Thursday, September 11, 2014

தமிழ் தந்த சித்தர்கள் : நம் உடலுக்கும் கால அட்டவணை உண்டு.

இதை நாம் முறையாகப் பின்பற்றினால் டாக்டரிடம் போக வேண்டிய அவசியமே இல்லை.


விடியற்காலை 3 முதல் 5 மணி வரை - நுரையீரல் நேரம். இந்த நேரத்தில் தியானம், மூச்சுப் பயிற்சி செய்தால் ஆயுள் நீடிக்கும்.

காலை 5 முதல் 7 வரை பெருங்குடல் நேரம். இந்த நேரத்தில் காலைக்கடன்களை முடிக்க வேண்டும். இதனால் மலச்சிக்கலே ஏற்படாது.

காலை 7 முதல் 9 வரை வயிற்றின் நேரம். இந்த நேரத்தில் சாப்பிடுவது நன்கு ஜீரணமாகும்.

காலை 9 முதல் 11 வரை மண்ணீரல் நேரம். வயிற்றில் விழும் உணவைச் செரிக்கச் செய்யும் நேரம். இந்த நேரத்தில் எதையும் சாப்பிடக் கூடாது. தண்ணீர் கூடக் குடிக்கக் கூடாது.

காலை 11 முதல் 1 வரை இதயத்தின் நேரம். இதய நோயாளிகள் கவனமாக இருக்க வேண்டிய நேரம். சத்தமாகப் பேசுதல், படபடத்தல், கோபப்படுதலை அறவே தவிர்க்க வேண்டும்.

பிற்பகல் 1 முதல் 3 வரை சிறுகுடல் நேரம். மிதமான சிற்றுண்டியுடன் ஓய்வு எடுக்க வேண்டும்.

பிற்பகல் 3 முதல் 5 வரை சிறுநீர்ப் பையின் நேரம். நீர்க்கழிவுகளை வெளியேற்றச் சிறந்த நேரம்.

மாலை 5 முதல் 7 வரை சிறுநீரகங்களின் நேரம். தியானம், இறைவழிபாடு செய்வதற்கு ஏற்றது.

இரவு 7 முதல் 9 வரை பெரிகார்டியத்தின் நேரம். பெரிகார்டியன் என்பது இதயத்தைச் சுற்றி இருக்கும் ஒரு ஜவ்வு. இரவு உணவுக்கேற்ற நேரம்.

இரவு 9 முதல் 11 வரை - உச்சந்தலை முதல் அடிவயிறு வரை உள்ள மூன்று பாதைகள் இணையும் நேரம். அமைதியாக உறங்கலாம்.

இரவு 11 முதல் 1 வரை - பித்தப்பை நேரம். அவசியம் உறங்க வேண்டும்.

இரவு 1 முதல் 3 வரை - கல்லீரல் நேரம். ரத்தத்தை கல்லீரல் சுத்தப்படுத்தும் நேரம். கட்டாயம் தூங்க வேண்டும்.

Monday, September 8, 2014

மின் ஆளுமை (இ-கவர்னன்ஸ்) திட்டம்

இந்தியாவில் மக்கள்தொகை பெருக்கத்தாலும், நிர்வாகத்தில் உள்ள குறைபாடுகளாலும் எந்தவொரு திட்டமும் முழுமையாக மக்களை சென்றடைவதில்லை. காகிதத்திற்காக, தினமும் பல லட்சம் மரங்கள் அழிக்கப்படுகின்றன. முறைகேடற்ற, காகிதம் இல்லாத நிர்வாகத்தை கொண்டுவர வேண்டியது காலத்தின் கட்டாயமாகிறது. திட்டங்கள் முழுமையாக சென்றடைய, அனைத்து துறைகளும் கம்ப்யூட்டர் மயமாக்கப்பட வேண்டும். அறிவுசார்ந்த உலகில் தகவல் தொழில்நுட்பம் பெரும் புரட்சியை ஏற்படுத்தி உள்ளது. தகவல் பரிமாற்ற தொழில்நுட்ப பயன்பாட்டில் உலக அளவில் இந்தியா 24 வது இடத்தில் உள்ளது. தகவல் தொழில்நுட்பம் இந்தியாவில் உள்ள கடைகோடி கிராமமக்களுக்கும் சென்றடைய வேண்டும் என பிரதமர் தெரிவித்துள்ளார். நிர்வாகத்தில் தகவல் தொழில்நுட்பத்தை செயல்படுத்த மத்திய, மாநில அரசுகள் முனைப்பு காட்டி வருகின்றன. அரசு அமைப்பு உடலை போன்றது, ஆளுமை உடலை இயக்கும் உயிரை போன்றது. நிர்வாக ஆளுமையை கம்ப்யூட்டர் மூலம் இயக்குவது மின் ஆளுமையாகும் (இ-கவர்னன்ஸ்). மின் ஆளுமை திட்டம் அனைத்து மத்திய, மாநில அரசு அலுவலகங்களிலும் செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தகவல் தொழில்நுட்பம் கிராமங்களை சென்றடைய நாடு முழுவதும் கோபுரங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன. மலைக்கிராமம் போன்ற பகுதிகளுக்காக 'வை-பி' என்ற கம்பியில்லாத தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.

மத்திய, மாநில அரசுகள் மின் ஆளுமை திட்டத்தின் மூலம் அனைத்து துறைகளையும் கம்ப்யூட்டர் மயமாக்கி வருகின்றன. ஒவ்வொரு துறையிலும் 'ஆன்லைன்' மூலம் விண்ணப்பிக்கும் முறை செயல்படுத்தப்பட்டு வருகிறது.

மின்-ஆளுமையின் குறிக்கோள்:
அரசு சேவைகள், திட்டங்கள் அனைத்தும் இணையம் வாயிலாக மக்கள் இருப்பிடத்திலே மிக விரைவாக வழங்குதல். நகர, கிராம மக்களிடையே தகவல் தொழிநுட்பத்தை பயன்படுத்துவதில் உள்ள இடைவெளியை சரிசெய்தல். குடிமக்களின் வாழ்க்கை தரத்தை தகவல் தொழில்நுட்பத்தின் மூலம் மேம்படுத்துதல் ஆகிய குறிக்கோள்களை அடைய மின்-ஆளுமை செயல்படுத்தப்பட்டு உள்ளது. இ-மையம், இ-அலுவலகம், இ-கோப்புகள், இ-கிராமங்கள், இ-தேர்வுகள், இ-கோர்ட், இ-பென்சன் என்று எல்லாமே 'இ' மயமாகி வருகிறது. இதன்மூலம் அனைத்து சான்றுகள், டிரைவிங் லைசன்ஸ், தண்ணீர் கட்டணம், மின் கட்டணம் செலுத்துதல், நிலப்பட்டா, வில்லங்க சான்றிதழ் பெறுதல் என, ஏராளமான வசதிகள் கிடைக்கின்றன. 'இ' ன் பயன்பாடு எளிதாகவும், துரிதமாகவும் இருப்பதனால், அனைவரும் 'இ' தரிசனம் செய்ய ஆரம்பித்து விட்டனர்.

இணையம் வசதி பெறமுடியாத மக்களுக்காக, அரசு சார்பில் கிராமங்கள், நகரங்களில் பொதுசேவை மையங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன. மின் ஆளுமை வளர்ச்சியால் குடிமக்களை தேடி அரசு என்ற நிலை உருவாகிறது. சாதாரண குடிமகனுக்கும் வீட்டிலே அரசின் திட்டங்கள் கிடைக்கின்றன. அரசு அலுவலகங்களுக்கு அலைந்து பொன்னான நேரத்தை வீணடிக்க வேண்டியதில்லை. வெளிப்படையான நிர்வாகம், லஞ்ச ஒழிப்பு, 24 மணி நேரமும் சேவை கிடைக்க வழிவகை செய்யப்படும். பண்டைய காலத்தில் அரசு நிர்வாக கோப்புகள் பெரிய ரகசியமாக காவல் காக்கப்பட்டு வந்தது. மூடி முத்திரையிடப்பட்ட கோப்புகள் அதிகாரிகளுக்கு மட்டும் பயன்படும் நிலை இருந்தது. அரசு அதிகாரிகளின் செயல்பாடுகளும் அதிகார வர்க்கத்திற்கு மட்டும் பயன்படுத்தப்பட்டது. ஆனால், மின்-ஆளுமை திட்டத்தால், அரசில் வெளிப்படையான நிர்வாகம் ஏற்படும்.

தகவல் பரிமாற்றம் : மின்ஆளுமை திட்டத்தால், அரசு அறிவிப்புகள், கொள்கைகள் அனைத்தும் இணையத்தில் வெளியிடப்பட்டுகின்றன. தகவல் உரிமைச்சட்டத்தின் கீழ் பெறப்படும் விபரங்களும் இணையதளத்தில் வெளியிடப்படுகின்றன. அரசு நிர்வாக இயந்திரத்தில் அலுவலக நேரம், அலுவல் இல்லாத நேரம் என்ற பாகுபாடு இனி இருக்காது. அரசின் நோக்கம் முழுமையாக நிறைவேறும். பொதுமக்கள் அரசு நிர்வாகத்திற்கு ஆலோசனை மற்றும் தகவல் பரிமாற்றம் அளிக்கலாம். போலீஸ் துறையில் மின்-ஆளுமை திட்டத்தால், குற்றங்களை ஆராய்ந்து குற்றவாளிகளை பிடிக்க கண்காணிப்பு கேமராக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இனிவரும் காலங்களில் மொபைல் எண்ணில் இருந்து எஸ்.எம்.எஸ்., மூலம் புகார் தெரிவிக்கும்நிலை வந்துவிடும்.

இணையம் கல்வி : சாமானியனும் கம்ப்யூட்டரை தினமும் பயன்படுத்தும் நிலை வந்துவிட்டது. இதனால், மின்-ஆளுமை திட்டம் உடனடியாக அனைத்து மக்களையும் சென்றடையும். கம்ப்யூட்டரில் தமிழ் மொழியின் பயன்பாடும் அதிகரித்து வருகிறது. கம்ப்யூட்டர் கல்வியை பொதுமக்கள், பெண்கள், குழந்தைகள் எளிதில் பயன்படுத்தும் முறையில் ஆயத்தப்படுத்த வேண்டும். இந்த தருணத்தில் பல்கலைகளும், கல்வி நிறுவனங்களும் கம்ப்யூட்டர் மற்றும் இணைய பயன்பாடு கல்வியை மாணவர்களுக்கு அளிக்க வேண்டும். பல்கலையில் மின்-ஆளுமை மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தின் கீழ், திண்டுக்கல் காந்திகிராமம் பல்கலை செயல்படுகிறது. இங்கு நேர்மையான, காகிதம் இல்லாத நிர்வாகத்திற்காக பல்கலைத்தில் மின் ஆளுமை திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. அனைத்து துறைகளும் இணையம் வசதி பெற்றுள்ளன. ஆப்டிக் பைபர் (ஓ.எப்.சி), கேபிள் ரேடியோ மோடம் மூலம் பல்கலை வளாகம் உள்வலை மற்றும் வெளிவலை இணைப்பு பெற்றுள்ளது. மின்-ஆளுமை பயன்பாடு குறித்து பல்கலை ஆசிரியர்கள், பணியாளர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.

பா.அருணாசலம்,
துணைப்பதிவாளர்,
காந்திகிராம பல்கலை.
 

Wednesday, September 3, 2014

ஐ.ஐ.டி. கவுன்சில்

ஐ.ஐ.டி. கவுன்சில் என்பது நாட்டிலுள்ள 16 ஐ.ஐ.டி.,களின் உச்ச நிர்வாக அமைப்பாகும். இந்த அமைப்பின் தலைவராக இருப்பவர், மத்திய மனிதவளத்துறை அமைச்சர். தவிர, நாடாளுமன்றத்தின் 3 உறுப்பினர்கள், அனைத்து ஐ.ஐ.டி.,களின் தலைவர்கள் மற்றும் இயக்குநர்கள், UGC தலைவர், CSIR தலைமை இயக்குநர், IISc தலைவர் மற்றும் இயக்குநர்கள், மத்திய மனிதவள அமைச்சகத்தால் நியமிக்கப்பட்ட ஒருவர் மற்றும் மத்திய அரசு மற்றும் AICTE -ஆல் நியமிக்கப்படும் 3 நபர்கள் ஆகியோரைக் கொண்டதுதான் ஐ.ஐ.டி. கவுன்சில் என்னும் நிர்வாக அமைப்பு.

Tuesday, September 2, 2014

ரேஷன்

'ரேஷன் அரிசி கடத்தல்..., ஊழியர்கள் உடந்தை' இது போன்ற தலைப்புகளில் செய்திகள் வராத நாட்கள் தமிழகத்தில் இல்லை என்ற நிலை உருவாகி விட்டது. என்ன தான் நடக்கிறது ?

தமிழகத்தில் ஒரு கோடியே 97 லட்சத்து 82 ஆயிரத்து 593 ரேஷன் கார்டுதாரர்கள் உள்ளனர்.
# இதில் ஒரு கோடியே 67 லட்சத்து 21 ஆயிரத்து 538 கார்டுகளுக்கு அரிசி சப்ளை செய்யப்படுகிறது.
# தவிர, 18 லட்சத்து 62 ஆயிரத்து 615 அன்னபூர்ணா கார்டுகளும் உள்ளன.
# 10 லட்சத்து 76 ஆயிரத்து 552 ரேஷன் கார்டுதாரர்கள் அரிசி வேண்டாம், எங்களுக்கு சீனி மட்டும் போதும் என்று வாங்குகின்றனர்.
# 61 ஆயிரத்து 61 கார்டுகள் போலீசார் வசம் உள்ளன.
# 60 ஆயிரத்து 827 கார்டுகள் எந்த பொருளும் வேண்டாம் எனக்கூறி, முகவரி பயன்பாட்டிற்கு மட்டும் 'ஒயிட் கார்டுகளாக' உள்ளன.

கார்டுகளுக்கு
* 1,269 சிவில் சப்ளை முழு நேர ரேஷன் கடைகள் மூலமும்,
* 125 பகுதி நேர ரேஷன் கடைகள்,
* 23 ஆயிரத்து 109 கூட்டுறவு முழுநேர ரேஷன் கடைகள்,
* 124 கூட்டுறவு அல்லாத முழுநேர ரேஷன் கடைகள்,
* பெண்கள் நடத்தும் 533 ரேஷன் கடைகள்,
* 14 மொபைல் ரேஷன் கடைகள்,
* 7967 பகுதி நேர கூட்டுறவு ரேஷன் கடைகள்,
* 18 கூட்டுறவு அல்லாத பகுதி நேர ரேஷன் கடைகள்,
* பெண்கள் நடத்தும் 63 பகுதி நேர ரேஷன் கடைகள் மூலமும் பொருட்கள் சப்ளை செய்யப்படுகின்றன.

மாதந்தோறும்
^ 2 லட்சத்து 96 ஆயிரத்து 453 டன் அரிசி,
^ 35 ஆயிரத்து 133 டன் சீனி,
^ 34 ஆயிரத்து 890 டன் கோதுமை,
^ 65 ஆயிரத்து 140 கிலோ லிட்டர் மண்ணெண்ணெய்
^ மற்றும் விற்பனை மற்றும் தேவைக்கேற்ப உளுந்து, துவரை பருப்பு வகைகள் சப்ளை செய்யப்படுகிறது.

முறைகேடு எப்படி :
இதில் முறைகேடு எங்கே தொடங்குகிறது? ரேஷன் கடைகளை வருவாய்த்துறை அலுவலர்கள், வட்டார கூட்டுறவு வருவாய் அலுவலர்கள், மாவட்ட கூட்டுறவு வருவாய் அலுவலர்கள், பொதுவிநியோகத்துறை கூட்டுறவு சார் பதிவாளர், பொதுவிநியோகத்துறை கூட்டுறவு துணை பதிவாளர், உணவு கடத்தல் தடுப்பு பிரிவு இன்ஸ்பெக்டர், சப்- இன்ஸ்பெக்டர், முத்திரை எடையளவு ஆய்வாளர் மற்றும் அலுவலர்கள், கூட்டுறவு தலைவர் மற்றும் நிர்வாகம், வருவாய்த்துறை பறக்கும் படை, கூட்டுறவு பறக்கும் படை மற்றும் தணிக்கை துறையினர் ஆய்வு செய்கின்றனர். தவிர உள்ளூர் தாதாக்கள், அரசியல்வாதிகள், வார்டு கவுன்சிலர்கள் கண்காணிப்பும் உண்டு. பெரிய வருத்தமான விஷயம். ஒவ்வொரு கண்காணிப்பிற்கும், ஆய்வுக்கும் தகுதிக்கு ஏற்ற விலையை ரேஷன் ஊழியர்கள் கொடுத்தே ஆக வேண்டும். அவர்கள் எத்தனை நியாயமாக நடந்து கொண்டாலும் ஆய்வு அதிகாரிகளுக்கு அதைப் பற்றிய கவலை இல்லை. அவர்களுக்கு தரும் தொகை தான் முக்கியம். ரேஷன் பொருட்கள் சப்ளையிலேயே இந்த முறைகேடு தொடங்குகிறது.

எடை குறைவு :
100 கிலோ எடை கொண்ட அரிசி மூடை, வரும் போதே 93 கிலோ எடையில்தான் ரேஷன் கடைக்கே வந்து சேருகிறது. (சீனி உட்பட எல்லாமும் தான்) மூடைக்கு ஏழு கிலோ காற்றில் பறந்து விட்டதா என்பது சப்ளை அதிகாரிகளுக்கும், அரசுக்கும் நன்கு தெரியும். ஆய்வுக்கு மாதந்தோறும் வரும் அதிகாரிகள் தொகை கேட்பது, எல்லோருக்கும் தெரிந்த உண்மை. இதனால் லஞ்சம் வாங்குபவர்களுக்கு எந்த கவலையும் இல்லை. தான் வாங்கா விட்டாலும் தன் மீது வாங்கியதாக முத்திரை விழும். எனவே வாங்கிக்கொண்டே முத்திரை பெற்றுக் கொள்வோம், என நினைத்தே எல்லா அதிகாரிகளும் வாங்கிக் கொள்கின்றனர். இப்படி மாதந்தோறும் நீளும் மாமூல் பட்டியல் உள்ளூர் தாதா, தெரு தாதா, ரவுடி, கவுன்சிலர் அவர்களின் டிரைவர்கள் வரை வந்து நிற்கிறது.

எம்.எல்.ஏ., எம்.பி.,க்கள் எப்படி :
இதில் சந்தோஷப்படும் ஒரே விஷயம் எம்.எல்.ஏ., எம்.பி.,க்களுக்கு ரேஷன் கடையை ஆய்வு செய்யும் அதிகாரம் இருந்தாலும், இதுவரை தமிழகத்தில் எந்த எம்.எல்.ஏ.,வும், எம்.பி.,யும் ரேஷன் கடையில் லஞ்சம் வாங்கியதாக புகார் இல்லை. மற்றபடி லஞ்சம் வாங்காத அதிகாரிகளே இல்லை. ஆனால் ஆடி மாதம் பெயரைச் சொல்லி ஆடு அறுத்து சாப்பிடுவது போல், அதிகாரிகள் பணத்தை வாங்கிக் கொண்டு, ரேஷன் ஊழியர்கள் மீது முத்திரை குத்தி விடுகின்றனர். பலியாகும் ஆடுகள் தான் ரேஷன் ஊழியர்கள். இப்படி மாதந்தோறும் இவர்கள் தரும் லஞ்சப்பணத்திற்கு வரும் ரேஷன் பொருட்களில் பாதியை கள்ள மார்க்கெட்டில் விற்றால் மட்டுமே சமாளிக்க முடியும். அது தான் தமிழகம் முழுவதும் உள்ள எல்லா ரேஷன் கடைகளிலும் நடந்து கொண்டுள்ளது. தமிழக அரசு நிர்வாகத்தில் இதை தெரியாத அதிகாரிகள் யாருமே இல்லை. ஆனாலும் ஏழைகளை ஏமாற்றவும், மக்களை ஏமாற்றவும் ஏதோ ரேஷன் ஊழியர்கள் மட்டும் தவறு செய்வது போலவும், அவர்களை தண்டிக்க நடவடிக்கை எடுப்பது போலவும் பேசி நாடகம் நடத்தி விடுகின்றனர்.

நேர்மை எங்கே ?
இதில் புதிதாக நடந்த நகைச்சுவை நாடகம். ரேஷன் பொருள் எடை குறைந்தாலோ, இருப்பு குறைந்தாலோ அபராதம் பல மடங்கு அதிகரிப்பு என்பது. ஆய்வு அதிகாரிகள் நேர்மையாக நடந்தால், ரேஷன் சப்ளை சீராகி விடும் என்பது எல்லோருக்குமே தெரியுமே. அடிப்படையை சரி செய்யாமல் கட்டடம் கட்டிக்கொண்டே போனால், இந்த பொய் எத்தனை நாள் தான் தாங்கும். அடித்தளம் இல்லாத அடுக்குமாடி கட்டடம் இடிந்தது போல் இடிந்து விடாதா? இதிலும் சிக்கி சாகப்போவது ரேஷன் ஊழியர்கள் தான்.எடை குறைவை சரி செய்ய பொருட்களை பாக்கெட்டில் தரலாம். பாக்கெட்டாக கடத்தினால் என்னவாகும் என்ற கேள்வி எழுகிறது. அடிப்படையை சரி செய்ய எல்லோருக்கும் தெரியும். ஆனால் பணம் வந்து கொண்டிருக்கும் பாதை அடைபட்டு விடும். இதற்கு பயந்து மற்றவர் மீது பழி போட்டு தாங்கள் சம்பாதித்து வருகின்றனர். இந்த நாடகம் எப்போது முடிவுக்கு வரும்.