம் ஏற்பட்டு மனக்குழப்பம், மறதி உண்டாகிறது. தெளிவான சிந்தனை பாதிக்கப்படுகிறது. அதிகம் மது அருந்துவோருக்கு என்ன செய்கிறோம் என்பதே தெரியாது. பரிட்சயமான நபர்களின் பெயர், சொந்த பொருட்கள் கூட மறந்து விடும். மதுவை தொடர்ந்து அருந்துபவர்கள் தங்களது முடிவை தானே தேடிக் கொள்கின்றனர். மது அருந்துவோர் அதை விட்டுவிட்டால், புதுவாழ்வு பெற்றதாக அவர்களே உணர்வர்.
கடலுக்கு கரிப்புத் தன்மை இருப்பது எதனால் தெரியுமா?

கடலுக்குள் வந்து சேரும் நதிகளும், ஓடைகளும், உப்புச் சத்தை பாறைகளிலிருந்தும், பூமியின் மேல் பரப்பிலிருந்தும் சிறுகச் சிறுக அடித்து வந்து, கடலில் சேர்ப்பதால்தான். கடல் நீர் ஆவியாக மாறி, மீண்டும் மழையாகப் பொழிகிறது. உப்பு மட்டும் கடலிலேயே, தங்கி விடுகிறது!

கடலுக்கு நீல நிறம் கொடுப்பது வானம் தானே? வானம் நீலநிறமாக இருப்பதால் தானே கடல் அதை பிரதிபலிக்கிறது?

இல்லையில்லை... கடலுக்கு நீல நிறம் கொடுப்பது சூரியன்தான். உண்மையில் கடல் நீர் நிறமற்றது. சூரியனிலிருந்து வெளிப்படும் பல நிற ஒளிக்கதிர்களுள், நீல நிறத்தை தவிர மற்ற அனைத்தையும் கடல் கிரகித்துக் கொள்கிறது. நீலநிறக் கதிர்கள்மட்டும் கடலால் எதிரொளிக்கப்படுவதால், அது, நீலநிறமாகத் தோன்றுகிறது!

சந்திரனுக்கும், கடல் கொந்தளிப்புக்கும் கூட சம்பந்தம் இருக்கிறதாமே?

ஆமாம்... முழு நிலவின் ஈர்ப்பு சக்தியால், கடல் நீர் எழுச்சியடைந்து மேலெழும்புகிறது. அதே போல், உலகின் பூமிப் பகுதியும் கொந்தளிக்கிறது. பூமியின் நிலப்பரப்பு, சில சமயங்களில் ஆறு அங்குலம் கூட எழுந்து, மீண்டும் அடங்குகிறதாம்.

உலகப்பரப்பில் 70 சதவிகிதம் தண்ணீர் தான். ஆனால், இதில் ஒரு சதவிகிதம் தான் குடிக்க லாயக்கானது. ஜெர்மனியில் உள்ள ஹெமல் ஸ்டார் பர் என்ற ஏரியின் மேல் பகுதி நீர், இனிப்பாகவும், அடிப்பகுதி நீர் கசப்பாகவும், இருக்கும். அதனால், இதற்கு, "ஸீ ஆப் மேட்ரிமனி' என்று பெயர். "மேட்ரிமனி' என்ற ஆங்கில வார்த்தைக்கு, மண வாழ்க்கை என்று பொருள்.


சினிமா பிரபலங்களையும், அவர்கள் இனிஷியலையும் நமக்குத் தெரியும். இந்த இனிஷியல்களின் விரிவாக்கம், நம்மில் எத்தனை பேருக்குத் தெரியும்? இதோ:
1. டி.ஆர். (திருக்காம்புலியூர் ரங்காராவ்) ராமச்சந்திரன்.
2.டி.எஸ். (திருநெல்வேலி சுப்ரமணிய பிள்ளை) பாலையா.
3.பி.எஸ். (பொள்ளாச்சி சின்ன முதலியார்) வீரப்பா.
4.கே.ஆர்.(கும்பகோணம் ராமபத்திர செட்டியார்) ராமசாமி.
5.எம்.கே. (மாயவரம் கிருஷ்ண மூர்த்தி ஆசாரி) தியாகராஜ பாகவதர்.
6.என்.எஸ்.(நாகர்கோவில் சுடலைமுத்துப்பிள்ளை) கிருஷ்ணன்.
7.எம்.கே.(மதராஸ் கந்தசாமி) ராதா.
8.ஏ.பி.(அக்கமாப் பேட்டை பரமசிவம்) நாகராஜன்.
9.கே.ஏ.(காரைக்கால் அருணா சலம் ஆசாரி) தங்கவேலு.
10.எஸ்.வி. (செங்கோட்டை வெள்ளையன் ஆசாரி) சுப்பையா.
உலக சிக்கன தினம் 30-08-13

இந்த பழக்கம் உங்களிடம் இருந்தால், எதிர்காலத்தில் என்ன நடந்தாலும் உங்களுக்கு கவலையே ஏற்படாது. அது தான் சேமிப்பு.

1924 அக்., 31ல், இத்தாலியின் மிலன் நகரில், சர்வதேச சேமிப்பு வங்கிகளின் மாநாடு நடந்தது. இதில் பல நாடுகளைச் சேர்ந்த, வங்கிகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். சிக்கனத்தின் உன்னதத்தை உலகுக்கு உணர்த்தும் வண்ணம், அக்.31ம் தேதி உலக சிக்கன தினம் கடைப்பிடிக்க முடிவு செய்யப்பட்டது.

எது சிக்கனம்?

சேமிப்பின் அடிப்படையே சிக்கனம் தான். வளங்களை வீணடிக்காமல், திறமையாக கையாள்வதை இது குறிக்கும். அதாவது அவசிய தேவைகளை மட்டும் நிறைவேற்றிக்கொள்வது. சிக்கனமும், சேமிப்பும் ஒரு குடும்பத்துக்கு மட்டும் பயன் அளிப்பதில்லை. நாட்டின் பொருளாதார வளர்ச்சியிலும் முக்கிய பங்கு வகிக்கிறது. இதனாலேயே வங்கிகள், சேமிப்பு கணக்குக்கு அதிக வட்டி அளித்து ஊக்கப்படுத்துகின்றன. சிக்கனமாக சேமிக்கப்பட்ட பணம் தான், எல்லா தொழில்களுக்கும் மூலதனம்.

என்ன வித்தியாசம்?

பொதுவாக, செலவு செய்வதை கஞ்சத்தனம், சிக்கனம், ஆடம்பரம், ஊதாரித்தனம் என நான்கு வகையாக பிரிக்கலாம். (i) கஞ்சத்தனம் என்பது, அவசிய தேவைகளைக்கூட நிறைவேற்ற மனம் இல்லாதவர்களைக் குறிக்கும். இது அவர்களின் வாழ்க்கையில் பல பிரச்னைகளை ஏற்படுத்தும். (ii) சிக்கனம் என்பது தகுதியறிந்து செலவு செய்வது. இது சுமூகமான வாழ்க்கைக்கு சிறந்த வழி. (iii) மூன்றாவதாக ஆடம்பரம் என்பது, மற்றவர்களிடம் வசதியானவன் எனக் காட்டுவதற்காக தகுதி மீறி செலவு செய்வது. (iv) நான்காவதாக உள்ள ஊதாரித்தனம் என்பது, கண்மூடித்தனமாக தேவையில்லாத செலவுகளை செய்வது. இது அழிவுப்பாதைக்கு அழைத்துச் செல்லும்.

சேமிப்பு பழக்கத்தை எறும்பு, தேனீக்கள் ஆகியவற்றிலிருந்து கற்றுக்கொள்ளலாம். நமது முன்னோர் இப்பழக்கத்தை சரியாக செய்தனர். அவர்கள் பணத்தை மட்டுமல்லாமல், பண்டங்களையும் சேமித்தனர். எதிர்கால தேவையை கருத்தில் கொண்டு, இருக்கும்போதே சேமித்துக்கொள்ளும் பழக்கத்தை, சிறு வயது முதல் ஏற்படுத்த வேண்டும். குடும்பத்தில் அனைவரும் சிக்கனமாக இருந்தால் தான் சேமிப்பு உருவாகும். இன்று வரை சிக்கனம் என்றால் என்ன என்று கேட்பவராக இருந்தாலும் பரவாயில்லை. இனியாவது சேமிக்க தொடங்குங்கள். மகிழ்ச்சியாக வாழலாம்.
உலக நகர திட்டமிடல் தினம்

திட்டமிடாத எந்த செயலும், வெற்றி பெற்றதாக சரித்திரம் இல்லை. ஒரு வீடு கட்டும் போது, என்னென்ன திட்டமிட்டு கட்டுகிறோம்; அது போல, ஒரு நகரத்தை உருவாக்கும் போது, எதிர்காலத்துக்கு ஏற்ப, திட்டமிட வேண்டும் என்பதை வலியுறுத்தி, நவ., 8ம் தேதி, "உலக நகர திட்டமிடல் தினம்' கடைப்பிடிக்கப்படுகிறது.

என்ன வித்தியாசம்?

திட்டமிட்ட நகரங்களுக்கும், திட்டமிடாதவற்றுக்கும் நிறைய வித்தியாசம் இருக்கிறது. குடிநீர், சாலை, மின்சாரம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள், சுற்றுச்சூழல், தொழிற்சாலைகள், வர்த்தக நிறுவனங்கள், அலுவலகங்கள், குடியிருப்புகள், கல்வி நிறுவனங்கள், பஸ், ரயில் நிலையங்கள், ஏர்போர்ட், விளையாட்டு மைதானங்கள் என அனைத்து அம்சங்களையும் கருத்தில் கொண்டு உருவாக்கப்பட வேண்டும். இது போன்ற நகரம் தான், திட்டமிட்ட நகரம் எனப்படுகிறது. ஏற்கனவே ஒரு நகரம், நன்றாக உருவாக்கப்பட்டிருந்தாலும், மக்கள் தொகை பெருக்கம், தொழில்நுட்ப வளர்ச்சி, புதிய விரிவாக்கம், சட்ட விதிகளை பின்பற்றாமை, வரைமுறையில்லாமல் கட்டடங்களை கட்டுவது, லஞ்சம் பெற்றுக்கொண்டு அனுமதியளிப்பது, ஆக்கிரமிப்பு போன்றவை, நகரின் வளர்ச்சிக்கு தடையாக உள்ளன. மக்களும், நகர வளர்ச்சிக்கு ஒத்துழைக்க வேண்டும்.

திட்டமிட்ட தலைநகரங்கள்:

உலக நாடுகளின் தலைநகரங்களில், கான்பெரா (ஆஸ்திரேலியா), வாஷிங்டன் (அமெரிக்கா), பிரேசில்லா (பிரேசில்), புதுடில்லி (இந்தியா), அபுஜா (நைஜீரியா), அஸ்டானா (கஜகஸ்தான்), இஸ்லாமாபாத் (பாகிஸ்தான்) ஆகியவை திட்டமிடப்பட்டு உருவாக்கப்பட்டவை.

இந்தியாவில் திட்டமிட்ட தலைநகரங்கள்:

இந்தியாவில் முதன் முதலில் திட்டமிடப்பட்ட நகரம் என்ற பெருமையை சண்டிகர் பெற்றுள்ளது. இது பஞ்சாப் மற்றும் அரியானாவுக்கு பொது தலைநகர். உலகின் பெரிய திட்டமிடப்பட்ட நகரம் நவி மும்பை. இது 1972ம் ஆண்டு, மும்பை மாநகர் விரிவாக்கத் திட்டத்தின் படிஉருவாக்கப்பட்டது. நொய்டா, ஜெய்ப்பூர், காந்திநகர் உள்ளிட்டவையும் திட்டமிடப்பட்ட நகரங்கள்.
வாகனங்களில் சுழலும் சிகப்பு விளக்கு வைத்துக் கொள்ள அனுமதிக்கப்பட்டவர்கள்

* ஜனாதிபதி
* துணை ஜனாதிபதி
*தலைமை நீதிபதி
*பிரதமர்
*சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள்
*லோக்சபா சபாநாயகர்
*மத்திய அமைச்சர்கள்
*திட்டக்கமிஷன் துணைத் தலைவர்
*எதிர்க்கட்சி தலைவர்கள் (லோக்சபா, ராஜ்யசபா)
*ஐகோர்ட் தலைமை நீதிபதிகள்
* மாநில கவர்னர்கள்
*துணைநிலை கவர்னர்கள்
*மாநில முதல்வர்கள்
*எஸ்.சி., - எஸ்.டி., கமிஷன் தலைவர்

வெறும் சிகப்பு விளக்குக்கு அனுமதிக்கப்பட்டவர்கள்


* தலைமை தேர்தல் கமிஷனர்
*தலைமை கணக்கு தணிக்கை அதிகாரி
*ராஜ்யசபா துணை தலைவர்
*லோக்சபா துணை சபாநாயகர்
*திட்டக்கமிஷன் உறுப்பினர்கள்
*அட்டர்னி ஜெனரல்
* கேபினட் செயலர்

மஞ்சள் விளக்கு

* தலைமை செயலர்
*வருமான வரித்துறை கமிஷனர்
*மாவட்ட நீதிபதி
*டி.ஜி.பி.,

ஊதா நிற விளக்கு

* ஆம்புலன்ஸ்
*போலீஸ் வாகனங்கள்
இந்தியாவில் 47% பட்டதாரிகள் பணிகளைப் பெற தகுதியற்றவர்கள்: ஆய்வில் அதிர்ச்சி தகவல்

இந்தியாவில் வழங்கப்படும் வழக்கமான கல்விமுறை, பணி வாய்ப்புக்கான திறன்களை மாணவர்களுக்கு வழங்காதபடியால், குறைந்தபட்சம், இந்தாண்டின் பாதியளவு பட்டதாரிகள், எந்தப் பணியையும் பெற முடியாமல், வேலையற்று இருக்கிறார்கள் என ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது.

அந்த ஆய்வில் கூறப்பட்டுள்ளதாவது: 2013ம் ஆண்டின் முக்கியமான பணி வாய்ப்பு அம்சத்தின் மீது ஆய்வு மேற்கொண்டதன்படி, இந்த ஆண்டில் வெளிவந்த பட்டதாரிகளில், குறைந்தபட்சம் 47% பேர், எந்த துறையிலும் பணி வாய்ப்புகளைப் பெற முடியாதவர்களாக உள்ளனர். அவர்களின் ஆங்கில அறிவு மற்றும் இதர முக்கிய பணித் திறன்களை வைத்து அவர்களால் எந்த பணியையும் பெற முடியவில்லை என்பது தெரியவந்துள்ளது.

பெண்களைப் பொறுத்தவரை, அவர்கள் அதிகளவில் மூன்று வருட பட்டப் படிப்புகளை மேற்கொள்கின்றனர். ஆனால் பணி வாய்ப்புகள் என்று வரும்போது, அவர்கள் ஆண்களுக்கு சமமாக அல்லது அவர்களைவிட அதிகளவிலான பணி வாய்ப்புகளைப் பெறுகிறார்கள். 100 பெண்களுக்கு 109 ஆண்கள் என்ற விகிதத்தில் மூன்று வருட பட்டப் படிப்புகளை மாணவர்கள் மேற்கொள்கின்றனர்.

ஆங்கில அறிவு பற்றாக்குறை, தேவையான கணினி அறிவின்மை மற்றும் கருத்தாக்க கற்றலில் உள்ள போதாமை உள்ளிட்டவை, பணி வாய்ப்புகளைப் பெறுவதில் பெரிய தடைக் கற்களாக உள்ளன. சிறிய நகரங்கள் மற்றும் பெரிய நகரங்களில் வாழும் இளைஞர்கள், ஆங்கில அறிவு மற்றும் கணினி அறிவு ஆகியவற்றில் உள்ள பற்றாக்குறையால் தங்களுக்கான பணிகளைப் பெற சிரமப்படுகிறார்கள்.

பைனான்ஸ் மற்றும் அக்கவுன்டிங் துறைகளைப் பொறுத்தவரை, வெறும் 25% பட்டதாரிகள் மட்டுமே, நிஜ உலக சிக்கல்களைத் தீர்க்கும் வகையிலான பிராக்டிகல் அறிவைப் பயன்படுத்தும் வல்லமை பெற்றிருக்கிறார்கள். அதேசமயம், சராசரியாக 50% பட்டதாரிகள், அதே சிக்கல்களுக்கு, தியரி மற்றும் கருத்தாக்க தீர்வுகளை மட்டுமே வழங்கும் திறன் பெற்றிருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

அக்கவுன்டிங் துறையில் பணி வாய்ப்பு பெற்றுள்ள பட்டதாரிகளில் 41% பேர், தரநிலை வரிசையில், 30ம் நிலைக்கு மேலே உள்ள கல்லூரிகளிலிருந்து வந்தவர்கள். அதேசமயம், ஐ.டி., தொடர்பான துறைகளில் இந்த சதவீதம் 36% என்ற நிலையில் உள்ளது.

Wednesday, October 9, 2013

உலக தபால் தினம்

உலக தபால் அமைப்பு 1874ம் ஆண்டு சுவிட்சர்லாந்து தலைநகர் பெர்ன் நகரில் தொடங்கப்பட்டது. 1969ல் இதை நினைவுபடுத்தும் விதமாக அக்.,9, உலக தபால் தினமாக அறிவிக்கப்பட்டது. உலக தபால் அமைப்பில், இந்தியா உள்ளிட்ட 150 நாடுகள் உள்ளன. தபால் துறையின் சேவைகளை பாராட்டும் விதமாகவும், தபால் துறையின் திட்டங்கள் பற்றி மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காகவும் அக்.,9ம் தேதி, உலக தபால் தினம் கடைபிடிக்கப்படுகிறது. இந்தியாவில் தபால் வாரமாக (அக்.,9 - 15) கடைப்பிடிக்கப்படுகிறது.

இந்திய தபால் துறை, 1764ல் துவக்கப்பட்டது. சுதந்திரம் பெற்ற தொடக்கத்தில் 23 ஆயிரம் தபால் நிலையங்கள் மட்டுமே இருந்தன. தற்போது நாடு முழுவதும் ஒரு லட்சத்து 55 ஆயிரத்துக்கு 333 தபால் நிலையங்கள் செயல்படுகின்றன. இதில் 89 சதவீதம் கிராமங்களில் உள்ளன. 12 ஆயிரம் தபால் நிலையங்கள் கம்ப்யூட்டர் மையமாக்கப்பட்டன. உலகில், இந்தியாவில் தான், அதிக தபால் நிலையங்கள் உள்ளன. 5 லட்சம் ஊழியர்கள் பணிபுரிகின்றனர்.ஸ்டாம்ப் விற்பனை, பதிவு தபால், விரைவு தபால், - போஸ்ட், மணி ஆர்டர், பார்சல் சர்வீஸ் மற்றும் சேமிப்பு கணக்கு போன்ற பணிகளை தபால் துறை மேற்கொண்டு வருகிறது. நவீன தொழில்நுட்ப வளர்ச்சி, தபால்துறையின் முன் உள்ள மிகப்பெரிய சவாலாக உள்ளது.

காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை, இந்தியாவை ஒருங்கிணைக்கும் பணியை தபால்துறை செய்து வருகிறது. கடிதம் எழுதும் பழக்கம், -மெயில் வரவால் குறைந்திருந்தாலும், அலுவல் ரீதியான கடிதங்களைக் கொண்டு சேர்க்கும் பொறுப்பு, இன்றும் தபால் துறை வசமே உள்ளது. சமீபத்தில் 100 ஆண்டுகளைக் கடந்த பாரம்பரிய "தந்தி' சேவை நிறுத்தப்பட்டது.

வீடுகளின் முன், "சார் போஸ்ட்' என்ற வார்த்தை இப்போதெல்லாம் காணாமல் போய்விட்டது. தகவல் தொழில்நுட்ப வளர்ச்சியால், தபால் துறையின் மகத்துவம் பற்றி, இன்றைய தலைமுறையினருக்கு தெரிய வாய்ப்பில்லை. ஆனாலும், இன்றும் லட்சக்கணக்கான மக்களின் தினசரி வாழ்க்கையில் தபால் துறை முக்கிய பங்கு வகிக்கிறது.
போதை ருசி

மக்கள் ஆரோக்கியமாக வாழத்தேவையான, வசதிகளையும், வாய்ப்புகளையும் ஏற்படுத்தி கொடுக்க வேண்டியது, அரசாங்கத்தின் பணி. ஆனால், நமது துரதிருஷ்டம், அரசாங்கமே "டாஸ்மாக்' மதுக்கடைகளை தெருவுக்குத்தெரு திறந்து, கலர் சாராயம் விற்கிறது. ஆண், பெண் வித்தியாசமின்றி காலை முதல் இரவு வரை குடித்தே சாகின்றனர்.

பள்ளி, கல்லூரி மாணவர்கள் பணிக்குச் செல்லும் இளைஞர்கள் மட்டுமின்றி, இக்கூட்டத்துடன் பெண்களும் சேர்ந்துவிட்டது, அவலத்தின் உச்சகட்டம். மது பழக்கத்தால் குடும்ப உறவுகள் சீர்கெட்டு, அமைதி இழப்புக்குள்ளாகி தற்கொலைகளும், கொலைகளும் நிகழ்கின்றன. எண்ணற்ற குடும்பங்களில், குழந்தைகள் எதிர்காலமிழந்து, நிர்க்கதியாகி, தெருவுக்கு தள்ளப்படுகின்றனர். இக்கொடிய பழக்கத்திலிருந்து மக்களை விடுவிக்க வழியே இல்லையா, என, பலரும் அங்கலாய்த்துக்கொண்டிருக்க, அடுத்ததாக ஒரு அபாயகரமான பழக்கம், நம் இளைஞர்களிடையே தலைதூக்க துவங்கியுள்ளது. டில்லி, மும்பை, பெங்களூரு போன்ற வளர்ந்த நகரங்களில் மட்டுமே தென்படும் போதை மருந்து கலாசாரம், தற்போது, நம்மூரு கிராமங்கள் வரையும் வந்துவிட்டது.

போதை ஊசி, போதை மருந்து, போதை வஸ்து பழக்கங்கள், இரண்டாம் கட்ட நகர இளைஞர்களையும் சீரழித்து வருகின்றன. போலீசார் நடத்திய ரெய்டில், இது அம்பலமானது. கல்லூரி மாணவர்களுக்கு போதை மருந்து, ஊசிகளை சப்ளை செய்த கும்பலை பிடித்த போலீசார், பெட்டி, பெட்டியாக மருந்துகளையும் பறிமுதல் செய்தனர். மருத்துவர்களின் சிபாரிசு மருந்துச் சீட்டு இல்லாமல், போதைத்திறன் மிக்க மருந்துகளை விற்கக்கூடாது என்பது விதி. ஆனால், பணம் சம்பாதிக்கும் வெறியில் போதை மருந்து சப்ளை ஏஜன்ட்கள், துணிந்து சட்டவிரோத காரியங்களில் இறங்குகின்றனர். டாக்டர்களின் பெயரில் போலி மருந்துச் சீட்டுகளை தயாரித்து, கடைகளில் போதை மருந்துகளை வாங்கி, அதிக விலைக்கு விற்று கொள்ளை லாபம் பார்க்கின்றனர். அறுவைச் சிகிச்சைக்கு பயன்படுத்தப்படும் மயக்க ஊசி மருந்துகளையும், ரத்த அழுத்தம் உள்ளவர்கள் தூங்க பயன்படுத்தும் மாத்திரைகளையும், போதை கும்பல் கடத்தி விற்கிறது. இதை கண்காணிக்க வேண்டிய மருந்து ஆய்வாளர்கள், மவுனம் சாதித்து வருகின்றனர். போதை மருந்து, ஊசி, மாத்திரை போன்றவற்றை போலீசார் பறிமுதல் செய்தாலும், கடத்தலின் ஆணி வேரை கண்டறிந்து, மூளையாக செயல்பட்டவனை பிடித்து சிறையில் அடைப்பதில்லை. முதலில், சிக்கும் நபரை கைது செய்து, கணக்கை முடித்துக்கொள்கின்றனர்.

மருந்துகளை, கடத்தல் கும்பல் எப்படி கடைகளில் வாங்கி வருகின்றன என விசாரித்தபோது, அதிர்ச்சி தகவல்கள் அம்பலமாகின. பிரபல இருதய நிபுணர் ஒருவர், தன்னுடைய "மருந்துச் சீட்டு' புத்தகத்தை (பிரிஸ்கிரிப்ஷன் பேட்) காணவில்லை என, கிழக்கு போலீசாருக்கு தகவல் கொடுத்தார். அந்த "பேடில்' மயக்க மருத்துகளின் பெயர்களை எழுதி, டாக்டர் கையெழுத்தை போலியாக போட்டு, கடைகளில் கொடுத்து, மருந்து வாங்கிய ஆட்டோ டிரைவர்களை போலீசார் கைது செய்துள்ளனர். வெளியூர் மருத்துவர்களின் பெயர்களிலான "பேடு'களையும் கலர் ஜெராக்ஸ் எடுத்து, மருந்து பெயரை எழுதி, கடைகளில் வாங்கியுள்ளது கண்டறியப்பட்டது.

இந்திய மருத்துவ சங்க, பொள்ளாச்சி கிளை செயலாளரும், மயக்கவியல் நிபுணருமான திருமூர்த்தி கூறியதாவது: அறுவை சிகிச்சையின் போது, நோயாளிக்கு மயக்கம் ஏற்படுத்த, மயக்க ஊசி போடும் போது அவர்களின் ரத்த அழுத்தம், எச்.பி., போன்றவற்றை பார்த்து, அதற்கேற்ப "டோஸ்' கொடுக்கிறோம். ஆபரேஷன் தியேட்டரில் மட்டும் பயன்படுத்தும் மயக்க ஊசி மருந்து, "செட்யூல் டிரக்' என வகைப்படுத்தப்பட்டுள்ளது. இளைஞர்கள் போதைக்காக மயக்க மருந்து ஊசி போட்டுக்கொள்வது ஆபத்தானது. இப்பழக்கத்திற்கு உள்ளானவர்களால் தினமும் ஊசி போட்டுக்கொள்ளாமல் இருக்க முடியாது. அவர்களின் நடவடிக்கையில் மாற்றம் இருக்கும். இயல்பாக பேசமாட்டார்கள், உளறுவார்கள். தன்னிலை மறந்து, இலக்கின்றி சுற்றிக்கொண்டே இருப்பார்கள். ஊசி போட்டுக்கொண்டதும் மூளை சுறுசுறுப்பு தன்மை இழக்கும். மூளை செல்கள் செயல்படும் தன்மையை இழந்து விடும். தொடர்ந்து உபயோகிப்போருக்கு, ஊசி குத்தும் ரத்த குழாய்களில் பாக்டீரியா தாக்கி, செப்டிக் ஆகி, வீக்கம் இருக்கும். வாகனம் ஓட்டும் திறன் இருக்காது. கண் பார்வை மங்கி விடும். சரியாக சிறுநீர், மலம் கழிக்க முடியாது.சிந்திக்கும் திறன் இழந்து, எப்போதும் படபடப்புடன் இருப்பார்கள். ரத்தத்தில் வெள்ளை அணுக்கள் எண்ணிக்கை குறைந்து விடும். மூச்சு விடும் தன்மை பாதிக்கும், சிறுநீரகம் செயலிழக்கும், வலிப்பு ஏற்படும். ஒட்டுமொத்த "மெமரி லாஸ்' (நினைவாற்றல் இழப்பு) ஏற்பட்டு, இறுதியில் உயிரிழப்பு ஏற்படும். தங்களை சுற்றிலும் என்ன நடக்கிறது என்பது தெரியாமல், சுகமான போதையில் (உறக்கத்தில்) மிதக்க, அறுவை சிகிச்சையின் போது கையாளும் ஊசி மருந்துகளை கையாளுகின்றனர். டாக்டர் பரிந்துரையின்றி இவ்வகை ஊசி மருந்து, மாத்திரைகளை விற்க கூடாது. மருத்துவமனையிலுள்ள மருந்துக்கடையில் தனியாருக்கு இந்த ஊசி மருந்து விற்பதில்லை.இவ்வாறு டாக்டர் திருமூர்த்தி தெரிவித்தார்.


மனநல நிபுணர் டாக்டர் மோனி கூறியதாவது: இளைஞர்களிடம் போதை கலாசாரம் ஏற்படுவதற்கு முக்கிய காரணம், மனத் தூண்டுதல். மயக்க மருந்து, ஊசி போன்றவற்றை பயன்படுத்தினால், எப்படி இருக்கும் என்ற உந்துதல், அவர்களை அடிமையாக்குகிறது. ஊசி, மருந்து போன்றவை எளிதாக, குறைந்த விலையில் கிடைக்கிறது. இதனால், 15 வயதுக்கு மேற்பட்ட 22 வயதுக்கு உட்பட்ட வளர் இளம் பருவத்திலுள்ள நகர்ப்புற மாணவர்கள், வேலையற்ற இளைஞர்கள் போதை பழக்கத்துக்கு உள்ளாகின்றனர்.இந்தியாவில் 20 லட்சம் இளைஞர்கள் போதை பழக்கத்திற்கு அடிமையாகி உள்ளனர். அதில், சென்னையில் மட்டும் ஒரு லட்சம் இளைஞர்கள் உள்ளனர். அவர்களில் 10 முதல் 15 சதவீதம் பேர் போதை ஊசி பழக்கத்தில் உள்ளனர். அதில், ஒரு சதவீதம் பேர் தினமும் போதை ஊசி பயன்படுத்துகின்றனர் என்பது புள்ளி விபரம் மூலம் தெரியவருகிறது.மனநல மையத்திற்கு, போதை பழக்கத்தில் சிக்கிய, நிறைய இளைஞர்கள் வருகின்றனர். வலி நிவாரணியாக மருந்து உட்கொண்டவர்கள், ஆழ்ந்த உறக்கம், மன அமைதிக்காக மாத்திரை, மயக்க ஊசியை தொடர்ந்து பயன்படுத்துகின்றனர். சிலர், சந்தோஷ நிலையை அடையவும், இன்ப கிளர்ச்சி அடையவும் போதை ஊசி போடத்துவங்கியுள்ளனர். தினமும் பயன்படுத்தும் போது, படிக்கும் திறன், உழைக்கும் திறன், சிந்திக்கும் திறன் இழந்து விடுகின்றனர். மனத்தளர்ச்சி, மனச்சிதைவு, செக்ஸ் பிரச்னைகள் ஏற்படும்.இவற்றின் பாதிப்பு ஒரு அளவுகோலுக்கு மேல் செல்லும் போது, கற்பழிப்பு சம்பவங்கள், சமூக குற்றங்கள், சட்ட விரோத செயல்களில் அவர்கள் ஈடுபடுகின்றனர். போதை ஊசி பழக்கத்துக்கு உள்ளானவர்கள் வீட்டில் தனித்து இருப்பார்கள், வீட்டில் இருக்கும் பணத்தை களவாடுவார்கள், சாதாரணமாக இருக்கும் போது கைகள் நடுங்கும், வார்த்தைகள் தடுமாறும். குழந்தைகளை பெற்றோர் கண்காணிக்க வேண்டும். கை, கால்களில் தழும்பு, ஊசி போட்ட காயம் இருந்தால் விசாரிக்க வேண்டும். குழந்தைகளின் நடவடிக்கையையும், அவர்களின் நண்பர்களையும் பெற்றோர் அறிந்து கொள்ள வேண்டும்.குழந்தைகள் மீது கவனம் செலுத்தினால் தவறு நடக்கும் போதே கண்டுபிடித்து விடலாம். இது ஒரு நோய் என்பதை புரிந்து கொண்டு, மனநல மருத்துவரை அணுக வேண்டும். பாதிப்புக்குள்ளாகி வருவோருக்கு முதலில் கவுன்சிலிங் கொடுக்கிறோம். அவற்றால் ஏற்படும் பாதிப்பு குறித்து விளக்கி விழிப்புணர்வு ஏற்படுத்தி, மாற்று மருந்து கொடுத்து குணப்படுத்துகிறோம். அரசும், தன்னார்வ அமைப்புகளும், கிராமங்களில் போதை பழக்கம், அதனால் ஏற்படும் பாதிப்பு, விளைவுகள் குறித்து பெற்றோர், இளைஞர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். சமூக சுகாதார விழிப்புணர்வு மூலமே இளைய சமுதாயத்தை போதையின் பாதையில் இருந்து மீட்க முடியும்.