Thursday, October 23, 2014

அரிய பொக்கிஷங்கள் : களஞ்சியங்கள்

ஆன்ட்ராய்டு போனும் கையுமாக அலையும் இன்றைய இளைய தலைமுறையினர், 'வாட்ஸ் அப்'பில் தகவல் பரிமாறி; பேஸ் புக்கில் லைக் போட்டு; மதியம் பீட்சாவும், பர்கரும் கடித்து ருசித்து; நடுநிசி வரை கொண்டாட்டங்களில் களித்து; வார இறுதியில் 'அவுட்டிங்' சென்று... என, இன்றைய நவீன உலகின் வசதி, வாய்ப்புகளை அனுபவித்து லயிக்கின்றனர்.
நாம் இந்நிலைக்கு வரும் வரை தந்தை, தாத்தா, பாட்டன், பூட்டன்களுக்கு சோறு போட்டு தலைமுறைகளை காப்பாற்றிய, அக்கால விவசாயிகள், எந்த மாதிரியான வாழ்க்கை வாழ்ந்தனர்; அப்போது, என்ன வசதிகள் இருந்தன என்பதையும் அறிந்து கொள்வது அவசியம்...நம் முன்னோர்கள் பயன்படுத்தி வந்த எத்தனையோ பொருட்கள், காலமாற்றத்தால் மறைந்துவிட்டன. இயற்கையோடு இழையோடிய வாழ்க்கை முறைகள், பருவம் கண்டுபயிர் செய்த வானவியல் அறிவு, பஞ்சம், வெள்ளம் போன்ற இயற்கை சீற்றங்களிலிருந்து உழவுத்தொழிலை காக்க, விதைகளை கோவில் கலசங்களில் பாதுகாத்து வைத்த அறிவு கூர்மை ஆகியவை, இந்திய விவசாயத்தை இன்னும் உயிர்ப்புடன் வைத்திருக்கின்றன. ஒரு காலத்தில் பொள்ளாச்சி, ஆனைமலைப்பகுதி, கோவை மாவட்டத்தின் நெற்களஞ்சியமாக திகழ்ந்தது. மாடு கட்டி போர் அடித்தால் மாளாது என்று, யானைக்கட்டி போர் அடித்த பகுதி இது என பெருமை பேசப்படுகிறது.

சேமிப்புக் கிடங்குகள்:

விதை தேவைக்காகவும், வீட்டு உபயோகத்திற்காகவும் தானியங்களை பாதுகாத்து வைக்க, நம் முன்னோர்கள் பல வழிமுறைகளை பின்பற்றினர். அவற்றில் குதிர், கோட்டை, மதங்கு, பத்தாயம், சோளக்குழி ஆகியவை முக்கியமானவை.விவசாயம் மட்டுமே தெரிந்த அந்த காலகட்டத்தில், ஆனைமலை பகுதியில் 50 ஆண்டுகளுக்கு முன்பு தென்னை விவசாயம் பெரிதாக நடைபெறவில்லை. பழைய ஆயக்கட்டு பகுதிகளில், நெல்சாகுபடியும், மானாவாரி விவசாயமாக சோளம், நிலக்கடலை, கம்பு மற்றும் ராகி, போன்ற சிறுதானியங்களும் அதிகம் சாகுபடி செய்யப்பட்டன. அறுவடைக்குப்பின் நெல்லை பாதுகாக்க குதிர்களும், சோளத்தை பாதுகாக்க சோளக்குழிகளும், மதங்குகளும் பயன்பாட்டில் இருந்தன.

விதை பாதுகாப்பு:

விதை நெல் தேவைக்கு யாரையும் சாராமல் இருக்க, நமது முன்னோர்கள் அறுவடைக்குப்பின், நன்கு உலர்த்தப்பட்ட பயிர்களை, வீடுகளில் உள்ள குதிர்களில் சேமித்து வைத்திருந்தனர். குதிரின் அளவு இடத்திற்கு இடம் மாறுபடுகிறது. இந்த பகுதியில் உள்ள குதிர்கள் 4 முதல் 6 அடி உயரமும் 2 அடி வரை விட்டமும் கொண்டது. 'எங்கப்பன் குதிருக்குள் இல்லை' என்ற பழமொழியைக் கொண்டே ஒரு மனிதன் ஒளிந்து கொள்ளும் அளவிற்கு, அளவில் பெரிதாக இந்த மண்பானை குதிர்கள் இருந்துள்ளதை அறிந்து கொள்ளலாம்.

சோளக்குழி:

நிலத்தின் அடியில் அமைக்கப்பட்ட சேமிப்புக் கிடங்கு 'சோளக்குழி' என்றும், தரைமட்டத்திற்கு மேல் அமைக்கப்பட்ட கிடங்கு 'மதங்கு' எனவும் அழைக்கப்பட்டது. வீட்டின் முன்புறம் அல்லது கொல்லைப்புறத்தில், இந்த சேமிப்பு கிடங்குகள் அமைக்கப்பட்டிருந்தன. எட்டு அடி ஆழம் அல்லது உயரம், 5 அடி நீளம், அகலம் கொண்டே பெரும்பாலான சோளக்குழிகள் அமைக்கப்பட்டன. கற்கள் மற்றும் சுண்ணாம்பு அல்லது மண் கலவை கொண்டோ இது அமைக்கப்பட்டிருக்கும். இதன் அடிப்பகுதி பெருத்தும், வாயிற்பகுதி குறுகியும் காணப்படும்.தானியங்களை சேமிக்கும் போது, பூச்சிகள் வராமல் இருக்க நொச்சி, புங்கன், வேப்பிலை இலைகள் தானியங்களுடன் கலந்து வைக்கப்படும். இதனால் அவற்றின் முளைப்புத்திறனும் கெட்டுப்போகாமல் இருக்கும்.

மதங்கு:

எட்டடி உயரத்திற்கு சுண்ணாம்பு, ஓடைக்கற்கள், கருங்கல் ஆகியவற்றை கொண்டு வட்டவடிவில், சுற்றளவு அடிப்புறத்தில் அதிகரித்தும் மேற்பகுதி குறுகியும் கட்டப்பட்டதே மதங்கு. உள்ளே சுண்ணாம்புக்கலவை கொண்டு பூசப்பட்டு, சாணியால் மெழுகப்பட்டிருக்கும். உள்ளே உணவு தானியங்கள் கொட்டப்பட்டு, அதன் வாயிற்பகுதி பலகை கல் கொண்டு அடைத்து, சுண்ணாம்பு கலவை பூசப்பட்டு இருக்கும். தேவைப்படும் பொழுது ஏணியை பயன்படுத்தி, உள்ளே இறங்கி தானியங்களை எடுத்து பயன்படுத்துவார்கள்.ஒவ்வொரு போகமும் நெல் அறுவடை தொடங்கும் போது, விதைக்கான நெற்கதிர்களை அடையாளம் கண்டு அவற்றை தனியாக அறுவடை செய்து உலர்த்தி பதப்படுத்துவார்கள். அந்த நெல்லை அடுத்த பருவத்திற்காக பக்குவபடுத்தி வைக்கும் சேமிப்பு கிடங்குதான் குதிர்களும், மோடாக்கள் என அழைக்கப்படும் கூன்களும் ஆகும். இவைகள் எல்லாம் தற்போது வழக்கத்தில் இல்லை.

'பாரம்பரியத்தை மறக்காதீர்':

ஆனைமலை பகுதி விவசாயிகள் சிலர் கூறியதாவது: விவசாயத்தில் பூச்சிக்கொல்லி மருந்துகளை பயன்படுத்தி, விதை நேர்த்தி செய்யும் பழக்கம் அக்காலத்தில் இல்லை. தற்போது விதை நெல் முதல் உணவு வரை அனைத்தும் பாக்கெட்டில் அடைத்து விற்கப்படுகிறது. பாரம்பரியத்தை மறந்து, பன்னாட்டு விதை கம்பெனிகளை நோக்கி கையேந்தாத வரைதான், நம் நாட்டில் வேளாண்மை உயிர்ப்புடன் இருக்கும்.பாரம்பரிய தொழில்நுட்பங்களை மறந்தால், 'ஊரான் ஊரான் தோட்டத்திலே, ஒருத்தன் போட்டானாம் வெள்ளரிக்கா; காசுக்கு ரெண்டு விக்க சொல்லி கடுதாசி போட்டானாம் வெள்ளக்காரன்' என்ற விடுதலை போராட்ட கால பாடலை, மீண்டும் பாட வேண்டிய சூழல் ஏற்பட்டு விடும்.இவ்வாறு, விவசாயிகள் தெரிவித்தனர்.

No comments:

Post a Comment