Thursday, October 23, 2014

அரிய பொக்கிஷங்கள் : களஞ்சியங்கள்

ஆன்ட்ராய்டு போனும் கையுமாக அலையும் இன்றைய இளைய தலைமுறையினர், 'வாட்ஸ் அப்'பில் தகவல் பரிமாறி; பேஸ் புக்கில் லைக் போட்டு; மதியம் பீட்சாவும், பர்கரும் கடித்து ருசித்து; நடுநிசி வரை கொண்டாட்டங்களில் களித்து; வார இறுதியில் 'அவுட்டிங்' சென்று... என, இன்றைய நவீன உலகின் வசதி, வாய்ப்புகளை அனுபவித்து லயிக்கின்றனர்.
நாம் இந்நிலைக்கு வரும் வரை தந்தை, தாத்தா, பாட்டன், பூட்டன்களுக்கு சோறு போட்டு தலைமுறைகளை காப்பாற்றிய, அக்கால விவசாயிகள், எந்த மாதிரியான வாழ்க்கை வாழ்ந்தனர்; அப்போது, என்ன வசதிகள் இருந்தன என்பதையும் அறிந்து கொள்வது அவசியம்...நம் முன்னோர்கள் பயன்படுத்தி வந்த எத்தனையோ பொருட்கள், காலமாற்றத்தால் மறைந்துவிட்டன. இயற்கையோடு இழையோடிய வாழ்க்கை முறைகள், பருவம் கண்டுபயிர் செய்த வானவியல் அறிவு, பஞ்சம், வெள்ளம் போன்ற இயற்கை சீற்றங்களிலிருந்து உழவுத்தொழிலை காக்க, விதைகளை கோவில் கலசங்களில் பாதுகாத்து வைத்த அறிவு கூர்மை ஆகியவை, இந்திய விவசாயத்தை இன்னும் உயிர்ப்புடன் வைத்திருக்கின்றன. ஒரு காலத்தில் பொள்ளாச்சி, ஆனைமலைப்பகுதி, கோவை மாவட்டத்தின் நெற்களஞ்சியமாக திகழ்ந்தது. மாடு கட்டி போர் அடித்தால் மாளாது என்று, யானைக்கட்டி போர் அடித்த பகுதி இது என பெருமை பேசப்படுகிறது.

சேமிப்புக் கிடங்குகள்:

விதை தேவைக்காகவும், வீட்டு உபயோகத்திற்காகவும் தானியங்களை பாதுகாத்து வைக்க, நம் முன்னோர்கள் பல வழிமுறைகளை பின்பற்றினர். அவற்றில் குதிர், கோட்டை, மதங்கு, பத்தாயம், சோளக்குழி ஆகியவை முக்கியமானவை.விவசாயம் மட்டுமே தெரிந்த அந்த காலகட்டத்தில், ஆனைமலை பகுதியில் 50 ஆண்டுகளுக்கு முன்பு தென்னை விவசாயம் பெரிதாக நடைபெறவில்லை. பழைய ஆயக்கட்டு பகுதிகளில், நெல்சாகுபடியும், மானாவாரி விவசாயமாக சோளம், நிலக்கடலை, கம்பு மற்றும் ராகி, போன்ற சிறுதானியங்களும் அதிகம் சாகுபடி செய்யப்பட்டன. அறுவடைக்குப்பின் நெல்லை பாதுகாக்க குதிர்களும், சோளத்தை பாதுகாக்க சோளக்குழிகளும், மதங்குகளும் பயன்பாட்டில் இருந்தன.

விதை பாதுகாப்பு:

விதை நெல் தேவைக்கு யாரையும் சாராமல் இருக்க, நமது முன்னோர்கள் அறுவடைக்குப்பின், நன்கு உலர்த்தப்பட்ட பயிர்களை, வீடுகளில் உள்ள குதிர்களில் சேமித்து வைத்திருந்தனர். குதிரின் அளவு இடத்திற்கு இடம் மாறுபடுகிறது. இந்த பகுதியில் உள்ள குதிர்கள் 4 முதல் 6 அடி உயரமும் 2 அடி வரை விட்டமும் கொண்டது. 'எங்கப்பன் குதிருக்குள் இல்லை' என்ற பழமொழியைக் கொண்டே ஒரு மனிதன் ஒளிந்து கொள்ளும் அளவிற்கு, அளவில் பெரிதாக இந்த மண்பானை குதிர்கள் இருந்துள்ளதை அறிந்து கொள்ளலாம்.

சோளக்குழி:

நிலத்தின் அடியில் அமைக்கப்பட்ட சேமிப்புக் கிடங்கு 'சோளக்குழி' என்றும், தரைமட்டத்திற்கு மேல் அமைக்கப்பட்ட கிடங்கு 'மதங்கு' எனவும் அழைக்கப்பட்டது. வீட்டின் முன்புறம் அல்லது கொல்லைப்புறத்தில், இந்த சேமிப்பு கிடங்குகள் அமைக்கப்பட்டிருந்தன. எட்டு அடி ஆழம் அல்லது உயரம், 5 அடி நீளம், அகலம் கொண்டே பெரும்பாலான சோளக்குழிகள் அமைக்கப்பட்டன. கற்கள் மற்றும் சுண்ணாம்பு அல்லது மண் கலவை கொண்டோ இது அமைக்கப்பட்டிருக்கும். இதன் அடிப்பகுதி பெருத்தும், வாயிற்பகுதி குறுகியும் காணப்படும்.தானியங்களை சேமிக்கும் போது, பூச்சிகள் வராமல் இருக்க நொச்சி, புங்கன், வேப்பிலை இலைகள் தானியங்களுடன் கலந்து வைக்கப்படும். இதனால் அவற்றின் முளைப்புத்திறனும் கெட்டுப்போகாமல் இருக்கும்.

மதங்கு:

எட்டடி உயரத்திற்கு சுண்ணாம்பு, ஓடைக்கற்கள், கருங்கல் ஆகியவற்றை கொண்டு வட்டவடிவில், சுற்றளவு அடிப்புறத்தில் அதிகரித்தும் மேற்பகுதி குறுகியும் கட்டப்பட்டதே மதங்கு. உள்ளே சுண்ணாம்புக்கலவை கொண்டு பூசப்பட்டு, சாணியால் மெழுகப்பட்டிருக்கும். உள்ளே உணவு தானியங்கள் கொட்டப்பட்டு, அதன் வாயிற்பகுதி பலகை கல் கொண்டு அடைத்து, சுண்ணாம்பு கலவை பூசப்பட்டு இருக்கும். தேவைப்படும் பொழுது ஏணியை பயன்படுத்தி, உள்ளே இறங்கி தானியங்களை எடுத்து பயன்படுத்துவார்கள்.ஒவ்வொரு போகமும் நெல் அறுவடை தொடங்கும் போது, விதைக்கான நெற்கதிர்களை அடையாளம் கண்டு அவற்றை தனியாக அறுவடை செய்து உலர்த்தி பதப்படுத்துவார்கள். அந்த நெல்லை அடுத்த பருவத்திற்காக பக்குவபடுத்தி வைக்கும் சேமிப்பு கிடங்குதான் குதிர்களும், மோடாக்கள் என அழைக்கப்படும் கூன்களும் ஆகும். இவைகள் எல்லாம் தற்போது வழக்கத்தில் இல்லை.

'பாரம்பரியத்தை மறக்காதீர்':

ஆனைமலை பகுதி விவசாயிகள் சிலர் கூறியதாவது: விவசாயத்தில் பூச்சிக்கொல்லி மருந்துகளை பயன்படுத்தி, விதை நேர்த்தி செய்யும் பழக்கம் அக்காலத்தில் இல்லை. தற்போது விதை நெல் முதல் உணவு வரை அனைத்தும் பாக்கெட்டில் அடைத்து விற்கப்படுகிறது. பாரம்பரியத்தை மறந்து, பன்னாட்டு விதை கம்பெனிகளை நோக்கி கையேந்தாத வரைதான், நம் நாட்டில் வேளாண்மை உயிர்ப்புடன் இருக்கும்.பாரம்பரிய தொழில்நுட்பங்களை மறந்தால், 'ஊரான் ஊரான் தோட்டத்திலே, ஒருத்தன் போட்டானாம் வெள்ளரிக்கா; காசுக்கு ரெண்டு விக்க சொல்லி கடுதாசி போட்டானாம் வெள்ளக்காரன்' என்ற விடுதலை போராட்ட கால பாடலை, மீண்டும் பாட வேண்டிய சூழல் ஏற்பட்டு விடும்.இவ்வாறு, விவசாயிகள் தெரிவித்தனர்.

Wednesday, October 15, 2014

நிறுவனங்கள் நம்மிடம் எதிர்பார்க்கும் சில முக்கியமான தகுதிகள்

நமக்கான பணி வாய்ப்புகளைத் தேடும்போது, நம்மிடம் சில முக்கியமான தகுதிகளை நிறுவனங்கள் எதிர்பார்க்கும். அத்தகுதிகளைப் பெற்றிருக்கும் ஒருவரே, தான் விரும்பிய பணியை, நல்ல சம்பளத்தில் பெறுவார்.

அவை பற்றிய ஒரு கலந்துரையாடலை இக்கட்டுரை வழங்குகிறது.

தகவல்தொடர்பு திறன்கள்
ஒருவர் தேவையான மொழிகளில், நல்ல அறிமுகத்தைப் பெற்றிருப்பதுடன், பணியைப் பெறுமளவிற்கு சிறப்பாக மொழியைப் பயன்படுத்த தெரிந்திருக்க வேண்டும். திக்கித் திணறாமல், நல்ல வளமையோடு பேசுபவர், எளிதில் தனக்கான பணி வாய்ப்புகளைப் பெறுகிறார்.
வளவளாவென்று இல்லாமல், சொல்வதை ரத்தின சுருக்கமாகவும், அமைதியான முறையிலும், சிறப்பான வார்த்தைகளைப் பயன்படுத்தியும் பேசும்போது, நம்மால் இயல்பாகவே, பிறர் கவரப்படுவார்கள். பேசுவதோடு மட்டுமின்றி, நல்ல எழுதும் திறனும், நமக்கான பணி வாய்ப்பை உறுதி செய்வதில் முக்கியப் பங்கை வகிக்கின்றன.

தலைமைத்துவம்
ஒருவருக்கு முன்முயற்சியும்(ஒரு விஷயத்தை தொடங்குவதில் ஆர்வம்), பொறுப்பும் இருந்தால், அவரை இயல்பாகவே, ஒரு நிறுவனத்திற்கு பிடித்துவிடும். இத்தகைய இயல்பு, அனைவருக்கும் அமைந்து விடுவதில்லை. ஆனால், இந்த பண்புகள், பணி தேடும் ஒருவரிடம் கட்டாயம் எதிர்பார்க்கப்படுகின்றன.
எனவே, தலைமைத்துவப் பண்பைப் பெற்று, முன்முயற்சியும் இருக்கும் ஒருவர், தனக்கு பொருத்தமானப் பணியை எளிதாகப் பெறுவார்.

தன்னம்பிக்கை
நிறுவனங்கள், தங்களுக்காக பேசும் தன்னம்பிக்கை மனிதர்களையே விரும்புகின்றன. ஏனெனில், அவர்கள் பல பொறுப்புகளை ஏற்று, அவைகளை தன்னம்பிக்கையுடன் கையாள்வார்கள்.
ஒருவர் தனக்கான வேலை வாய்ப்பை பெறுவதற்கு தன்னம்பிக்கை என்பது கட்டாயத் தேவையாகும். நேர்முகத் தேர்வில்கூட, ஒரு குறிப்பிட்டப் பொறுப்பை ஒப்படைத்தால் அதை சிறப்பாக தலைமையேற்று செய்து முடிப்பீர்களா? என்றெல்லாம் கேட்பதற்கு வாய்ப்புகள் அதிகம். அப்போது, உங்களின் பதில் எப்படி வருகிறது என்பது ஊன்றி கவனிக்கப்படும்.

குழு உணர்வு
குழு உணர்வு என்பது ஒரு நிறுவனத்தில் பணியாற்றுவதற்குரிய அடிப்படைத் தகுதியாகும். யாருமே, இந்த உலகில் தனித்து இயங்க முடியாது. ஏனெனில், யாருமே அவர்களாக பிறக்கவில்லை. பிறந்தது முதல், அவர்களாகவே தங்களுக்கான அனைத்தையும் செய்து கொண்டதில்லை.
எனவே, சார்ந்தியங்குவதே இவ்வுலகின் தத்துவம். ஒரு வணிக நிறுவனத்திற்கும் அதுவே பிரதானம். இதன்பொருட்டு, உங்களின் குழு உணர்வு சோதித்தறியப்படும்.

இலக்கு
ஒருவர் நேர்முகத் தேர்வுக்கு வரும்போது, அந்த நிறுவனத்தைப் பற்றி என்ன தெரிந்து வைத்துள்ளார் மற்றும் அவர் அங்கே என்ன பொறுப்பை எதிர்பார்த்து, அதன்மூலம் எந்த இலக்கை நிர்ணயித்து அதை அடையப்போகிறார்? என்பதை ஒரு நிறுவனம் எதிர்பார்க்கும். இதுதொடர்பான கேள்விகளும் கேட்கப்படும். எனவே, அதற்கு தயாராக இருக்க வேண்டும்.
மாறாக, இல்லை, எனக்கு இப்போதைக்கு எதுவும் சொல்வதற்கில்லை; பணியில் சேர்ந்த பிறகுதான் திட்டமிட வேண்டும் என்று சொல்பவர் வேலை வாய்ப்பை பெறுவது அரிதினும் அரிதே...

கடின உழைப்பு
எந்தப் பணியிலும், கடின உழைப்பு என்பதை சமரசம் செய்துகொள்ளவே முடியாதுதான். உலகில் வாழும் அனைவருக்குமே பணம் என்பது அத்தியாவசியம். எனவே, நாம் பணி செய்வதன் முதன்மை நோக்கம் பணம்.
ஆனால், அந்த பணத்திற்கான நோக்கத்தோடு, நாம் செய்யும் பணியும் நமக்குப் பிடித்துப்போனால், நாம் தாராளமாக நமது கடின உழைப்பை அதில் செலுத்துவோம். இதன்மூலம், திருப்திக்கு திருப்தியும், பணத்திற்கு பணமும் கிடைக்கும். எனவே, கடினமாக உழைக்க தயாராய் இருப்பவர்களுக்கு, பணியும் தயாராகவே இருக்கும்.

படைப்புத் திறன்
படைப்பாக்கத் திறன் கொண்ட ஒருவரை, நிறுவனங்கள் எப்போதுமே விரும்புகின்றன. ஏனெனில், ஒரு நிறுவனத்தில் செயல்படுத்தப்படும் திட்டங்களை, வேறு எந்த முறையில் மாற்றியமைத்தால், செலவு குறைவாகவும், லாபம் அதிகமாகவும் இருக்கும் என்று ஒருவர் புத்தாக்க முறையில் தீர்வுகளை முன் வைக்கும்போது, அவர் இயல்பாகவே, நிறுவனங்களால், போட்டிப்போட்டு கொத்திக் கொள்ளப்படுவார்.

இவை இருந்தால் போதும்; வேலை உங்களுக்குத்தான்...!

Tuesday, October 14, 2014

ஹோம் பட்ஜெட்: மாத கடைசியில் பணப் பற்றாக்குறை... எளிதாகச் சமாளிக்க 8 வழிகள்!

பெண்களுக்கான நிதி நிர்வாக வழிகாட்டி!

ஒண்ணுல இருந்து இருபது வரைக்கும் கொண்டாட்டம் கொண்டாட்டம், இருபத்தொண்ணுல இருந்து திண்டாட்டம்... கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் பாடிய இந்தப் பாடல் வெளிவந்து அரை நூற்றாண்டுகளுக்கு மேலாகிவிட்டது. ஆனால், அந்தப் பாடலின் கருத்து இன்றைக்கும் நூறு சதவிகிதம் நமக்குப் பொருந்தி வருகிறது. ஒன்றாம் தேதி வாங்கும் சம்பளத்தைப் பார்த்துப் பார்த்துச் செலவு செய்தாலும் 20 தேதிக்குமேல் திண்டாட்டமாகவே இருக்கிறது நம்மில் பலருக்கு.
'கையில வாங்கினேன். பையில போடல; காசு போன இடம் தெரியலை’ என்று திருச்சி லோகநாதன் பாடிய பாடலை பாட வேண்டிய நிலையில்தான் இருக்கிறது நம் வாழ்க்கை. எனவே, 21-ம் தேதிக்குப்பின் யாரிடம் கடன் கேட்பது என்று யோசிக்க ஆரம்பித்துவிடுவோம். இந்தப் பிரச்னையிலிருந்து நாம் எப்படித் தப்பிப்பது? என நிதி ஆலோசகர் வி.சங்கரிடம் கேட்டோம். விளக்கமாக எடுத்துச் சொன்னார் அவர்.

''நடுத்தரக் குடும்பத்தின் பெரிய பிரச்னையே மாத கடைசியில் கடன் வாங்காமல் சமாளிப்பது எப்படி என்பதுதான். இந்தப் பிரச்னையை எல்லாராலும் எளிதில் சமாளிக்க முடியும். ஆனால், உங்கள் பழக்கவழக்கத்தைக் கொஞ்சம் மாற்றிக்கொள்ள வேண்டும். என்னென்ன செய்யவேண்டும் என்பதை பாயின்ட் பை பாயின்டாகச் சொல்கிறேன்.

1. சம்பளம் வாங்கியவுடன் பட்ஜெட் போட வேண்டும். பட்ஜெட்டில் எழுதியதை அப்படியே பின்பற்ற வேண்டும். அதாவது, கல்விக் கட்டணம் ஒவ்வொரு மாதமும் 15-ம் தேதி செலுத்த வேண்டும் என்று வைத்துக்கொள்வோம்.
உங்களுக்கு 5-ம் தேதியே சம்பளம் வந்துவிடுகிறது என வைத்துக்கொள்வோம். சம்பளம் வந்தவுடன் இதைச் செலுத்திவிட வேண்டும். 15-ம் தேதிதானே, அன்றைக்கு கட்டினால் போதாதா என்று நினைக்கக் கூடாது. இப்படியே தள்ளிப்போட்டுக்கொண்டே போவது பிரச்னைகளை நாமே வரவழைத்துக்கொள்கிற மாதிரி ஆகிவிடும். இதனால் உரிய நேரத்தில் பணத்தைக் கட்டமுடியாத நிலைகூட நமக்கு வரலாம். அதனால் அபராதம் செலுத்தவேண்டிய சிக்கலும் வந்து சேரலாம். இந்தச் சிக்கலுக்கு எல்லாம் நாம் வழிவிடவே கூடாது.

2. சம்பளம் வந்ததும் அத்தியாவசியமான செலவுகள் என்னென்ன, தவிர்க்கக்கூடிய செலவுகள் என்னென்ன என்பதைப் பட்டியலிட வேண்டும்.
வீட்டு வாடகை, மளிகைப் பொருட்கள் வாங்குவது, இ.எம்.ஐ செலுத்துவது, மருத்துவம் போன்றவற்றுக்கான பணத்தை எந்தக் காரணம் கொண்டும் வேறு தேவைகளுக்காகப் பயன்படுத்தக்கூடாது.

3. கட்டாயம் செய்யவேண்டிய செலவுகளுக்கான பணத்தை சம்பளம் வந்தவுடன் ஒதுக்கிவைத்துவிட வேண்டும். இதுபோக, மீதமுள்ள பணம் கையில் எவ்வளவு இருக்கிறது என்பதைப் பார்க்க வேண்டும். இந்த மீதமுள்ள பணத்தில் என்னென்ன செலவுகள் செய்யலாம், என்னென்ன செலவுகளை செய்யக்கூடாது என்பதைத் திட்டமிட்டுக்கொள்ள வேண்டும். அதாவது, அடிக்கடி ஹோட்டலுக்குப் போவது, ஷாப்பிங் செய்வது, சுற்றுலா போவது போன்ற செலவுகளைத் தவிர்க்கலாம்.

4. ஒவ்வொரு மாதமும் சம்பளம் வந்தவுடன், ஒரு சிறிய அளவு பணத்தை எடுத்து தனியாக ஒதுக்கி, ரிசர்வ் ஃபண்டாக வைத்துவிட வேண்டும். இதை எளிதில் எடுக்க முடியாதபடி வைத்திருப்பது நல்லது. உதாரணமாக, வேறு ஒரு வங்கிக் கணக்கில் அந்தப் பணத்தை வைத்துவிடலாம். இந்தப் பணத்தை மிக மிக அவசர தேவைகள் ஏற்பட்டாலொழிய, 20-ம் தேதிக்கு முன்பு தொடவே கூடாது. இப்படி ஒவ்வொரு மாதமும் சம்பளம் வாங்கியவுடன் குறிப்பிட்ட அளவு பணத்தைப் போட்டுவைப்பது ஆபத்பாந்தவனாக உதவும். ரிசர்வ் ஃபண்ட்தான் இருக்கிறதே என்று நினைத்து 20 தேதிக்குள் தாம்தூம் என்று செலவழிக்கக் கூடாது. அவசரத்துக்கு மட்டுமே என ஒதுக்கிய அந்தப் பணம் ஒருவேளை பயன்படவில்லை எனில், அதை அந்தக் கணக்கிலேயே அப்படியே வைத்துவிடலாம். இப்படி ஒவ்வொரு மாதமும் சேரும் பணத்தை நீண்ட நாள் சேமிப்பாக மாற்றலாம்.

5. எப்போதுமே குறைந்த அளவில் கடனை வைத்துக்கொள்வது நல்லது. வீட்டுக் கடன் போன்ற சொத்து சேர்க்க உதவும் கடன்கள் தவிர்த்து, பிற கடன்கள் அனைத்துமே தேவை இல்லாத கடன்கள்தான். இதைத் தவிர்த்து, வாகனக் கடன், தனிநபர் கடன், நகைக் கடன் அனைத்துமே அதிகமான வட்டி விகிதத்தில்தான் கிடைக்கிறது. இந்தமாதிரியான கடன்களை வாங்கும்போது அதிகமான வட்டியைச் செலுத்தவேண்டியிருக்கும். இதனாலும் பட்ஜெட்டில் பற்றாக்குறை ஏற்பட்டு மாத கடைசியில் பிரச்னை உண்டாகும்.

6. மளிகைப் பொருட்களை தினம் தினம் வாங்குவதால் நமக்கு நஷ்டம்தான். இதற்குப் பதில் மொத்தமாக வாங்கினால் கணிசமான பணத்தை மிச்சப்படுத்த முடியும். சம்பளம் வந்தவுடன் ஒரு மாதத்துக்குத்  தேவையான பொருட்களை மொத்தமாக வாங்கிவிடலாம். மொத்த விலைக் கடைகளில் மளிகைப் பொருட்களை வாங்கும்போது ஒரு மாதத்துக்கு 200 - 300 ரூபாய் வரை மிச்சமாகும். தவிர, மாத கடைசியில் கையில் பணம் இல்லையென்றால் பொருட்களை வாங்க முடியாது. இதனால் கடன் வாங்கவேண்டிய சூழ்நிலை உருவாகும்.

7. கையிலிருக்கும் பணத்தை வைத்துதான் செலவுகளை முடிவுசெய்ய வேண்டும். உதாரணமாக, அடுத்த வாரம் 2 ஆயிரம் ரூபாய் கூடுதலாகக் கிடைக்கும் எனில், உடனே எங்கு ஷாப்பிங் போகலாம், என்ன பொருளை வாங்கலாம் எனத் திட்டமிடக்கூடாது. ஏனெனில், அந்தப் பணம் வராமல் போவதற்கு  வாய்ப்புள்ளது. எனவே, கையில் உள்ளதைவைத்து திட்டமிட்டு சிறப்பாக வாழ்வதே புத்திசாலித்தனம்.

8. எல்லாவற்றுக்கும் மேலாக, சிக்கனமான வாழ்க்கைமுறைதான் அடுத்தவரிடம் கையேந்தாத நிலைமையை நமக்குத் தரும். விரும்பியதையெல்லாம் அனுபவித்தால் பணம் செலவழியவே செய்யும்.
இதனால் மாத கடைசியில் பணப் பற்றாக்குறை வரவே செய்யும். எனவே, சிக்கனத்துக்கான வழிவகைகளை அவசியம் தெரிந்துகொண்டு அதன்படி நடப்பது நல்லது'' என்றார் சங்கர்.

கிடைக்கும் சம்பளத்தைத் திட்டமிட்டு செலவு செய்தால், மாத கடைசியில் பணமுடையா இருக்கே என்று கவலைப்படாமல், நிம்மதியாகவும் மகிழ்ச்சியாகவும் இருக்கலாம்.

http://www.vikatan.com/nanayam/2014/06/ndmxzj/images/nav60c.jpg
உலக உணவு தினம் (அக். 16) : உன்னத உயிர் உணவு எது ?

இன்று மனிதனின் வாழ்க்கைத்தரம் உயர்ந்து விட்டது; தேவைகள் அதிகரித்து விட்டன. இயந்திர உலகத்தில் சொகுசு வாழ்க்கைக்கு பழகிவிட்டோம். இதன் விளைவாக நோய்களின் பெருக்கம் அளவுக்கு மீறி நம்மை ஆதிக்கம் செலுத்தத் துவங்கி விட்டன. நோயின்றி வாழ முடியுமா? இதற்கு ஒரே பதில்... 'உணவே மருந்து... மருந்தே உணவு' என்ற இயற்கை தத்துவத்தின் அடிப்படையில் மருந்தில்லா வாழ்க்கை வாழ்வது தான்.

நோய்களின் தாக்கம் அதிகரிப்பதற்கு காரணம்... : மேலைநாட்டு உணவுகளும், துரித உணவுகளும் நம் நாட்டில் நுழைந்தபின், பாரம்பரிய உணவுகளை மறந்து விட்டது தான். ''அரிது அரிது மானிடராய் பிறத்தல் அரிது'' என்றார் அவ்வையார். நம் சான்றோர்கள் உடல்நலம் பேணுதலின் அவசியத்தையும், வழிமுறைகளையும் வகுத்து நமக்கு அளித்துள்ளனர். ஆரோக்கிய வாழ்விற்கு சமச்சீர் உணவு தேவை. நமது முக்கிய உணவாக அரிசி வந்தபின்... மானிட வாழ்க்கையில் 'அரிசி அரிசி... உணவில் முக்கியமானது அரிசி' என்று மாறி விட்டோம். அதுவே உடல்நலத்திற்கு ஊறுவிளைவிப்பதாய் மாறிவிட்டது.

உடல்பருமன் ஏன்? : மண்பானையில் சிறு, குறுந்தானிய கஞ்சி, களி, கூழ், கீரை மசியல் சமைத்து சாப்பிட்ட காலம் மாறி, பீட்சா, பர்கரின் பின்னே சென்றதன் விளைவு... இளம் வயதில் உடல்பருமன். காலையில் மோரில் ஊறவைத்த கம்பு, கேழ்வரகு கூழ், மதியம் கஞ்சி, களி, இரவில் ரொட்டி, கீரை மசியல், பருப்பு துவையல்... என, நம் முன்னோர்கள் மூன்றுவேளையும் சத்தான உணவுகளை சமச்சீராக உண்டனர். அதனால் தான் உடல் திடகாத்திரமாய் வயல்வேலைகளை களைப்பின்றி செய்ய முடிந்தது. உடல் எடை கூட்டாத இந்த உணவை சாப்பிட்டதால் வயிற்றில் சதையின்றி உடலும் உறுதியாக 'மிஸ்டர் ஆணழகர்களாக' ஆண்கள் வலம் வந்தனர். ஒல்லிக்குச்சி இடையழகிகளாக நம்மூரு பெண்களும் சுழன்றனர். இப்போது சுழல்வதற்கு இடுப்பைக் காணவில்லை. ஏனென்றால் உடலோடு இடுப்பும் ஒன்றாகிப் போனது தான். அரிசியில் கார்போஹைட்ரேட் தான் மிகுந்துள்ளது. இவற்றை தொடர்ந்து சாப்பிடுவதால் உடல் எடை கூடுகிறது. எடை கூடினாலே நீரிழிவு நோய் ஆரம்பிக்கும். இது போதாதென்று துணைக்கு பத்து நோய்களையும் விருந்தினர்களாக அழைத்து வரும்.

ஆண்டுகளாக வந்த அரிசிப் பழக்கத்திற்கு மாற்றாக கோதுமையும் வந்தது. இதிலும் பிரச்னை தீரவில்லை. நார்ச்சத்து வீணாகிறது கோதுமையை உடைக்கும் போது அதிலுள்ள தவிடு எனப்படும் நார்ச்சத்து வீணாகிறது. முழு கோதுமையை அப்படியே உடைத்து மாவாக்கினால் மாவின் நிறம் சற்றே செம்மையாக இருக்கும். இதில்தான் நார்ச்சத்து உள்ளது. ஆனால் நிறம் பிடிக்கவில்லை என்று சுத்திகரிப்பதால் கோதுமையையும் சிறந்த மாற்று உணவாக பார்க்க முடியவில்லை.

கம்பு, தினை, கேழ்வரகு தானியங்களில் இந்நிலை இல்லை. அறுவடை செய்யும் போது தானியங்களை அரவைக்கு கொடுக்கும் போது மேலே உள்ள உமியை மட்டுமே நீக்கமுடியும். தானியத்துடன் தவிடு இணைந்துள்ளதால் தனியாக பிரிக்க முடியாது. எனவே இவற்றை மாவாக்கினாலும், அப்படியே சமைத்தாலும் சத்துக்கள் இடம்பெயராது. எனவே, நார்ச்சத்து முழுமையாக கிடைக்கிறது.

அரிசிக்கு மாற்று : சிறு, குறுந்தானியங்களான கேழ்வரகு, கம்பு, தினை, வரகு, சாமை, குதிரைவாலியில் அதிக நார்ச்சத்தும், குறைந்த வெப்பக்கூறுகளும் கொண்டது. அரிசிக்கு மாற்றாக ?? சதவீத அளவுக்கு குறுந்தானியங்களை சேர்த்தால் உடலுக்கு நல்லது.

அசைவ உணவுகளின் மூலமே பெரும்பாலான புரதச்சத்துக்களை பெறுகின்றனர். சைவ உணவிலும் அதிக புரதச்சத்துக்கள் உள்ளன. பயறு வகைகளை சமைத்து உண்பதை விட, அவற்றை ஊறவைத்து முளைகட்டிய தானியமாக பச்சையாக சாப்பிட்டால், அசைவத்திற்கு
இணையான அதிக புரதச்சத்துக்களை குறைந்த செலவில் பெறலாம். கீரை, காய்கறிகளை உணவில் அதிகம் சேர்த்துக் கொள்ள வேண்டும். பயறு வகைகள் மட்டுமல்ல... கம்பு, கேழ்வரகையும் முளைகட்டி பச்சையாக சாப்பிடலாம். நம் பாரம்பரிய அறிவையும், உணவையும் மீட்டெடுத்து உபயோகிக்க ஆரம்பித்தால்... பின்னால் வரக்கூடிய பலவித நோய்களின் பிடியிலிருந்து நம் சமுதாயத்தைக் காக்கலாம். இயற்கை உணவே இனியஉணவு; இதுவே உன்னதமான உயிர் உணவு. உடல்நலத்தைப் பாதிக்கும் உணவுகளை கைவிட்டு உன்னதமான நன்மை பயக்கும் உணவுகளைத் தேடி, நாம் வந்த வழியிலேயே திரும்பிச் செல்வோம். இழந்த ஆரோக்கியத்தை மீண்டும் பெறுவோம்.

-சி.பார்வதி, விரிவாக்கத்துறை தலைவர், மனையியல் கல்லூரி,
விவசாயக் கல்லூரி வளாகம், மதுரை, 94422 19710.
லேன்ட்ஸ்கேப் ஆர்கிடெக்ட்

லேன்ட்ஸ்கேப் ஆர்கிடெக்ட் என்பவர், ஒரு இட அமைப்பையோ, தோட்டத்தையோ அல்லது ஏதேனும் ஒரு தனிப்பயன் இடத்தையோ உருவாக்குவதற்கு திட்டமிடுதல், வடிவமைத்தல் மற்றும் இயக்குதல் உள்ளிட்ட பல நடவடிக்கைகளில் ஈடுபடுகிறார். இதுதொடர்பான ஒரு தொழில்முறை செயல்பாடு லேன்ட்ஸ்கேப் ஆர்கிடெக்சர் எனப்படுகிறது.
அதேசமயம், லேன்ட்ஸ்கேப் டிசைனர் என்ற ஒரு வார்த்தையும் உள்ளது. அதாவது, Landscape architect -ஆக செயல்படுவதற்கு சரியான அங்கீகாரமோ அல்லது உரிமமோ(licence) பெறாதவர்கள், Landscape designer என்று அழைக்கப்படுகிறார்கள்.

மேலும், Landscape architecture தொழிலில் ஈடுபடுவதற்கான முறையான அங்கீகாரத்தை இன்னும் பெறாதவர்கள், தங்களை, தோட்டக் கலைஞர்கள், செடி உருவாக்க வடிவமைப்பாளர்கள், சுற்றுச்சூழல் வடிவமைப்பாளர்கள் அல்லது பயன்பாட்டு இடவமைப்பு திட்டமிடுநர்கள் என்ற பல்வேறு பெயர்களில் அழைத்துக் கொள்கிறார்கள்.

லேன்ட்ஸ்கேப் ஆர்கிடெக்டின் பணி என்ன?
ஒரு குறிப்பிட்ட தோட்டமாக இருந்தாலும்சரி, குறிப்பிட்ட பயன்பாட்டு இடஅமைப்பாக இருந்தாலும் சரி, லேன்ட்ஸ்கேப் ஆர்கிடெக்ட், படைப்பாக்க அறிவைப் பெற்றவராக இருக்கிறார். ஒரு காலகட்டத்தில், ஒரு பயன்பாட்டு இடவமைப்பு (landscape) எவ்வாறு காட்சித்தர வேண்டும் மற்றும் எதிர்வரும் காலங்களில், அந்த பயன்பாட்டு இடவமைப்பு எவ்வாறு மேம்பட்டு, மாற்றமடைய வேண்டும் என்பது குறித்தான நடவடிக்கைகளை அவர் கையாள்கிறார். இதுதொடர்பான திட்டமிடுதல்கள், வடிவமைப்புகள் மற்றும் அவற்றை நடைமுறைப்படுத்தும் வழிமுறைகள் ஆகிய அனைத்தையும் லேன்ட்ஸ்கேப் ஆர்கிடெக்ட்தான் முடிவு செய்கிறார்.

பொறுப்புகள் மற்றும் பணிகள்
* புராஜெக்ட் பற்றி வாடிக்கையாளரிடம் உரையாடுதல்
* பணி மேற்கொள்ளப்படக்கூடிய பகுதியில் இருக்கின்ற இயற்கை வளங்கள், அம்சங்கள், உயிரினங்கள் மற்றும் தாவரங்கள் ஆகியவற்றை கண்டறிதல்
* திட்டங்களை உருவாக்க, CAD போன்ற தொழில்நுட்பங்களைப் பயன்படுத்துதல்
* மக்கள் குழுவினருக்கான அறிக்கை எழுதுதல் மற்றும் பிரசன்டேஷன்களை அளித்தல்
* திட்டங்களுக்கான செலவினங்களை மதிப்பிட்டு, அதை மேற்பார்வையிடல்
* ஒரு பயன்பாட்டு இடவமைப்பிற்கு பொருத்தமான மற்றும் தேவையான மரங்கள், செடிகள் மற்றும் அழகு தாவரங்கள் ஆகியவற்றை தேர்வு செய்தல்
* ஒரு பயன்பாட்டு இடவமைப்பிற்கு, மாற்றுத் திறனாளிகள் போன்ற மனிதர்கள் எந்தளவிற்கு எளிதாக வந்துசெல்ல முடியும் என்பது குறித்தான அம்சங்களை உறுதிசெய்தல்
* ஒரு பயன்பாட்டு இடவமைப்பை(landscape) ஏற்படுத்துவதற்கான செலவினங்கள், அப்பணி முடிந்தபிறகு, பராமரிப்பிற்கு எவ்வளவு செலவாகும் என்பன போன்ற விபரங்களை, வாடிக்கையாளர்களுக்கு, கவுன்சில் கமிட்டிகளுக்கு, உள்ளூர் மக்களுக்கு மற்றும் பொது விசாரணைகளில் சமர்ப்பித்தல்.

விரிவான தயாரிப்பு மற்றும் மேற்பார்வை
ஒரு பயன்பாட்டு இடவமைப்பை அமைப்பதற்கு திட்டமிட்டு, அதற்கான செலவு மதிப்பீடு மற்றும் உருவாக்கத்திற்கான ஏற்பாட்டுப் பணிகள் அனைத்தையும் முடிவுசெய்து, வாடிக்கையாளரிடம் விபரம் சமர்ப்பித்து, பணிகளை தொடங்கிய பிறகு, தேவையான சமயங்களில் பணி நடைபெறும் இடத்திற்கு சென்று, திட்டமிட்டபடி எல்லாம் நடக்கிறதா என்று உறுதிசெய்ய வேண்டும்.

இப்பணிக்கு தேவைப்படும் திறன்கள்
* பல்வேறான விருப்பங்கள் மற்றும் தேவைகளை கருத்தில்கொண்டு, ஒரு புதிய தீர்வை கண்டுபிடிக்கும் திறன்
* நல்ல தகவல்தொடர்பு திறன்
* நல்ல வடிவமைப்புத் திறன்
* சுற்றுச்சூழல் பாதுகாப்பு, சிவில் இன்ஜினியரிங், சர்வேயிங், மண்ணியல், தோட்டக்கலை மற்றும் புவி நகர்வு நுட்பங்கள் ஆகியவைப் பற்றி தேவையான அறிவுத்திறன்
* நல்ல பேரம் பேசும் திறன்
* நல்ல குழுப்பணித் திறன்
* நல்ல கணிப்பொறித் திறன்
* வெளிப்பார்வை இடவமைப்பை சிறப்பாக பயன்படுத்தக்கூடிய ஆர்வம்

இத்துறையில் நுழைதல்
பெரும்பாலான லேன்ட்ஸ்கேப் ஆர்கிடெக்டுகள், லேன்ட்ஸ்கேப் கல்வி நிறுவனத்தால் (LI - Landscape Institute) அங்கீகரிக்கப்பட்ட இளநிலை அல்லது முதுநிலை பட்டத் தகுதியைக் கொண்டிருக்கிறார்கள்.
படிப்பை நிறைவுசெய்த பின்னர், LI -ல் அசோசியேட் உறுப்பினராக ஆகலாம். அதேசமயம், இதில் உறுப்பினராகும் ஒரு முதிர்ந்த உறுப்பினருக்கு, கட்டடக்கலை, தோட்டக்கலை மற்றும் வனவளம் ஆகிய துறைகளில் பெற்றிருக்கும் அனுபவம் மதிப்புத் தருவதாக அமையும்.
அசோசியேட் உறுப்பினர் ஆனவுடன், chartered landscape architect என்ற நிலையை அடைய, குறைந்தபட்சம் 2 ஆண்டுகள் ஆகும். அதற்கென சில விதிமுறைகள் உள்ளன. ஆனால், அந்த நிலையை அடைந்த ஒருவர், தனது துறைசார்ந்த அறிவை இடைவிடாமல் மேம்படுத்திக் கொள்ள, CPD எனப்படும் தொடர்ச்சியான நிபுணத்துவ மேம்பாட்டை மேற்கொள்ள வேண்டியிருக்கும்.

லேன்ட்ஸ்கேப் ஆர்கிடெக்ட் ஆவதற்கு எங்கே படிக்கலாம்?
* ஸ்கூல் ஆப் பிளானிங் அன்ட் ஆர்கிடெக்சர்
* சண்டிகர் காலேஜ் ஆப் ஆர்கிடெக்சர்
* சர் ஜே.ஜே. காலேஜ் ஆப் ஆர்கிடெக்சர்
* பெங்கால் பொறியியல் கல்லூரி
* ஜாதவ்பூர் பல்கலை
* டி.வி.பி. ஸ்கூல் ஆப் ஹேபிடட் ஸ்டடீஸ்
* ஐ.ஐ.டி., காரக்பூர்
* ஐ.ஐ.டி., ரூர்கி
* சென்டர் பார் என்விரான்மென்டல் பிளானிங் மற்றும் தொழில்நுட்பம்
* ராய் பல்கலை, ராய்ப்பூர்

படிப்பு விபரங்கள்
லேன்ட்ஸ்கேப் ஆர்கிடெக்சர்
பிளான்ட்ஸ் அன்ட் டிசைன்
நேச்சுரல் சயின்சஸ்
லேன்ட்ஸ்கேப் டெக்னாலஜி I
லேன்ட்ஸ்கேப் டிசைன் ஸ்டுடியோ I
செமஸ்டர் II
தியரி ஆப் லேன்ட்ஸ்கேப் ஆர்கிடெக்சர் II
ரீஜினல் லேன்ட்ஸ்கேப் பிளானிங்
லேன்ட்ஸ்கேப் டெக்னாலஜி II
லேன்ட்ஸ்கேப் புரபஷனல் பிராக்டிஸ்
லேன்ட்ஸ்கேப் டிசைன் ஸ்டுடியோ II
செமஸ்டர் III
ரிசர்ச் பேப்பர்
லேன்ட்ஸ்கேப் மேனேஜ்மென்ட்
லேன்ட்ஸ்கேப் டிசைன் ஸ்டுடியோ III
செமஸ்டர் I
லேன்ட்ஸ்கேப் கன்சர்வேஷன்
என்விரான்மென்டல் லெஜிஸ்லேஷன் அன்ட் எகனாமிக்ஸ்
டிசர்டேஷன்
புரபஷனல் டிரெய்னிங்

எதிர்கால வாய்ப்புகள்
நன்றாக யோசித்து, ஒரு தெளிவான நோக்கத்துடன் தேர்வு செய்யப்படும் எந்த துறையும், ஒருவருக்கு நிச்சயம் வெற்றியையே தரும். லேன்ட்ஸ்கேப் வடிவமைப்பு என்பது அனைவருக்குமே ஒத்துவரக்கூடிய துறையாக இருக்க முடியாது.
இத்துறை தொடர்பான நல்ல அகப்பார்வை மற்றும் திறன் கொண்டவர்களே, இதில் வெற்றிக்கொடி நாட்டுகிறார்கள். சுற்றுச்சூழல் கெடாத வகையிலும், மக்கள் சிரமமின்றி பயன்படுத்தும் வகையிலும், ஒருவர் தனது படைப்பாற்றலை பயன்படுத்தி, லேன்ட்ஸ்கேப் வடிவமைப்பு பணியை மேற்கொள்ள வேண்டும்.
லேன்ட்ஸ்கேப் வடிவமைப்பு என்பது பார்ப்பவரை கவரும் வகையில் அமைதல் முக்கியம். எனவே, நாம் மேற்சொன்ன திறன்களும், மனப்பாங்குகளும், ஆர்வமும் உங்களுக்கு இருக்கிறது என்று நீங்கள் உறுதியாக நம்பினால், இத்துறையில் தாராளமாக மூழ்கலாம்.
உலக மன நல தினம்

மனநோய் என்றாலே அடிப்பதும், கடிப்பதும், தெருவில் ஓடுவதும் தான் என்ற எண்ணத்தை, மக்கள் மனதில் முத்திரையாக குத்தியுள்ளனர். இதை தீவிர மனநோய், மனச்சிதைவு நோய் (சிசோபெர்னியா) என்பர். இந்த ஆண்டு, உலக சுகாதார நிறுவனத்தின் உலக மனநல தினத்திற்கான மந்திர வார்த்தை... 'மனச்சிதைவு நோயுடன் வாழ்வது' குறித்து தான்.தன்னுணர்வின்றி தெருவில் திரிவதோ, குழப்பமான மன நிலையோ தான் இதற்கு காரணம்.

எல்லா மனநோய்களையும் இந்த வகையில் சேர்க்கமுடியாது. உலகம் முழுவதிலுமே இந்நோயால் பாதிக்கப்பட்டவர்கள் ௧ சதவீதம் பேர் உள்ளனர். தமிழகத்திலும் இதே சதவீதம் பேர் உள்ளனர். கஞ்சா புகைப்பவர்களுக்கு மூளையில் செயற்கை ரசாயனம் சுரப்பதால், மனச்சிதைவு நோய் ஏற்படும் வாய்ப்பு அதிகம். இது நோயை நாமே விரும்பி வரவழைப்பதற்கு சமம்.மனநோயைப் பொறுத்தவரை உடல் நோய்களைப் போலவே மிதமான நோய், தீவிரமான நோயாக பிரிக்கலாம். மனப்பதட்டம், மனச்சோர்வு போன்ற மிதமான மனநோய்களுக்கு 'கவுன்சிலிங்' மூலமும், மாத்திரைகளின் மூலமும் எளிதில் குணப்படுத்தலாம்.

தனிமையைத் தேடும்: மனச்சிதைவு நோய்க்கு காரணம், மூளையில் ஏற்படும் ரசாயன மாற்றம் தான். மூளையில் சுரக்கும் 'டோப்பமின்' ரசாயனம் சமநிலையின்றி குறையும் போதோ, அதிகமாகும் போதோ சிக்கல் வருகிறது. ரசாயனம் குறையும் போது எதிர்மறையான சிந்தனைகள் ஏற்படுகின்றன. எதிலும் நாட்டமில்லாத நிலை, ஆர்வமற்ற நிலை, தனிமையை விரும்புவது, குறிக்கோள் இன்றி இருப்பது, தன்னைத் தானே கவனித்துக் கொள்ளாமல் இருப்பது போன்றிருப்பர்.

மாயக்குரல் கேட்குதே : 'டோப்பமின்' ரசாயனம் அதிகரிக்கும் போது வேறுவிதமான பிரச்னைகள் ஏற்படும். காதில் யாரோ பேசுவது போலவும், சத்தம் போடுவது, திட்டுவது போன்று உணர்வர். யாரோ தன்னைப் பின்தொடர்வது போன்று நினைப்பர். செய்வினை வைத்துள்ளதாக பயப்படுவர். தெருவில் செல்பவர்கள் தன்னைப் பற்றி தான் பேசுகின்றனர் என தவறாக நினைப்பர். கணவன், மனைவிக்குள் சந்தேகம் அதிகமாவதும் இதனால் தான். யாரோ பேசுவது போல உணர்ந்து தனக்குத் தானே பேசிக் கொள்வர்.
இரையாகும் விடலைப்பருவம்: தாயின் கருவில் இருக்கும் போது வைரஸ் தாக்குதல், சத்தான உணவு எடுத்துக் கொள்ளாதது போன்றவையும் காரணமாக இருக்கலாம். ஆனால் இதுதான் காரணம் என்று சொல்லமுடியாது.
கருவிலேயே இப்பிரச்னை ஆரம்பித்து விடும் என்றாலும் மழலைப் பருவத்தில் வெளியே தெரியாது. அமைதியான ஆட்கொல்லி போல, வளர்இளம் பருவம் வரும் போது தன் வேலையை காண்பித்து விடும்.
ஆண்களுக்கு 16 முதல்18 வயதில் இப்பிரச்னை ஆரம்பிக்கிறது. 'என் மகன் பத்தாவதில் நன்றாக படித்தான். நிறைய மார்க் எடுத்தான். பிளஸ்௨ வில் படிக்க மாட்றான். பேச மாட்றான். தனியாவே இருக்கான்' என்று சொல்லி, 'கவுன்சிலிங்' வருபவர்கள் அதிகம். உண்மையில் இதற்கு 'கவுன்சிலிங்' மட்டுமே சிகிச்சை அல்ல.

பேய் கோளாறா : பெண்களுக்கு 25 வயதிலும், சிலநேரங்களில் அதற்கு முன்பாகவும் இப்பிரச்னை வரும். அதனால் தான் திருமணமான பெண்களுக்கு, 'கல்யாணத்துக்கு முன்னால் நல்லாத் தான் இருந்தா... இப்பத்தான் இப்படி ஆயிட்டா' என்று சொல்வதைக் கேட்டிருப்போம். இதை பேய் கோளாறு, எங்கேயோ போய் பயந்துட்டா... செய்வினைக் கோளாறு என்று தவறாக சொல்கின்றனர்.

100 நோயாளிகளில் 50௦ பேரே சிகிச்சைக்கு வருகின்றனர். அதுவும் முற்றிய நிலையில் வருகின்றனர். குடும்பத்தினரை அடித்தாலோ, காயப்படுத்தினாலோ, துாங்கவிடாமல் தொந்தரவு செய்தால் தான் மனநோய் என்று நினைக்கின்றனர்.

அமைதியே ஆபத்து :ஆனால் யாரையும் தொந்தரவு செய்யாமல், யாரிடமும் பேசாமல் அமைதியாக இருந்தால் கண்டு கொள்வதில்லை. இதுதான் ஆபத்தான நிலையின் துவக்கம். இந்த நிலையில் உடனடியாக மருத்துவ சிகிச்சை அளிப்பதே நல்லது.

ஆணோ, பெண்ணோ ஆரம்ப கட்டத்திலேயே சிகிச்சை பெறவந்தால் மூளையின் ரசாயன மாற்றத்தை மருந்துகளின் மூலம் சரிசெய்யலாம். முற்றிய நிலையில் குணப்படுத்தமுடியாது. நோயின் தீவிரத்தை கட்டுப்படுத்த முடியும்.

பெற்றோரில் யாருக்காவது ஒருவருக்கு இப்பிரச்னை இருந்தால் மரபணு ரீதியாக வருவதற்கு வாய்ப்பு உண்டு. இருவருக்குமே இருந்தால், பிறக்கும் குழந்தைகளும் 50௦ சதவீதம் பாதிக்கப்பட வாய்ப்புண்டு.நோய் முற்றிய பின் அவர்களை புறக்கணிக்கும் போது தான் வீதியில் நடை பிணங்களாக உலாவுகின்றனர். அவர்களும் நம்மைப் போல மனிதர்களாக வாழ... ஆரம்பநிலையிலேயே மனநோயைக் கண்டறிவோம்... மனநிம்மதியுடன் வாழ வழிசெய்வோம்.
-டாக்டர் ஜி.ராமானுஜம், மனநல பேராசிரியர்,அரசு மருத்துவக் கல்லுாரி, திருநெல்வேலி.
குடும்ப கோர்ட்கள்

பத்து லட்சத்திற்கும் அதிகமான மக்கள் தொகை கொண்ட ஒரு நகரம் அல்லது இடத்தில் குடும்ப கோர்ட்டை மாநில அரசு அமைக்கிறது. சட்டப்பூர்வமான பிரிவு, விவாகரத்து, திருமணத்தை ரத்து செய்தல், மறுவிவாகம், ஜீவனாம்சம், தத்து எடுத்தல், தந்தை உரிமை பரிசோதனை, மைனர் உறவு முதலிய குடும்பம் சார்ந்த விஷயங்கள் குடும்ப கோர்ட்டிற்கு கீழ் வரும். குடும்ப கோர்ட் நீதிபதிகள் நியமனத்தில் பெண்களுக்கு முன்னுரிமை உண்டு. குடும்ப கோர்ட்டில் கவுன்சிலர்கள் எனப்படும் உதவி செய்யும் ஆலோசகர்கள் முக்கியத்துவம் பெறுகின்றனர்.