Monday, January 28, 2013


வீரமும், விவேகமும் நிறைந்த ஜல்லிக்கட்டின் கதை:



தாவணி, தலை நிறைய பூ, மார்கழி மாத கோலம், விருந்தோம்பல் என்று நீர்த்து போய்விட்ட எத்தனையோ நம் தமிழர் பண்பாட்டில் இன்னமும் வீரத்துடனும், ஈரத்துடனும், தீரத்துடனும் நீர்தது போகாமல் இருப்பது நமது ஜல்லிக்கட்டு ஒன்றுதான்.
தமிழர்வீரத்தின் முக்கிய அடையாளமான இந்த ஜல்லிக்கட்டுக்கு எங்கே தடைவருமோ என்ற பயத்தை, சமீபத்தில் உச்சநீதிமன்றம் உடைத்து எறிந்துள்ளது. இதனால் தடை பல கடந்து , பொங்கல் திருநாளில் துள்ளிக் குதித்தபடி களம் காண தயராகிவருகிறது ஜல்லிக்கட்டு.
நாகரீக ஓட்டத்தில் கலை, கலாச்சாரம் என ஒவ்வொன்றாய் இழந்துவரும் நேரத்தில், ஜல்லிக்கட்டு போன்ற வெகு சில விஷயங்களே நம் பழங்கால பராம்பரியத்தின் மிச்சமாய் நம்மிடம் இருக்கின்றது. இதனால் அலங்கநல்லூர், பாலமேடு, அவனியாபுரம் துவங்கி திருச்சி, புதுக்கோட்டை, சிராவயல் வரையிலான கிராம மக்கள் இழந்த பொக்கிஷத்தை மீட்டெடுத்த மகிழ்ச்சியில் திளைத்துள்ளனர். மீசையை முறுக்கியபடி காளையர்களும், திமில்களை சிலுப்பியபடி "காளைகளும்' களம் காண ஆர்வத்துடன் பயிற்சியில் இறங்கியுள்ளனர்.

ஜல்லிக்கட்டின் வீர வரலாறு:

ஜல்லிக்கட்டின் வீர வரலாறு கி.மு.2000லேயே தொடங்குகிறது, ஏன் அதற்கு முன்பாக கூட இருக்கலாம் என்பது தொல்லியல் அறிஞர்களின் கருத்து, காரணம் டில்லியில் உள்ள தேசிய ஆவண காப்பாகத்தில் பாதுகாக்கப்படும் சிந்துவெளி நாகரிகத்தை சொல்லும் ஒரு கல்லில், காளையை அடக்கும் வீரன் உருவம் பொறித்துள்ளதை எப்போதும் பார்க்கலாம். தெய்வத்திற்கு நிகராக மதுரை மாவட்டம் பொந்துகம்பட்டி கிராம மக்கள் இறந்து போன தங்கள் கிராம ஜல்லிக்கட்டு காளையின் நினைவாக, அதற்கு சிலை வைத்து வணங்குவதை இப்போதும் பார்க்கலாம்.
சங்க இலக்கியம் துவங்கி சென்னையின் புத்தக சந்தை இலக்கியம் வரை ஜல்லிக்கட்டின் காவியம் சொல்லும் கதைகளும், கவிதைகளும், கட்டுரைகளும் எத்தனை, எத்தனையோ. சல்லிக்காசு புழக்கத்தில் இருந்த போது மாடுகளின் கொம்புகளில் கொத்தாக கட்டிவிடப்படும் சல்லிக்காசுகள் மாடுபிடிப்பவர்களுக்கு சொந்தமான காலத்தில் சல்லிக்கட்டு என்று அழைக்கப்பட்டு பின் அந்த வார்த்தையே காலப்போக்கில் ஜல்லிக்கட்டாகியுள்ளதாகவும் ஒரு கருத்து உண்டு.

இலக்கிச் சான்று:

பாய்ந்துவரும் காளையின் கொம்புகளைக் கண்டு, கொஞ்சமும் அஞ்சாமல் பாய்ந்து பிடித்து அடக்கி மடக்காதவனை இந்த பிறவியில் மட்டுமல்ல, எந்த பிறவியிலும் ஒரு பெண் ஏறெடுத்தும் பார்க்கமாட்டாள் என்ற அர்த்தத்தில் பாடப்பட்ட "கொல்லேற்றுக் கோடஞ்சுவானை மறுமையும் புல்லாளே ஆயமகள் துல்லிச்சுட்டு வேண்டும்' என்ற ஒரு கலித்தொகை பாடல் ஒன்று போதாது இதன் பெருமை பேச.
ஏறு தழுவும் வீரர்களை உற்சாகப்படுத்த பெண்கள் பாடும் பாடல்கள்தான் எத்தனை? எழுந்தது துகள்; ஏற்றனர் மார்பு; கவிழ்ந்தன மருப்பு; கலங்கினர் பலர்' என்ற முல்லைக்கலி பாடலை படித்தால் போதும் கயிற்றுக்கட்டிலில் படுத்துக்கிடக்கும் தொண்டுக்கிழவர் கூட வேட்டியை மடித்துகட்டிக்கொண்டு முண்டா தட்டிக்கிளம்பிவிடுவாரே.
1959
ம் ஆண்டு சி.சு.செல்லப்பா எழுதி வெளியான வாடிவாசல் புத்தகம் ஒன்றை வாசித்தால் போதும், இது வீரமான விளையாட்டு மட்டுமல்ல எவ்வளவு விவேகமான விளையாட்டு என்பது புரிபடும்.


தீவிர பயிற்சி:

காளைகள் சத்தான உணவு சாப்பிட்டு, தண்ணியில் நீந்தி, கோபத்தோடு மண்மேடு, பொம்மை மனிதனை முட்டி பயிற்சி எடுத்துக்கொண்டு இருக்கிறது. வீரர்களும் ஏழு கிலோ மீட்டர் தூரத்திற்கு ஒட்டப்பயிற்சி, மூச்சுப்பயிற்சி எடுத்துக் கொண்டு இருக்கிறார்கள்.
இந்திய விலங்கு நல வாரியம், நீலச்சிலுவை சங்கத்தை சார்ந்த விலங்கு நல ஆர்வலர்களே உங்களது எண்ணம், பொதுவாக தூய்மையானதுதான், பணத்திற்காக பகல், இரவாக சர்க்கசில் வதைபடும் மிருகங்களை காப்பாற்றிய அரும்பணி உங்களுடையது, ஆனால் அந்த அளவுகோலை தமிழர்களின் ஜல்லிக்கட்டிற்கு இனியும் பயன்படுத்தாதீர்கள் என்பதுதான் ஜல்லிக்கட்டு ஆர்வலர்களின் வாதம், வேண்டுகோள் எல்லாம்.
ஸ்பெயின், போர்ச்சுகல், மெக்சிகோ போன்ற மேலை நாடுகளில் இப்போதும் அந்நாட்டின் தேசிய விளையாட்டு "புல் பைட்' எனப்படும் காளைப்போர்தான். அரங்கில் ஆவேசத்துடன் திறந்து விடப்படும் காளையை, பல வகையில் ஆத்திரமூட்டி, கதறக்கதற அதன் உடம்பில் கத்தியை சொருகி கொல்வதில் உள்ள குரூரத்தில், ஒரு துளியளவு கூட நமது ஜல்லிக்கட்டில் கிடையாது.


ஜல்லிக்கட்டு காளையை கன்று பருவத்தில் இருந்தே பாராட்டி சீராட்டி வளர்க்கின்றனர், அதனை விவசாய காரியங்களில் ஈடுபடுத்துவது கிடையாது, கோயில் மாடாகவே வணங்கி வளர்ப்பார்கள். பச்சரிசி சாப்பாடு, தினசரி ஆற்றுக்குளியல், ஒட்டம், சீற்றம் என்று ஜல்லிக்கட்டிற்காக மாடு தயாராவது என்பது ஒரு தவம் போல நடைபெறுகிறது. அந்த மாடும் யாரிடமும் பிடிபடாமல் தனக்கும் தன் எஜமானனுக்கும், ஊருக்கும், பேரை வாங்கிவர வேண்டும், இவ்வளவு நாள் தன்னை வீட்டின் செல்லமாக வளர்த்தவர்களிடம், இனி செல்வமாக வளரவேண்டும் என்ற வைராக்கியத்துடனேயே மாடும் வளர்கிறது.

மற்றவர்களுக்கு வேண்டுமானால் அது வெறும் மாடாக இருக்கலாம்,ஆனால் கிராமத்து இளைஞர்களை பொறுத்தவரை அது "கோயில் மாடு'. ஆகவே ஐயப்பன் கோவிலுக்கு விரதம் இருப்பது போல சுத்த பத்தமாக இருந்துதான் மாடு பிடிக்கின்றனர். ஆகவே இதை இனியும் காட்டுமிராண்டித்தனமான விளையாட்டு என்று சொல்லாதீர்கள், அந்த சொல், இங்குள்ள இளைஞர்களின் மனதில் வேலாக பாய்ந்து ரணப்படுத்துகிறது.
ஊர் மக்களை காவு வாங்கிய காலரா என்ற கொடிய நோயில் இருந்து காப்பாற்றிய கிராமிய தெய்வத்திடம், வேண்டிக் கொண்டதற்கிணங்க நடத்தப்படும் வேண்டுதல் திருவிழா இது. இந்த விழாவினை நடத்தாவிட்டால் அந்த வருடம் எந்த விளைச்சலும் இருக்காது, மிஞ்சுவது எல்லாம் மன உளைச்சலாகத்தான் இருக்கும், இதனை நாங்கள் சில ஆண்டுகள் அனுபவித்து பார்த்து விட்டோம் என்கின்றனர்
ஒன்று நிச்சயமாகத் தெரிகிறது, பொங்கல் திருநாளையொட்டி நடத்தப்படும் இந்த ஜல்லிக்கட்டு ஊரோடு ஒன்றிவிட்ட கலாச்சாரம் மட்டுமல்ல, மக்களின் உணர்வோடு கலந்துவிட்ட விஷயமும் கூட.

கெட்டதிலும் நல்லது:

சில கெட்டதிலும் நல்லது இருக்கும் என்பது போல இந்த விஷயம் கோர்ட் வரை போனதிலும் பல நல்லது நடந்திருக்கிறது. எந்தவித கட்டுப்பாடும், கட்டுக்கோப்பும் இல்லாமல் நடத்தப்பட்டு வந்த ஜல்லிக்கட்டு இப்போது 77வித நிபந்தனைகளுடன் நடத்தப்படுகிறது. ஒரு மாட்டை நான்கு பேருக்கு மேல் மடக்கக்கூடாது, வீரர்களும், மாடுகளும் மருத்துவர் சான்றிதழ் பெற்ற பிறகே களம் இறங்கமுடியும், விளையாட்டு நடைபெறவும் மாடு ஓடவும் பாதைகள் நன்கு விடப்பட வேண்டும், சீருடை அணிந்தவர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவர், முழு விளையாட்டும் முறைப்படி நடந்தது என்பதற்கு ஆதாரமாக வீடியோ எடுக்கவேண்டும், காயம்பட்டவர்களுக்கு உடனடி மருத்துவ வசதி செய்யப்படுவதற்காக மருத்துவக்குழு தயராக இருக்க வேண்டும், எல்லாவற்றுக்கும் மேலாக வீரர்களுக்கும், மாடுகளுக்கும் ஆயுள்காப்பீடு செய்யப்படும் என்பதும் நல்ல விஷயங்கள். மாடு, மனிதன் என்ற இரண்டு உயிர்களும் சமமாக மதிக்கப்படும் விதத்தில், இந்த வீர விளையாட்டு நம் பண்பாட்டை, கலாச்சாரத்தை, வீரத்தை உலகிற்கு பறைசசாற்றும் விதமாக நல்லபடியாக நடக்கட்டும்.

இந்த வருடம் நடத்தலாம் என்று முன்பே அனுமதி கிடைத்துவிட்டதால் மனம் நிறைந்த உற்சாகத்தில் , ஜல்லிக்கட்டு அமைப்பாளர்கள் தங்கக்காசு, கட்டில், பீரோ இவற்றுடன் காலத்தின் வளர்ச்சிக்கேற்ப லேப்-டாப், டி.வி., ப்ரிட்ஜ் போன்றவைகளையும் மாடு பிடிக்கும் வீரர்களுக்கு பரிசாக அறிவித்து இருக்கிறார்கள்.

No comments:

Post a Comment