Monday, February 4, 2013

சிலம்பம்:

சிலம்ப விளையாட்டு கம்பு விளையாட்டென்றும், நெற்றிப்பொட்டுக் கம்பு விளையாட்டென்றும், உயில் சிலம்பு என்றும் அழைக்கப் படுகிறது. தமிழ்நாட்டில் சிலம்பம் என அழைக்கப்படும் இவ்வீர விளையாட்டு, மராட்டிய நாட்டில் லாட்டி என்றும், குஜராத்தில் டால்லக்கடி என்றும், வங்காள நாட்டில் லாடிகீலா என்றும், கர்நாடகாவில் தண்டா வரிசை என்றும், ஆந்திராவில் கரடி ஆட்டம் என்றும், கேரளாவில் நெடுவடி என்றும் அழைக்கப் படுகிறது. சிலம்புதல் என்றால் ஒலித்தல் என்று பொருளாகும். கையிலுள்ள கம்பினை அடித்து ஒலியெழுப்பி விளையாடப் பெறுவதால் இவ்விளையாட்டு சிலம்பு என்று பெயர் பெற்றது.சிலம்ப விளையாட்டு பயிற்சி நிறைந்த வீரவிளையாட்டு ஆகும். இதற்கான பயிற்சியைத் தருபவர் சிலம்ப வாத்தியார் என்றழைக்கப்படுகிறார். சிலம்ப வாத்தியார் நம்பிக்கையானவர்க்கு மட்டும் சிலம்ப விளையாட்டைக் கற்றுத் தருவார். இவ்வாறு ரகசியக்கலையாக சிலம்ப விளையாட்டு போற்றப்படுவதால், இவ்விளையாட்டு வளர்ச்சியடையவில்லை எனலாம். விளையாட்டில் ஈடுபடுவதற்கு நீளமான கம்பு வேண்டும். விளையாடுபவரின் உயரத்திற்களவாய்க் கம்பின் நீளம் இருக்கும். பெரும்பாலும் மூங்கில் கம்புகளையே பயன்படுத்துவர்.

கம்பு வீசுந்திறன், காலடி எடுத்து வைக்கும் முறை, வேகமாகச் செயல்படும் திறமை இம்மூன்றும் சிலம்ப விளையாட்டின் அடிப்படைக் கூறுகளாக உள்ளன. இக்கூறுகள் அனைத்தையும் கைவரப் பெற்றவர் 'வீடுகட்டுதல்' என்ற முறையில் தேர்ச்சி அடைந்தவராகிறார். பகைவர் கம்பு தன் உடல் மேல் படாத வண்ணம் தன் கம்புவீச்சுத் திறமையால் தடுத்தலை வீடுகட்டுதல் என்றும், கோட்டை கட்டுதல் என்றும் சொல்வர். விளையாட்டின் துவக்கத்தில் வணக்கம் செலுத்துதல் என்ற முறை உண்டு. முதலில் இறைவணக்கமும், அடுத்து குருவணக்கமும் இடம் பெறும். போட்டி விளையாட்டாக இருந்தால், எதிர்த்து விளையாடக் கூடியவர்க்கும் வணக்கம் செலுத்துவர். இது தமிழர் விளையாட்டின் சிறப்பு முறையாக வழங்கி வருகிறது.

எதிரியின் கம்பு தன் உடல் மேல் படாமல் தடுத்தல், தன்னுடைய கம்பினால் எதிரியின் உடலைத்தொடுதல் ஆகிய செயல்களைக் கொண்டு வெற்றி, தோல்வி நிர்ணயிக்கப்படுகிறது. கம்பின் நுனியில் வண்ணப் பொடியினைத் தடவியிருப்பர். சிலம்பம் போட்டியில் விளையாடுபவர்களின் உடலில் எத்தனைத் தடவைகள் கம்பின் நுனி பட்டிருக்கிறது என்பதனை வண்ணப் பொடியின் துணைக் கொண்டு கணக்கிட்டும் வெற்றி தோல்வியை நிர்ணயிப்பர். தமிழகத்தில் சிலம்ப விளையாட்டு தற்காப்பு கலையாகவும், வீரவிளையாட்டாகவும், விழாக் காலங்களில் கேளிக்கையாட்டமாகவும், பாடல்பாடியும் விளையாடப் பெறுகிறது.

No comments:

Post a Comment