Monday, August 4, 2014

மியூசியம் என்றால் அருங்காட்சியகம்

"நைட் அட் த மியூசியம்" என்ற பெயரில் ஒரு ஹாலிவுட் படம் வெளிவந்து பிரபலமடைந்தது.

நாமும் நம் வாழ்க்கையில் ஏதேனும் ஒரு அருங்காட்சியகத்திற்காகவாவது சென்றிருப்போம். சிறந்த முறையில் பராமரிக்கப்பட்டு, சிறப்பான வரலாற்று அம்சங்களைக் கொண்டிருக்கும் ஒரு அருங்காட்சியத்தில் நாம் நுழையும்போது, சிலருக்கு, முந்தைய வரலாற்று காலத்தில் நுழைவது போன்று ஒரு மாயை ஏற்படலாம்.
இந்த உலகம், இதுபோன்ற பல அம்சங்களைக் கடந்து வந்ததா? நமக்கு முன் மனிதர்கள் இப்படியெல்லாம் இருந்திருக்கிறார்களா? நாம் அவர்களின் வழிதோன்றல்கள்தானான? என்றெல்லாம் நமக்கு வியப்பும், மலைப்பும், ஆச்சர்யமும் ஏற்படும்.

இத்தகைய ஒரு அனுபவத்தை வழங்கும் மியூசியத்தை பராமரிப்பவர்கள், Curators அல்லது Museologists என்று அழைக்கப்படுகின்றனர். இத்துறை மியூசியாலஜி துறை என்று அழைக்கப்படுகிறது. இத்துறையில், Museum director, Conservation specialist, Educator, Archivist, Exhibit designer போன்ற பல்வேறு பணி வாய்ப்புகள் உள்ளன. பழமையை பராமரிக்கும் செயல்பாட்டில் ஆர்வமுள்ளவர்கள், இத்துறை சார்ந்த படிப்பை தாராளமாக மேற்கொள்ளலாம்.

இத்துறை படிப்பு

மியூசியாலஜி துறையில் முதுநிலைப் படிப்பை மேற்கொள்ள, அறிவியல், வரலாறு, கலை, நுண்கலை அல்லது தொல்பொருளியல் ஆகிய பிரிவுகளில் ஏதேனுமொன்றில், குறைந்தபட்சம் இளநிலைப் படிப்பை முடித்திருக்க வேண்டும். முதுநிலைப் படிப்பையும் நிறைவு செய்திருக்கலாம்.
மேலும், ஆன்த்ரோபாலஜி, விலங்கியல், மண்ணியல், வேளாண்மை, சுற்றுச்சூழல் அறிவியல் மற்றும் மரைன் சயின்ஸ் ஆகிய பிரிவுகளில், ஏதேனும் ஒன்றில் நீங்கள் ஒரு கூடுதல் பட்டப் படிப்பை மேற்கொண்டிருந்தால், உங்களுக்கு அதிக பலன்கள் கிடைக்கும். மேலும், பாரசீகம், தமிழ், அராபிக், சமஸ்கிருதம், கிரேக்கம், லத்தீன், ஜெர்மனி, பிரெஞ்சு மற்றும் இத்தாலியன் ஆகிய முக்கிய மொழிகளில் புலமைப் பெற்றிருந்தால், உங்களின் மதிப்பே தனி.

பணி பொறுப்புகள்

ஒரு மியூசியாலஜிஸ்ட் என்பவர், பல்வேறான பொறுப்புகளை சுமக்கிறார். குறிப்பிட்ட பொருட்களை சேகரித்தல் தொடங்கி, பொதுமக்கள் தொடர்பு, மார்க்கெட்டிங், நிதி உயர்த்தும் நடவடிக்கை மற்றும் கல்விசார் செயல்பாடுகள் உள்ளிட்ட பலவித பணிகளை அவர் மேற்கொள்கிறார்.
இவைதவிர, மியூசியம் கண்காட்சி அதிகாரி பணியும், அவரின் பொறுப்புகளில் பகுதியாகவோ அல்லது முழுமையாகவோ அடங்கலாம். மேலும், பட்ஜெட் தயாரித்தல், பணியாளர்களை மேலாண்மை செய்தல், உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு பங்குதாரர்கள் மற்றும் பொறுப்பாளர்களுடன் உறவுகளை பராமரித்தல் உள்ளிட்ட பொறுப்புகளும் அடக்கம்.

இத்தொழிலில் கிடைக்கும் மகிழ்ச்சி

* புதிய பாடங்கள் மற்றும் கலைப் பொருட்களுடன் கிடைக்கும் அறிமுகம்.
* ஒரே வேலையை திரும்ப திரும்ப செய்யாமல் இருக்கும் வாய்ப்பு
* தேசிய மற்றும் சர்வதேச அளவில், இதர அருங்காட்சியகங்களுடன் இணைந்து செயல்படும் வாய்ப்பு.
சவால்கள்
* சமத்துவமற்ற சூழல் மற்றும் அனைத்து மியூசியாலஜிஸ்டுகளுக்கும், அவர்களின் திறமை மற்றும் அனுபவத்திற்கேற்ற ஊதியம் கிடைக்காமை.
* இத்துறை பற்றி அதிக மக்களுக்கு விழிப்புணர்வு இல்லை.

வேலை வாய்ப்பு

இந்தியாவில், நூற்றுக்கணக்கான மியூசியம்கள் இருக்கின்றன மற்றும் அவை ஏராளமான பட்டதாரிகளுக்கு வேலை வாய்ப்புகளையும் அளிக்கின்றன. Archaeological Survey of India(ASI) என்ற அமைப்புடன் affiliation பெற்றுள்ள கல்வி நிறுவனத்தில் ஒருவர் இத்துறை சார்ந்த படிப்பை மேற்கொள்வதற்காக சேரலாம்.

UPSC அமைப்பால் நடத்தப்படும் எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு ஆகியவற்றின் மூலம், ASI அமைப்பின் ஏதேனுமொரு உறுப்பு நிறுவனத்தில் இடம் பெறலாம்.

எதிர்கால வாய்ப்புகள்

அருங்காட்சியகம் தொடர்பான விழிப்புணர்வு அதிகரித்து வருவதால், இத்துறைக்கான எதிர்காலம் சிறப்பாக இருக்கும். இத்துறையில் தேவையான மேம்பாட்டு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டால், இத்துறை ஒரு முக்கிய வேலைவாய்ப்பு துறையாக திகழும் என்பதே இத்துறை ஆர்வலர்களின் ஏக்கம்.

மியூசியாலஜி படிப்பில் M.A. மற்றும் M.Sc., பட்டங்கள்

* M.A. படிக்க, ஒருவர், கலை மற்றும் மானுடவியல் துறையில் இளநிலைப் படிப்பை முடித்திருக்க வேண்டும்.
* M.Sc., படிப்பானது, வாழ்க்கை அறிவியல்களுக்கு மிகுந்த முக்கியத்துவம் அளிக்கிறது. எனவே, Life Sciences தொடர்புடைய ஏதேனும் ஒரு இளநிலைப் படிப்பை நிறைவு செய்திருக்க வேண்டும்.

பாடத்திட்டம்

இத்துறையின் முதுநிலைப் படிப்பு, பொதுவாக, ஒரு மியூசியத்தின் மேலாண்மை தொடர்பானது. ஒரு மியூசியத்தின் இயக்கம் தொடர்பான தியரி மற்றும் நடைமுறை அம்சங்கள் ஆகியவை, இரண்டு பிரிவுகளாக பிரிக்கப்பட்டிருக்கும்.

பாடத்திட்டத்தின் சில அம்சங்கள்

* மியூசியத்தின் வரலாறு
* கலெக்ஷன் மேலாண்மை
* ஆவணப்படுத்தல்
* பிரசன்டேஷன் அன்ட் இன்டர்பிரிடேஷன்
* மியூசியம் கட்டடக்கலை
* இந்திய வரலாறு மற்றும் தொல்லியல்
* வரலாற்று கலை
* நாட்டுப்புறக் கலைகள் மற்றும் இந்தியப் பண்பாடு
* இயற்கை வரலாற்றுப் படிமங்களை பாதுகாத்தல்
* பண்பாட்டு செல்வங்களைப் பாதுகாத்தல்

இத்துறையில் ஈடுபட விரும்பும் ஒருவர், பின்வரும் அம்சங்களில் மேலாண்மை, சேகரிப்பு மற்றும் பராமரிப்பு துறையில் நிபுணத்துவம் பெற வேண்டும். அவை,

* ஆன்த்ரோபாலஜி(மனிதனின் தோற்றம் மற்றும் அவனது சமூக வளர்ச்சி பற்றிய படிப்பு)
* ஆயுதங்கள் மற்றும் ஆயுத தளவாடங்கள்
* பண்டைய நாணயங்கள்
* கல்வெட்டுக்கள்
* நகைகள்
* கலை
* தாவரங்கள்

வருமானம்

ஆரம்ப சம்பளம் ரூ.15,000 முதல் ரூ.30,000 வரை இருக்கும்.

தேவையான திறன்கள்

மேலாண்மைத் திறன், தகவல்தொடர்பு திறன், காட்சிப்படுத்தும் திறன், அமைப்பாக்கத் திறன், விபரங்களை கவனிக்கும் திறன், பயணம் செய்வதில் ஆர்வம் மற்றும் ஒரு பட்டப் படிப்பை முடித்திருத்தல்.

எங்கே படிக்கலாம்?

தேசியளவிலான கல்வி நிறுவனங்கள்

* புதுடில்லி நேஷனல் மியூசியம்
* பரோடாவிலுள்ள மகாராஜா சயாஜிராவ் பல்கலை
* கொல்கத்தா பல்கலை
* பனாரஸ் இந்து பல்கலை
இன்டர்ன்ஷிப் பெறுவதற்கான அருங்காட்சியகங்கள்
* புதுடில்லி நேஷனல் மியூசியம்
* ஐதராபாத் சலர்ஜங் மியூசியம்
* அசிஸ் பாட் மியூசியம் - கார்கில்
* இந்தியன் மியூசியம் - கொல்கத்தா.

No comments:

Post a Comment