Monday, September 8, 2014

மின் ஆளுமை (இ-கவர்னன்ஸ்) திட்டம்

இந்தியாவில் மக்கள்தொகை பெருக்கத்தாலும், நிர்வாகத்தில் உள்ள குறைபாடுகளாலும் எந்தவொரு திட்டமும் முழுமையாக மக்களை சென்றடைவதில்லை. காகிதத்திற்காக, தினமும் பல லட்சம் மரங்கள் அழிக்கப்படுகின்றன. முறைகேடற்ற, காகிதம் இல்லாத நிர்வாகத்தை கொண்டுவர வேண்டியது காலத்தின் கட்டாயமாகிறது. திட்டங்கள் முழுமையாக சென்றடைய, அனைத்து துறைகளும் கம்ப்யூட்டர் மயமாக்கப்பட வேண்டும். அறிவுசார்ந்த உலகில் தகவல் தொழில்நுட்பம் பெரும் புரட்சியை ஏற்படுத்தி உள்ளது. தகவல் பரிமாற்ற தொழில்நுட்ப பயன்பாட்டில் உலக அளவில் இந்தியா 24 வது இடத்தில் உள்ளது. தகவல் தொழில்நுட்பம் இந்தியாவில் உள்ள கடைகோடி கிராமமக்களுக்கும் சென்றடைய வேண்டும் என பிரதமர் தெரிவித்துள்ளார். நிர்வாகத்தில் தகவல் தொழில்நுட்பத்தை செயல்படுத்த மத்திய, மாநில அரசுகள் முனைப்பு காட்டி வருகின்றன. அரசு அமைப்பு உடலை போன்றது, ஆளுமை உடலை இயக்கும் உயிரை போன்றது. நிர்வாக ஆளுமையை கம்ப்யூட்டர் மூலம் இயக்குவது மின் ஆளுமையாகும் (இ-கவர்னன்ஸ்). மின் ஆளுமை திட்டம் அனைத்து மத்திய, மாநில அரசு அலுவலகங்களிலும் செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தகவல் தொழில்நுட்பம் கிராமங்களை சென்றடைய நாடு முழுவதும் கோபுரங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன. மலைக்கிராமம் போன்ற பகுதிகளுக்காக 'வை-பி' என்ற கம்பியில்லாத தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.

மத்திய, மாநில அரசுகள் மின் ஆளுமை திட்டத்தின் மூலம் அனைத்து துறைகளையும் கம்ப்யூட்டர் மயமாக்கி வருகின்றன. ஒவ்வொரு துறையிலும் 'ஆன்லைன்' மூலம் விண்ணப்பிக்கும் முறை செயல்படுத்தப்பட்டு வருகிறது.

மின்-ஆளுமையின் குறிக்கோள்:
அரசு சேவைகள், திட்டங்கள் அனைத்தும் இணையம் வாயிலாக மக்கள் இருப்பிடத்திலே மிக விரைவாக வழங்குதல். நகர, கிராம மக்களிடையே தகவல் தொழிநுட்பத்தை பயன்படுத்துவதில் உள்ள இடைவெளியை சரிசெய்தல். குடிமக்களின் வாழ்க்கை தரத்தை தகவல் தொழில்நுட்பத்தின் மூலம் மேம்படுத்துதல் ஆகிய குறிக்கோள்களை அடைய மின்-ஆளுமை செயல்படுத்தப்பட்டு உள்ளது. இ-மையம், இ-அலுவலகம், இ-கோப்புகள், இ-கிராமங்கள், இ-தேர்வுகள், இ-கோர்ட், இ-பென்சன் என்று எல்லாமே 'இ' மயமாகி வருகிறது. இதன்மூலம் அனைத்து சான்றுகள், டிரைவிங் லைசன்ஸ், தண்ணீர் கட்டணம், மின் கட்டணம் செலுத்துதல், நிலப்பட்டா, வில்லங்க சான்றிதழ் பெறுதல் என, ஏராளமான வசதிகள் கிடைக்கின்றன. 'இ' ன் பயன்பாடு எளிதாகவும், துரிதமாகவும் இருப்பதனால், அனைவரும் 'இ' தரிசனம் செய்ய ஆரம்பித்து விட்டனர்.

இணையம் வசதி பெறமுடியாத மக்களுக்காக, அரசு சார்பில் கிராமங்கள், நகரங்களில் பொதுசேவை மையங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன. மின் ஆளுமை வளர்ச்சியால் குடிமக்களை தேடி அரசு என்ற நிலை உருவாகிறது. சாதாரண குடிமகனுக்கும் வீட்டிலே அரசின் திட்டங்கள் கிடைக்கின்றன. அரசு அலுவலகங்களுக்கு அலைந்து பொன்னான நேரத்தை வீணடிக்க வேண்டியதில்லை. வெளிப்படையான நிர்வாகம், லஞ்ச ஒழிப்பு, 24 மணி நேரமும் சேவை கிடைக்க வழிவகை செய்யப்படும். பண்டைய காலத்தில் அரசு நிர்வாக கோப்புகள் பெரிய ரகசியமாக காவல் காக்கப்பட்டு வந்தது. மூடி முத்திரையிடப்பட்ட கோப்புகள் அதிகாரிகளுக்கு மட்டும் பயன்படும் நிலை இருந்தது. அரசு அதிகாரிகளின் செயல்பாடுகளும் அதிகார வர்க்கத்திற்கு மட்டும் பயன்படுத்தப்பட்டது. ஆனால், மின்-ஆளுமை திட்டத்தால், அரசில் வெளிப்படையான நிர்வாகம் ஏற்படும்.

தகவல் பரிமாற்றம் : மின்ஆளுமை திட்டத்தால், அரசு அறிவிப்புகள், கொள்கைகள் அனைத்தும் இணையத்தில் வெளியிடப்பட்டுகின்றன. தகவல் உரிமைச்சட்டத்தின் கீழ் பெறப்படும் விபரங்களும் இணையதளத்தில் வெளியிடப்படுகின்றன. அரசு நிர்வாக இயந்திரத்தில் அலுவலக நேரம், அலுவல் இல்லாத நேரம் என்ற பாகுபாடு இனி இருக்காது. அரசின் நோக்கம் முழுமையாக நிறைவேறும். பொதுமக்கள் அரசு நிர்வாகத்திற்கு ஆலோசனை மற்றும் தகவல் பரிமாற்றம் அளிக்கலாம். போலீஸ் துறையில் மின்-ஆளுமை திட்டத்தால், குற்றங்களை ஆராய்ந்து குற்றவாளிகளை பிடிக்க கண்காணிப்பு கேமராக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இனிவரும் காலங்களில் மொபைல் எண்ணில் இருந்து எஸ்.எம்.எஸ்., மூலம் புகார் தெரிவிக்கும்நிலை வந்துவிடும்.

இணையம் கல்வி : சாமானியனும் கம்ப்யூட்டரை தினமும் பயன்படுத்தும் நிலை வந்துவிட்டது. இதனால், மின்-ஆளுமை திட்டம் உடனடியாக அனைத்து மக்களையும் சென்றடையும். கம்ப்யூட்டரில் தமிழ் மொழியின் பயன்பாடும் அதிகரித்து வருகிறது. கம்ப்யூட்டர் கல்வியை பொதுமக்கள், பெண்கள், குழந்தைகள் எளிதில் பயன்படுத்தும் முறையில் ஆயத்தப்படுத்த வேண்டும். இந்த தருணத்தில் பல்கலைகளும், கல்வி நிறுவனங்களும் கம்ப்யூட்டர் மற்றும் இணைய பயன்பாடு கல்வியை மாணவர்களுக்கு அளிக்க வேண்டும். பல்கலையில் மின்-ஆளுமை மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தின் கீழ், திண்டுக்கல் காந்திகிராமம் பல்கலை செயல்படுகிறது. இங்கு நேர்மையான, காகிதம் இல்லாத நிர்வாகத்திற்காக பல்கலைத்தில் மின் ஆளுமை திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. அனைத்து துறைகளும் இணையம் வசதி பெற்றுள்ளன. ஆப்டிக் பைபர் (ஓ.எப்.சி), கேபிள் ரேடியோ மோடம் மூலம் பல்கலை வளாகம் உள்வலை மற்றும் வெளிவலை இணைப்பு பெற்றுள்ளது. மின்-ஆளுமை பயன்பாடு குறித்து பல்கலை ஆசிரியர்கள், பணியாளர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.

பா.அருணாசலம்,
துணைப்பதிவாளர்,
காந்திகிராம பல்கலை.
 

No comments:

Post a Comment