Monday, November 24, 2014

சிறுநீர் பரிசோதனை

“சிறுநீர் என்பது உடலிலிருந்து வெளியேறும் கழிவுப் பொருள்தானே என்று அலட்சியமாக நினைக்கக் கூடாது. அது நம் உடல்நலனைக் காட்டும் மருத்துவ அறிக்கை. உடலில் இருக்கும் நோய்களையும் எதிர்காலத்தில் வர இருக்கும் நோய்களையும் முன்னரே உணர்த்தும் எச்சரிக்கை மணி’’ என்று சிறுநீர் பற்றி அறிமுகம் கொடுக்கிறார் சிறுநீரக சிறப்பு மருத்துவரான சௌந்தர்ராஜன். சிறுநீர் பற்றியும் அதன் பரிசோதனைகள் பற்றியும் நம்மிடம் அவர் விளக்கியதிலிருந்து...

மூன்று அடையாளங்கள்

மருத்துவத்தில் இருக்கும் மற்ற பரிசோதனை களைவிட மிகவும் எளிமையானது சிறுநீர் பரிசோதனை. குறைந்தபட்சம் 40 ரூபாயில் செய்துவிட முடியும். சோதனை முடிவுகளையும் உடனே சொல்லிவிடுவார்கள். வெளியேறும் அளவு, நிறம், மணம் ஆகிய மூன்றின் மூலம் உடலின் ஆரோக்கியத்தை எளிதில் எடுத்துச் சொல்லிவிடும் ஆற்றல் கொண்டது சிறுநீர்.

ஆரோக்கியமான ஒருவருக்கு ஒரு லிட்டர் முதல் ஒன்றரை லிட்டர் வரை சிறுநீர் வெளியேற வேண்டும். இதில் 400 மி.லி.க்குக் குறைந்தாலோ, 2,500 மி.லி.க்கு அதிகமானாலோ, நோயின் வெளிப்பாடாகவே இருக்கும். பிறந்த குழந்தைக்கு இந்த சிறுநீரின் அளவு 200 மி.லி.யில் ஆரம்பிக்கும். இதுதான் பெரியவர்களானதும் ஒன்றரை லிட்டராக மாறுகிறது. பிறந்த குழந்தை 24 மணிநேரத்துக்குள் சிறுநீர் கழிக்காவிட்டாலும் பிறவிக் கோளாறுகள் இருக்க வாய்ப்பு உண்டு.

சிறுநீரின் நிறம் தெளிவாக இருக்க வேண்டும் என்பது நியதி. நீண்ட நேரமாக தண்ணீர் குடிக்காமல் இருந்தால், சிறுநீரின் அடர்த்தி அதிகமாகி மஞ்சள் நிறமாக வெளியேறுவது இயல்பானதுதான். ஆனால், தொடர்ந்து மஞ்சள் நிறமாகவே வெளியேறினால், அது மஞ்சள் காமாலையின் அறிகுறி. காச நோய்க்கான மருந்து எடுத்துக்கொள்பவர்களுக்கு காவி நிறத்தில் வெளியேறும். பால் நிறத்தில் சிறுநீர் வெளியேறுவது யானைக்கால் நோயின் அடையாளமாக இருக்கலாம். சிறுநீரகத்தில் தொற்று இருப்பவர்களுக்கு சுண்ணாம்பு நீர் போல வெளியேறும். மரபியல்ரீதியான குறைபாடுகள் இருப்பவர்களின் சிறுநீரை வெயிலில் வைத்தால் பழுப்பு நிறமாகிவிடும். சிறுநீர் துர்நாற்றத்துடன் இருப்பது நீரிழிவு, சிறுநீரகத்தில் நோய்த்தொற்று போன்ற குறைபாடுகளின் அடையாளமே. சிறுநீரகத்தில் ரத்தம் கலந்து வெளியேறு வது ஆபத்தானது என்பதை விளக்க வேண்டியதில்லை.
இவர்கள் உடனடியாக மருத்துவரைப் பார்க்க வேண்டும். தண்ணீர் சேகரிக்கும் சிறுநீரகங்கள்சிறுநீர் தயாரிப்பதுதான் சிறுநீரகங்களின் முக்கிய வேலை என்று நினைத்துக் கொள்கிறோம். உண்மையில், உடலுக்குத் தேவையான தண்ணீரை சேகரித்து வைப்பதும் சிறுநீரகங்கள்தான். நம் உடலில் ஓடும் 5 லிட்டர் ரத்தத்தையும் சுத்திகரித்துக் கொண்டே இருக்கின்றன சிறுநீரகங்கள். ரத்தத்தில் கலக்கும் தண்ணீர் உள்பட பல உணவுகளை தேவையான சத்துகள், தேவையற்ற கழிவுப் பொருட்கள் என இரண்டாகப் பிரிக்கின்றன. இதை ஆரம்பகால சிறுநீர் என்கிறோம். இப்படி ரத்தத்தில் இருந்து ஒவ்வொரு நிமிடமும் 125 மி.லி. கழிவுப் பொருட்கள் வீதம், நாள் ஒன்றுக்கு 150 லிட்டர் சிறுநீர் பிரிக்கப்படுகிறது.

இதில் 95 சதவிகித நீரை உடலின் நீர் தேவைக்காக சிறுநீரகங்களே மீண்டும் எடுத்துக் கொள்ளும். மீதி இருக்கும் சிறுநீரே வெளியேறுகிறது. தண்ணீரோடு நம் உடலில் இருக்கும் யூரியா, கிரியாட்டினின் போன்ற புரதக் கழிவுகளை வெளியேற்றுவதும் சிறுநீர்தான். மருத்துவ அறிக்கை சிறுநீர் பரிசோதனையில் முக்கியமானது அல்புமின் பரிசோதனை. இந்தப் பரிசோதனையில் பாசிட்டிவ் என்று ரிசல்ட் வந்தால் உடலின் புரதம் வெளியேறுகிறது என்று அர்த்தம்.

இது சிறுநீரகப் பாதிப்பின் ஆரம்பம். சிறுநீரில் சர்க்கரை இருந்தால், அது நீரிழிவு என்பது பலருக்கும் தெரியும். சிறுநீரகத்தில் படியும் பொருட்களை வைத்து கிருமிகள் இருக்கிறதா, சிறுநீரக அழற்சிகள் இருக்கின்றனவா, நோய்த் தொற்றுகள் இருக்கின்றனவா என்பதைக் கண்டுபிடிக்கலாம்.  இதன்மூலம் சிறுநீரகங்கள் செயலிழக்கும் வாய்ப்பு இருப்பதையும் சிறுநீரகத்தில் கல் உருவாக இருப்பதையும் கண்டுபிடித்துவிட முடியும். சிறுநீர் பரிசோதனை எளிமையானது என்பதால், பெரிய மருத்துவமனைகளில்தான் செய்ய வேண்டும் என்பதில்லை. சாதாரண பரிசோதனை நிலையங்களிலேயே செய்து கொள்ளலாம்.

எல்லோரும் சிறுநீர் பரிசோதனை செய்துகொள்ள வேண்டுமா?

சிறுநீர் பரிசோதனையை எல்லோரும் செய்துகொள்ள வேண்டும் என்பதில்லை. குடும்பத்தில் யாருக்கேனும் சிறுநீரகப் பாதிப்புகள், ரத்த அழுத்தம், நீரிழிவு இருந்தால் பரிசோதனை செய்து கொள்வது அவசியம். கை, கால்கள், முகம் போன்றவற்றில் வீக்கம் இருந்தாலும் பரிசோதனை செய்துகொள்ள வேண்டும். சிறுநீர் போகும்போது எரிச்சல் இருந்தாலோ, நிறம் மாறினாலோ, அளவுகள் கூடினாலோ, குறைந்தாலோ பரிசோதனை அவசியம். சிறுவயதில் சிறுநீரகம் தொடர்புடைய நோய்கள் இருந்தாலும் பரிசோதனை செய்துகொள்ள வேண்டும்.

இந்தக் காரணங்களோடு, 35 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் முழு உடல் பரிசோதனை செய்து கொள்வது நல்லது. ஒவ்வொரு வருடமும் இந்த முழு உடல் பரிசோதனை செய்து கொள்ளும்போது சிறுநீர் பரிசோதனையும் அடங்கிவிடும். கர்ப்பிணிகள் சிறுநீர் பரிசோதனை செய்து கொள்வது தாய், சேய் இருவருக்கும் நல்லது. நோய்க் குறைபாடுகள் இருப்பவர்கள் மட்டும் மாதம் ஒருமுறை பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்.

உடல் சொல்வதைக் கேளுங்கள்

நம் உடலில் ‘பயாலஜிகல் கிளாக்’ என்ற உயிர்க்கடிகாரம் செயல்படுகிறது. அந்தக் கடிகாரம்தான் நம் உடல் தேவைகளை நமக்கு உணர்த்திக் கொண்டே இருக்கிறது. எனக்கு உணவு வேண்டும், தூக்கம் வேண்டும் என்று கேட்பது அந்த கடிகாரம்தான். இதேபோலத்தான் தனக்குத் தண்ணீர் தேவை என்றாலும் தாகத்தின் மூலம் உடல் அதை உணர்த்தும். அந்த தாகம் தீரும் அளவுக்குத் தண்ணீர் குடிப்பதே போதுமானது. குறிப்பாக இதய நோய் உள்ளவர்கள், கல்லீரல் பாதிக்கப்பட்டவர்கள், கை, கால்கள் வீக்கம் உள்ளவர்கள் தண்ணீர் அதிகம் குடிக்கக் கூடாது.

மற்றவர்கள் நாள் ஒன்றுக்கு இரண்டரை லிட்டர் முதல் 3 லிட்டர் வரை தண்ணீர் குடித்தாலே போதுமானது. ஏற்கெனவே நாம் சாப்பிடும் சாதம், காய்கறிகள், பழங்கள், தேநீர், பழரசங்கள், சாம்பார், ரசம், தயிர் என்ற எல்லா உணவுப் பொருட்களிலும் தண்ணீர் கலந்திருப்பதை மறக்க வேண்டாம். இதில் சின்ன விதிவிலக்கு, சிறுநீரகக் கல் இருப்பவர்கள், சிறுநீரகத் தொற்று இருப்பவர்கள் அடிக்கடி தண்ணீர் குடிப்பதில் தவறில்லை.

சிறுநீரகத் தொற்று

சிறுநீரகத் தொற்று (Urinary infection) நம் ஊரில் பரவலாக எல்லோரிடமும் காணப்படும் ஒரு பிரச்னை. சுகாதாரக் குறைவால் சிறுநீரகப் பாதையில் நுண்கிருமிகளின் தாக்கம் ஏற்படுவதையே சிறுநீரகத் தொற்று என்கிறோம். சுகாதாரமான கழிவறைகளைப் பயன்படுத்த வேண்டும் என்பது முக்கியம். என்றாலும், தனிமனித சுகாதாரம் காரணமாகவே சிறுநீரகத் தொற்று அதிக அளவில் ஏற்படுகிறது. இது ஆண்களைவிட பெண்களுக்கு வரும் வாய்ப்பு அதிகம். மலத்துவாரமும் சிறுநீர்ப் பாதையும் அருகருகில் இருப்பதால் பெண்களுக்கு இந்த நோய்த்தொற்று அதிகமாகிறது. மாதவிலக்கு நாட்களில் சுத்தமாக இல்லாத காரணத்தாலும் ஏற்படுகிறது (மாதவிலக்கு நின்ற பெண்களுக்கும் ஏற்பட லாம்).

வெளியிடங்களுக்குச் செல்லும் பெண்கள் போதுமான கழிவறை வசதிகள் இல்லாதபோது சிறுநீரை அடக்கி வைத்திருப்பதும் காரணமாகிவிடுகிறது. கர்ப்ப காலத்தில் பெண்களுக்கு ஏற்படும் சிறுநீர்த் தொற்று குழந்தையையும் பாதிக்கும் என்பதால் அலட்சியம் காட்டக் கூடாது. குழந்தைகளுக்கு சிறுநீரகத் தொற்று அதிகமாக இருந்தால் பிறவிக் குறைபாடு கள் ஏதேனும் இருக்க வாய்ப்பு அதிகம். இது பெண்களின் நோயாக இருந்தாலும், ஆண்களுக்கு சிறுநீர்த் தொற்று ஏற்பட்டால் ஆபத்து அதிகம். அதனால், சுத்தம் பேண வேண்டும், சிறுநீரை அடக்கி வைக்கக் கூடாது என்ற காரணங்கள் ஆண்களுக்கும் பொருந்தும். நீரிழிவு நோயாளிகள், கர்ப்பிணிகள், சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்து கொண்ட வர்களுக்கு Silent urinary infection என்று அழைக்கப்படும் அளவுக்கு, அறிகுறியே இல்லாமல் இந்தத் தொற்று ஏற்படும். இது சிறுநீர் பரிசோதனை செய்யும்போதுதான் தெரியும் என்பதால் கவனம் தேவை.

தம்பதியர் கவனத்துக்கு...

சிறுநீரகத் தொற்று பாலியல் காரணங்களாலும் அதிகம் ஏற்படுகிறது. இதற்கு ‘ஹனிமூன் சிஸ்டைட்டிஸ்’ என்று பெயர். உறவுக்குப் பின்னர் ஆண், பெண் இருவருமே தங்களை சுத்தம் செய்து கொள்வது அவசியம். தம்பதியில் ஒருவருக்கு இந்த நோய்த் தொற்று ஏற்பட்டால் மற்றவரும் பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். சிறுநீரகச் செயலிழப்புக்குப் பல காரணங்கள் இருக்கின்றன. அதில் இந்த சிறுநீரகத் தொற்றும் முக்கியக் காரணம் என்பதால் அலட்சியம் கூடாது. சிறுநீர்ப் பாதையில் எரிச்சல், அடிக்கடி சிறுநீர் கழிக்க வேண்டும் என்ற உணர்வு, சிறுநீருடன் ரத்தம் வருவது, அடிவயிற்றில் வலி, காய்ச்சல், சிறுநீர் நிறம் மாறுவது போன்ற அறிகுறிகள் காணப்பட்டால் எச்சரிக்கையாகி விடுங்கள். 

சிறுநீரக செயலிழப்பு

சிறுநீரகங்கள் செயலிழப்பதில் தற்காலிகச் செயலிழப்பு, நிரந்தரச் செயலிழப்பு என்று இரு வகைகள் இருக்கின்றன. தற்காலிகச் செயலிழப்பு வருகிறவர்களுக்கு உடனடியாக சிறுநீர் நின்றுவிடும். இதற்கு ‘கிட்னி ஷட்டவுன்’ என்று பெயர். வயிற்றுப்போக்கு, வாந்தி, பாம்பு கடித்தவர்கள், மருந்து அலர்ஜி போன்ற காரணங்களால் திடீரென சிறுநீர் நின்றுவிடும். சிகிச்சைக்குப் பின்னர் சரியாகிவிடும். நிரந்தரச் செயலிழப்பு ஏற்படுவதாக இருந்தால், அதன் அறிகுறியாக அதிகமான சிறுநீர் வெளியேறும். நீரிழிவு, ரத்த அழுத்தம் போன்ற காரணங்களால் கொஞ்சம் கொஞ்சமாகத்தான் இந்த நிரந்தரச் செயலிழப்பு ஏற்படும். சிறுநீர் அதிகமாக வெளியேறுவதால் சிறுநீரகங்கள் ஆரோக்கியமாக இருப்பதாக அர்த்தமில்லை. வயதானவர்களுக்கும் நீரிழிவு உள்ளவர் களுக்கும் சிறுநீர் அடிக்கடி வருவது சாதாரணமானதுதான்.

சிறுநீர் பரிசோதனை செய்யப் போகிறீர்களா?

பல நூற்றாண்டுகளுக்கு முன்னரே கண்டுபிடிக்கப்பட்டது சிறுநீர் பரிசோதனை. நீரிழிவு நோயை சிறுநீர் பரிசோதனையின் மூலமே முதன்முதலில் கண்டுபிடித்தார்கள்.
i) சிறுநீர் பரிசோதனை செய்யும்போதுதான் சிறுநீரை சேகரிக்க வேண்டும். அதற்கு முன்னரே சேகரிக்கக் கூடாது. சிறுநீர் சேகரிக்கும் முன்னர் ஓடும் தண்ணீரில் உறுப்புகளை சுத்தப்படுத்திக் கொள்ள வேண்டும். சோப், டிஸ்இன்ஃபெக்டன்ட் போன்றவற்றால் சுத்தம் செய்யக் கூடாது. இதனால், சோதனை முடிவுகள் தவறாகக்கூடும். பெண்கள் மாதவிலக்கு நாட்களில் பரிசோதனை செய்யக் கூடாது.
ii) பரிசோதனைக்காக இரண்டு குப்பிகள் கொடுப்பார்கள். ஒன்று சாதாரண பரிசோதனைக்காக... மற்றொன்று நோய்த்தொற்றைக் கண்டுபிடிப்பதற்காக. கர்ப்பமடைந்திருப்பதை சாதாரண பரிசோதனையிலேயே கண்டுபிடித்துவிடலாம்.
iii) நோய்த் தொற்றைக் கண்டுபிடிக்க சிறுநீரை பரிசோதனைக் கூடத்தில் வைத்து பாக்டீரியா, வைரஸ் போன்ற செல்கள் வளர்கின்றனவா என்று பார்ப்பார்கள். சாதாரண பரிசோதனைக்கு முதலில் வரும் சிறுநீரையும் இரண்டாவது பரிசோதனைக்கு நடுவில் வரும் சிறுநீரையும் சேகரிக்க வேண்டும். மிகவும் சுத்தமாக, கைகள், பஞ்சு போன்றவை படாமல் கவனமாக சேகரிக்க வேண்டும். இதற்கு ஆரம்பத்தில் வருவதையோ, கடைசியில் வருவதையோ  சேகரிக்கக் கூடாது.
iv) சிறுநீரை குப்பி நிறைய பிடிக்க வேண்டிய தில்லை. பாதிக் குப்பி போதுமானது. காலை வேளையில் சிறுநீர் பரிசோதனை செய்வதே நல்லது. இதில்தான் நிறைய தகவல்கள் கிடைக்கும்.
v) வயிற்றுக்குள் கரு வளரத் தொடங்கிவிட்ட பிறகு பெண்ணின் உடலுக்குள் நடைபெறும் ஹார்மோன் மாற்றங்கள் சிறுநீரில் பிரதிபலிக்கும். கர்ப்பமடைந்திருப்பதை இதன் மூலமே உறுதிப்படுத்துகிறார்கள்.
vi) சிறுநீர் பரிசோதனையின் மூலம் அதன் அளவு, அல்புமின் புரதம், சர்க்கரை, சிறுநீரகத்தில் ஏதேனும் படிந்திருக்கிறதா என்பதையும் நோய்த் தொற்றையும் கண்டுபிடிப்பார்கள். புற்று, காசம் போன்ற நோய்களையும் சிகிச்சை நடந்து வருவதன் முன்னேற்றத்தையும் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்துகொண்டவர்களுக்கு உடல் ஏற்றுக் கொள்ளாததையும் சிறுநீர் பரிசோதனையின் மூலமே கண்டுபிடிப்பார்கள்.

Tuesday, November 18, 2014


புவியியல் குறியீட்டு எண்
 
காப்புரிமை :: புவியியல் சார்ந்த குறியீடு

புவியியல் சார்ந்த குறியீடு: (Geographical Indication)
ஒரு குறிப்பிட்ட இடத்தையோ, நாட்டையோ சார்ந்த தனித்தன்மை வாய்ந்த பொருட்களுக்கு அளிக்கப்படுவதே புவியியல் சார்ந்த குறியீடாகும். அக்குறிப்பிட்ட இடத்தின் தனித்தன்மை பெற்றதாக அப்பொருள் விளங்கும். பொதுவாக, அத்தகைய பெயர் பொருட்களின் தரத்திற்கான உத்திரவாதம் அளிக்கிறது மற்றும் பொருளின் தனித்தன்மை, அப்பொருளின் பிறப்பிடம், அதாவது அதன் நாடு போன்றவற்றை அறிய உதவுகிறது. பொது விதிகள் 1(2) மற்றும் 10 பாரிஸ் நடைமுறைப்படி தொழில் உடமை பாதுகாப்பு மற்றும் புவியியல் குறியீடுகள் ஆகியவை IPRன் கூறுகளாகும். இந்தியா, உலக வர்த்தக அமைப்பின் உறுப்பினரான பிறகு பொருட்களின் புவியியல் குறியீடுகள் (பதிவு மற்றும் பாதுகாப்பு) சட்டம் இயற்றப்பட்டு, 1999-ம் ஆண்டு செப்டம்பர் 15ம் நாள் முதல் நடைமுறைப்படுத்தப்பட்டது.
 

புவியியல் குறியீடு என்பது ஓர் வரையறுக்கப்பட்ட புவியியல் எல்லைக்குள், குறிப்பிட்ட இடத்துத்துக்கே உரித்தான சிறப்பு அம்சங்களுடன் உருவாகும் ஒரு தரமான பொருளுக்கு அல்லது கலைக்கு வழங்கப்படும் சிறப்புக் குறியீடு ஆகும். இக்குறியீட்டை பெறுவதன் மூலம் அந்த குறிப்பிட்ட பொருளை அல்லது கலையை, வேறுயாரும் வியாபார நோக்கத்துடன் போலியாகவோ அல்லது, அதன் சிறப்பு அம்சங்களை வேறு வகையிலோ உபயோகப்படுத்த முடியாது. இக்குறியீட்டின் கீழ் தங்கள் பொருள் அல்லது கலையை பதிவு செய்யும் கலைஞர்களுக்கு மட்டுமே இந்தக் குறியீட்டை உபயோகிக்கும் உரிமை உண்டு. இதனை தவறாக பயன்படுத்துபவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க முடியும்.

 
தமிழகத்தின் பல கலைப்பொருட்களும் புவியியல் குறியீட்டு எண்ணைப் பெற்றுள்ளன. கலைவேலைப்பாடுள்ள தஞ்சாவூர் தலையாட்டி பொம்மை, தஞ்சாவூர் தட்டும், தஞ்சாவூர் வீணையும் புவியியல் குறியீட்டு எண்ணைப் பெற்றுள்ளன. துணி வகைகளில் காஞ்சிபுரம் பட்டு, மதுரை சுங்குடி, கோவை கோரா காட்டன், ஆரணி பட்டு, சேலம் வெண்பட்டு ஆகியன புவியியல் குறியீட்டு எண்ணைப் பெற்றுள்ளன. நாச்சியார் கோயில் குத்துவிளக்கு, நாகர்கோயில் கோயில் நகைகள், செட்டிநாட்டு கொட்டான், சுவாமிமலை வெண்கல சிலைகள், பத்தமடை பாய்,  ஆகியனவும் தமிழகத்தில்புவியியல் குறியீட்டு எண்ணைப் பெற்றுள்ளன. சமீபத்தில், ஊட்டியில் உள்ள தோடர் இன பெண்களின், 'எம்ப்ராய்டரி' துணி வேலைப்பாடுகளுக்கு, இந்த குறியீடு வழங்கப்பட்டது.

 

 

Thursday, November 13, 2014

மதிப்பெண் கல்வியா... மதிப்பீட்டுக் கல்வியா?

இன்றைய சமுதாயச் சூழலில் ஒரு மாணவன் நல்லவனாக வாழ மிகப்பெரிய சவால்களை சந்திக்க வேண்டியுள்ளது. கம்ப்யூட்டர், மொபைல் போன், 'டிவி', வன்முறை, ஆபாச படங்கள், அரசு பார்களை சந்தித்து முட்டி மோதி எழும்புவதற்குள், அவன் வாழ்நாளில் பாதிதுாரம் கடந்து விடுகிறான். தன்நிலை உணர்ந்து நல்லவனாக முயற்சிக்கும் போது அவன் எதிர்பார்க்கும் அங்கீகாரம் உடல் ரீதியாகவும், மனரீதியாகவும் கிடைக்காமல் போகிறது. பாலியல் வன்கொடுமை, கொலை, கொள்ளை ஆகிய சமூகக் கொடுமைகளைச் செய்யும் இளைஞர்கள் 15 முதல் 25 வயதிற்குட்பட்டவர்கள் என்பது மிகப்பெரிய கொடுமை. இத்தகைய செயல்களில் ஆர்வம் காட்டும் இந்த இளைஞர்கள் வழிதவறியதற்கு யார் காரணம்?

படிக்கும் வயதில் கவனம் :

கவனம் சிதறுகிறது எனில் கல்வித்திட்டம் அவனை நல்வழிக்கு ஒருமுகப்படுத்த தவறிவிட்டது என்பது மறுக்க இயலாத உண்மை. பொருளாதார ரீதியாக அவன் வாழ கல்வி அடிப்படைத் தகுதியாக இருந்தபோதிலும், நல்லெண்ணங்களே அவனின் கல்வித்தகுதிக்கும் வித்தாக உள்ளது என்பதை இன்றையக் கல்வி அளிக்கத் தவறி விட்டது. மதிப்பெண் ரீதியிலான தேர்வுகள் ஒன்றே ஒருவனின் கல்வித்தகுதிக்குச் சான்றாகிறது. 'சமுதாய விலங்கு' என அழைக்கப்படும் மனிதன் தான் வாழும் சமுதாயத்திற்கு தன்னைத் தகுந்தவனாக்கிக் கொள்ள என்ன தகுதிகளை வளர்க்கிறது அல்லது அளிக்கிறது

இன்றைய கல்வித் திட்டம்?

இன்றைய மாணவ சமுதாயம் சுயமரியாதையை வளர்த்துக்கொள்ள வேண்டிய மாணவர்கள் சுயகவுரவத்திற்கு பெரும் மதிப்பு கொடுக்கிறார்கள். தான், தனது என்ற ஒரு குறுகிய வட்டத்திற்குள்ளேயே வாழும் சமுதாயச் சூழல் வளர்ந்து கொண்டிருக்கிறது. சகிப்புத்தன்மை எனபது சிறிதும் இல்லாத காரணத்தால் பிறரின் உணர்வுகள், வலிகள் மிதிபட்டு போகிறது. விளைவுகளை யோசிக்காத மனிதநேயமில்லாச் செயல்கள் வளர்ந்து கொண்டே போகின்றன. தான் செய்த தவறுகளுக்கான குற்றஉணர்வே இல்லாத மாணவச்சமுதாயம் வளர்ந்து கொண்டிருக்கிறது எனில் அவனுக்கு இந்த மனவலிமை உருவாக்கியதற்கு யாரை காரணம் காட்டப் போகிறோம்?

நம் கல்வித்திட்டம் :

மூன்று வயது வரை குடும்பத்தில் நல் அரவணைப்போடு வாழ்ந்த குழந்தை, பள்ளிக்குச் சென்றபின் அவன் கற்கும் சூழலே அவனின் ஆளுமைப் பண்புகளை உருவாக்குகிறது. அரசு திட்டப்படி அவன் ஐந்து பாடங்களை வாரத்தில் 40க்கு 30 பாடவேளை களில் கற்றுக் கொள்கிறான். மதிப்பீட்டுக் கல்வி, உடற்கல்வி, யோகா போன்ற பாடங்களுக்கு வாரத்தில் ஒருநாள் மற்றும் இரண்டு நாட்கள் மட்டுமே தரப்படுகிறது. பாடங்களை அவன் படித்தாலும் படிக்காவிட்டாலும் எட்டாம் வகுப்பு வரை அனைவருக்கும் தேர்ச்சி அளிக்கப்பட வேண்டும். ஏனெனில் அனைவருக்கும் கல்வித் திட்டத்தில் யாரும் இடைநிற்றலோ படிப்பறிவு இல்லாமலோ இல்லை என்று உலகநாடுகளுக்கு சதவீதம் காட்ட வேண்டும். அனைவருக்கும் தேர்ச்சி என்கிற பட்சத்தில் பாடங்களுக்கு எதற்காக அதிக நேரங்களை ஒதுக்கி மதிப்பெண் ரீதியிலான கல்வியை அளிக்க வேண்டும்? நல் மதிப்பீடு, வாழ்க்கை மதிப்பீட்டில்லா கல்வியால் என்ன பயன்? எட்டாம் வகுப்பு வரை பாடங்களைக் குறைத்துக் கொண்டு மாணவனின் ஆளுமை வளர்ச்சிக்கு உதவும் கல்வித் திட்டத்தை உருவாக்கலாமே. ஆரோக்கிய வாழ்விற்கான உடற்பயிற்சி, யோகா, தற்காப்புப் பயிற்சி, நல்மதிப்பீட்டுக் கல்வியை மூன்று வயது முதல் 13 வயது வரை நாம் அளிக்கும் போது, அவன் மனிதனாக வாழக்கூடிய தகுதிகளைக் கற்றுத் தருகிறோம். ஆர்வமுடன் மாணவன் பள்ளியில் கல்வி கற்கும் சூழலையும் உருவாக்குகிறோம். நம் கல்வித் திட்டத்தின் படி மதிப்பெண் பெற்றெடுத்த குழந்தைகளைத் தான் உருவாக்கிக் கொண்டிருக்கிறோம். இந்த 10 சதவீத மதிப்பெண் குழந்தைகள் தான் பொருளாதார ரீதியாக உயர்நிலைக்குச் செல்கிறார்கள். மீதமுள்ள 90 சதவீதம் மதிப்பெண் எடுக்கத் தவறி விடுகின்றனர். நாமும் நல்மதிப்பீட்டுக் கல்வியை அளிக்கத் தவறி விடுகிறோம். இவையிரண்டும் சேர்ந்து சமுதாய சீர்கேடுகளுக்கு காரணமாக அமைந்து விடுகிறது.

மேலை நாடுகளின் கல்வித் திட்டம்

நாளைய சமுதாயம் மனிதன் வாழக்கூடிய சமுதாயமாக அமைய வேண்டுமெனில் நம் கல்வித் திட்டத்தில் சீரிய மாற்றங்களை மிக விரைவில் நடைமுறைபடுத்த வேண்டும். மேலைநாடுகளில் பள்ளிப்பருவம் முடிந்து கல்லுாரியில் அடியெடுத்து வைக்கும் முன் பல தகுதிச் சான்றிதழ்களை அடிப்படை தகுதிகளாக அவன் பெற்றிருக்க வேண்டும்.

*முதியோர் மற்றும் கருணை இல்லங்களில் குறிப்பிட்ட காலம் பணியாற்றிய சான்றிதழ்கள்.
* ஆறு மாதம் அல்லது ஓராண்டு காலம் பிற கண்டங்களில் எந்த நாட்டிலாவது தன்னார்வத் தொண்டு செய்ததற்கான சான்றிதழ்.
*குறிப்பிட்ட எண்களில் ஆய்வுக் கட்டுரைகள், ஒப்படைப்புகள்.
*சமுதாய நலன் பயக்கும் திட்டங்களில் பங்கேற்ற சான்றிதழ்.
*தன் தனிப்பட்ட திறமைகளை வளர்த்து தேர்ச்சி பெற்ற சான்றிதழ்.
இவையனைத்திற்கும் புள்ளிகள் ரீதியிலான மதிப்பீடுகளை அளிக்கின்றனர். இதனுடன் அவன் படித்த கல்வி மதிப்பெண்களும் இணைக்கப்படுகிறது. இப்படி பல வகையிலும் மாணவனை சமுதாய நலத்திட்டங்களில் ஊக்குவிக்கும் வண்ணம் செயல்முறை பயிற்சிகளை வகுத்துள்ளனர். படிக்கும் காலத்தில் தவறான பாதையின் பக்கம் போகாதவாறு நல்வழியில் திசை திருப்புகின்றனர்.இத்தகைய கல்வித் திட்டங்கள் நம் நாட்டிற்குத் தேவையாக இருக்கும் பட்சத்தில் ஏன் இத்தகைய செயல்முறை பயிற்சிகளை ஊக்குவிக்கக் கூடாது? ஜாதி மற்றும் மதிப்பெண் ரீதியிலான ஒதுக்கீடுகளை ஒதுக்கீடு செய்ய வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம்.

பலன் தரும் மதிப்பீட்டுக் கல்வி :

மாணவன் வாழும் சமுதாயச் சூழலுக்கேற்ப நல் மதிப்பீட்டுக் கல்வியை வரையறுக்கலாமே. கிராம சுகாதார திட்டங்கள், பசுமை புரட்சி திட்டம், விழிப்புணர்வு செயல்பாடு, மாசு கட்டுப்பாடு, நுாலகங்களில் பணியாற்றும் வாய்ப்பு, சாலை பாதுகாப்பு, ஆய்வுக் கட்டுரை சமர்ப்பித்தல், முதியோர், மாற்றுத் திறனாளிகள், மனநலம் குன்றியவர்கள், எய்ட்ஸ் நோயாளிகள், ஒதுக்கப்பட்ட குழந்தைகளுக்கான இல்லங்களில் பணியாற்றும் வாய்ப்பு, தற்காப்புப் பயிற்சி, பொது இடங்களை துாய்மை செய்தல், உடற்பயிற்சி, யோகா பயிற்சி, படிக்கும் காலத்தில் உழைத்து வேலை செய்தல். இதுபோன்ற திட்டங்களில் மாணவனை பங்கேற்கச் செய்யும் போது அவன் மனிதநேயத்தோடு சமூகத்தை நேசிக்கக் கற்றுக் கொள்கிறான். சட்ட திட்டங்களை மதிக்கக் கற்றுக் கொள்கிறான். சமுதாய நலனுக்காக முயற்சி எடுக்கும் சமூகத் தொண்டனாகும் வாய்ப்புகளைப் பெறுகிறான். தன்னம்பிக்கையோடு ஆரோக்கிய வாழ்விற்கு அடித்தளமிடுகிறான்.
இச்செயல்பாடுகளை மாணவச் சமுதாயத்திற்கு அளிக்க வேண்டிய கட்டாயச் சூழலில் இருக்கின்றோம்.

-மி.மரிய அமலி
'முத்தமிழ்க் காவலர்' - கி.ஆ.பெ.விசுவநாதம்

தமிழ் கூறு நல்லுலகிற்கு திருச்சி தந்த பெருங்கொடை கி.ஆ.பெ.விசுவநாதம் (1899--1994). 'முத்தமிழ்க் காவலர்' என தமிழக மக்களால் போற்றப்படும் ஆளுமைக்குச் சொந்தக்காரர். 'ஆயிரம்பிறை கண்டவர்' என்றாற்போல்
இம்மண்ணுலகில் 95 ஆண்டு காலம் நல்ல வண்ணம் வாழ்ந்து காட்டிய கொள்கைச் சான்றோர் கி.ஆ.பெ.

செவ்விய தமிழரின் பண்புகள்:

செவ்விய தமிழரின் பண்புகளாகப் பன்னிரண்டை, அகர முதல் ஒளகாரம் வரையிலான பன்னிரண்டு உயிரெழுத்துக்களைக் கொண்டு கி.ஆ.பெ. புலப்படுத்தி இருக்கும் அழகே அழகு.

அறத்தின் வழி நிற்றல்
ஆண்மையில் உயர்தல்
இன்பத்தில் திளைத்தல்
ஈதலிற் சிறத்தல்
உள்ளத்தில் தெளியராதல்
ஊக்கத்தில் தளராதிருத்தல்
எவரையும் தமராய்க் கொள்ளல்
ஏற்றத்தாழ்வின்றி வாழ்தல்
ஐயந்திரிபறப் பேசுதல்
ஒழுக்கத்தைக் காத்தல்
ஓரஞ்சாராது நிற்றல்
ஒளவியந்தன்னை அகற்றல்
செவ்விய தமிழரின் பண்பு !


சிறப்பு 'ழ'கரம்:

தமிழ் எழுத்துக்களில் 'ழ' என்னும் எழுத்து தமிழுக்குச் சிறப்புத் தருவது. எந்த மொழியிலும் இதுபோன்ற எழுத்து கிடையாது. அதனால் புலவர்கள் இதனை 'சிறப்பு ழகரம்' என்றே கூறுவர். இந்தச் சிறப்பு 'ழ' ஒலி சிலரால் சரியாக உச்சரிக்கப்படுவதில்லை.
  • திருச்சிக்குத் தெற்கே சிலர் 'ழ'வை 'ள' ஆக உச்சரிப்பர் (எ-டு: வாழைப்பழம் -- வாளப்பளம்).
  • திருச்சிக்குக் கிழக்கே, தஞ்சை மாவட்டத்தில் சிலர் 'ழ'வை 'ஷ' ஆக உச்சரிப்பர் (எ-டு: மார்கழித் திருவிழா -- மார்கஷித் திருவிழா).
  • சென்னை போன்ற இடங்களில் சிலர் 'ழ'வை 'ஸ' ஆக்கிப் பேசுவர் (எ-டு: இழுத்துக் கொண்டு- - இஸ்த்துக்குனு).
  • திருச்சிக்கு மேற்கே, கோவை போன்ற இடங்களில் சிலர் 'ழ'வை 'ய' ஆக ஒலிப்பர் (வாழைப்பழம்- வாயப் பயம்).
தமிழுக்கு உள்ள இந்தச்சிறப்பு 'ழ'கரம், தமிழ் மக்களிடத்துப் படுகிற பாட்டைக் கி.ஆ.பெ.விசுவநாதம் தமக்கே உரிய பாணியில் சுவையாக எடுத்துக்-காட்டியுள்ளார்.“நான் ஒரு தடவை கோவைக்குச் சென்ற போது கடைத் தெருவில் வாழைப் பழத்தை விற்கும் ஒருவன், 'வாயப் பயம்' என்றே கூறி விற்றுக் கொண்டிருந்தான்.என்னிடம் வந்து, தட்டை இறக்கி வைத்து, 'வாயப் பயம் வேணுங்களா?' என்றான். எனக்கு வியப்பு ஒரு புறம்; கோபம் ஒரு புறம். 'நீ எந்த ஊர் அப்பா?' என்றேன். அவன், 'கியக்கங்கே' என்றான். நான், '(கிழக்கு) கியக்கேயிருந்து இங்கே எதுக்கு வந்தீங்க?' என்றேன்.அவன், 'புயக்க வந்தேங்க' (புயக்க - பிழைக்க) என்றான். 'கியக்கேயிருந்து புயக்க வந்தேன்' என்றதும் எனக்குக் கோபம் அதிகமாகியது. 'ஏம்பா, தமிழை இப்படிக் கொலை பண்ணுகிறீர்கள்?' என்று அதட்டிக் கேட்டேன். அவன் இரண்டு கைகளையும் சேர்த்துக் கும்பிட்டுக் கொண்டே, 'அது எங்க வயக்கங்க' என்றான். நான் உடனே அவனை விட்டு எழுந்தே போய்விட்டேன்”. இங்ஙனம் மெல்லிய பூங்காற்றாய், கி.ஆ.பெ.வின் எழுத்திலும் பேச்சிலும் நகைச்சுவைத் தென்றல் வீசி நின்ற தருணங்கள் நிரம்ப உண்டு.

நகைச்சுவையும், நையாண்டியும்

நகைச்சுவை பற்றி கி.ஆ.பெ.விசுவநாதத்திற்கு தனிப்பட்ட கருத்து இருந்தது. அவரது பார்வையில் நகைச்சுவை வேறு; நையாண்டி வேறு. நகைச்சுவை செல்லுகின்ற பாதையில் ஒரு நுாலிழை தவறினாலும் நையாண்டியாகக் காட்சியளித்து விடும். நகைச்சுவை, அறிஞர்களை மகிழ்விக்கும்; நையாண்டி, மற்றவர்களை மகிழ்விக்கும். 'ஒருவன் கூறியது நகைச்சுவையா, நையாண்டியா?' என்பதை அறிய விரும்பினால், 'அதைக் கேட்டு மகிழ்ச்சி அடைந்தவர்கள் அறிஞர்களா, மற்றவர்களா?' என்பதைக் கொண்டு அறிந்து கொள்ளலாம்.

'எது நகைச்சுவை?' என்பதற்கு உதாரணமாகக் கி.ஆ.பெ.விசுவநாதத்தின் 'நடையும் உடையும்' என்னும் தலைப்பில் அமைந்த குட்டிக் கதையை பார்ப்போம். “தமிழ்நாட்டிலுள்ள ஒரு சிற்றுாரிலிருந்து ஒரு குடியானவன் பம்பாய் பார்க்கப் போயிருந்தான். ஊர் முழுவதும் சுற்றிப் பார்த்தான். மாலையில் கடற்கரையைப் பார்க்கப் போனான்.அங்கே, கடற்கரையில் ஒரு பையன் அலையை நோக்கி வேகமாக ஓடுவதும், தண்ணீரைக் கண்டதும் பின்வாங்குவதும், பிறகு அலையிலேயே காலை வைத்துக் கொண்டு விளையாடுவதுமாக இருந்தான். அப்பொழுது ஒரு பெரிய அலை வந்தது.அதைக் கண்ட குடியானவன் பயந்து போய், அப்பையனின் கூட வந்தவரைப் பார்த்து, 'சிறுபையன் சுட்டித்தனமாக விளையாடினால் நீங்கள் பார்த்துக் கொண்டிருக்கிறீர்களே, அவனை அழைத்து உங்கள் அருகில் வைத்துக் கொள்ளுங்கள்' என்றான்.

அது கேட்ட அந்த ஆள் சிரித்து, 'அது பையன் அல்ல, பெண்' என்றார். 'அப்படியா? நீங்கள்தான் அப்பெண்ணின் தந்தையா?' என்று கேட்டான் குடியானவன். அவர், 'இல்லையில்லை நான் அந்தப் பெண்ணுக்குத் தந்தையல்ல, தாய்' என்று சொன்னவுடன் குடியானவனின் வியப்புக்கு எல்லையே இல்லை.பெண்ணாக ஆணும், ஆணாகப் பெண்ணும் வேற்றுமை தெரியாத அளவுக்கு நடை, உடை, பழக்கங்களை மாற்றி நடந்துகொள்கின்றனர்.இதுபோன்ற 90 சுவையான கதைகளைத் தொகுத்து தனி ஒரு நுாலாகவே வெளியிட்டுள்ளார் கி.ஆ.பெ. இக்கதைகளுக்கு அவர் தந்திருக்கும் தலைப்பு 'அறிவுக் கதைகள்'.

கல்லாமையின் இழிவு

சான்றோர்கள் வாழ்வில் நடந்த சுவையான நிகழ்ச்சிகளை கி.ஆ.பெ.விசுவநாதம் தம் நுால்களில் பதிவு செய்துள்ளார்.
ஒரு சுவையான நிகழ்ச்சிக் குறிப்பு இதோ: “கவிராஜர் ஜெகவீர பாண்டியனார் பெரும் புலவர். கட்டபொம்மன் மரபிலே வந்தவர். ஒரு நாள் மதுரையில் கி.ஆ.பெ.அவருடன் பேசிக் கொண்டிருந்த சமயத்தில், சிற்றுாரில் இருந்து கவிராஜரைப் பார்க்க ஒருவர் வந்தாராம். அவரைக் கண்டதும் ஜெகவீர பாண்டியர் கி.ஆ.பெ.விசுவநாதத்துடன் பேசுவதை நிறுத்திவிட்டு, 'வாருங்கள், அமருங்கள், என்ன செய்தி?' என்று கேட்டாராம்.அதற்கு அவர், 'ஒன்றுமில்லை, தங்களைப் பார்க்க வந்தேன்!' என்றாராம். 'பார்த்தாயிற்றே; பின் என்ன செய்தி?' என்று மறுபடியும் கேட்டாராம். வந்தவர் அதற்கும் திரும்பத் திரும்ப, 'ஒன்றுமில்லை, தங்களைப் பார்க்க வந்தேன்' என்றே சொன்னாராம். கவிராஜர் சிறிது யோசித்து - சற்றுப் பேசி அனுப்ப எண்ணி, 'தங்களுக்குக் குழந்தை உண்டா?' என்று கேட்டாராம். 'இருக்கிறான், ஒரே பையன்' என்றாராம் வந்தவர். 'என்ன படித்திருக்கிறான்?' என்று கவிராஜர் கேட்க, வந்தவர் 'எங்கே படித்தான், ஒன்றும் படிக்கவில்லை' என்று சொல்ல, கவிராஜர், 'என்ன செய்கிறான்?' என்று கேட்க, அவர் 'வீட்டிலே இரண்டு எருமைகள் மேய்த்துக் கொண்டிருக்கிறான்' என்று சொன்னாராம்.உடனே கவிராஜர் எழுந்து, அவரை எழச் செய்து, தட்டிக் கொடுத்து, வெளிவாயிற்படி வரை அழைத்துக் கொண்டு போய் நின்று, “இனி யாராவது 'உங்களுக்கு எத்தனை எருமைகள்?' என்று கேட்டால், 'இரண்டு என்று சொல்ல வேண்டாம். மூன்று எருமைகள் உண்டு என்று சொல்லுங்கள்' என்று சொல்லி அவரை வழியனுப்பி வைத்தாராம்”.இந்நிகழ்ச்சியைச் சுட்டிக்காட்டிவிட்டு, “கல்லாமையின் இழிவைக் கவிஞர் உணர்த்தியது - காலம் பல கடந்தும் என் உள்ளத்தை விட்டு அகலவில்லை” என கி.ஆ.பெ.விசுவநாதம் கூறியிருக்கிறார்.

-பேராசிரியர் இரா.மோகன்,

Friday, November 7, 2014

மனிதன் வாழ்வாங்கு வாழும் கலை

எவனொருவன் பின்வரும் முறையில் வளர்ச்சியை வாழ்கையில் பதிக்கிறானோ அவனே இவ்வுலகில் மிசைபட வாழ்ந்தவனாகிறான். 1. தான், 2. குடும்பம், 3. சுற்றம், 4. ஊர், 5. நாடு, 6. உலகம் என்ற வரிசையில் வாழ்ந்து வளர்ச்சியை காண வேண்டும்.

தான் - கல்வி மற்றும் ஒழுக்கத்தில் வளர்தல் மற்றும் சம்பாதித்தல்.

குடும்பம் - பெற்றோர், சகோதர சகோதரிகள், கணவன்/மனைவி மற்றும் பிள்ளைகளின் வளர்ச்சியில் பங்கேற்பது, நேசிப்பது.

சுற்றம் - முடிந்தவரை பங்காளிகள் மற்றும் உறவுமுறைகளின் வளர்ச்சிக்கு உதவுவது.

ஊர் - பள்ளிக்கூடம், நூலகம், மருத்துவமனை, வங்கி, அஞ்சலகம், கோயில், குளம், பூங்கா இன்னபிற வசதிகள் அமைந்திட ஊர் மக்களோடு கலந்து ஒத்து வாழ்தல்.

நாடு - ஆட்சியமைப்பு, பொருளாதார வளர்ச்சி, தொழில் முன்னேற்றம், பொதுமக்கள் பாதுகாப்பு, போக்குவரத்து வசதிகள், அறிவியல்/தொழில்நுட்ப மேம்பாடுகள் போன்றவற்றுக்காக உழைத்தல்.

உலகம் - உலக மாற்றங்களைப் பற்றிய அறிவு, பிரச்சினைகளை இயற்கையோடு இயைந்து தீர்த்தல், இயற்கை வளங்களைப் பகிர்ந்து கொள்ளுதல்.

இதற்கான உளப்பயிற்சியும், உடற்பயிற்சியும், முயற்சியும் நாள்தோரும் மேற்கொள்ளப்பட வேண்டும். முயற்சி மட்டுமே வெற்றி தருவதில்லையாதலால், இறைவன் மற்றும் பெரியோரின் ஆசியை வணங்குதல் உறுதுணையே.
''அணிலே, அணிலே, ஓடிவா!
அழகு அணிலே ஓடிவா!
கொய்யா மரம் ஏறிவா!
குண்டுப்பழம் கொண்டு வா!
பாதிப் பழம் உன்னிடம்
பாதிப் பழம் என்னிடம்
கூடிக்கூடி இருவரும்
கொறித்துக் கொறித்துத் தின்னலாம்”

********************************

மாம்பழமாம் மாம்பழம் மல்கோவா மாம்பழம்
சேலத்து மாம்பழம் தித்திக்கும் மாம்பழம்
அழகான மாம்பழம் அல்வா போல் மாம்பழம்
தங்க நிற மாம்பழம் உங்களுக்கும் வேண்டுமா?
இங்கு ஓடி வாருங்கள்;பங்கு போட்டுத் தின்னலாம்.

*******************************

''வட்ட மான தட்டு.
தட்டு நிறைய லட்டு.
லட்டு மொத்தம் எட்டு.
எட்டில் பாதி விட்டு,
எடுத்தான் மீதம் கிட்டு.
மீதம் உள்ள லட்டு
முழுதும் தங்கை பட்டு
போட்டாள் வாயில் பிட்டு.
கிட்டு நான்கு லட்டு;
பட்டு நான்கு லட்டு.
மொத்தம் தீர்ந்த தெட்டு.
மீதம் காலித் தட்டு!”

********************************

''ஞாயிற்றுக்கிழமை பிறந்த பிள்ளை
நன்றாய்ப் பாடம் படித்திடுமாம்.
திங்கட்கிழமை பிறந்த பிள்ளை
தினமும் உண்மை பேசிடுமாம்
செவ்வாய்க்கிழமை பிறந்த பிள்ளை
செய்வதை ஒழுங்காய்ச் செய்திடுமாம்
புதன்கிழமை பிறந்த பிள்ளை
பெற்றோர் சொல்படி நடந்திடுமாம்
வியாழக்கிழமை பிறந்த பிள்ளை
மிகவும் பொறுமை காட்டிடுமாம்.
வெள்ளிக்கிழமை பிறந்த பிள்ளை
வேண்டும் உதவிகள் செய்திடுமாம்
சனிக்கிழமை பிறந்த பிள்ளை
சாந்தமாக இருந்திடுமாம்
இந்தக் கிழமை ஏழுக்குள்
எந்தக் கிழமை நீ பிறந்தாய்?”

*******************************

''தோலை உரித்த பிறகு தான்
சுளையைத் தின்று பார்க்கலாம்!
ஓட்டை உடைத்த பிறகு தான்
உள்ளே பருப்பைக் காணலாம்!
உலையில் அரிசி வெந்து தான்
உண்டு பசியைப் போக்கலாம்! …
பாடு பட்ட பிறகு தான்
பலனைக் கண்டு மகிழலாம்!”
இயன்முறை மருத்துவம் : மருந்துகளுக்கு மாற்றாக மருந்தில்லா மருத்துவம்

மருந்துகளுக்கு மாற்றாக மருந்தில்லா மருத்துவமாக இயன்முறை மருத்துவம் (பிசியோதெரபி) திகழ்கிறது. இதன் தத்துவம் வலியை நீக்கி, வலிமை உண்டாக்கி, உடலியக்கம் பெறச்செய்தல் என்பதாகும். வலியுள்ள இடத்தில் ரத்த ஓட்ட அளவை சீர்படுத்தி, அதற்குரிய தசையின் வலிமையை மேம்படுத்தி, உடல் இயக்கத்தை ஏற்படுத்தி, தீர்வளித்தல் என்பது இதன் பொருள். உடல் இயக்கத்தை முதன்மைப்படுத்தி பயிற்சி மற்றும் சிகிச்சை மருத்துவமாக இது விளங்குகிறது.

பக்கவிளைவு இல்லை:

இந்த பயிற்சி முறையில் மின்கருவி சிகிச்சை, ஒளிக்கதிர் சிகிச்சை, நீர்நிலை சிகிச்சை மற்றும் உடற்பயிற்சி மூலம் சிகிச்சை அளிக்கப்படுகிறது. உடல் இயக்கத்தின்போது, இதயத்துடிப்பு அதிகரிப்பதால் ரத்தத்தில் ஆக்சிஜன் அளவு அதிகரிக்கிறது. எனவே, உடலில் அனைத்து பாகங்களும் நன்றாக இயங்குகின்றன. ரத்தத்தில் சர்க்கரை மற்றும் கொழுப்பு அளவு கட்டுக்குள் கொண்டு வரப்படுகிறது. இம்மருத்துவத்தின் மூலம் மருந்துகள் இன்றி வலி நிவாரணம் பெற முடியும். வலி நிவாரணத்தில் மட்டும் 40 சதவீத மருந்துகளை தவிர்க்கலாம். மருந்தினால் ஏற்படும் பக்கவிளைவுகளை தவிர்க்கலாம். இந்த அவசர உலகில் போதிய உடல் இயக்கத்தை விட்டு விட்டு, உடற்பருமன் ஏற்பட்டதன் காரணமாகவும், குண்டும் குழியுமான ரோட்டில் அதிக துாரம் வாகனம் ஓட்டுவதாலும், தொடர்ச்சியாக பல மணி நேரம் கம்ப்யூட்டர் பணியினாலும் கழுத்து, முதுகு மற்றும் மூட்டு வலிகள் ஏற்படுகின்றன. உடல் இயக்கம் இல்லாததால், உடல் தசைகள் அனைத்தும் வலுவிழக்கின்றன. இதுவே அனைத்து வலிகளுக்கும் மூலகாரணம்.

அனைத்திற்கும் சிகிச்சை:

பிறவியில் ஏற்படும் தசை, நரம்பு, உடல் உறுப்புகளின் செயல்பாட்டுக்குறைவு, தசை சிதைவு நோய், மூளை நரம்பு பாதிப்பு முதுகுத்தண்டுவட முறிவினால் ஏற்படும் வாதம் ஆகியவற்றிற்கு பின்தொடர் சிகிச்சை மற்றும் மறுவாழ்வு சிகிச்சைக்கும் இயன்முறை மருத்துவம் பயன்படுகிறது. படுக்கைப்புண் ஏற்படாமல் தவிர்த்தல், எலும்பு அறுவை சிகிச்சை, மூட்டு மாற்று அறுவை சிகிச்சை, இருதய மற்றும் நுரையீரல் அறுவை சிகிச்சைக்குப்பின் தொடர் சிகிச்சை, தீக்காய சிகிச்சை, பிளாஸ்டிக் அறுவை சிகிச்சைகளுக்குப்பின் பின்தொடர் சிகிச்சைகளுக்கும் இந்த மருத்துவமுறை உதவுகிறது. விளையாட்டு வீரர்களுக்கு ஏற்படும் காயங்களுக்கும், அவர்களின் உடற்தகுதியை மேம்படுத்துவதற்கு தேவையான பயிற்சியை அளிப்பதற்கும், எலும்பு தேய்மானம், சவ்வு மற்றும் தசைநார் வீக்கத்தினால் ஏற்படக்கூடிய வலியை போக்குவதற்கான பெரும் பங்கு இயன்முறை மருத்துவம் வகிக்கிறது.

வலியின்றி வாழலாம்:

உடல் இயக்க மருத்துவத்தின் பயிற்சிகள் பொதுவான பயிற்சிகள் போல் அல்லாமல் வேறுபட்டு உள்ளதால், இயன்முறை மருத்துவ நிபுணரிடம் ஆலோசனை பெற்று உடல் இயக்க பயிற்சி செய்ய வேண்டும். எந்த இடத்தில் உடல் இயக்கத்தை தவிர்க்க வேண்டும் என அவர் ஆலோசனை வழங்குவார். மேலைநாடுகளில் வலி நிவாரண மருந்துகளுக்கு கட்டுப்பாடு உள்ளதால், உடல் இயக்கப்பயிற்சிகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. ஆனால், நமது நாட்டில் மருந்துகள் சாதாரணமாக கிடைக்கும் சூழல் உள்ளது. ஆகவேதான் நாம் பயிற்சியின் முக்கியத்துவத்தை உணராமல் உள்ளோம். ஒவ்வொரு வேளையும் தவறாமல் மருந்து, மாத்திரைகளை உட்கொள்வதுபோல, உடல் இயக்கப்பயிற்சிகளையும் தொடர்ந்து செய்துவந்தால் நன்மைகள் விளையும். குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை நலமோடும் வலிமையோடும் வலியின்றி வாழ, மருந்தில்லா இயன்முறை மருத்துவம் மிக மிக அவசியம்.

- ரெ.கணேஷ் பாண்டியன்

Thursday, October 23, 2014

அரிய பொக்கிஷங்கள் : களஞ்சியங்கள்

ஆன்ட்ராய்டு போனும் கையுமாக அலையும் இன்றைய இளைய தலைமுறையினர், 'வாட்ஸ் அப்'பில் தகவல் பரிமாறி; பேஸ் புக்கில் லைக் போட்டு; மதியம் பீட்சாவும், பர்கரும் கடித்து ருசித்து; நடுநிசி வரை கொண்டாட்டங்களில் களித்து; வார இறுதியில் 'அவுட்டிங்' சென்று... என, இன்றைய நவீன உலகின் வசதி, வாய்ப்புகளை அனுபவித்து லயிக்கின்றனர்.
நாம் இந்நிலைக்கு வரும் வரை தந்தை, தாத்தா, பாட்டன், பூட்டன்களுக்கு சோறு போட்டு தலைமுறைகளை காப்பாற்றிய, அக்கால விவசாயிகள், எந்த மாதிரியான வாழ்க்கை வாழ்ந்தனர்; அப்போது, என்ன வசதிகள் இருந்தன என்பதையும் அறிந்து கொள்வது அவசியம்...நம் முன்னோர்கள் பயன்படுத்தி வந்த எத்தனையோ பொருட்கள், காலமாற்றத்தால் மறைந்துவிட்டன. இயற்கையோடு இழையோடிய வாழ்க்கை முறைகள், பருவம் கண்டுபயிர் செய்த வானவியல் அறிவு, பஞ்சம், வெள்ளம் போன்ற இயற்கை சீற்றங்களிலிருந்து உழவுத்தொழிலை காக்க, விதைகளை கோவில் கலசங்களில் பாதுகாத்து வைத்த அறிவு கூர்மை ஆகியவை, இந்திய விவசாயத்தை இன்னும் உயிர்ப்புடன் வைத்திருக்கின்றன. ஒரு காலத்தில் பொள்ளாச்சி, ஆனைமலைப்பகுதி, கோவை மாவட்டத்தின் நெற்களஞ்சியமாக திகழ்ந்தது. மாடு கட்டி போர் அடித்தால் மாளாது என்று, யானைக்கட்டி போர் அடித்த பகுதி இது என பெருமை பேசப்படுகிறது.

சேமிப்புக் கிடங்குகள்:

விதை தேவைக்காகவும், வீட்டு உபயோகத்திற்காகவும் தானியங்களை பாதுகாத்து வைக்க, நம் முன்னோர்கள் பல வழிமுறைகளை பின்பற்றினர். அவற்றில் குதிர், கோட்டை, மதங்கு, பத்தாயம், சோளக்குழி ஆகியவை முக்கியமானவை.விவசாயம் மட்டுமே தெரிந்த அந்த காலகட்டத்தில், ஆனைமலை பகுதியில் 50 ஆண்டுகளுக்கு முன்பு தென்னை விவசாயம் பெரிதாக நடைபெறவில்லை. பழைய ஆயக்கட்டு பகுதிகளில், நெல்சாகுபடியும், மானாவாரி விவசாயமாக சோளம், நிலக்கடலை, கம்பு மற்றும் ராகி, போன்ற சிறுதானியங்களும் அதிகம் சாகுபடி செய்யப்பட்டன. அறுவடைக்குப்பின் நெல்லை பாதுகாக்க குதிர்களும், சோளத்தை பாதுகாக்க சோளக்குழிகளும், மதங்குகளும் பயன்பாட்டில் இருந்தன.

விதை பாதுகாப்பு:

விதை நெல் தேவைக்கு யாரையும் சாராமல் இருக்க, நமது முன்னோர்கள் அறுவடைக்குப்பின், நன்கு உலர்த்தப்பட்ட பயிர்களை, வீடுகளில் உள்ள குதிர்களில் சேமித்து வைத்திருந்தனர். குதிரின் அளவு இடத்திற்கு இடம் மாறுபடுகிறது. இந்த பகுதியில் உள்ள குதிர்கள் 4 முதல் 6 அடி உயரமும் 2 அடி வரை விட்டமும் கொண்டது. 'எங்கப்பன் குதிருக்குள் இல்லை' என்ற பழமொழியைக் கொண்டே ஒரு மனிதன் ஒளிந்து கொள்ளும் அளவிற்கு, அளவில் பெரிதாக இந்த மண்பானை குதிர்கள் இருந்துள்ளதை அறிந்து கொள்ளலாம்.

சோளக்குழி:

நிலத்தின் அடியில் அமைக்கப்பட்ட சேமிப்புக் கிடங்கு 'சோளக்குழி' என்றும், தரைமட்டத்திற்கு மேல் அமைக்கப்பட்ட கிடங்கு 'மதங்கு' எனவும் அழைக்கப்பட்டது. வீட்டின் முன்புறம் அல்லது கொல்லைப்புறத்தில், இந்த சேமிப்பு கிடங்குகள் அமைக்கப்பட்டிருந்தன. எட்டு அடி ஆழம் அல்லது உயரம், 5 அடி நீளம், அகலம் கொண்டே பெரும்பாலான சோளக்குழிகள் அமைக்கப்பட்டன. கற்கள் மற்றும் சுண்ணாம்பு அல்லது மண் கலவை கொண்டோ இது அமைக்கப்பட்டிருக்கும். இதன் அடிப்பகுதி பெருத்தும், வாயிற்பகுதி குறுகியும் காணப்படும்.தானியங்களை சேமிக்கும் போது, பூச்சிகள் வராமல் இருக்க நொச்சி, புங்கன், வேப்பிலை இலைகள் தானியங்களுடன் கலந்து வைக்கப்படும். இதனால் அவற்றின் முளைப்புத்திறனும் கெட்டுப்போகாமல் இருக்கும்.

மதங்கு:

எட்டடி உயரத்திற்கு சுண்ணாம்பு, ஓடைக்கற்கள், கருங்கல் ஆகியவற்றை கொண்டு வட்டவடிவில், சுற்றளவு அடிப்புறத்தில் அதிகரித்தும் மேற்பகுதி குறுகியும் கட்டப்பட்டதே மதங்கு. உள்ளே சுண்ணாம்புக்கலவை கொண்டு பூசப்பட்டு, சாணியால் மெழுகப்பட்டிருக்கும். உள்ளே உணவு தானியங்கள் கொட்டப்பட்டு, அதன் வாயிற்பகுதி பலகை கல் கொண்டு அடைத்து, சுண்ணாம்பு கலவை பூசப்பட்டு இருக்கும். தேவைப்படும் பொழுது ஏணியை பயன்படுத்தி, உள்ளே இறங்கி தானியங்களை எடுத்து பயன்படுத்துவார்கள்.ஒவ்வொரு போகமும் நெல் அறுவடை தொடங்கும் போது, விதைக்கான நெற்கதிர்களை அடையாளம் கண்டு அவற்றை தனியாக அறுவடை செய்து உலர்த்தி பதப்படுத்துவார்கள். அந்த நெல்லை அடுத்த பருவத்திற்காக பக்குவபடுத்தி வைக்கும் சேமிப்பு கிடங்குதான் குதிர்களும், மோடாக்கள் என அழைக்கப்படும் கூன்களும் ஆகும். இவைகள் எல்லாம் தற்போது வழக்கத்தில் இல்லை.

'பாரம்பரியத்தை மறக்காதீர்':

ஆனைமலை பகுதி விவசாயிகள் சிலர் கூறியதாவது: விவசாயத்தில் பூச்சிக்கொல்லி மருந்துகளை பயன்படுத்தி, விதை நேர்த்தி செய்யும் பழக்கம் அக்காலத்தில் இல்லை. தற்போது விதை நெல் முதல் உணவு வரை அனைத்தும் பாக்கெட்டில் அடைத்து விற்கப்படுகிறது. பாரம்பரியத்தை மறந்து, பன்னாட்டு விதை கம்பெனிகளை நோக்கி கையேந்தாத வரைதான், நம் நாட்டில் வேளாண்மை உயிர்ப்புடன் இருக்கும்.பாரம்பரிய தொழில்நுட்பங்களை மறந்தால், 'ஊரான் ஊரான் தோட்டத்திலே, ஒருத்தன் போட்டானாம் வெள்ளரிக்கா; காசுக்கு ரெண்டு விக்க சொல்லி கடுதாசி போட்டானாம் வெள்ளக்காரன்' என்ற விடுதலை போராட்ட கால பாடலை, மீண்டும் பாட வேண்டிய சூழல் ஏற்பட்டு விடும்.இவ்வாறு, விவசாயிகள் தெரிவித்தனர்.

Wednesday, October 15, 2014

நிறுவனங்கள் நம்மிடம் எதிர்பார்க்கும் சில முக்கியமான தகுதிகள்

நமக்கான பணி வாய்ப்புகளைத் தேடும்போது, நம்மிடம் சில முக்கியமான தகுதிகளை நிறுவனங்கள் எதிர்பார்க்கும். அத்தகுதிகளைப் பெற்றிருக்கும் ஒருவரே, தான் விரும்பிய பணியை, நல்ல சம்பளத்தில் பெறுவார்.

அவை பற்றிய ஒரு கலந்துரையாடலை இக்கட்டுரை வழங்குகிறது.

தகவல்தொடர்பு திறன்கள்
ஒருவர் தேவையான மொழிகளில், நல்ல அறிமுகத்தைப் பெற்றிருப்பதுடன், பணியைப் பெறுமளவிற்கு சிறப்பாக மொழியைப் பயன்படுத்த தெரிந்திருக்க வேண்டும். திக்கித் திணறாமல், நல்ல வளமையோடு பேசுபவர், எளிதில் தனக்கான பணி வாய்ப்புகளைப் பெறுகிறார்.
வளவளாவென்று இல்லாமல், சொல்வதை ரத்தின சுருக்கமாகவும், அமைதியான முறையிலும், சிறப்பான வார்த்தைகளைப் பயன்படுத்தியும் பேசும்போது, நம்மால் இயல்பாகவே, பிறர் கவரப்படுவார்கள். பேசுவதோடு மட்டுமின்றி, நல்ல எழுதும் திறனும், நமக்கான பணி வாய்ப்பை உறுதி செய்வதில் முக்கியப் பங்கை வகிக்கின்றன.

தலைமைத்துவம்
ஒருவருக்கு முன்முயற்சியும்(ஒரு விஷயத்தை தொடங்குவதில் ஆர்வம்), பொறுப்பும் இருந்தால், அவரை இயல்பாகவே, ஒரு நிறுவனத்திற்கு பிடித்துவிடும். இத்தகைய இயல்பு, அனைவருக்கும் அமைந்து விடுவதில்லை. ஆனால், இந்த பண்புகள், பணி தேடும் ஒருவரிடம் கட்டாயம் எதிர்பார்க்கப்படுகின்றன.
எனவே, தலைமைத்துவப் பண்பைப் பெற்று, முன்முயற்சியும் இருக்கும் ஒருவர், தனக்கு பொருத்தமானப் பணியை எளிதாகப் பெறுவார்.

தன்னம்பிக்கை
நிறுவனங்கள், தங்களுக்காக பேசும் தன்னம்பிக்கை மனிதர்களையே விரும்புகின்றன. ஏனெனில், அவர்கள் பல பொறுப்புகளை ஏற்று, அவைகளை தன்னம்பிக்கையுடன் கையாள்வார்கள்.
ஒருவர் தனக்கான வேலை வாய்ப்பை பெறுவதற்கு தன்னம்பிக்கை என்பது கட்டாயத் தேவையாகும். நேர்முகத் தேர்வில்கூட, ஒரு குறிப்பிட்டப் பொறுப்பை ஒப்படைத்தால் அதை சிறப்பாக தலைமையேற்று செய்து முடிப்பீர்களா? என்றெல்லாம் கேட்பதற்கு வாய்ப்புகள் அதிகம். அப்போது, உங்களின் பதில் எப்படி வருகிறது என்பது ஊன்றி கவனிக்கப்படும்.

குழு உணர்வு
குழு உணர்வு என்பது ஒரு நிறுவனத்தில் பணியாற்றுவதற்குரிய அடிப்படைத் தகுதியாகும். யாருமே, இந்த உலகில் தனித்து இயங்க முடியாது. ஏனெனில், யாருமே அவர்களாக பிறக்கவில்லை. பிறந்தது முதல், அவர்களாகவே தங்களுக்கான அனைத்தையும் செய்து கொண்டதில்லை.
எனவே, சார்ந்தியங்குவதே இவ்வுலகின் தத்துவம். ஒரு வணிக நிறுவனத்திற்கும் அதுவே பிரதானம். இதன்பொருட்டு, உங்களின் குழு உணர்வு சோதித்தறியப்படும்.

இலக்கு
ஒருவர் நேர்முகத் தேர்வுக்கு வரும்போது, அந்த நிறுவனத்தைப் பற்றி என்ன தெரிந்து வைத்துள்ளார் மற்றும் அவர் அங்கே என்ன பொறுப்பை எதிர்பார்த்து, அதன்மூலம் எந்த இலக்கை நிர்ணயித்து அதை அடையப்போகிறார்? என்பதை ஒரு நிறுவனம் எதிர்பார்க்கும். இதுதொடர்பான கேள்விகளும் கேட்கப்படும். எனவே, அதற்கு தயாராக இருக்க வேண்டும்.
மாறாக, இல்லை, எனக்கு இப்போதைக்கு எதுவும் சொல்வதற்கில்லை; பணியில் சேர்ந்த பிறகுதான் திட்டமிட வேண்டும் என்று சொல்பவர் வேலை வாய்ப்பை பெறுவது அரிதினும் அரிதே...

கடின உழைப்பு
எந்தப் பணியிலும், கடின உழைப்பு என்பதை சமரசம் செய்துகொள்ளவே முடியாதுதான். உலகில் வாழும் அனைவருக்குமே பணம் என்பது அத்தியாவசியம். எனவே, நாம் பணி செய்வதன் முதன்மை நோக்கம் பணம்.
ஆனால், அந்த பணத்திற்கான நோக்கத்தோடு, நாம் செய்யும் பணியும் நமக்குப் பிடித்துப்போனால், நாம் தாராளமாக நமது கடின உழைப்பை அதில் செலுத்துவோம். இதன்மூலம், திருப்திக்கு திருப்தியும், பணத்திற்கு பணமும் கிடைக்கும். எனவே, கடினமாக உழைக்க தயாராய் இருப்பவர்களுக்கு, பணியும் தயாராகவே இருக்கும்.

படைப்புத் திறன்
படைப்பாக்கத் திறன் கொண்ட ஒருவரை, நிறுவனங்கள் எப்போதுமே விரும்புகின்றன. ஏனெனில், ஒரு நிறுவனத்தில் செயல்படுத்தப்படும் திட்டங்களை, வேறு எந்த முறையில் மாற்றியமைத்தால், செலவு குறைவாகவும், லாபம் அதிகமாகவும் இருக்கும் என்று ஒருவர் புத்தாக்க முறையில் தீர்வுகளை முன் வைக்கும்போது, அவர் இயல்பாகவே, நிறுவனங்களால், போட்டிப்போட்டு கொத்திக் கொள்ளப்படுவார்.

இவை இருந்தால் போதும்; வேலை உங்களுக்குத்தான்...!

Tuesday, October 14, 2014

ஹோம் பட்ஜெட்: மாத கடைசியில் பணப் பற்றாக்குறை... எளிதாகச் சமாளிக்க 8 வழிகள்!

பெண்களுக்கான நிதி நிர்வாக வழிகாட்டி!

ஒண்ணுல இருந்து இருபது வரைக்கும் கொண்டாட்டம் கொண்டாட்டம், இருபத்தொண்ணுல இருந்து திண்டாட்டம்... கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் பாடிய இந்தப் பாடல் வெளிவந்து அரை நூற்றாண்டுகளுக்கு மேலாகிவிட்டது. ஆனால், அந்தப் பாடலின் கருத்து இன்றைக்கும் நூறு சதவிகிதம் நமக்குப் பொருந்தி வருகிறது. ஒன்றாம் தேதி வாங்கும் சம்பளத்தைப் பார்த்துப் பார்த்துச் செலவு செய்தாலும் 20 தேதிக்குமேல் திண்டாட்டமாகவே இருக்கிறது நம்மில் பலருக்கு.
'கையில வாங்கினேன். பையில போடல; காசு போன இடம் தெரியலை’ என்று திருச்சி லோகநாதன் பாடிய பாடலை பாட வேண்டிய நிலையில்தான் இருக்கிறது நம் வாழ்க்கை. எனவே, 21-ம் தேதிக்குப்பின் யாரிடம் கடன் கேட்பது என்று யோசிக்க ஆரம்பித்துவிடுவோம். இந்தப் பிரச்னையிலிருந்து நாம் எப்படித் தப்பிப்பது? என நிதி ஆலோசகர் வி.சங்கரிடம் கேட்டோம். விளக்கமாக எடுத்துச் சொன்னார் அவர்.

''நடுத்தரக் குடும்பத்தின் பெரிய பிரச்னையே மாத கடைசியில் கடன் வாங்காமல் சமாளிப்பது எப்படி என்பதுதான். இந்தப் பிரச்னையை எல்லாராலும் எளிதில் சமாளிக்க முடியும். ஆனால், உங்கள் பழக்கவழக்கத்தைக் கொஞ்சம் மாற்றிக்கொள்ள வேண்டும். என்னென்ன செய்யவேண்டும் என்பதை பாயின்ட் பை பாயின்டாகச் சொல்கிறேன்.

1. சம்பளம் வாங்கியவுடன் பட்ஜெட் போட வேண்டும். பட்ஜெட்டில் எழுதியதை அப்படியே பின்பற்ற வேண்டும். அதாவது, கல்விக் கட்டணம் ஒவ்வொரு மாதமும் 15-ம் தேதி செலுத்த வேண்டும் என்று வைத்துக்கொள்வோம்.
உங்களுக்கு 5-ம் தேதியே சம்பளம் வந்துவிடுகிறது என வைத்துக்கொள்வோம். சம்பளம் வந்தவுடன் இதைச் செலுத்திவிட வேண்டும். 15-ம் தேதிதானே, அன்றைக்கு கட்டினால் போதாதா என்று நினைக்கக் கூடாது. இப்படியே தள்ளிப்போட்டுக்கொண்டே போவது பிரச்னைகளை நாமே வரவழைத்துக்கொள்கிற மாதிரி ஆகிவிடும். இதனால் உரிய நேரத்தில் பணத்தைக் கட்டமுடியாத நிலைகூட நமக்கு வரலாம். அதனால் அபராதம் செலுத்தவேண்டிய சிக்கலும் வந்து சேரலாம். இந்தச் சிக்கலுக்கு எல்லாம் நாம் வழிவிடவே கூடாது.

2. சம்பளம் வந்ததும் அத்தியாவசியமான செலவுகள் என்னென்ன, தவிர்க்கக்கூடிய செலவுகள் என்னென்ன என்பதைப் பட்டியலிட வேண்டும்.
வீட்டு வாடகை, மளிகைப் பொருட்கள் வாங்குவது, இ.எம்.ஐ செலுத்துவது, மருத்துவம் போன்றவற்றுக்கான பணத்தை எந்தக் காரணம் கொண்டும் வேறு தேவைகளுக்காகப் பயன்படுத்தக்கூடாது.

3. கட்டாயம் செய்யவேண்டிய செலவுகளுக்கான பணத்தை சம்பளம் வந்தவுடன் ஒதுக்கிவைத்துவிட வேண்டும். இதுபோக, மீதமுள்ள பணம் கையில் எவ்வளவு இருக்கிறது என்பதைப் பார்க்க வேண்டும். இந்த மீதமுள்ள பணத்தில் என்னென்ன செலவுகள் செய்யலாம், என்னென்ன செலவுகளை செய்யக்கூடாது என்பதைத் திட்டமிட்டுக்கொள்ள வேண்டும். அதாவது, அடிக்கடி ஹோட்டலுக்குப் போவது, ஷாப்பிங் செய்வது, சுற்றுலா போவது போன்ற செலவுகளைத் தவிர்க்கலாம்.

4. ஒவ்வொரு மாதமும் சம்பளம் வந்தவுடன், ஒரு சிறிய அளவு பணத்தை எடுத்து தனியாக ஒதுக்கி, ரிசர்வ் ஃபண்டாக வைத்துவிட வேண்டும். இதை எளிதில் எடுக்க முடியாதபடி வைத்திருப்பது நல்லது. உதாரணமாக, வேறு ஒரு வங்கிக் கணக்கில் அந்தப் பணத்தை வைத்துவிடலாம். இந்தப் பணத்தை மிக மிக அவசர தேவைகள் ஏற்பட்டாலொழிய, 20-ம் தேதிக்கு முன்பு தொடவே கூடாது. இப்படி ஒவ்வொரு மாதமும் சம்பளம் வாங்கியவுடன் குறிப்பிட்ட அளவு பணத்தைப் போட்டுவைப்பது ஆபத்பாந்தவனாக உதவும். ரிசர்வ் ஃபண்ட்தான் இருக்கிறதே என்று நினைத்து 20 தேதிக்குள் தாம்தூம் என்று செலவழிக்கக் கூடாது. அவசரத்துக்கு மட்டுமே என ஒதுக்கிய அந்தப் பணம் ஒருவேளை பயன்படவில்லை எனில், அதை அந்தக் கணக்கிலேயே அப்படியே வைத்துவிடலாம். இப்படி ஒவ்வொரு மாதமும் சேரும் பணத்தை நீண்ட நாள் சேமிப்பாக மாற்றலாம்.

5. எப்போதுமே குறைந்த அளவில் கடனை வைத்துக்கொள்வது நல்லது. வீட்டுக் கடன் போன்ற சொத்து சேர்க்க உதவும் கடன்கள் தவிர்த்து, பிற கடன்கள் அனைத்துமே தேவை இல்லாத கடன்கள்தான். இதைத் தவிர்த்து, வாகனக் கடன், தனிநபர் கடன், நகைக் கடன் அனைத்துமே அதிகமான வட்டி விகிதத்தில்தான் கிடைக்கிறது. இந்தமாதிரியான கடன்களை வாங்கும்போது அதிகமான வட்டியைச் செலுத்தவேண்டியிருக்கும். இதனாலும் பட்ஜெட்டில் பற்றாக்குறை ஏற்பட்டு மாத கடைசியில் பிரச்னை உண்டாகும்.

6. மளிகைப் பொருட்களை தினம் தினம் வாங்குவதால் நமக்கு நஷ்டம்தான். இதற்குப் பதில் மொத்தமாக வாங்கினால் கணிசமான பணத்தை மிச்சப்படுத்த முடியும். சம்பளம் வந்தவுடன் ஒரு மாதத்துக்குத்  தேவையான பொருட்களை மொத்தமாக வாங்கிவிடலாம். மொத்த விலைக் கடைகளில் மளிகைப் பொருட்களை வாங்கும்போது ஒரு மாதத்துக்கு 200 - 300 ரூபாய் வரை மிச்சமாகும். தவிர, மாத கடைசியில் கையில் பணம் இல்லையென்றால் பொருட்களை வாங்க முடியாது. இதனால் கடன் வாங்கவேண்டிய சூழ்நிலை உருவாகும்.

7. கையிலிருக்கும் பணத்தை வைத்துதான் செலவுகளை முடிவுசெய்ய வேண்டும். உதாரணமாக, அடுத்த வாரம் 2 ஆயிரம் ரூபாய் கூடுதலாகக் கிடைக்கும் எனில், உடனே எங்கு ஷாப்பிங் போகலாம், என்ன பொருளை வாங்கலாம் எனத் திட்டமிடக்கூடாது. ஏனெனில், அந்தப் பணம் வராமல் போவதற்கு  வாய்ப்புள்ளது. எனவே, கையில் உள்ளதைவைத்து திட்டமிட்டு சிறப்பாக வாழ்வதே புத்திசாலித்தனம்.

8. எல்லாவற்றுக்கும் மேலாக, சிக்கனமான வாழ்க்கைமுறைதான் அடுத்தவரிடம் கையேந்தாத நிலைமையை நமக்குத் தரும். விரும்பியதையெல்லாம் அனுபவித்தால் பணம் செலவழியவே செய்யும்.
இதனால் மாத கடைசியில் பணப் பற்றாக்குறை வரவே செய்யும். எனவே, சிக்கனத்துக்கான வழிவகைகளை அவசியம் தெரிந்துகொண்டு அதன்படி நடப்பது நல்லது'' என்றார் சங்கர்.

கிடைக்கும் சம்பளத்தைத் திட்டமிட்டு செலவு செய்தால், மாத கடைசியில் பணமுடையா இருக்கே என்று கவலைப்படாமல், நிம்மதியாகவும் மகிழ்ச்சியாகவும் இருக்கலாம்.

http://www.vikatan.com/nanayam/2014/06/ndmxzj/images/nav60c.jpg
உலக உணவு தினம் (அக். 16) : உன்னத உயிர் உணவு எது ?

இன்று மனிதனின் வாழ்க்கைத்தரம் உயர்ந்து விட்டது; தேவைகள் அதிகரித்து விட்டன. இயந்திர உலகத்தில் சொகுசு வாழ்க்கைக்கு பழகிவிட்டோம். இதன் விளைவாக நோய்களின் பெருக்கம் அளவுக்கு மீறி நம்மை ஆதிக்கம் செலுத்தத் துவங்கி விட்டன. நோயின்றி வாழ முடியுமா? இதற்கு ஒரே பதில்... 'உணவே மருந்து... மருந்தே உணவு' என்ற இயற்கை தத்துவத்தின் அடிப்படையில் மருந்தில்லா வாழ்க்கை வாழ்வது தான்.

நோய்களின் தாக்கம் அதிகரிப்பதற்கு காரணம்... : மேலைநாட்டு உணவுகளும், துரித உணவுகளும் நம் நாட்டில் நுழைந்தபின், பாரம்பரிய உணவுகளை மறந்து விட்டது தான். ''அரிது அரிது மானிடராய் பிறத்தல் அரிது'' என்றார் அவ்வையார். நம் சான்றோர்கள் உடல்நலம் பேணுதலின் அவசியத்தையும், வழிமுறைகளையும் வகுத்து நமக்கு அளித்துள்ளனர். ஆரோக்கிய வாழ்விற்கு சமச்சீர் உணவு தேவை. நமது முக்கிய உணவாக அரிசி வந்தபின்... மானிட வாழ்க்கையில் 'அரிசி அரிசி... உணவில் முக்கியமானது அரிசி' என்று மாறி விட்டோம். அதுவே உடல்நலத்திற்கு ஊறுவிளைவிப்பதாய் மாறிவிட்டது.

உடல்பருமன் ஏன்? : மண்பானையில் சிறு, குறுந்தானிய கஞ்சி, களி, கூழ், கீரை மசியல் சமைத்து சாப்பிட்ட காலம் மாறி, பீட்சா, பர்கரின் பின்னே சென்றதன் விளைவு... இளம் வயதில் உடல்பருமன். காலையில் மோரில் ஊறவைத்த கம்பு, கேழ்வரகு கூழ், மதியம் கஞ்சி, களி, இரவில் ரொட்டி, கீரை மசியல், பருப்பு துவையல்... என, நம் முன்னோர்கள் மூன்றுவேளையும் சத்தான உணவுகளை சமச்சீராக உண்டனர். அதனால் தான் உடல் திடகாத்திரமாய் வயல்வேலைகளை களைப்பின்றி செய்ய முடிந்தது. உடல் எடை கூட்டாத இந்த உணவை சாப்பிட்டதால் வயிற்றில் சதையின்றி உடலும் உறுதியாக 'மிஸ்டர் ஆணழகர்களாக' ஆண்கள் வலம் வந்தனர். ஒல்லிக்குச்சி இடையழகிகளாக நம்மூரு பெண்களும் சுழன்றனர். இப்போது சுழல்வதற்கு இடுப்பைக் காணவில்லை. ஏனென்றால் உடலோடு இடுப்பும் ஒன்றாகிப் போனது தான். அரிசியில் கார்போஹைட்ரேட் தான் மிகுந்துள்ளது. இவற்றை தொடர்ந்து சாப்பிடுவதால் உடல் எடை கூடுகிறது. எடை கூடினாலே நீரிழிவு நோய் ஆரம்பிக்கும். இது போதாதென்று துணைக்கு பத்து நோய்களையும் விருந்தினர்களாக அழைத்து வரும்.

ஆண்டுகளாக வந்த அரிசிப் பழக்கத்திற்கு மாற்றாக கோதுமையும் வந்தது. இதிலும் பிரச்னை தீரவில்லை. நார்ச்சத்து வீணாகிறது கோதுமையை உடைக்கும் போது அதிலுள்ள தவிடு எனப்படும் நார்ச்சத்து வீணாகிறது. முழு கோதுமையை அப்படியே உடைத்து மாவாக்கினால் மாவின் நிறம் சற்றே செம்மையாக இருக்கும். இதில்தான் நார்ச்சத்து உள்ளது. ஆனால் நிறம் பிடிக்கவில்லை என்று சுத்திகரிப்பதால் கோதுமையையும் சிறந்த மாற்று உணவாக பார்க்க முடியவில்லை.

கம்பு, தினை, கேழ்வரகு தானியங்களில் இந்நிலை இல்லை. அறுவடை செய்யும் போது தானியங்களை அரவைக்கு கொடுக்கும் போது மேலே உள்ள உமியை மட்டுமே நீக்கமுடியும். தானியத்துடன் தவிடு இணைந்துள்ளதால் தனியாக பிரிக்க முடியாது. எனவே இவற்றை மாவாக்கினாலும், அப்படியே சமைத்தாலும் சத்துக்கள் இடம்பெயராது. எனவே, நார்ச்சத்து முழுமையாக கிடைக்கிறது.

அரிசிக்கு மாற்று : சிறு, குறுந்தானியங்களான கேழ்வரகு, கம்பு, தினை, வரகு, சாமை, குதிரைவாலியில் அதிக நார்ச்சத்தும், குறைந்த வெப்பக்கூறுகளும் கொண்டது. அரிசிக்கு மாற்றாக ?? சதவீத அளவுக்கு குறுந்தானியங்களை சேர்த்தால் உடலுக்கு நல்லது.

அசைவ உணவுகளின் மூலமே பெரும்பாலான புரதச்சத்துக்களை பெறுகின்றனர். சைவ உணவிலும் அதிக புரதச்சத்துக்கள் உள்ளன. பயறு வகைகளை சமைத்து உண்பதை விட, அவற்றை ஊறவைத்து முளைகட்டிய தானியமாக பச்சையாக சாப்பிட்டால், அசைவத்திற்கு
இணையான அதிக புரதச்சத்துக்களை குறைந்த செலவில் பெறலாம். கீரை, காய்கறிகளை உணவில் அதிகம் சேர்த்துக் கொள்ள வேண்டும். பயறு வகைகள் மட்டுமல்ல... கம்பு, கேழ்வரகையும் முளைகட்டி பச்சையாக சாப்பிடலாம். நம் பாரம்பரிய அறிவையும், உணவையும் மீட்டெடுத்து உபயோகிக்க ஆரம்பித்தால்... பின்னால் வரக்கூடிய பலவித நோய்களின் பிடியிலிருந்து நம் சமுதாயத்தைக் காக்கலாம். இயற்கை உணவே இனியஉணவு; இதுவே உன்னதமான உயிர் உணவு. உடல்நலத்தைப் பாதிக்கும் உணவுகளை கைவிட்டு உன்னதமான நன்மை பயக்கும் உணவுகளைத் தேடி, நாம் வந்த வழியிலேயே திரும்பிச் செல்வோம். இழந்த ஆரோக்கியத்தை மீண்டும் பெறுவோம்.

-சி.பார்வதி, விரிவாக்கத்துறை தலைவர், மனையியல் கல்லூரி,
விவசாயக் கல்லூரி வளாகம், மதுரை, 94422 19710.
லேன்ட்ஸ்கேப் ஆர்கிடெக்ட்

லேன்ட்ஸ்கேப் ஆர்கிடெக்ட் என்பவர், ஒரு இட அமைப்பையோ, தோட்டத்தையோ அல்லது ஏதேனும் ஒரு தனிப்பயன் இடத்தையோ உருவாக்குவதற்கு திட்டமிடுதல், வடிவமைத்தல் மற்றும் இயக்குதல் உள்ளிட்ட பல நடவடிக்கைகளில் ஈடுபடுகிறார். இதுதொடர்பான ஒரு தொழில்முறை செயல்பாடு லேன்ட்ஸ்கேப் ஆர்கிடெக்சர் எனப்படுகிறது.
அதேசமயம், லேன்ட்ஸ்கேப் டிசைனர் என்ற ஒரு வார்த்தையும் உள்ளது. அதாவது, Landscape architect -ஆக செயல்படுவதற்கு சரியான அங்கீகாரமோ அல்லது உரிமமோ(licence) பெறாதவர்கள், Landscape designer என்று அழைக்கப்படுகிறார்கள்.

மேலும், Landscape architecture தொழிலில் ஈடுபடுவதற்கான முறையான அங்கீகாரத்தை இன்னும் பெறாதவர்கள், தங்களை, தோட்டக் கலைஞர்கள், செடி உருவாக்க வடிவமைப்பாளர்கள், சுற்றுச்சூழல் வடிவமைப்பாளர்கள் அல்லது பயன்பாட்டு இடவமைப்பு திட்டமிடுநர்கள் என்ற பல்வேறு பெயர்களில் அழைத்துக் கொள்கிறார்கள்.

லேன்ட்ஸ்கேப் ஆர்கிடெக்டின் பணி என்ன?
ஒரு குறிப்பிட்ட தோட்டமாக இருந்தாலும்சரி, குறிப்பிட்ட பயன்பாட்டு இடஅமைப்பாக இருந்தாலும் சரி, லேன்ட்ஸ்கேப் ஆர்கிடெக்ட், படைப்பாக்க அறிவைப் பெற்றவராக இருக்கிறார். ஒரு காலகட்டத்தில், ஒரு பயன்பாட்டு இடவமைப்பு (landscape) எவ்வாறு காட்சித்தர வேண்டும் மற்றும் எதிர்வரும் காலங்களில், அந்த பயன்பாட்டு இடவமைப்பு எவ்வாறு மேம்பட்டு, மாற்றமடைய வேண்டும் என்பது குறித்தான நடவடிக்கைகளை அவர் கையாள்கிறார். இதுதொடர்பான திட்டமிடுதல்கள், வடிவமைப்புகள் மற்றும் அவற்றை நடைமுறைப்படுத்தும் வழிமுறைகள் ஆகிய அனைத்தையும் லேன்ட்ஸ்கேப் ஆர்கிடெக்ட்தான் முடிவு செய்கிறார்.

பொறுப்புகள் மற்றும் பணிகள்
* புராஜெக்ட் பற்றி வாடிக்கையாளரிடம் உரையாடுதல்
* பணி மேற்கொள்ளப்படக்கூடிய பகுதியில் இருக்கின்ற இயற்கை வளங்கள், அம்சங்கள், உயிரினங்கள் மற்றும் தாவரங்கள் ஆகியவற்றை கண்டறிதல்
* திட்டங்களை உருவாக்க, CAD போன்ற தொழில்நுட்பங்களைப் பயன்படுத்துதல்
* மக்கள் குழுவினருக்கான அறிக்கை எழுதுதல் மற்றும் பிரசன்டேஷன்களை அளித்தல்
* திட்டங்களுக்கான செலவினங்களை மதிப்பிட்டு, அதை மேற்பார்வையிடல்
* ஒரு பயன்பாட்டு இடவமைப்பிற்கு பொருத்தமான மற்றும் தேவையான மரங்கள், செடிகள் மற்றும் அழகு தாவரங்கள் ஆகியவற்றை தேர்வு செய்தல்
* ஒரு பயன்பாட்டு இடவமைப்பிற்கு, மாற்றுத் திறனாளிகள் போன்ற மனிதர்கள் எந்தளவிற்கு எளிதாக வந்துசெல்ல முடியும் என்பது குறித்தான அம்சங்களை உறுதிசெய்தல்
* ஒரு பயன்பாட்டு இடவமைப்பை(landscape) ஏற்படுத்துவதற்கான செலவினங்கள், அப்பணி முடிந்தபிறகு, பராமரிப்பிற்கு எவ்வளவு செலவாகும் என்பன போன்ற விபரங்களை, வாடிக்கையாளர்களுக்கு, கவுன்சில் கமிட்டிகளுக்கு, உள்ளூர் மக்களுக்கு மற்றும் பொது விசாரணைகளில் சமர்ப்பித்தல்.

விரிவான தயாரிப்பு மற்றும் மேற்பார்வை
ஒரு பயன்பாட்டு இடவமைப்பை அமைப்பதற்கு திட்டமிட்டு, அதற்கான செலவு மதிப்பீடு மற்றும் உருவாக்கத்திற்கான ஏற்பாட்டுப் பணிகள் அனைத்தையும் முடிவுசெய்து, வாடிக்கையாளரிடம் விபரம் சமர்ப்பித்து, பணிகளை தொடங்கிய பிறகு, தேவையான சமயங்களில் பணி நடைபெறும் இடத்திற்கு சென்று, திட்டமிட்டபடி எல்லாம் நடக்கிறதா என்று உறுதிசெய்ய வேண்டும்.

இப்பணிக்கு தேவைப்படும் திறன்கள்
* பல்வேறான விருப்பங்கள் மற்றும் தேவைகளை கருத்தில்கொண்டு, ஒரு புதிய தீர்வை கண்டுபிடிக்கும் திறன்
* நல்ல தகவல்தொடர்பு திறன்
* நல்ல வடிவமைப்புத் திறன்
* சுற்றுச்சூழல் பாதுகாப்பு, சிவில் இன்ஜினியரிங், சர்வேயிங், மண்ணியல், தோட்டக்கலை மற்றும் புவி நகர்வு நுட்பங்கள் ஆகியவைப் பற்றி தேவையான அறிவுத்திறன்
* நல்ல பேரம் பேசும் திறன்
* நல்ல குழுப்பணித் திறன்
* நல்ல கணிப்பொறித் திறன்
* வெளிப்பார்வை இடவமைப்பை சிறப்பாக பயன்படுத்தக்கூடிய ஆர்வம்

இத்துறையில் நுழைதல்
பெரும்பாலான லேன்ட்ஸ்கேப் ஆர்கிடெக்டுகள், லேன்ட்ஸ்கேப் கல்வி நிறுவனத்தால் (LI - Landscape Institute) அங்கீகரிக்கப்பட்ட இளநிலை அல்லது முதுநிலை பட்டத் தகுதியைக் கொண்டிருக்கிறார்கள்.
படிப்பை நிறைவுசெய்த பின்னர், LI -ல் அசோசியேட் உறுப்பினராக ஆகலாம். அதேசமயம், இதில் உறுப்பினராகும் ஒரு முதிர்ந்த உறுப்பினருக்கு, கட்டடக்கலை, தோட்டக்கலை மற்றும் வனவளம் ஆகிய துறைகளில் பெற்றிருக்கும் அனுபவம் மதிப்புத் தருவதாக அமையும்.
அசோசியேட் உறுப்பினர் ஆனவுடன், chartered landscape architect என்ற நிலையை அடைய, குறைந்தபட்சம் 2 ஆண்டுகள் ஆகும். அதற்கென சில விதிமுறைகள் உள்ளன. ஆனால், அந்த நிலையை அடைந்த ஒருவர், தனது துறைசார்ந்த அறிவை இடைவிடாமல் மேம்படுத்திக் கொள்ள, CPD எனப்படும் தொடர்ச்சியான நிபுணத்துவ மேம்பாட்டை மேற்கொள்ள வேண்டியிருக்கும்.

லேன்ட்ஸ்கேப் ஆர்கிடெக்ட் ஆவதற்கு எங்கே படிக்கலாம்?
* ஸ்கூல் ஆப் பிளானிங் அன்ட் ஆர்கிடெக்சர்
* சண்டிகர் காலேஜ் ஆப் ஆர்கிடெக்சர்
* சர் ஜே.ஜே. காலேஜ் ஆப் ஆர்கிடெக்சர்
* பெங்கால் பொறியியல் கல்லூரி
* ஜாதவ்பூர் பல்கலை
* டி.வி.பி. ஸ்கூல் ஆப் ஹேபிடட் ஸ்டடீஸ்
* ஐ.ஐ.டி., காரக்பூர்
* ஐ.ஐ.டி., ரூர்கி
* சென்டர் பார் என்விரான்மென்டல் பிளானிங் மற்றும் தொழில்நுட்பம்
* ராய் பல்கலை, ராய்ப்பூர்

படிப்பு விபரங்கள்
லேன்ட்ஸ்கேப் ஆர்கிடெக்சர்
பிளான்ட்ஸ் அன்ட் டிசைன்
நேச்சுரல் சயின்சஸ்
லேன்ட்ஸ்கேப் டெக்னாலஜி I
லேன்ட்ஸ்கேப் டிசைன் ஸ்டுடியோ I
செமஸ்டர் II
தியரி ஆப் லேன்ட்ஸ்கேப் ஆர்கிடெக்சர் II
ரீஜினல் லேன்ட்ஸ்கேப் பிளானிங்
லேன்ட்ஸ்கேப் டெக்னாலஜி II
லேன்ட்ஸ்கேப் புரபஷனல் பிராக்டிஸ்
லேன்ட்ஸ்கேப் டிசைன் ஸ்டுடியோ II
செமஸ்டர் III
ரிசர்ச் பேப்பர்
லேன்ட்ஸ்கேப் மேனேஜ்மென்ட்
லேன்ட்ஸ்கேப் டிசைன் ஸ்டுடியோ III
செமஸ்டர் I
லேன்ட்ஸ்கேப் கன்சர்வேஷன்
என்விரான்மென்டல் லெஜிஸ்லேஷன் அன்ட் எகனாமிக்ஸ்
டிசர்டேஷன்
புரபஷனல் டிரெய்னிங்

எதிர்கால வாய்ப்புகள்
நன்றாக யோசித்து, ஒரு தெளிவான நோக்கத்துடன் தேர்வு செய்யப்படும் எந்த துறையும், ஒருவருக்கு நிச்சயம் வெற்றியையே தரும். லேன்ட்ஸ்கேப் வடிவமைப்பு என்பது அனைவருக்குமே ஒத்துவரக்கூடிய துறையாக இருக்க முடியாது.
இத்துறை தொடர்பான நல்ல அகப்பார்வை மற்றும் திறன் கொண்டவர்களே, இதில் வெற்றிக்கொடி நாட்டுகிறார்கள். சுற்றுச்சூழல் கெடாத வகையிலும், மக்கள் சிரமமின்றி பயன்படுத்தும் வகையிலும், ஒருவர் தனது படைப்பாற்றலை பயன்படுத்தி, லேன்ட்ஸ்கேப் வடிவமைப்பு பணியை மேற்கொள்ள வேண்டும்.
லேன்ட்ஸ்கேப் வடிவமைப்பு என்பது பார்ப்பவரை கவரும் வகையில் அமைதல் முக்கியம். எனவே, நாம் மேற்சொன்ன திறன்களும், மனப்பாங்குகளும், ஆர்வமும் உங்களுக்கு இருக்கிறது என்று நீங்கள் உறுதியாக நம்பினால், இத்துறையில் தாராளமாக மூழ்கலாம்.
உலக மன நல தினம்

மனநோய் என்றாலே அடிப்பதும், கடிப்பதும், தெருவில் ஓடுவதும் தான் என்ற எண்ணத்தை, மக்கள் மனதில் முத்திரையாக குத்தியுள்ளனர். இதை தீவிர மனநோய், மனச்சிதைவு நோய் (சிசோபெர்னியா) என்பர். இந்த ஆண்டு, உலக சுகாதார நிறுவனத்தின் உலக மனநல தினத்திற்கான மந்திர வார்த்தை... 'மனச்சிதைவு நோயுடன் வாழ்வது' குறித்து தான்.தன்னுணர்வின்றி தெருவில் திரிவதோ, குழப்பமான மன நிலையோ தான் இதற்கு காரணம்.

எல்லா மனநோய்களையும் இந்த வகையில் சேர்க்கமுடியாது. உலகம் முழுவதிலுமே இந்நோயால் பாதிக்கப்பட்டவர்கள் ௧ சதவீதம் பேர் உள்ளனர். தமிழகத்திலும் இதே சதவீதம் பேர் உள்ளனர். கஞ்சா புகைப்பவர்களுக்கு மூளையில் செயற்கை ரசாயனம் சுரப்பதால், மனச்சிதைவு நோய் ஏற்படும் வாய்ப்பு அதிகம். இது நோயை நாமே விரும்பி வரவழைப்பதற்கு சமம்.மனநோயைப் பொறுத்தவரை உடல் நோய்களைப் போலவே மிதமான நோய், தீவிரமான நோயாக பிரிக்கலாம். மனப்பதட்டம், மனச்சோர்வு போன்ற மிதமான மனநோய்களுக்கு 'கவுன்சிலிங்' மூலமும், மாத்திரைகளின் மூலமும் எளிதில் குணப்படுத்தலாம்.

தனிமையைத் தேடும்: மனச்சிதைவு நோய்க்கு காரணம், மூளையில் ஏற்படும் ரசாயன மாற்றம் தான். மூளையில் சுரக்கும் 'டோப்பமின்' ரசாயனம் சமநிலையின்றி குறையும் போதோ, அதிகமாகும் போதோ சிக்கல் வருகிறது. ரசாயனம் குறையும் போது எதிர்மறையான சிந்தனைகள் ஏற்படுகின்றன. எதிலும் நாட்டமில்லாத நிலை, ஆர்வமற்ற நிலை, தனிமையை விரும்புவது, குறிக்கோள் இன்றி இருப்பது, தன்னைத் தானே கவனித்துக் கொள்ளாமல் இருப்பது போன்றிருப்பர்.

மாயக்குரல் கேட்குதே : 'டோப்பமின்' ரசாயனம் அதிகரிக்கும் போது வேறுவிதமான பிரச்னைகள் ஏற்படும். காதில் யாரோ பேசுவது போலவும், சத்தம் போடுவது, திட்டுவது போன்று உணர்வர். யாரோ தன்னைப் பின்தொடர்வது போன்று நினைப்பர். செய்வினை வைத்துள்ளதாக பயப்படுவர். தெருவில் செல்பவர்கள் தன்னைப் பற்றி தான் பேசுகின்றனர் என தவறாக நினைப்பர். கணவன், மனைவிக்குள் சந்தேகம் அதிகமாவதும் இதனால் தான். யாரோ பேசுவது போல உணர்ந்து தனக்குத் தானே பேசிக் கொள்வர்.
இரையாகும் விடலைப்பருவம்: தாயின் கருவில் இருக்கும் போது வைரஸ் தாக்குதல், சத்தான உணவு எடுத்துக் கொள்ளாதது போன்றவையும் காரணமாக இருக்கலாம். ஆனால் இதுதான் காரணம் என்று சொல்லமுடியாது.
கருவிலேயே இப்பிரச்னை ஆரம்பித்து விடும் என்றாலும் மழலைப் பருவத்தில் வெளியே தெரியாது. அமைதியான ஆட்கொல்லி போல, வளர்இளம் பருவம் வரும் போது தன் வேலையை காண்பித்து விடும்.
ஆண்களுக்கு 16 முதல்18 வயதில் இப்பிரச்னை ஆரம்பிக்கிறது. 'என் மகன் பத்தாவதில் நன்றாக படித்தான். நிறைய மார்க் எடுத்தான். பிளஸ்௨ வில் படிக்க மாட்றான். பேச மாட்றான். தனியாவே இருக்கான்' என்று சொல்லி, 'கவுன்சிலிங்' வருபவர்கள் அதிகம். உண்மையில் இதற்கு 'கவுன்சிலிங்' மட்டுமே சிகிச்சை அல்ல.

பேய் கோளாறா : பெண்களுக்கு 25 வயதிலும், சிலநேரங்களில் அதற்கு முன்பாகவும் இப்பிரச்னை வரும். அதனால் தான் திருமணமான பெண்களுக்கு, 'கல்யாணத்துக்கு முன்னால் நல்லாத் தான் இருந்தா... இப்பத்தான் இப்படி ஆயிட்டா' என்று சொல்வதைக் கேட்டிருப்போம். இதை பேய் கோளாறு, எங்கேயோ போய் பயந்துட்டா... செய்வினைக் கோளாறு என்று தவறாக சொல்கின்றனர்.

100 நோயாளிகளில் 50௦ பேரே சிகிச்சைக்கு வருகின்றனர். அதுவும் முற்றிய நிலையில் வருகின்றனர். குடும்பத்தினரை அடித்தாலோ, காயப்படுத்தினாலோ, துாங்கவிடாமல் தொந்தரவு செய்தால் தான் மனநோய் என்று நினைக்கின்றனர்.

அமைதியே ஆபத்து :ஆனால் யாரையும் தொந்தரவு செய்யாமல், யாரிடமும் பேசாமல் அமைதியாக இருந்தால் கண்டு கொள்வதில்லை. இதுதான் ஆபத்தான நிலையின் துவக்கம். இந்த நிலையில் உடனடியாக மருத்துவ சிகிச்சை அளிப்பதே நல்லது.

ஆணோ, பெண்ணோ ஆரம்ப கட்டத்திலேயே சிகிச்சை பெறவந்தால் மூளையின் ரசாயன மாற்றத்தை மருந்துகளின் மூலம் சரிசெய்யலாம். முற்றிய நிலையில் குணப்படுத்தமுடியாது. நோயின் தீவிரத்தை கட்டுப்படுத்த முடியும்.

பெற்றோரில் யாருக்காவது ஒருவருக்கு இப்பிரச்னை இருந்தால் மரபணு ரீதியாக வருவதற்கு வாய்ப்பு உண்டு. இருவருக்குமே இருந்தால், பிறக்கும் குழந்தைகளும் 50௦ சதவீதம் பாதிக்கப்பட வாய்ப்புண்டு.நோய் முற்றிய பின் அவர்களை புறக்கணிக்கும் போது தான் வீதியில் நடை பிணங்களாக உலாவுகின்றனர். அவர்களும் நம்மைப் போல மனிதர்களாக வாழ... ஆரம்பநிலையிலேயே மனநோயைக் கண்டறிவோம்... மனநிம்மதியுடன் வாழ வழிசெய்வோம்.
-டாக்டர் ஜி.ராமானுஜம், மனநல பேராசிரியர்,அரசு மருத்துவக் கல்லுாரி, திருநெல்வேலி.
குடும்ப கோர்ட்கள்

பத்து லட்சத்திற்கும் அதிகமான மக்கள் தொகை கொண்ட ஒரு நகரம் அல்லது இடத்தில் குடும்ப கோர்ட்டை மாநில அரசு அமைக்கிறது. சட்டப்பூர்வமான பிரிவு, விவாகரத்து, திருமணத்தை ரத்து செய்தல், மறுவிவாகம், ஜீவனாம்சம், தத்து எடுத்தல், தந்தை உரிமை பரிசோதனை, மைனர் உறவு முதலிய குடும்பம் சார்ந்த விஷயங்கள் குடும்ப கோர்ட்டிற்கு கீழ் வரும். குடும்ப கோர்ட் நீதிபதிகள் நியமனத்தில் பெண்களுக்கு முன்னுரிமை உண்டு. குடும்ப கோர்ட்டில் கவுன்சிலர்கள் எனப்படும் உதவி செய்யும் ஆலோசகர்கள் முக்கியத்துவம் பெறுகின்றனர்.

Thursday, September 11, 2014

தமிழ் தந்த சித்தர்கள் : நம் உடலுக்கும் கால அட்டவணை உண்டு.

இதை நாம் முறையாகப் பின்பற்றினால் டாக்டரிடம் போக வேண்டிய அவசியமே இல்லை.


விடியற்காலை 3 முதல் 5 மணி வரை - நுரையீரல் நேரம். இந்த நேரத்தில் தியானம், மூச்சுப் பயிற்சி செய்தால் ஆயுள் நீடிக்கும்.

காலை 5 முதல் 7 வரை பெருங்குடல் நேரம். இந்த நேரத்தில் காலைக்கடன்களை முடிக்க வேண்டும். இதனால் மலச்சிக்கலே ஏற்படாது.

காலை 7 முதல் 9 வரை வயிற்றின் நேரம். இந்த நேரத்தில் சாப்பிடுவது நன்கு ஜீரணமாகும்.

காலை 9 முதல் 11 வரை மண்ணீரல் நேரம். வயிற்றில் விழும் உணவைச் செரிக்கச் செய்யும் நேரம். இந்த நேரத்தில் எதையும் சாப்பிடக் கூடாது. தண்ணீர் கூடக் குடிக்கக் கூடாது.

காலை 11 முதல் 1 வரை இதயத்தின் நேரம். இதய நோயாளிகள் கவனமாக இருக்க வேண்டிய நேரம். சத்தமாகப் பேசுதல், படபடத்தல், கோபப்படுதலை அறவே தவிர்க்க வேண்டும்.

பிற்பகல் 1 முதல் 3 வரை சிறுகுடல் நேரம். மிதமான சிற்றுண்டியுடன் ஓய்வு எடுக்க வேண்டும்.

பிற்பகல் 3 முதல் 5 வரை சிறுநீர்ப் பையின் நேரம். நீர்க்கழிவுகளை வெளியேற்றச் சிறந்த நேரம்.

மாலை 5 முதல் 7 வரை சிறுநீரகங்களின் நேரம். தியானம், இறைவழிபாடு செய்வதற்கு ஏற்றது.

இரவு 7 முதல் 9 வரை பெரிகார்டியத்தின் நேரம். பெரிகார்டியன் என்பது இதயத்தைச் சுற்றி இருக்கும் ஒரு ஜவ்வு. இரவு உணவுக்கேற்ற நேரம்.

இரவு 9 முதல் 11 வரை - உச்சந்தலை முதல் அடிவயிறு வரை உள்ள மூன்று பாதைகள் இணையும் நேரம். அமைதியாக உறங்கலாம்.

இரவு 11 முதல் 1 வரை - பித்தப்பை நேரம். அவசியம் உறங்க வேண்டும்.

இரவு 1 முதல் 3 வரை - கல்லீரல் நேரம். ரத்தத்தை கல்லீரல் சுத்தப்படுத்தும் நேரம். கட்டாயம் தூங்க வேண்டும்.

Monday, September 8, 2014

மின் ஆளுமை (இ-கவர்னன்ஸ்) திட்டம்

இந்தியாவில் மக்கள்தொகை பெருக்கத்தாலும், நிர்வாகத்தில் உள்ள குறைபாடுகளாலும் எந்தவொரு திட்டமும் முழுமையாக மக்களை சென்றடைவதில்லை. காகிதத்திற்காக, தினமும் பல லட்சம் மரங்கள் அழிக்கப்படுகின்றன. முறைகேடற்ற, காகிதம் இல்லாத நிர்வாகத்தை கொண்டுவர வேண்டியது காலத்தின் கட்டாயமாகிறது. திட்டங்கள் முழுமையாக சென்றடைய, அனைத்து துறைகளும் கம்ப்யூட்டர் மயமாக்கப்பட வேண்டும். அறிவுசார்ந்த உலகில் தகவல் தொழில்நுட்பம் பெரும் புரட்சியை ஏற்படுத்தி உள்ளது. தகவல் பரிமாற்ற தொழில்நுட்ப பயன்பாட்டில் உலக அளவில் இந்தியா 24 வது இடத்தில் உள்ளது. தகவல் தொழில்நுட்பம் இந்தியாவில் உள்ள கடைகோடி கிராமமக்களுக்கும் சென்றடைய வேண்டும் என பிரதமர் தெரிவித்துள்ளார். நிர்வாகத்தில் தகவல் தொழில்நுட்பத்தை செயல்படுத்த மத்திய, மாநில அரசுகள் முனைப்பு காட்டி வருகின்றன. அரசு அமைப்பு உடலை போன்றது, ஆளுமை உடலை இயக்கும் உயிரை போன்றது. நிர்வாக ஆளுமையை கம்ப்யூட்டர் மூலம் இயக்குவது மின் ஆளுமையாகும் (இ-கவர்னன்ஸ்). மின் ஆளுமை திட்டம் அனைத்து மத்திய, மாநில அரசு அலுவலகங்களிலும் செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தகவல் தொழில்நுட்பம் கிராமங்களை சென்றடைய நாடு முழுவதும் கோபுரங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன. மலைக்கிராமம் போன்ற பகுதிகளுக்காக 'வை-பி' என்ற கம்பியில்லாத தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.

மத்திய, மாநில அரசுகள் மின் ஆளுமை திட்டத்தின் மூலம் அனைத்து துறைகளையும் கம்ப்யூட்டர் மயமாக்கி வருகின்றன. ஒவ்வொரு துறையிலும் 'ஆன்லைன்' மூலம் விண்ணப்பிக்கும் முறை செயல்படுத்தப்பட்டு வருகிறது.

மின்-ஆளுமையின் குறிக்கோள்:
அரசு சேவைகள், திட்டங்கள் அனைத்தும் இணையம் வாயிலாக மக்கள் இருப்பிடத்திலே மிக விரைவாக வழங்குதல். நகர, கிராம மக்களிடையே தகவல் தொழிநுட்பத்தை பயன்படுத்துவதில் உள்ள இடைவெளியை சரிசெய்தல். குடிமக்களின் வாழ்க்கை தரத்தை தகவல் தொழில்நுட்பத்தின் மூலம் மேம்படுத்துதல் ஆகிய குறிக்கோள்களை அடைய மின்-ஆளுமை செயல்படுத்தப்பட்டு உள்ளது. இ-மையம், இ-அலுவலகம், இ-கோப்புகள், இ-கிராமங்கள், இ-தேர்வுகள், இ-கோர்ட், இ-பென்சன் என்று எல்லாமே 'இ' மயமாகி வருகிறது. இதன்மூலம் அனைத்து சான்றுகள், டிரைவிங் லைசன்ஸ், தண்ணீர் கட்டணம், மின் கட்டணம் செலுத்துதல், நிலப்பட்டா, வில்லங்க சான்றிதழ் பெறுதல் என, ஏராளமான வசதிகள் கிடைக்கின்றன. 'இ' ன் பயன்பாடு எளிதாகவும், துரிதமாகவும் இருப்பதனால், அனைவரும் 'இ' தரிசனம் செய்ய ஆரம்பித்து விட்டனர்.

இணையம் வசதி பெறமுடியாத மக்களுக்காக, அரசு சார்பில் கிராமங்கள், நகரங்களில் பொதுசேவை மையங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன. மின் ஆளுமை வளர்ச்சியால் குடிமக்களை தேடி அரசு என்ற நிலை உருவாகிறது. சாதாரண குடிமகனுக்கும் வீட்டிலே அரசின் திட்டங்கள் கிடைக்கின்றன. அரசு அலுவலகங்களுக்கு அலைந்து பொன்னான நேரத்தை வீணடிக்க வேண்டியதில்லை. வெளிப்படையான நிர்வாகம், லஞ்ச ஒழிப்பு, 24 மணி நேரமும் சேவை கிடைக்க வழிவகை செய்யப்படும். பண்டைய காலத்தில் அரசு நிர்வாக கோப்புகள் பெரிய ரகசியமாக காவல் காக்கப்பட்டு வந்தது. மூடி முத்திரையிடப்பட்ட கோப்புகள் அதிகாரிகளுக்கு மட்டும் பயன்படும் நிலை இருந்தது. அரசு அதிகாரிகளின் செயல்பாடுகளும் அதிகார வர்க்கத்திற்கு மட்டும் பயன்படுத்தப்பட்டது. ஆனால், மின்-ஆளுமை திட்டத்தால், அரசில் வெளிப்படையான நிர்வாகம் ஏற்படும்.

தகவல் பரிமாற்றம் : மின்ஆளுமை திட்டத்தால், அரசு அறிவிப்புகள், கொள்கைகள் அனைத்தும் இணையத்தில் வெளியிடப்பட்டுகின்றன. தகவல் உரிமைச்சட்டத்தின் கீழ் பெறப்படும் விபரங்களும் இணையதளத்தில் வெளியிடப்படுகின்றன. அரசு நிர்வாக இயந்திரத்தில் அலுவலக நேரம், அலுவல் இல்லாத நேரம் என்ற பாகுபாடு இனி இருக்காது. அரசின் நோக்கம் முழுமையாக நிறைவேறும். பொதுமக்கள் அரசு நிர்வாகத்திற்கு ஆலோசனை மற்றும் தகவல் பரிமாற்றம் அளிக்கலாம். போலீஸ் துறையில் மின்-ஆளுமை திட்டத்தால், குற்றங்களை ஆராய்ந்து குற்றவாளிகளை பிடிக்க கண்காணிப்பு கேமராக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இனிவரும் காலங்களில் மொபைல் எண்ணில் இருந்து எஸ்.எம்.எஸ்., மூலம் புகார் தெரிவிக்கும்நிலை வந்துவிடும்.

இணையம் கல்வி : சாமானியனும் கம்ப்யூட்டரை தினமும் பயன்படுத்தும் நிலை வந்துவிட்டது. இதனால், மின்-ஆளுமை திட்டம் உடனடியாக அனைத்து மக்களையும் சென்றடையும். கம்ப்யூட்டரில் தமிழ் மொழியின் பயன்பாடும் அதிகரித்து வருகிறது. கம்ப்யூட்டர் கல்வியை பொதுமக்கள், பெண்கள், குழந்தைகள் எளிதில் பயன்படுத்தும் முறையில் ஆயத்தப்படுத்த வேண்டும். இந்த தருணத்தில் பல்கலைகளும், கல்வி நிறுவனங்களும் கம்ப்யூட்டர் மற்றும் இணைய பயன்பாடு கல்வியை மாணவர்களுக்கு அளிக்க வேண்டும். பல்கலையில் மின்-ஆளுமை மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தின் கீழ், திண்டுக்கல் காந்திகிராமம் பல்கலை செயல்படுகிறது. இங்கு நேர்மையான, காகிதம் இல்லாத நிர்வாகத்திற்காக பல்கலைத்தில் மின் ஆளுமை திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. அனைத்து துறைகளும் இணையம் வசதி பெற்றுள்ளன. ஆப்டிக் பைபர் (ஓ.எப்.சி), கேபிள் ரேடியோ மோடம் மூலம் பல்கலை வளாகம் உள்வலை மற்றும் வெளிவலை இணைப்பு பெற்றுள்ளது. மின்-ஆளுமை பயன்பாடு குறித்து பல்கலை ஆசிரியர்கள், பணியாளர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.

பா.அருணாசலம்,
துணைப்பதிவாளர்,
காந்திகிராம பல்கலை.
 

Wednesday, September 3, 2014

ஐ.ஐ.டி. கவுன்சில்

ஐ.ஐ.டி. கவுன்சில் என்பது நாட்டிலுள்ள 16 ஐ.ஐ.டி.,களின் உச்ச நிர்வாக அமைப்பாகும். இந்த அமைப்பின் தலைவராக இருப்பவர், மத்திய மனிதவளத்துறை அமைச்சர். தவிர, நாடாளுமன்றத்தின் 3 உறுப்பினர்கள், அனைத்து ஐ.ஐ.டி.,களின் தலைவர்கள் மற்றும் இயக்குநர்கள், UGC தலைவர், CSIR தலைமை இயக்குநர், IISc தலைவர் மற்றும் இயக்குநர்கள், மத்திய மனிதவள அமைச்சகத்தால் நியமிக்கப்பட்ட ஒருவர் மற்றும் மத்திய அரசு மற்றும் AICTE -ஆல் நியமிக்கப்படும் 3 நபர்கள் ஆகியோரைக் கொண்டதுதான் ஐ.ஐ.டி. கவுன்சில் என்னும் நிர்வாக அமைப்பு.

Tuesday, September 2, 2014

ரேஷன்

'ரேஷன் அரிசி கடத்தல்..., ஊழியர்கள் உடந்தை' இது போன்ற தலைப்புகளில் செய்திகள் வராத நாட்கள் தமிழகத்தில் இல்லை என்ற நிலை உருவாகி விட்டது. என்ன தான் நடக்கிறது ?

தமிழகத்தில் ஒரு கோடியே 97 லட்சத்து 82 ஆயிரத்து 593 ரேஷன் கார்டுதாரர்கள் உள்ளனர்.
# இதில் ஒரு கோடியே 67 லட்சத்து 21 ஆயிரத்து 538 கார்டுகளுக்கு அரிசி சப்ளை செய்யப்படுகிறது.
# தவிர, 18 லட்சத்து 62 ஆயிரத்து 615 அன்னபூர்ணா கார்டுகளும் உள்ளன.
# 10 லட்சத்து 76 ஆயிரத்து 552 ரேஷன் கார்டுதாரர்கள் அரிசி வேண்டாம், எங்களுக்கு சீனி மட்டும் போதும் என்று வாங்குகின்றனர்.
# 61 ஆயிரத்து 61 கார்டுகள் போலீசார் வசம் உள்ளன.
# 60 ஆயிரத்து 827 கார்டுகள் எந்த பொருளும் வேண்டாம் எனக்கூறி, முகவரி பயன்பாட்டிற்கு மட்டும் 'ஒயிட் கார்டுகளாக' உள்ளன.

கார்டுகளுக்கு
* 1,269 சிவில் சப்ளை முழு நேர ரேஷன் கடைகள் மூலமும்,
* 125 பகுதி நேர ரேஷன் கடைகள்,
* 23 ஆயிரத்து 109 கூட்டுறவு முழுநேர ரேஷன் கடைகள்,
* 124 கூட்டுறவு அல்லாத முழுநேர ரேஷன் கடைகள்,
* பெண்கள் நடத்தும் 533 ரேஷன் கடைகள்,
* 14 மொபைல் ரேஷன் கடைகள்,
* 7967 பகுதி நேர கூட்டுறவு ரேஷன் கடைகள்,
* 18 கூட்டுறவு அல்லாத பகுதி நேர ரேஷன் கடைகள்,
* பெண்கள் நடத்தும் 63 பகுதி நேர ரேஷன் கடைகள் மூலமும் பொருட்கள் சப்ளை செய்யப்படுகின்றன.

மாதந்தோறும்
^ 2 லட்சத்து 96 ஆயிரத்து 453 டன் அரிசி,
^ 35 ஆயிரத்து 133 டன் சீனி,
^ 34 ஆயிரத்து 890 டன் கோதுமை,
^ 65 ஆயிரத்து 140 கிலோ லிட்டர் மண்ணெண்ணெய்
^ மற்றும் விற்பனை மற்றும் தேவைக்கேற்ப உளுந்து, துவரை பருப்பு வகைகள் சப்ளை செய்யப்படுகிறது.

முறைகேடு எப்படி :
இதில் முறைகேடு எங்கே தொடங்குகிறது? ரேஷன் கடைகளை வருவாய்த்துறை அலுவலர்கள், வட்டார கூட்டுறவு வருவாய் அலுவலர்கள், மாவட்ட கூட்டுறவு வருவாய் அலுவலர்கள், பொதுவிநியோகத்துறை கூட்டுறவு சார் பதிவாளர், பொதுவிநியோகத்துறை கூட்டுறவு துணை பதிவாளர், உணவு கடத்தல் தடுப்பு பிரிவு இன்ஸ்பெக்டர், சப்- இன்ஸ்பெக்டர், முத்திரை எடையளவு ஆய்வாளர் மற்றும் அலுவலர்கள், கூட்டுறவு தலைவர் மற்றும் நிர்வாகம், வருவாய்த்துறை பறக்கும் படை, கூட்டுறவு பறக்கும் படை மற்றும் தணிக்கை துறையினர் ஆய்வு செய்கின்றனர். தவிர உள்ளூர் தாதாக்கள், அரசியல்வாதிகள், வார்டு கவுன்சிலர்கள் கண்காணிப்பும் உண்டு. பெரிய வருத்தமான விஷயம். ஒவ்வொரு கண்காணிப்பிற்கும், ஆய்வுக்கும் தகுதிக்கு ஏற்ற விலையை ரேஷன் ஊழியர்கள் கொடுத்தே ஆக வேண்டும். அவர்கள் எத்தனை நியாயமாக நடந்து கொண்டாலும் ஆய்வு அதிகாரிகளுக்கு அதைப் பற்றிய கவலை இல்லை. அவர்களுக்கு தரும் தொகை தான் முக்கியம். ரேஷன் பொருட்கள் சப்ளையிலேயே இந்த முறைகேடு தொடங்குகிறது.

எடை குறைவு :
100 கிலோ எடை கொண்ட அரிசி மூடை, வரும் போதே 93 கிலோ எடையில்தான் ரேஷன் கடைக்கே வந்து சேருகிறது. (சீனி உட்பட எல்லாமும் தான்) மூடைக்கு ஏழு கிலோ காற்றில் பறந்து விட்டதா என்பது சப்ளை அதிகாரிகளுக்கும், அரசுக்கும் நன்கு தெரியும். ஆய்வுக்கு மாதந்தோறும் வரும் அதிகாரிகள் தொகை கேட்பது, எல்லோருக்கும் தெரிந்த உண்மை. இதனால் லஞ்சம் வாங்குபவர்களுக்கு எந்த கவலையும் இல்லை. தான் வாங்கா விட்டாலும் தன் மீது வாங்கியதாக முத்திரை விழும். எனவே வாங்கிக்கொண்டே முத்திரை பெற்றுக் கொள்வோம், என நினைத்தே எல்லா அதிகாரிகளும் வாங்கிக் கொள்கின்றனர். இப்படி மாதந்தோறும் நீளும் மாமூல் பட்டியல் உள்ளூர் தாதா, தெரு தாதா, ரவுடி, கவுன்சிலர் அவர்களின் டிரைவர்கள் வரை வந்து நிற்கிறது.

எம்.எல்.ஏ., எம்.பி.,க்கள் எப்படி :
இதில் சந்தோஷப்படும் ஒரே விஷயம் எம்.எல்.ஏ., எம்.பி.,க்களுக்கு ரேஷன் கடையை ஆய்வு செய்யும் அதிகாரம் இருந்தாலும், இதுவரை தமிழகத்தில் எந்த எம்.எல்.ஏ.,வும், எம்.பி.,யும் ரேஷன் கடையில் லஞ்சம் வாங்கியதாக புகார் இல்லை. மற்றபடி லஞ்சம் வாங்காத அதிகாரிகளே இல்லை. ஆனால் ஆடி மாதம் பெயரைச் சொல்லி ஆடு அறுத்து சாப்பிடுவது போல், அதிகாரிகள் பணத்தை வாங்கிக் கொண்டு, ரேஷன் ஊழியர்கள் மீது முத்திரை குத்தி விடுகின்றனர். பலியாகும் ஆடுகள் தான் ரேஷன் ஊழியர்கள். இப்படி மாதந்தோறும் இவர்கள் தரும் லஞ்சப்பணத்திற்கு வரும் ரேஷன் பொருட்களில் பாதியை கள்ள மார்க்கெட்டில் விற்றால் மட்டுமே சமாளிக்க முடியும். அது தான் தமிழகம் முழுவதும் உள்ள எல்லா ரேஷன் கடைகளிலும் நடந்து கொண்டுள்ளது. தமிழக அரசு நிர்வாகத்தில் இதை தெரியாத அதிகாரிகள் யாருமே இல்லை. ஆனாலும் ஏழைகளை ஏமாற்றவும், மக்களை ஏமாற்றவும் ஏதோ ரேஷன் ஊழியர்கள் மட்டும் தவறு செய்வது போலவும், அவர்களை தண்டிக்க நடவடிக்கை எடுப்பது போலவும் பேசி நாடகம் நடத்தி விடுகின்றனர்.

நேர்மை எங்கே ?
இதில் புதிதாக நடந்த நகைச்சுவை நாடகம். ரேஷன் பொருள் எடை குறைந்தாலோ, இருப்பு குறைந்தாலோ அபராதம் பல மடங்கு அதிகரிப்பு என்பது. ஆய்வு அதிகாரிகள் நேர்மையாக நடந்தால், ரேஷன் சப்ளை சீராகி விடும் என்பது எல்லோருக்குமே தெரியுமே. அடிப்படையை சரி செய்யாமல் கட்டடம் கட்டிக்கொண்டே போனால், இந்த பொய் எத்தனை நாள் தான் தாங்கும். அடித்தளம் இல்லாத அடுக்குமாடி கட்டடம் இடிந்தது போல் இடிந்து விடாதா? இதிலும் சிக்கி சாகப்போவது ரேஷன் ஊழியர்கள் தான்.எடை குறைவை சரி செய்ய பொருட்களை பாக்கெட்டில் தரலாம். பாக்கெட்டாக கடத்தினால் என்னவாகும் என்ற கேள்வி எழுகிறது. அடிப்படையை சரி செய்ய எல்லோருக்கும் தெரியும். ஆனால் பணம் வந்து கொண்டிருக்கும் பாதை அடைபட்டு விடும். இதற்கு பயந்து மற்றவர் மீது பழி போட்டு தாங்கள் சம்பாதித்து வருகின்றனர். இந்த நாடகம் எப்போது முடிவுக்கு வரும்.

Tuesday, August 26, 2014

என்ன ஆண்டி? பொன்னாண்டி.
என்ன பொன்? காக்காய்ப்பொன்.
என்ன காக்காய்? அண்டங்காக்காய்.
என்ன அண்டம்? பூஅண்டம்
என்ன பூ? பனம்பூ
என்ன பனை? தாளiப்பானை
என்ன தாளi? நாகதாளi
என்ன நாகம்? சுத்தநாகம்
என்ன சுத்தம்? வீட்டுச் சுத்தம்
என்ன வீடு? ஓட்டுவீடு
என்ன ஓடு? பாலோடு
என்ன பால்? நாய்ப்பால்
என்ன நாய்? வேட்டைநாய்
என்ன வேட்டை? பன்றிவேட்டை
என்ன பன்றி? ஊர்ப்பன்றி
என்ன ஊர்? கீரையூர்
என்ன கீரை? அறைக்கீரை
என்ன அறை? பள்ளiயறை
என்ன பள்ளi? மடப்பள்ளi
என்ன மடம்? ஆண்டிமடம்
என்ன ஆண்டி? பொன்னாண்டி

Monday, August 25, 2014

‘மின்னணு (டிஜிட்டல்) வழிக் கல்வி தான் எதிர்காலம்’

எதிர்காலத்தில் பள்ளிகளிலும் சரி, கல்லூரிகளிலும் சரி, பாடங்கள் அனைத்தும் மின்னணு (டிஜிட்டல்) தொழில்நுட்பத்தில் தான் வழங்கப்படும் என்று பலரும் நம்புகின்றனர். அந்தளவுக்கு தகவல் தொழில்நுட்பம் வளர்ச்சி அடைந்து வருகிறது. அதேசமயம், அதில் சில சவால்களும் உள்ளன.

நவீன தொழில்நுட்பம் எப்படி முறையாக பயன்படுத்தப்படுகிறது? அதை எப்படி முழுமையாக ஏற்றுக்கொள்ளப் போகிறார்கள்? மாற்றத்திற்கு ஏற்ப தங்களை எப்படி தயார்ப்படுத்திக்கொள்ளப் போகிறார்கள்? என்பவையே அவை.

ஆயுர்வேதம், வேளாண்மை மற்றும் கலைப் படிப்புகளில் நவீன தகவல் தொழில்நுட்பம் இன்னும் முக்கியத்துவம் பெறவில்லை. அதற்காக மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்துடன் இணைந்து தனித்துவமிக்க பாடத்திட்டத்தை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளோம். அதில் வெறும் தகவல் தொழில்நுட்பம் இடம்பெறாது; மென்திறன் (சாப்ட் ஸ்கில்ஸ்), தலைமைப் பண்பு உள்ளிட்டவையும் இடம்பெறும். நாடு முழுவதும் 29 பல்கலைக்கழகங்களுடன் இணைந்து செயல்படுகிறோம். வகுப்பறைகள் டிஜிட்டல் மயமாக்கப்படும் பட்சத்தில், போதிய அனுபவமிக்க ஆசிரியர்களும் தேவை என்பதால், அவர்களுக்கும் உரிய பயிற்சி அளிக்க உள்ளோம்.

பாலிடெக்னிக் கல்லூரிகளை எடுத்துக்கொண்டால், அங்கு மாணவர்களுக்கு தற்போது கற்பிக்கப்படும் பாடத்திட்டத்திற்கும், தொழில்நிறுவனங்களின் தேவைக்கும் மிகப்பெரிய இடைவெளி உள்ளது. இதனை அரசும் உணர்ந்துள்ளது. எனவே, மத்திய அரசுடன் இணைந்து சிறப்பு திட்டத்தில் பாலிடெக்னிக் மாணவர்களுக்கு கையாளுதல் (ஹேண்ட்ஸ் ஆன்) பயிற்சி அளிக்க உள்ளோம்.

பள்ளி மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு நவீன வகுப்பறை சூழலை உருவாக்கும் முயற்சியாக சென்னையைச் சேர்ந்த 4 பள்ளிகளில் விண்டோஸ் ஹைபிரிட் டேப்லெட்களை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. வகுப்பறைகளில் ஆசிரியர்கள் கற்பிப்பதை அப்படியே டிஜிட்டல் வடிவில் கொடுப்பதால், மாணவர்கள் தங்களுக்கு தேவையானபோதெல்லாம் அவற்றை திரும்ப பயன்படுத்தமுடியும். சுயமாக கற்றல் என்பது மிகவும் சக்திவாய்ந்தது.

வகுப்பறையில் கிடைக்கும் அதே அனுபவத்தை ஒரு டேப்லட் வாயிலாகவும் பெற வாய்ப்பு உண்டு. தற்போது அனைத்து பாடங்களையும் டேப்லட்டில் உருவாக்க சில சிரமங்கள் உள்ளன என்றபோதிலும், நவீன தொழில்நுட்ப வழிக் கல்வி தான் எதிர்காலம்.

- பிரதீக் மேத்தா, இயக்குனர் (கல்விப் பிரிவு), மைக்ரோசாப்ட் இந்தியா.

Thursday, August 21, 2014

‘குழுக்கற்றல்’ சரியா? தவறா?

‘குரூப் ஸ்டடி’ என்ற 'குழுக்கற்றல்' ஒரு விஷயத்தை, ‘படிப்பதாக கூறி ஏமாற்றும்‘ ஒரு வித்தை என்றே இன்றும் பலர் நினைக்கின்றனர். இன்றைய நிலையில் பல பெற்றோர்கள் தங்களின் பிள்ளைகள் ‘குரூப் ஸ்டடி’யில் ஈடுபடுவதை விரும்புவதில்லை. ஏனெனில் நண்பர்களுடன் சேர்ந்து படிக்கிறேன் என்ற போர்வையில், அரட்டை அடித்து நேரத்தை தங்களின் பிள்ளைகள் வீணாக்குகின்றனர் என்றே அவர்கள் கவலைப்படுகின்றனர்.

‘குரூப் ஸ்டடி’ என்ற வெற்றிகரமான பயிற்சியை சரியாக அமைத்துக்கொள்ளவில்லை எனில், பெற்றோர்களின் கவலை நிஜமாகிவிடும். ஆனால் ‘குரூப் ஸ்டடி’, அதன் உண்மை அம்சத்தோடு மிகச் சரியாக மேற்கொள்ளப்பட்டால், அதன்மூலம் கிடைக்கும் நன்மைகள் ஏராளம்.
‘குரூப் ஸ்டடி’ என்பது தேர்வு நேரத்தில் மட்டுமின்றி, எல்லா காலங்களிலும், மாணவர் பருவம் முழுவதும் கடைபிடிக்கத்தக்க ஒரு வெற்றிகரமான அம்சம். சிறந்த நன்மையைத் தரும் ‘குரூப் ஸ்டடி’யை எவ்வாறு மேற்கொள்வது என்று மாணவர்கள் மற்றும் பெற்றோருக்கு நிபுணர்கள் கூறும் முக்கிய வழிமுறைகள் இங்கே:

[#] ‘குரூப் ஸ்டடி’க்கு தகுந்த நபர்கள் அமைவது முதலில் மிக அவசியமானது. ஒரே வகுப்பில் அல்லது ஒரே பள்ளியில் படிக்கும் அல்லது அருகருகே வசிக்கும் மாணவர்களாக இருக்கலாம். ஆனால் அவர்களுக்குள் ஒரு நல்ல புரிந்துணர்வு இருக்க வேண்டும். படிப்பில் அக்கறையும், தேர்வில் நல்ல மதிப்பெண்கள் பெற வேண்டும் என்ற ஆர்வமும் இருக்க வேண்டும். அதிகபட்சமாக 5 மாணவர்கள் வரை பங்கேற்கலாம்.

[#] ஒரு நல்ல ‘குரூப் ஸ்டடி’ என்பது மற்றொரு வகுப்பறை போன்றது. ஏனெனில் பல மாணவர்கள் சேரும்போது ஒரு பாடத்தில் தங்களின் தனிப்பட்ட புரிந்துணர்வுகளை பரவலாக பகிர்ந்துகொள்கின்றனர். ஒரு பாடத்தை படிக்க எடுத்துக்கொள்ளும்போது, எத்தனை மாணவர்கள் இருக்கிறார்களோ அத்தனை பகுதிகளாக பிரித்துக்கொள்ள வேண்டும். அந்த பாடத்தை அனைவரும் முடிக்க ஒரு குறிப்பிட்ட நேரத்தையும் நிர்ணயித்துக் கொள்ள வேண்டும். முடிவில் பிரித்துக்கொண்ட ஒவ்வொரு பகுதியிலும் அவரவர்களுக்கு புரிந்த விஷயங்களை மற்றவர்களுடன் பகிர்ந்துகொள்ள வேண்டும். இதனால் ஒரே பாடத்தில் பரவலான புரிதல் ஏற்படும். அந்த பாடத்தைப் பற்றிய பயமும் போகும். ஒருவேளை அதுசம்பந்தமான ஏதேனும் குழப்பங்கள் தோன்றினால், ஆசிரியரிடம் கேட்டு சரிசெய்துகொள்ள வேண்டும்.

[#] பகுதிகளைப் பிரித்துக்கொண்டு படிக்கும்போது, தங்களின் பகுதியை நன்கு படித்து தெளிவாக விளக்க வேண்டும் என்ற ஆர்வம் ஒவ்வொருவருக்கும் ஏற்படும். எனவே ஒவ்வொருவரும் ஆழமாகவும், கவனமாகவும் படிப்பார்கள். இதனால் ஒரு ஆரோக்கியமான படித்தல் போட்டி அங்கே உருவாகும். ஒருவருக்கு சரியாக தெரியாத விஷயம் மற்றவருக்கு நன்றாக தெரிந்திருக்கும். இதன்மூலம் பாடத்தில் எழும் சந்தேகங்கள் தீர்க்கப்படும்.

[#] ‘குரூப் ஸ்டடி’க்கு தேர்ந்தெடுக்கும் இடம் பற்றி யோசிக்க வேண்டியதும் முக்கியம். எந்த தொந்தரவும், இரைச்சலும் இல்லாத, கவனம் சிதறும் வகையிலான விஷயங்கள் இல்லாத இடமாக இருந்தால் மிகவும் நல்லது. ஒரு நல்ல அறையாகவோ, மொட்டை மாடியாகவோ மற்றும் ஒதுக்குப்புறமான மரத்தடியாகவோ இருக்கலாம்.

[#] ‘குரூப் ஸ்டடி’யில் தேர்வுக்கான ஒரு மாதிரி கேள்வித்தாளை உருவாக்கி நண்பர்களுக்குள் எழுதிப் பார்க்கலாம். அவற்றை மாற்றி மாற்றி திருத்திக் கொள்ளலாம். தேர்வுக்கான நேரத்தையும் நிர்ணயித்துக்கொள்ள வேண்டும். இதனால் ஒரு பயிற்சி தேர்வை எழுதிய அனுபவம் உங்களுக்கு கிடைத்து, தேர்வு பயம் அகன்றுவிடும். விடைத் தாள்களை மாறி மாறி திருத்திக் கொள்வதால் உங்களின் தவறுகள் எளிதாக கண்டுபிடிக்கப்படும்.

[#] ‘குரூப் ஸ்டடி’யில் ஈடுபடும் முன்பாக ஒரு குழு தலைவரை தேர்வுசெய்து கொள்ளுதல் நல்லது. அவர் குழுவின் நடவடிக்கைகளை ஒருங்கிணைப்பார். ஒவ்வொரு மாணவரும் மாறி மாறி குழுத் தலைவராக இருக்கலாம். ஆனால் ஒழுக்கம் மற்றும் கட்டுப்பாடு என்பது மிகவும் முக்கியம்.

Tuesday, August 19, 2014

இந்தி: திணிப்பும் எதிர்ப்பும்


மத்திய உள்துறை அமைச்சகமும், அலுவல் மொழித்துறையும் (10-03-2014, 27-05-2014) ஆகிய நாட்களில் மாநில அரசுகளுக்கு அனுப்பிய சுற்றறிக்கைகள் எப்போதும் போல தமிழக அரசியலில் சலசலப்பை உண்டாக்கியிருக்கிறது. “அரசு அலுவலர்கள் அதிகாரப்பூர்வமாகக் கையாளும் சமூக வலைத்தளங்களில் (டுவிட்டர், ஃபேஸ்புக், பிளாக் முதலியன) கட்டாயம் இந்தியைப் பயன்படுத்த வேண்டும் அல்லது ஆங்கிலம், இந்தி ஆகிய இரண்டையும் பயன்படுத்தலாம். ஆங்கிலம், இந்தி ஆகிய இரண்டையும் பயன்படுத்தும்போது இந்திக்கே முன்னுரிமை கொடுக்க வேண்டும்” என்பதே சுற்றறிக்கைகளின் உள்ளடக்கம்.

மத்திய அரசு இது போன்ற உத்தரவுகளைப் பலமுறை பிறப்பித்திருக்கிறது. மத்திய அரசின் இந்திக்கு ஆதரவான பல்வேறு அரசாணைகளையும், சுற்றறிக்கைகளையும் தமிழ் ஊடகங்களும், தமிழ் மக்களும் அரசியல் கண்ணோட்டத்தில் மட்டுமே அணுகுகின்றனர். பல்வேறு மாநிலங்களில் ஒன்றாகத் தமிழகம் இருப்பதால் பெருவாரியான ஒரு சமூகம் சிறுபான்மையான ஒரு சமூகத்தின் மீது செலுத்தும் ஆதிக்கமாகவே இந்தித் திணிப்பை எதிர்கொள்கின்றது. அதனால் எதிர்ப்புகளும், போராட்டங்களும் பெருகின. இந்திக்கு எதிரான போராட்டத்தில் 1937களிலிருந்து தமிழகம் இழந்தவை கொஞ்சநஞ்சமல்ல. 1939 சனவரி 15இல் இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் முதல் உயிர் நீத்த நடராசன் முதல் எத்தனையோ உயிர்த் தியாகங்கள்; பெரியார் போன்ற தலைவர்களும் பெருந்திரளான மாணவர்களும் அனுபவித்த சிறைவாசம் எனத் துயரங்கள் நிறைந்தது தமிழகத்தின் இந்தி எதிர்ப்பு.

இந்தி எதிர்ப்பு என்னும் ஒற்றை முழக்கத்தைப் பிரதானப்படுத்தித் தமிழ்நாட்டில் 1967இல் திமுக ஆட்சியைப் பிடிக்கும் அளவிற்குத் தமிழர்களிடத்தில் தமிழுணர்வைத் தட்டி எழுப்பியது இந்தி. சாதி, மதம் போன்ற பாகுபாடுகளைக் களைந்து தமிழர்களை ஒன்றிணைக்கும் ஒரே சக்தி தாய்மொழி என்பதைத் தமிழக அரசியல் தலைவர்களுக்கு உணர்த்தியது இந்திதான். சுதந்திரப் போராட்டத்தில் இந்தியர்களை ஒருங்கிணைக்க காங்கிரஸுக்குப் பெரும் சவாலாக இருந்தவை இந்தியர்களின் பலதரப்பட்ட தாய்மொழிகளே. இவை திமுக போன்ற மாநிலக் கட்சிகளின் வளர்ச்சிக்கு நீர்பாய்ச்சின. அந்த விசுவாசமே இன்றளவும் தமிழக அரசியல் தலைவர்கள் இந்தியை எதிர்த்தும் தாய்மொழியை ஆதரித்தும் எழுதுகின்ற கடிதங்களுக்கும், விடுக்கின்ற அறிக்கைகளுக்கும் அடிப்படை. 1930களிலிருந்தே இந்த எதிர்ப்பை இந்தியா கண்டுகொண்டிருக்கிறது. இந்தியாவின் வடக்கு, மேற்கு, கிழக்குப் மாநிலங்களில் இருந்து வரும் எதிர்ப்பை விடத் தெற்கிலிருந்து வருவது வலிமையானதாகவும் உணர்வுபூர்வமானதாகவும் இருக்கும் என்பதை மத்திய அரசே அறியும்.

இந்திக்கு ஆதரவான மத்திய அரசின் நடவடிக்கைகளில் அரசியலைத் தவிர்த்து மொழி சார்ந்த கண்ணோட்டத்தில் அணுகினால் நமக்குக் கிடைக்கும் பிம்பம் முற்றிலும் புதிதானது. மேற்சொன்ன சுற்றறிக்கைகளை நடைமுறைப்படுத்துவது எவ்வளவு சவால் நிறைந்தது என்பதற்கு இந்தியாவில் ஏராளமான சான்றுகள் இருக்கின்றன. தமிழக அரசும் தமிழ் வளர்ச்சித்துறையும் தமிழர்களிடம் தமிழை வளர்க்கப் பட்டபாடுகள் இதற்குச் சிறந்த எடுத்துக்காட்டு. தமிழில் கையெழுத்திடுங்கள், முன்னெழுத்தைத் தமிழில் எழுதுங்கள், பெயரைத் தமிழில் எழுதுங்கள், அரசாணைகள், அறிவிப்புகள், சுற்றறிக்கைகள், கடிதங்கள் முதலியவற்றைத் தமிழில் அனுப்புங்கள் என்று 1956இல் தமிழ் ஆட்சிமொழிச் சட்டம் இயற்றப்பட்டு,
(23-1-1957)இல் ஆளுநரின் ஒப்புதலுடன் நடைமுறைக்கு வந்தது.

எத்தனையோ உத்தரவுகள் போடப்பட்டன. அவற்றையெல்லாம் நடைமுறைப்படுத்த முடிந்ததா? அவ்வுத்தரவுகளை இன்றைய நடைமுறையோடு பொருத்திப் பார்த்தால் ஏமாற்றமே மிஞ்சும். அரசு அலுவலர்கள் அனைவரும் தமிழைத்தான் பயன்படுத்த வேண்டும் என்று இந்திக்காரர்களிடம் கேட்கவில்லை, தமிழைத் தாய்மொழியாகக் கொண்ட தமிழர்களிடம்தான் தமிழக அரசு வேண்டியது. அதுவே சாத்தியப்படாதபோது, இந்தியைத் தாய்மொழியாகக் கொள்ளாதவர்களிடம் மத்திய அரசு போடும் இந்த உத்தரவுகள் சாரமற்றவை. தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, கர்நாடகா, ஒடிசா, குஜராத், மேற்குவங்கம், அஸ்ஸாம், மேகாலயா, நாகலாந்து, திரிபுரா, பஞ்சாப், காஷ்மீர் முதலிய மாநிலங்களில் பணியாற்றும் இந்தி அறியா மத்திய அரசு அதிகாரிகள் தங்கள் அதிகாரப்பூர்வ சமூக வலைத்தளங்களில் இந்தியைப் பயன்படுத்துவது நடைமுறையில் இயலாதது. சாத்தியப்படாத ஒன்றால் தன் அரசுக்கு ஏற்படும் அவப்பெயரை யாரும் விரும்புவதில்லை. எனவே, இந்தச் சுற்றறிக்கை வந்த சில நாட்களிலேயே, இந்தி பேசும் மாநிலத்தவர்களுக்கு (இந்தியைத் தாய்மொழியாகக் கொண்டவர்களுக்கு) மட்டுமே பொருந்தும் என மோடி அரசு பின்வாங்கியது.

இன்று தமிழுக்கு எதிரி இந்தியோ, சமஸ்கிருதமோ அல்ல. அதே போன்று இந்திக்கு எதிரி தமிழோ, பிற மாநில மொழிகளோ அல்ல. இந்திய மொழிகள் அனைத்திற்குமான பொது எதிரி ஆங்கிலம். ஆங்கிலேயரின் காலனி ஆதிக்கத்திலிருந்து விடுபட்ட பெரும்பாலான நாடுகள் தம் தாய்மொழியைத் தம் மக்களிடம் தக்கவைப்பதற்கே இன்று தடுமாறிக்கொண்டிருப்பதை மத்திய அரசு நன்கு உணர்ந்திருக்கிறது. அந்த அளவிற்கு ஆங்கிலத்தின் வீச்சு வேகமாகவும் ஆழமாகவும் இருப்பதால் மத்திய அரசு இந்திக்கு ஆதரவான திட்டங்களை விரிவுபடுத்த வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது.

தமிழ்நாடு பல்வேறு ஆட்சியாளர்களின் கீழ் இருந்தபோதெல்லாம் பல்வேறு மொழிகள் தமிழகத்தின் ஆட்சி மொழியாகவும் செல்வாக்குப் பெற்ற மொழியாகவும் இருந்திருக்கின்றன. சோழர் ஆட்சியில் சமஸ்கிருதம்; மொகலாயர் ஆட்சியில் பாரசீகம், அரபி, உருது; நாயக்கர் ஆட்சியில் தெலுங்கு; ஆங்கிலேயர் ஆட்சியில் ஆங்கிலம்; பிரெஞ்சுக்காரர் ஆட்சியில் (புதுச்சேரி) பிரெஞ்சு எனத் தமிழகத்தில் செல்வாக்குப் பெற்ற பிறமொழிகளின் வரலாறு நீளமானது. அந்தந்தக் காலகட்டத்தில் தமிழகத்தில் செல்வாக்குப் பெற்றிருந்த மொழிகள் தமிழின் மீதும் ஆதிக்கம் செலுத்தின. இன்று பயன்பாட்டில் உள்ள பொதுத்தமிழில் சமஸ்கிருதம், பாரசீகம், அரபு, உருது, தெலுங்கு, ஆங்கிலம், பிரெஞ்சு (புதுச்சேரித் தமிழ்) எனப் பிறமொழிச் சொற்கள் ஏராளம் கலந்திருக்கின்றன. இந்த நிலை இலங்கைத் தமிழிலோ, சிங்கப்பூர்த் தமிழிலோ, மலேசியத் தமிழிலோ, ஆப்பிரிக்கத் தமிழிலோ காணமுடியாதது.

பிற மொழியாளர்களின் ஆட்சியிலிருந்து நாம் விடுதலை பெற்றாலும், தமிழில் கலந்த பிற மொழிச்சொற்களைக்களைய முடியவில்லை. இந்த நிலை தமிழுக்கு மட்டும் நேர்ந்ததல்ல. இந்திய மொழிகள் அனைத்திற்கும் உண்டு. தமிழில் “மணிப்பிரவாளம்” என்று ஒரு புதிய நடையே உருவாகும் அளவிற்குச் சமஸ்கிருதத்தின் தாக்கம் இருந்திருந்தாலும் அதைவிடப் பலமடங்காக இன்று ஆங்கிலத்தின் தாக்கம் இருக்கின்றது. “தங்கிலிஸ்” என்று பரவலாக அழைக்கப்படும் ஆங்கிலமும் தமிழும் கலந்த நடை இன்று தமிழில் ஆழமாகக் வேரூன்றியிருக்கிறது. ஆங்கிலேயர் ஆட்சியில்கூட இந்த அளவிற்கு ஆங்கிலம் பரவவில்லை. தூய தமிழிலோ, தூய ஆங்கிலத்திலோ ஒரு தொடர்கூட அமைக்கத்தெரியாது இரண்டையும் கலக்கின்றனர். தமிழரிடையே மிகுந்த வரவேற்பைப் பெற்ற “தங்கிலிஸ்” சோழர்காலத்தில் மணிப்பிரவாளம் பெற்ற செல்வாக்கை விட, சுதந்திரத் தமிழகத்தில் மிகுந்த செல்வாக்கோடு திகழ்கின்றது.

ஆங்கிலம் தம் தாய்மொழியைச் சிதைத்துவிடும் என்பதை இந்திக்காரர்கள் உணர்ந்த அளவிற்குத் தமிழர்கள் உணர்ந்திருக்கிறார்களா என்று தெரியவில்லை. மத்திய அரசு எடுக்கும் இந்திச்சார்பு நடவடிக்கைகள் அனைத்தும் இந்தியா முழுமையும் இந்தியைப் பரப்ப வேண்டும் என்னும் நோக்கமுடையவை என்றாலும் அது நடைமுறைச்சிக்கல் நிறைந்தது. இந்திய மாநிலங்கள் முழுமையும் ஆங்கிலமொழிக்கு அடிமை. உண்மையைச் சொன்னால் ஆங்கிலம் இந்தியின் கழுத்தை நெரித்துக் கொண்டிருக்கிறது. இன்று இந்தி தன் கழுத்தை விடுவிப்பதற்குத்தான் போராட வேண்டியிருக்கிறதேயொழிய பாய்ச்சலுக்குத் தயாரில்லை. கழுத்தை விடுவிக்கும் முயற்சியாகவே மத்திய அரசின் இந்திச்சார்பு நடவடிக்கைகள் இருக்கின்றன. ஆனால், செத்த பாம்பைக் கண்டு பயப்படுவதைப்போல, இந்தியைக் கண்டு தமிழக அரசியல்வாதிகள் இந்திப்புலி பாயப்போகிறது பாயப்போகிறது எனக் கூச்சலிட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

அதே நேரத்தில் ஆங்கிலப்புலி தமிழர்களின்மீது பாய்ந்து துவம்சம் செய்து கொண்டிருக்கிறது. ஆங்கிலத்தின் ஆதிக்கத்தை ஏற்றுக்கொண்ட தமிழர்கள் இந்தியை எதிர்த்தனர். இந்தி தமிழகத்தில் மொழியிலும், கல்வியிலும், மக்களிடத்திலும் எத்தகையை விளைவுகளை ஏற்படுத்தும் என அசரீரி கேட்டு அஞ்சியவர்கள் அத்தகைய விளைவுகளை ஆங்கிலம் இழைத்தபோது கரவோசையோடு வரவேற்றார்கள், ஊக்கப்படுத்தினார்கள். தமிழின் அழிவு அண்ணனால் வரக்கூடாது, அடுத்தவனால் வரலாம் எனக் குடும்பப் புண்ணியம் காத்த தம்பிகள் தமிழர்கள். அரசியல், பொருளாதாரம், கல்வி முதலியவற்றின் அடிப்படையில் இந்தியால் தமிழகத்திற்குப் பின்னடைவு ஏற்படும் என்பதில் நியாயம் உண்டு. ஆனால், மொழி அடிப்படையில் இன்று ஆங்கிலத்தால் தமிழ் அடைந்திருக்கும் சிதைவும் அழிவும் இந்தியால் நிகழ்த்த முடியாதது. ஆங்கிலத்தின் வீச்சைப் புரிந்து கொண்டு மத்தியில் முரணான கொள்கையுடைய கட்சிகள் ஆட்சிக்கு வந்தாலும் இந்திக்காப்பில் ஒன்றிணைகின்றன.

ஆனால் தமிழகத்தின் நிலை? அய்யா தொடங்கிவைத்த தமிழ் நிறுவனம் அம்மா ஆட்சியில் உறங்கும், அம்மா கொண்டுவந்த தமிழ் அமைப்புகள், அய்யா ஆட்சியில் உறங்கும். திராவிடக் கட்சிகளின் ஆட்சி திராவிட மொழியான தமிழுக்கு ஆக்கப்பூர்வமாக என்ன செய்திருக்கின்றன?. அதிமுக ஆட்சியின் மூன்றாண்டு (2011-2014) சாதனைக்குறிப்பில் தமிழ் வளர்ச்சித்துறை ஆற்றியுள்ள பணிகளைப் பார்த்தால் ஓர் உண்மை புரியும். திராவிடக் கட்சிகளின் தமிழ் வளர்ச்சி, தமிழ் மேம்பாடு என்பது தமிழறிஞர்களுக்கு விருது கொடுப்பது, ஓய்வூதியம் அளிப்பது, தமிழ்த்தாய்க்குச் சிலை திறப்பது, தமிழ்ப் புத்தாண்டை மாற்றுவது, கொண்டாடுவது, தமிழாய்வு என்னும் பெயரில் சில நிறுவனங்களுக்கு நிதி அளிப்பது முதலியவற்றோடு நின்றுவிடுகின்றது. தமிழை வளப்படுத்தி அடுத்த தலைமுறைக்குக் கொண்டு செல்லும் எந்தத் திட்டமும் தமிழக அரசிடம் இல்லை. இருபதாம் நூற்றாண்டில் தனிநாயகம் அடிகள் போன்ற தமிழறிஞர்கள் தொலைநோக்குப் பார்வையில் தொடங்கிய உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் போன்றவை ஆய்வுத் தடத்திலிருந்து ஆட்சியாளர்களின் துதிபாடிகளாக மாறிவிட்டன. தமிழறி ஞர்கள் அலங்கரித்த இருக்கைகள் கறைபடிந்த கரைவேட்டிக்காரர்களின் கைக்களுக்குள் சிக்கியுள்ளன. மத்திய அரசு இந்தியைக் காப்பாற்ற எடுக்கும் முயற்சியில் சிறிதளவு கூட (மத்திய அரசுக்குப் போட்டியாகக்கூட) தமிழைக் காக்கத் தமிழகத்தை ஆண்ட/ஆளுகின்ற திராவிடக் கட்சிகள் எடுக்கவில்லை என்பதற்குத் தமிழ்நாட்டில் இருக்கும் கல்வி நிறுவனங்களே சாட்சி.

இந்தி: இந்தியாவின் ஆட்சிமொழி?

ஒரு மொழியுடைய நாடுகளைவிட இந்தியா போன்ற பன்மொழி கொண்ட நாடுகள் தனியொரு மொழியைத் தேசியமொழி, அலுவல்மொழி எனப் பிரகடனப்படுத்துவதில் நிறையச் சிக்கல்கள் இருக்கின்றன. மொழிகளின் தொட்டில் என மொழியியலாளர்களால் அழைக்கப்படும் இந்தியாவில் 1600க்கும் மேற்பட்ட மொழிகள் வழக்கில் இருக்கின்றன. அவற்றில் 22 மொழிகள் அரசு அலுவல் மொழியாக அங்கீகரிக்கப்பட்டுள்ளன. அந்தந்த மாநிலங்களில் அவை அலுவல் மொழியாக இருந்தாலும் ஒட்டுமொத்த இந்தியாவிற்கும் பொதுவான ஓர் அலுவல் மொழி இருந்தால் இந்தியாவின் வளர்ச்சி விரைவுபடும் என மத்திய அரசு நம்புகிறது. அதற்கு சீனா, ஜப்பான் போன்ற ஆசிய நாடுகளையும், பிரான்ஸ், ஜெர்மனி போன்ற ஐரோப்பிய நாடுகளையும் முன்னுதாரணமாகக் காட்டுகிறது.

பொது அலுவல் மொழியாக இந்தியை நிலைநிறுத்த மத்திய அரசு தொடர்ந்து முயல்கின்றது. இந்தி பொது அலுவல் மொழியாவதில், வடமாநிலத்தில் உள்ள உருது பேசும் பெருவாரி மக்களுக்கே உடன்பாடில்லை. அதனால் சுதந்திரப் போராட்டத்தை வலுப் படுத்த, 1920களில் இந்தியும் உருதும் கலந்த இந்துஸ்தானியைக் காந்தியும் நேருவும் ஊக்குவிக்க வேண்டிய நிலை வந்தது. ஆனால், அதுவும் சரியான தீர்வல்ல. இந்திக்கு இருக்கும் ஆதரவைப் போன்று அதற்கான எதிர்ப்பும் அதிகம். மத்திய அரசு தொடர்ந்து இந்தியை வலியுறுத்துவதற்கான காரணம் வாக்குப் பெரும்பான்மை. அதிக வாக்காளர்களைக் கொண்ட மொழி இந்தி என்ற எண்ணத்தை மத்திய அரசு மொழிக் கொள்கையிலும் கடைப்பிடிக்கின்றது. சுதந்திரத்திற்குப் பின் 1949இல் தேசத்தில் இந்தியை எப்படியாவது பிரதானப்படுத்த வேண்டும் என்று முயல்கையில் தேசியமொழி என்ற பாதை மூடப் பட்டதால், அலுவல்மொழி என்ற புதியபாதையில் பிற மாநிலங்களுக்குள்ளும் இந்தியைக் கொண்டு செல்ல மத்திய அரசு முடிவெடுத்தது.

இந்தி பேசாத மாநிலங்கள் அனைத்தும் ஆங்கிலத்தை உலகத் தொடர்பு மொழியாகப் பயன்படுத்துவதோடு, ஒட்டுமொத்த இந்தியாவின் அலுவல் மொழியாகவும் பயன்படுத்துவதையே விரும்புகின்றன. மத்திய அரசுக்கு அதில் உடன்பாடு இல்லாததால் இந்திக்கு எதிராக எழுந்த அத்தனை எதிர்ப்புகளையும் மீறி, பெரும்பான்மையான மக்கள் பேசும் இந்தியை இந்தியாவின் அலுவல் மொழியாக்கி 1963இல் அலுவல்மொழிகள் சட்டம் இயற்றியது. இந்த அலுவல் மொழிச்சட்டத்தை அடிப்படையாகக் கொண்டு மத்திய அரசு இந்திக்கு ஆதரவாகவும், பிராந்திய மொழிகளுக்கு எதிராகவும் தொடர்ந்து பல்வேறு திட்டங்களையும் அரசாணைகளையும் பிறப்பித்துக் கொண்டிருக்கிறது. அதை இந்தி பேசாத மாநிலங்கள் தங்கள் தாய்மொழியின் கழுத்தை நெரிக்கும் செயல் என்றும் இந்தித்திணிப்பு என்றும் அவ்வப்போது எதிர்க்கின்றன.

அண்ணா முதல்வராக இருந்த போது (23-01-1968) இல் மிக முக்கியமான ஒரு தீர்மானத்தைத் தமிழக சட்டமன்றத்தில் நிறைவேற்றினார். “தமிழகத்தில் தமிழ் பயிற்சி மொழியாகவும், பாடமொழியாகவும் எல்லாக் கல்லூரிகளிலும், நிர்வாக மொழியாகப் பல்வேறு துறைகளிலும் ஐந்தாண்டு காலத்துக்குள் நடைமுறைக்கு வருவதற்கான துரிதமான நடவடிக்கையை மேற்கொள்வது என்று இம்மன்றம் தீர்மானிக்கிறது”. அண்ணாவின் தமிழுக்கு ஆதரவான இந்தத் தீர்மானமும் (23-01-1968), இதற்கு முன்மாதிரியாக 1949ஆம் ஆண்டு, மத்தியில் நிலவிய தேசியமொழிப் பிரச்சினைக்கு கே.எம். முன்ஷி, கோபாலசாமி ஐயங்கார் ஆகியோரைக் கொண்டு உருவாக்கி மத்திய அரசு இந்திக்கு ஆதரவாகக் கொண்டுவந்த தீர்மானமும்- “தேசிய மொழி என்பதே வரையறுக்கப்படவில்லை. அதற்குப் பதிலாக ஒன்றியத்தின் அலுவலக மொழிகள் மட்டுமே வரையறுக்கப்பட்டன. தேவநாகரி எழுத்துருவில் அமைந்த இந்தி இந்திய ஒன்றியத்தின் அலுவலக மொழியாகத் தேர்வு செய்யப்பட்டது. பதினைந்து ஆண்டுகளுக்கு ஆங்கிலம் அனைத்து அலுவலக நடவடிக்கைகளிலும் பயன்படுத்தப்படும் (உட்பிரிவு 343). ஐந்து ஆண்டுகள் கழித்து இந்தியை வளர்க்கவும் ஆங்கிலத்தைப் படிப்படியாக விலக்கவும் வழிவகை காண ஒரு மொழி ஆணையம் ஏற்படுத்தப்படும்” (உட்பிரிவு 344) - அடிப்படையில், அடிமை மனநிலையில் ஆதிக்க மொழியை எதிர்ப்பது மட்டுமல்ல, மொழிப் பரவலாக்கத்தையும் முக்கியமாகக் கருதின. மத்திய அரசின் சமூக வலைத்தளத்தில் பயன்பாட்டு மொழி சார்ந்த தற்போதைய சுற்றறிக்கையும் அவ்வகையதே.

பிற மொழியால் தம் தாய் மொழி அழிந்துவிடக்கூடாது என்னும் பேரச்சத்தாலும், மொழிப்பரவலாக்க முயற்சியாகவும் பாராளுமன்றத்திலும், மாநில சட்டசபைகளிலும் பல்வேறு தீர்மானங்களும், சட்டங்களும் கொண்டுவரப்பட்டன. அவற்றை மத்திய மாநில அரசுகள் செயல்படுத்திய முறையைப் பார்த்தோமானால் மத்திய அரசு இந்தி மொழிச் செயலாக்கத்தில் உறுதியுடன் செயல்பட்டு வெற்றி பெற்றிருப்பதற்கும், மாநிலங்களின் மீது ஆதிக்கம் செலுத்திக் கொண்டிருப்பதற்கும் பின்வரும் களங்கள் தக்கச் சான்றுகளாக அமைகின்றன.

களம் - 1

மத்திய அரசு இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும் தொடங்கியிருக்கும் மத்தியப் பல்கலைக்கழகங்கள் அனைத்திலும் இந்தித்துறை கட்டாயமாக்கப்பட்டிருக்கிறது. ஆங்கிலம், ஜெர்மன், பிரெஞ்சு போன்ற வெளிநாட்டு மொழிகளுக்குக் கிடைத்த இடம்கூடப் பிற இந்திய மொழிகளுக்கு இல்லை. அந்தந்தப் பிராந்தியங்களில் உள்ள மத்தியப் பல்கலைக்கழகங்களில் மட்டுமே அந்தந்தப் மாநில மொழிகளுக்கு இடம் அளித்துள்ளது. மத்தியப் பல்கலைக்கழகங்களில் இந்தித்துறையை வைப்பதன் அடிப்படை நோக்கம் இந்திமொழி கற்றோருக்கு வேலைவாய்ப்பைப் பெருக்குதல்.
மத்தியப் பல்கலைக்கழகங்களின் இணைய தளம் ஆங்கிலத்தில் மட்டுமன்றி இந்தியிலும் உண்டு. மாநில மொழிகளில் கிடையாது. தமிழ்நாட்டைச் சார்ந்த மாணவர் திருவாரூரில் உள்ள மத்தியப் பல்கலைக்கழக இணையத்தளத்தில் ஆங்கிலம் அல்லது இந்தி மூலம் தான் தகவல்களைத் தேட முடியும். தமிழுக்கு அங்கே இடமில்லை. இந்தியைத் தாய்மொழியாகக் கொள்ளாத, இந்தி பேசும் மாநிலத்தைச் சாராத இந்தியர் அனைவரது நிலையும் இதுதான். ஆனால், இந்தியைத் தாய்மொழியாகக் கொண்ட ஒருவர் இந்தியாவில் உள்ள அனைத்து மத்தியப் பல்கலைக்கழகங்களின் இணையத்தளங்களிலும் தனக்குத் தேவையான தகவல்களைத் தன் தாய்மொழியான இந்தியிலேயே பெறமுடியும். இந்த நிலை மத்தியப்பல்கலைக் கழகங்களில் மட்டுமல்லை, ஹிநிசி, ழிசிணிஸிஜி, ழிஙிஜி, சாகித்ய அகாடமி போன்ற கல்வி, மருத்துவம், சுகாதாரம் முதலிய துறை சார்ந்த மத்திய அரசு நிறுவனங்கள் அனைத்திலும் தொடர்கிறது. அதுமட்டுமின்றி மத்திய அரசு நிறுவனங்கள் அனைத்தின் பெயரும் இந்தியில்தான் முதலில் இருக்கின்றன. ஆங்கிலம் அடுத்தபடிதான். இந்நிறுவனங்கள் வெளியிடும் அறிவிப்புகள், அறிக்கைகள், விண்ணப்பங்கள் முதலிய அனைத்தும் ஆங்கிலத்தோடு இந்தியிலும் உண்டு. வேறொரு இந்திய மொழியில் கிடையாது.

தமிழ்நாட்டில் உள்ள மாநிலப் பல்கலைக்கழகங்கள், கல்லூரிகள், அரசு, தனியார் நிறுவனங்களின் இணையத்தளங்கள் தமிழிலும் இருக்கின்றனவா? தமிழ் பல்கலைக்கழகத்தைத் தவிர, தமிழ் நாட்டின் தாய்ப்பல்கலைக்கழகமான சென்னைப்பல்கலைக்கழகம் உள்பட எந்தப் பல்கலை இணையத்தளத்திலும் தமிழ் இல்லை. விண்ணப்பங்களும், அறிவிப்புகளும் தமிழில் இல்லை. ஆனால், பனராஸ் இந்து பல்கலைக்கழகம் போன்ற வட இந்திய மாநிலப் பல்கலைக்கழகங்கள் தன் இணையத்தளத்தை இந்தியிலும் வைத்திருக்கின்றன.

களம் - 2

தமிழ்நாட்டில் உள்ள பல தனியார் கலைக் கல்லூரிகளில் தமிழ்த்துறையே கிடையாது. மருத்துவம், பொறியியல் போன்ற பாடங்களை யாரும் தமிழில் பயிற்றுவிக்கவில்லை. தனியார் கல்லூரிகள் பிறதுறை ஆசிரியருக்குக் கொடுக்கும் ஊதியத்தைவிடத் தமிழாசிரியருக்குத் சொற்பச் சம்பளமே கொடுக்கின்றன. தமிழராய்ப் பிறந்த எவரும் தமிழைச் சொல்லிக் கொடுக்கலாம் என்ற நிலை நம் கல்வி நிறுவனங்களில் சாதாரணம். தமிழ் எளிதானது, தமிழில் ஒன்றுமில்லை என்பது தமிழ் கற்பித்தல் பற்றிய தமிழர்களின் பொதுப்புத்தி. தாய்மொழியில் பேசினால் அபராதம் விதிக்கும் பள்ளிக்கூடங்கள் தமிழ்நாட்டில் தான் அதிகம்.

களம் - 3

மத்தியப் பொதுத்துறை நிறுவனங்களான இரயில்வே, தபால், வங்கி முதலிய பல்வேறு நிறுவனங்களில் அலுவல் மொழியாக இந்தி இந்தியா முழுமையும் பரவியிருக்கிறது. வட இந்தியாவிலிருந்து தமிழகத்திற்கு வரும் ஓர் இந்திக்காரருக்கு வாரங்கல், சென்னை, நாகர்கோவில் என எந்த இரயில்வே சந்திப்பாக இருந்தாலும் அங்கே வந்து செல்லும் இரயில்கள் பற்றிய அனைத்துத் தகவல்களும் அவரது தாய்மொழியான இந்தியிலேயே எழுத்து வடிவிலும், ஒலி வடிவிலும் கிடைக்கிறது. ஆனால் தலைநகர் தில்லிக்குச் செல்லும் ஒரு தமிழருக்குத் தில்லி இரயில்வே சந்திப்பிற்கு வந்து செல்லும் இரயில்கள் பற்றிய தகவல்கள் அங்கே தமிழில் கிடைக்கிறதா? இருவரும் இந்தியர்கள்தான்.

களம் - 4

மத்திய அரசின் வேலைவாய்ப்புச் செய்திகள் ணினீஜீறீஷீஹ்னீமீஸீt ழிமீஷ்s (வார இதழ்) இந்தி, உருது, ஆங்கிலம் மூன்றில் மட்டுமே வருகின்றது. பிற பிராந்திய மொழிகளில் இல்லை.

களம் - 5

தமிழ் நாட்டில் இருக்கும் நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனம், வங்கிகள், தொழில் நிறுவனங்கள் போன்ற பல்வேறு மத்திய அரசு நிறுவனங்களில் மொழிபெயர்ப்பாளர் பணி இருக்கிறது. அவை இந்தியும் ஆங்கிலமும் தெரிந்தவர்களுக்கு மட்டுமே கிடைக்கும். மத்திய அரசின் பல்வேறு போட்டித்தேர்வுகள் அனைத்தும் இந்தியிலும் ஆங்கிலத்திலும் மட்டுமே இருப்பது நாடறிந்தது.

மத்திய அரசின் நடவடிக்கைகள் அனைத்தும் இந்தியை அலுவல் மொழி என்ற பெயரில் ஆட்சி மொழியாக்குவதேயாகும். மேற்கண்ட களங்களில் இந்தி பெற்றுள்ள இடம் ஐரோப்பிய நாடுகளில் ஆட்சிமொழிகள் பெற்றுள்ள இடத்திற்குச் சமமானது. மத்திய அரசு இந்தியைத் தவிர பிற இந்திய மொழிகளை மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் அணுகுவது ஊரறிந்த ரகசியம். சமஸ்கிருதத்திற்கும் இந்திக்கும் ஒதுக்கும் நிதியில் 10 சதவீதம்கூட பிற இந்திய மொழிகளின் வளர்ச்சிக்கு மத்திய அரசு ஒதுக்கியதில்லை.
ஆங்கிலேயர் ஆட்சியில் ஆங்கிலம் ஆட்சி மொழியாக இருந்தாலும் ஒட்டுமொத்த இந்திய மொழிகளைப் பற்றிய புரிதலும், அக்கறையும் கொண்டவர்களாக ஆங்கிலேயர்கள் இருந்தார்கள். மாக்ஸ் முல்லர், எல்லீஸ், ராபர்ட் கால்டுவெல் போன்ற மிஷனரிகள் 18-19ஆம் நூற்றாண்டுகளிலேயே இந்திய மொழிகளின் மீதிருந்த தனிப்பட்ட ஆர்வத்தால் அவற்றை ஆராய்ந்து இந்தியாவில் உள்ள மொழிக்குடும்பங்களையும் அவற்றின் இயல்புகளையும் வேறுபாடுகளையும் உலகிற்கு உணர்த்தினர். இந்திய மொழிகள் பற்றிய அவர்களுக்கு இருந்த அறிவிலும் அக்கறையிலும் ஒரு சதவீதம்கூட இன்றைய ஆட்சியாளர்களுக்கு இல்லை என்பதற்கு மிகச்சிறந்த உதாரணம், தமிழகத்தில் 2014 ஜூனில் எழுந்த இந்தி எதிர்ப்பிற்கு, மத்தியில் ஆளும் பாரதிய ஜனதாவின் மூத்த தலைவர் முக்தர் அப்பாஸ் நக்வி ஆற்றிய எதிர்வினை. இந்தி என்பது தமிழ், தெலுங்கு, மலையாளம், குஜராத்தி, வங்காளம், அஸ்ஸாமி, உருது முதலிய பிராந்திய மொழிகளின் கலவைதான் என்கிறார் அவர். என்னவொரு அறியாமை.

ஆனாலும் மத்திய அரசு இந்தியர் அனைவருக்குமான பொது மொழியைக் கட்டமைப்பதில் தொடர்ந்து தோல்வியைத்தான் தழுவியிருக்கின்றது. அதற்குக் காரணம் பொதுமொழிக் கொள்கையில் அது கடைப்பிடிக்கும் ஒரு தலைபட்சமும் இந்திய மொழிகள் பற்றிய அறியாமையும். மொழிகளின் தோட்டமாக விளங்கும் இந்தியாவில் தனியொருமொழியை தேசியமொழி எனப் பிரகடனப்படுத்த முடியாது என்னும் யதார்த்த உண்மையை இந்திய அரசு 1949இல் தான் உணர்ந்தது. அதே போன்று 22 மாநில மொழிகள் வழங்கும் நாட்டிற்கு அலுவல் மொழியென்று தனியொரு மொழியைத் தீர்மானித்திருப்பது பிற பிராந்தியங்களின் உணர்வுகளையும் உரிமைகளையும் மறுப்பதன் அடையாளம். ஐரோப்பாவிலும் ஆசியாவிலும் உள்ள பல வளர்ந்த நாடுகள் ரயில் பயணச்சீட்டில்கூட ஐந்து முதல் ஆறு மொழிகளில் தகவல் அளிக்கின்றன. அங்கு அரசு நிறுவனங்களின் இணையத்தளங்களைத் தன் நாட்டு மக்களிடம் புழங்கும் பல்வேறு மொழிகளில் கட்டமைக்கின்றன. இந்திய மாநிலங்களில் தாய்மொழி கோஷத்தால் வளர்ந்த அரசியல் தலைவர்கள் தம் மொழியை வளர்ப்பதில் ஆக்கப்பூர்வமான செயல்பாடுகளை முன்னெடுக்க வேண்டும். மாநில மொழிகள் அனைத்தையும் அங்கீகரிக்கும் வகையில் மத்திய அரசை நெறிப்படுத்த வேண்டிய பொறுப்பு மாநிலக் கட்சிகளுக்கு உண்டு. இந்தியாவின் பலதரப்பட்ட தாய்மொழிகளின் உரிமைகளை நிலைநாட்ட இன்றைய நவீனத் தொழில் நுட்பம் தயாராகவே இருக்கிறது.

த. சுந்தரராஜ்

Monday, August 18, 2014

தமிழ்வழிக் கல்வியை சாத்தியமாக்க வழி என்ன?

இன்றைய மாணவர்களால் முறையாகத் தமிழில் பேச முடியவில்லை; பிழையின்றி எழுதத் தெரியவில்லை. ஊடகங்கள் பெரும்பாலும் ஆங்கிலம் கலந்த கலவைத் தமிழையே பயன்படுத்துகின்றன என, கண்டனக்குரல் ஒலிப்பதைக் காண முடிகிறது. இத்தகைய குறைகளை மிகைப்படுத்துவதைத் தவிர்த்து, இந்நிலையை மாற்றியமைக்க தமிழ் கல்வியாளர்கள், ஆக்கபூர்மான பணியில் ஈடுபட வேண்டும்.

தமிழ் வழியாகக் கல்வி பயின்றால், பிற மாநிலங்களிலும் பிற நாடுகளிலும் பணிபுரிய முடியாது என்னும் புனைந்துரையையும், தமிழில் இளங்கலை, முதுகலை கற்றவர்களால் ஆசிரியப் பணியினை மட்டுமே மேற்கொள்ள முடியும் என்னும் பரப்புரையையும் பொய்யுரையாக்க வேண்டியது, தமிழ்க் கல்வியாளர்களின் கட்டாயக் கடமை. தாய்மொழிவழிக் கல்வியின் உண்மை நிலையை உணர்ந்து கொள்ளாமையால், ஆங்கிலவழிக் கல்வியின் மீது பெரிதும் நாட்டம் கொண்டுள்ளோம். நம் கல்வித் திட்டத்தில் மொழிக்கல்விக்கு முதன்மை இடம் அளிக்காததால், நாட்டின் வளர்ச்சி தேக்க நிலையில் இருக்கிறது. பல ஆண்டுகள் தமிழைக் கற்றாலும், மாணவர்கள் படித்தவற்றின் உட்பொருளை உணர முடியாமலும், புதியன படைக்கும் திறன் இல்லாமலும், கருத்துக்களை வெளியிடும் திறன் இல்லாமலும் இருக்கின்றனர். இந்நிலையில், தமிழ்வழியாகக் கற்பிக்கப்படும் பிறபாடங்களின் நுண்பொருளை மாணவர்களால் எவ்வாறு உணர முடியும்?
மொழிக்கல்வியில் நம் பாடத்திட்டத்தில் முதன்மை இடம் பெறுவது இலக்கணக் கல்வி. இலக்கணம் என்பது, ஒரு குறிப்பிட்ட காலத்தில் பயன்படுத்தப் பெற்ற மொழியின் அமைப்பை விவரிக்கக் கூடியது என்பதால், அது காலந்தோறும் மாறிக் கொண்டே வருகிறது.

மொழியலகுகளில் ஏற்பட்டுள்ள முறையான மாற்றங்களை அறிஞர்கள் ஏற்றுக் கொள்ளாமையால், இன்றைய மாணவர்களுக்கு பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன் பேசப்பட்ட மொழியின் அமைப்பை விவரிக்கும் இலக்கணத்தைக் கற்பிக்கும் நிலை காணப்படுகிறது. இதனால் மாணவர்களுக்கு, இன்றைய பயன்பாட்டுத் தமிழில் பேசவும், எழுதவும் ஆற்றல் கிடைக்காமல் போய்விடுகிறது. மொழி கற்பித்தலுக்கும், இலக்கியம் கற்பித்தலுக்கும் இடையேயுள்ள வேறுபாடு கூட, கல்வியாளர்கள் மத்தியில் வரையறை செய்யப் பெறவில்லை. இலக்கியக் கல்வியையே மொழிக்கல்வியாகக் கருதும் போக்கு, கட்டாயம் மாற்றம் பெற வேண்டும். மொழிக் கல்வி பற்றிய தவறான எண்ணம், பாடத்திட்டம், கற்பித்தல் ஆகியவற்றில் காணப்பெறும் நிறைவின்மை காரணமாக, மொழிக்கல்வி மிகவும் பின்தங்கியுள்ளது. மாணவர்களிடம் மொழிக்கல்வியில் பெரிதும் ஆர்வம் குன்றியிருப்பதற்குப் பாடத்திட்டமே அடிப்படைக் காரணமாக அமைகிறது. நம் பாடத்திட்டம் மறுசீரமைப்பு செய்யப்பட்டுள்ளதே அன்றி, பெரிதும் மாற்றியமைக்கப் பெறவில்லை. இது வாழ்க்கைக்குத் தொடர்பின்றி, ஆசிரியர்களை மையமாகக் கொண்டே அமைந்துள்ளது. இது, மொழித்திறன்களை வளர்ப்பதைக் காட்டிலும், மொழி வரலாற்றைத் திணிக்கும் வகையில் தான் அமைந்துள்ளது.

மருத்துவம், தொழில் நுட்பவியல் போன்வற்றைப் பயிலவிருக்கும் மாணவர்களுக்கு மேனிலை வகுப்புகள் வரை மட்டுமே மொழிக்கல்வி பெற வாய்ப்புள்ளதால், பள்ளியிலேயே அனைத்து மொழித்திறன்களையும் தெரிந்து கொள்ளும் வகையில் பாடத்திட்டம் அமைய வேண்டும். இளங்கலை, முதுகலைத் தமிழ் பயிலும் மாணவர்களுக்கு வேலை வாய்ப்பைத் தரும் மொழிபெயர்ப்பு, மொழி கற்பித்தல், கணினி மொழியியல், மானுடவியல், மொழி அறிவியல், பண்பாட்டியல் போன்ற பாடங்களையும் அறிமுகம் செய்து, அனைத்துத் துறைகளிலும் பணிபுரியக் கூடிய வகையில் பாடத்திட்டம் அமைய வேண்டும். மாணவர்களுக்குத் தன்னம்பிக்கையை உருவாக்கும் ஆங்கில மொழிக் கருத்துப் பரிமாற்றக் கல்வியும், கணினிப் பயன்பாட்டுக் கல்வியும் பாடத்திட்டத்தில் கட்டாயம் இடம் பெற வேண்டும். ஆங்கிலக் கருத்துப் பரிமாற்றத்திறன் பெற்றால் தான், நம் இலக்கண, இலக்கியக் கோட்பாடுகளை உலகறியச் செய்தல் இயலும்.

உலகின் முதல் மொழி அறிவியல் பேராசான் என்று கருதப்படும் தொல்காப்பியரின் மொழி விளக்க மரபும், இலக்கணக் கோட்பாடும் மேலை நாடுகளைச் சென்றடையவில்லை என்பது வருந்தற்குரியது.கல்வி என்பது வாழ்க்கையை மேம்படுத்துவதற்காக; வாழ்க்கையைச் சீர்குலைத்துப் பொருள் ஈட்டுவதையே குறிக்கோளாகக் கொண்டது அல்ல கல்வி என்பதை தெரிந்து கொள்ளும் வகையில், பாடத்திட்டமும், பாடங்களும் அமைய வேண்டும். கற்ற கல்வியை மதிப்பீடு செய்வதே, தேர்வின் நோக்கம். கற்ற பாடம் முழுவதையும் மதிப்பீடு செய்யாமல், மனப்பாட ஆற்றலின் அடிப்படையில் நடத்தப்பெறும் நம் தேர்வுமுறை, மாணவர்களின் மொழித்திறனில் குறைபாட்டை உருவாக்கி, அவர்களைக் காயப்படுத்துகிறது. 1330 குறளை ஒப்புவிக்கும் மாணவனால், புதிதாக ஒரு திருக்குறளை உருவாக்க முடியவில்லை. மாணவர்களால் தமிழ் ஒலிகளை முறையாக ஒலிக்கத் தெரியவில்லை என்று கூறுவதைக் காட்டிலும், இவர்களுக்குத் தொடக்க நிலையில் முறையான ஒலிப்புப் பயிற்சி வழங்குவதே ஏற்புடையது.

இத்தகைய பயிற்சி அளிக்கும் அனுபவம் ஆசிரியர்களிடம் இல்லை. தொடக்க நிலையில் மொழி ஆசிரியர்களால் பள்ளியில் மொழிக் கல்வி கற்பிக்கப்படுவதில்லை என்பதும் உண்மை. மொழிக்கல்வியின் குறைபாட்டிற்கு மக்களின் மனநிலை அடிப்படைக் காரணமாக அமைந்துள்ளது. அன்று வடமொழிக்கு, மொழி முதன்மை கொடுத்தோம். இன்று ஆங்கிலத்திற்குக் கொடுக்கிறோம். ஆங்கிலம் பேசுகிறவர்களை அறிவாளிகளாகக் கருதும் நாடுகளில் ஒன்றான நம் நாட்டில், ஆங்கிலேயன் நம்மிடமிருந்து கடன் பெற்று மாற்றியமைத்த சொற்களை மீண்டும் அவனிடமிருந்து கடன் பெற்றுப் பயன்படுத்துவதைப் பெருமையாகக் கருதுகிறோம். தமிழ் மொழியமைப்பில் காணப்படும் சீர்மையின்மையைக் களைந்து, கணினிப் பயன்பாடு, மின்னணுவியல் உட்பட அனைத்துத் துறைகளிலும் கருத்துப் பரிமாற்றத்திற்குத் தேவையான அலகுகளை, தமிழில் தமிழ்க் கல்வியாளர்கள் உருவாக்க வேண்டும். இந்நிலையில் தமிழியற்கல்வி புதிய வரலாறு படைக்கும்.

- பேராசிரியர் ஏ. ஆதித்தன்
-மதுரை காமராசர் பல்கலைக்கழகம்