Tuesday, September 2, 2014

ரேஷன்

'ரேஷன் அரிசி கடத்தல்..., ஊழியர்கள் உடந்தை' இது போன்ற தலைப்புகளில் செய்திகள் வராத நாட்கள் தமிழகத்தில் இல்லை என்ற நிலை உருவாகி விட்டது. என்ன தான் நடக்கிறது ?

தமிழகத்தில் ஒரு கோடியே 97 லட்சத்து 82 ஆயிரத்து 593 ரேஷன் கார்டுதாரர்கள் உள்ளனர்.
# இதில் ஒரு கோடியே 67 லட்சத்து 21 ஆயிரத்து 538 கார்டுகளுக்கு அரிசி சப்ளை செய்யப்படுகிறது.
# தவிர, 18 லட்சத்து 62 ஆயிரத்து 615 அன்னபூர்ணா கார்டுகளும் உள்ளன.
# 10 லட்சத்து 76 ஆயிரத்து 552 ரேஷன் கார்டுதாரர்கள் அரிசி வேண்டாம், எங்களுக்கு சீனி மட்டும் போதும் என்று வாங்குகின்றனர்.
# 61 ஆயிரத்து 61 கார்டுகள் போலீசார் வசம் உள்ளன.
# 60 ஆயிரத்து 827 கார்டுகள் எந்த பொருளும் வேண்டாம் எனக்கூறி, முகவரி பயன்பாட்டிற்கு மட்டும் 'ஒயிட் கார்டுகளாக' உள்ளன.

கார்டுகளுக்கு
* 1,269 சிவில் சப்ளை முழு நேர ரேஷன் கடைகள் மூலமும்,
* 125 பகுதி நேர ரேஷன் கடைகள்,
* 23 ஆயிரத்து 109 கூட்டுறவு முழுநேர ரேஷன் கடைகள்,
* 124 கூட்டுறவு அல்லாத முழுநேர ரேஷன் கடைகள்,
* பெண்கள் நடத்தும் 533 ரேஷன் கடைகள்,
* 14 மொபைல் ரேஷன் கடைகள்,
* 7967 பகுதி நேர கூட்டுறவு ரேஷன் கடைகள்,
* 18 கூட்டுறவு அல்லாத பகுதி நேர ரேஷன் கடைகள்,
* பெண்கள் நடத்தும் 63 பகுதி நேர ரேஷன் கடைகள் மூலமும் பொருட்கள் சப்ளை செய்யப்படுகின்றன.

மாதந்தோறும்
^ 2 லட்சத்து 96 ஆயிரத்து 453 டன் அரிசி,
^ 35 ஆயிரத்து 133 டன் சீனி,
^ 34 ஆயிரத்து 890 டன் கோதுமை,
^ 65 ஆயிரத்து 140 கிலோ லிட்டர் மண்ணெண்ணெய்
^ மற்றும் விற்பனை மற்றும் தேவைக்கேற்ப உளுந்து, துவரை பருப்பு வகைகள் சப்ளை செய்யப்படுகிறது.

முறைகேடு எப்படி :
இதில் முறைகேடு எங்கே தொடங்குகிறது? ரேஷன் கடைகளை வருவாய்த்துறை அலுவலர்கள், வட்டார கூட்டுறவு வருவாய் அலுவலர்கள், மாவட்ட கூட்டுறவு வருவாய் அலுவலர்கள், பொதுவிநியோகத்துறை கூட்டுறவு சார் பதிவாளர், பொதுவிநியோகத்துறை கூட்டுறவு துணை பதிவாளர், உணவு கடத்தல் தடுப்பு பிரிவு இன்ஸ்பெக்டர், சப்- இன்ஸ்பெக்டர், முத்திரை எடையளவு ஆய்வாளர் மற்றும் அலுவலர்கள், கூட்டுறவு தலைவர் மற்றும் நிர்வாகம், வருவாய்த்துறை பறக்கும் படை, கூட்டுறவு பறக்கும் படை மற்றும் தணிக்கை துறையினர் ஆய்வு செய்கின்றனர். தவிர உள்ளூர் தாதாக்கள், அரசியல்வாதிகள், வார்டு கவுன்சிலர்கள் கண்காணிப்பும் உண்டு. பெரிய வருத்தமான விஷயம். ஒவ்வொரு கண்காணிப்பிற்கும், ஆய்வுக்கும் தகுதிக்கு ஏற்ற விலையை ரேஷன் ஊழியர்கள் கொடுத்தே ஆக வேண்டும். அவர்கள் எத்தனை நியாயமாக நடந்து கொண்டாலும் ஆய்வு அதிகாரிகளுக்கு அதைப் பற்றிய கவலை இல்லை. அவர்களுக்கு தரும் தொகை தான் முக்கியம். ரேஷன் பொருட்கள் சப்ளையிலேயே இந்த முறைகேடு தொடங்குகிறது.

எடை குறைவு :
100 கிலோ எடை கொண்ட அரிசி மூடை, வரும் போதே 93 கிலோ எடையில்தான் ரேஷன் கடைக்கே வந்து சேருகிறது. (சீனி உட்பட எல்லாமும் தான்) மூடைக்கு ஏழு கிலோ காற்றில் பறந்து விட்டதா என்பது சப்ளை அதிகாரிகளுக்கும், அரசுக்கும் நன்கு தெரியும். ஆய்வுக்கு மாதந்தோறும் வரும் அதிகாரிகள் தொகை கேட்பது, எல்லோருக்கும் தெரிந்த உண்மை. இதனால் லஞ்சம் வாங்குபவர்களுக்கு எந்த கவலையும் இல்லை. தான் வாங்கா விட்டாலும் தன் மீது வாங்கியதாக முத்திரை விழும். எனவே வாங்கிக்கொண்டே முத்திரை பெற்றுக் கொள்வோம், என நினைத்தே எல்லா அதிகாரிகளும் வாங்கிக் கொள்கின்றனர். இப்படி மாதந்தோறும் நீளும் மாமூல் பட்டியல் உள்ளூர் தாதா, தெரு தாதா, ரவுடி, கவுன்சிலர் அவர்களின் டிரைவர்கள் வரை வந்து நிற்கிறது.

எம்.எல்.ஏ., எம்.பி.,க்கள் எப்படி :
இதில் சந்தோஷப்படும் ஒரே விஷயம் எம்.எல்.ஏ., எம்.பி.,க்களுக்கு ரேஷன் கடையை ஆய்வு செய்யும் அதிகாரம் இருந்தாலும், இதுவரை தமிழகத்தில் எந்த எம்.எல்.ஏ.,வும், எம்.பி.,யும் ரேஷன் கடையில் லஞ்சம் வாங்கியதாக புகார் இல்லை. மற்றபடி லஞ்சம் வாங்காத அதிகாரிகளே இல்லை. ஆனால் ஆடி மாதம் பெயரைச் சொல்லி ஆடு அறுத்து சாப்பிடுவது போல், அதிகாரிகள் பணத்தை வாங்கிக் கொண்டு, ரேஷன் ஊழியர்கள் மீது முத்திரை குத்தி விடுகின்றனர். பலியாகும் ஆடுகள் தான் ரேஷன் ஊழியர்கள். இப்படி மாதந்தோறும் இவர்கள் தரும் லஞ்சப்பணத்திற்கு வரும் ரேஷன் பொருட்களில் பாதியை கள்ள மார்க்கெட்டில் விற்றால் மட்டுமே சமாளிக்க முடியும். அது தான் தமிழகம் முழுவதும் உள்ள எல்லா ரேஷன் கடைகளிலும் நடந்து கொண்டுள்ளது. தமிழக அரசு நிர்வாகத்தில் இதை தெரியாத அதிகாரிகள் யாருமே இல்லை. ஆனாலும் ஏழைகளை ஏமாற்றவும், மக்களை ஏமாற்றவும் ஏதோ ரேஷன் ஊழியர்கள் மட்டும் தவறு செய்வது போலவும், அவர்களை தண்டிக்க நடவடிக்கை எடுப்பது போலவும் பேசி நாடகம் நடத்தி விடுகின்றனர்.

நேர்மை எங்கே ?
இதில் புதிதாக நடந்த நகைச்சுவை நாடகம். ரேஷன் பொருள் எடை குறைந்தாலோ, இருப்பு குறைந்தாலோ அபராதம் பல மடங்கு அதிகரிப்பு என்பது. ஆய்வு அதிகாரிகள் நேர்மையாக நடந்தால், ரேஷன் சப்ளை சீராகி விடும் என்பது எல்லோருக்குமே தெரியுமே. அடிப்படையை சரி செய்யாமல் கட்டடம் கட்டிக்கொண்டே போனால், இந்த பொய் எத்தனை நாள் தான் தாங்கும். அடித்தளம் இல்லாத அடுக்குமாடி கட்டடம் இடிந்தது போல் இடிந்து விடாதா? இதிலும் சிக்கி சாகப்போவது ரேஷன் ஊழியர்கள் தான்.எடை குறைவை சரி செய்ய பொருட்களை பாக்கெட்டில் தரலாம். பாக்கெட்டாக கடத்தினால் என்னவாகும் என்ற கேள்வி எழுகிறது. அடிப்படையை சரி செய்ய எல்லோருக்கும் தெரியும். ஆனால் பணம் வந்து கொண்டிருக்கும் பாதை அடைபட்டு விடும். இதற்கு பயந்து மற்றவர் மீது பழி போட்டு தாங்கள் சம்பாதித்து வருகின்றனர். இந்த நாடகம் எப்போது முடிவுக்கு வரும்.

No comments:

Post a Comment