Thursday, November 13, 2014

மதிப்பெண் கல்வியா... மதிப்பீட்டுக் கல்வியா?

இன்றைய சமுதாயச் சூழலில் ஒரு மாணவன் நல்லவனாக வாழ மிகப்பெரிய சவால்களை சந்திக்க வேண்டியுள்ளது. கம்ப்யூட்டர், மொபைல் போன், 'டிவி', வன்முறை, ஆபாச படங்கள், அரசு பார்களை சந்தித்து முட்டி மோதி எழும்புவதற்குள், அவன் வாழ்நாளில் பாதிதுாரம் கடந்து விடுகிறான். தன்நிலை உணர்ந்து நல்லவனாக முயற்சிக்கும் போது அவன் எதிர்பார்க்கும் அங்கீகாரம் உடல் ரீதியாகவும், மனரீதியாகவும் கிடைக்காமல் போகிறது. பாலியல் வன்கொடுமை, கொலை, கொள்ளை ஆகிய சமூகக் கொடுமைகளைச் செய்யும் இளைஞர்கள் 15 முதல் 25 வயதிற்குட்பட்டவர்கள் என்பது மிகப்பெரிய கொடுமை. இத்தகைய செயல்களில் ஆர்வம் காட்டும் இந்த இளைஞர்கள் வழிதவறியதற்கு யார் காரணம்?

படிக்கும் வயதில் கவனம் :

கவனம் சிதறுகிறது எனில் கல்வித்திட்டம் அவனை நல்வழிக்கு ஒருமுகப்படுத்த தவறிவிட்டது என்பது மறுக்க இயலாத உண்மை. பொருளாதார ரீதியாக அவன் வாழ கல்வி அடிப்படைத் தகுதியாக இருந்தபோதிலும், நல்லெண்ணங்களே அவனின் கல்வித்தகுதிக்கும் வித்தாக உள்ளது என்பதை இன்றையக் கல்வி அளிக்கத் தவறி விட்டது. மதிப்பெண் ரீதியிலான தேர்வுகள் ஒன்றே ஒருவனின் கல்வித்தகுதிக்குச் சான்றாகிறது. 'சமுதாய விலங்கு' என அழைக்கப்படும் மனிதன் தான் வாழும் சமுதாயத்திற்கு தன்னைத் தகுந்தவனாக்கிக் கொள்ள என்ன தகுதிகளை வளர்க்கிறது அல்லது அளிக்கிறது

இன்றைய கல்வித் திட்டம்?

இன்றைய மாணவ சமுதாயம் சுயமரியாதையை வளர்த்துக்கொள்ள வேண்டிய மாணவர்கள் சுயகவுரவத்திற்கு பெரும் மதிப்பு கொடுக்கிறார்கள். தான், தனது என்ற ஒரு குறுகிய வட்டத்திற்குள்ளேயே வாழும் சமுதாயச் சூழல் வளர்ந்து கொண்டிருக்கிறது. சகிப்புத்தன்மை எனபது சிறிதும் இல்லாத காரணத்தால் பிறரின் உணர்வுகள், வலிகள் மிதிபட்டு போகிறது. விளைவுகளை யோசிக்காத மனிதநேயமில்லாச் செயல்கள் வளர்ந்து கொண்டே போகின்றன. தான் செய்த தவறுகளுக்கான குற்றஉணர்வே இல்லாத மாணவச்சமுதாயம் வளர்ந்து கொண்டிருக்கிறது எனில் அவனுக்கு இந்த மனவலிமை உருவாக்கியதற்கு யாரை காரணம் காட்டப் போகிறோம்?

நம் கல்வித்திட்டம் :

மூன்று வயது வரை குடும்பத்தில் நல் அரவணைப்போடு வாழ்ந்த குழந்தை, பள்ளிக்குச் சென்றபின் அவன் கற்கும் சூழலே அவனின் ஆளுமைப் பண்புகளை உருவாக்குகிறது. அரசு திட்டப்படி அவன் ஐந்து பாடங்களை வாரத்தில் 40க்கு 30 பாடவேளை களில் கற்றுக் கொள்கிறான். மதிப்பீட்டுக் கல்வி, உடற்கல்வி, யோகா போன்ற பாடங்களுக்கு வாரத்தில் ஒருநாள் மற்றும் இரண்டு நாட்கள் மட்டுமே தரப்படுகிறது. பாடங்களை அவன் படித்தாலும் படிக்காவிட்டாலும் எட்டாம் வகுப்பு வரை அனைவருக்கும் தேர்ச்சி அளிக்கப்பட வேண்டும். ஏனெனில் அனைவருக்கும் கல்வித் திட்டத்தில் யாரும் இடைநிற்றலோ படிப்பறிவு இல்லாமலோ இல்லை என்று உலகநாடுகளுக்கு சதவீதம் காட்ட வேண்டும். அனைவருக்கும் தேர்ச்சி என்கிற பட்சத்தில் பாடங்களுக்கு எதற்காக அதிக நேரங்களை ஒதுக்கி மதிப்பெண் ரீதியிலான கல்வியை அளிக்க வேண்டும்? நல் மதிப்பீடு, வாழ்க்கை மதிப்பீட்டில்லா கல்வியால் என்ன பயன்? எட்டாம் வகுப்பு வரை பாடங்களைக் குறைத்துக் கொண்டு மாணவனின் ஆளுமை வளர்ச்சிக்கு உதவும் கல்வித் திட்டத்தை உருவாக்கலாமே. ஆரோக்கிய வாழ்விற்கான உடற்பயிற்சி, யோகா, தற்காப்புப் பயிற்சி, நல்மதிப்பீட்டுக் கல்வியை மூன்று வயது முதல் 13 வயது வரை நாம் அளிக்கும் போது, அவன் மனிதனாக வாழக்கூடிய தகுதிகளைக் கற்றுத் தருகிறோம். ஆர்வமுடன் மாணவன் பள்ளியில் கல்வி கற்கும் சூழலையும் உருவாக்குகிறோம். நம் கல்வித் திட்டத்தின் படி மதிப்பெண் பெற்றெடுத்த குழந்தைகளைத் தான் உருவாக்கிக் கொண்டிருக்கிறோம். இந்த 10 சதவீத மதிப்பெண் குழந்தைகள் தான் பொருளாதார ரீதியாக உயர்நிலைக்குச் செல்கிறார்கள். மீதமுள்ள 90 சதவீதம் மதிப்பெண் எடுக்கத் தவறி விடுகின்றனர். நாமும் நல்மதிப்பீட்டுக் கல்வியை அளிக்கத் தவறி விடுகிறோம். இவையிரண்டும் சேர்ந்து சமுதாய சீர்கேடுகளுக்கு காரணமாக அமைந்து விடுகிறது.

மேலை நாடுகளின் கல்வித் திட்டம்

நாளைய சமுதாயம் மனிதன் வாழக்கூடிய சமுதாயமாக அமைய வேண்டுமெனில் நம் கல்வித் திட்டத்தில் சீரிய மாற்றங்களை மிக விரைவில் நடைமுறைபடுத்த வேண்டும். மேலைநாடுகளில் பள்ளிப்பருவம் முடிந்து கல்லுாரியில் அடியெடுத்து வைக்கும் முன் பல தகுதிச் சான்றிதழ்களை அடிப்படை தகுதிகளாக அவன் பெற்றிருக்க வேண்டும்.

*முதியோர் மற்றும் கருணை இல்லங்களில் குறிப்பிட்ட காலம் பணியாற்றிய சான்றிதழ்கள்.
* ஆறு மாதம் அல்லது ஓராண்டு காலம் பிற கண்டங்களில் எந்த நாட்டிலாவது தன்னார்வத் தொண்டு செய்ததற்கான சான்றிதழ்.
*குறிப்பிட்ட எண்களில் ஆய்வுக் கட்டுரைகள், ஒப்படைப்புகள்.
*சமுதாய நலன் பயக்கும் திட்டங்களில் பங்கேற்ற சான்றிதழ்.
*தன் தனிப்பட்ட திறமைகளை வளர்த்து தேர்ச்சி பெற்ற சான்றிதழ்.
இவையனைத்திற்கும் புள்ளிகள் ரீதியிலான மதிப்பீடுகளை அளிக்கின்றனர். இதனுடன் அவன் படித்த கல்வி மதிப்பெண்களும் இணைக்கப்படுகிறது. இப்படி பல வகையிலும் மாணவனை சமுதாய நலத்திட்டங்களில் ஊக்குவிக்கும் வண்ணம் செயல்முறை பயிற்சிகளை வகுத்துள்ளனர். படிக்கும் காலத்தில் தவறான பாதையின் பக்கம் போகாதவாறு நல்வழியில் திசை திருப்புகின்றனர்.இத்தகைய கல்வித் திட்டங்கள் நம் நாட்டிற்குத் தேவையாக இருக்கும் பட்சத்தில் ஏன் இத்தகைய செயல்முறை பயிற்சிகளை ஊக்குவிக்கக் கூடாது? ஜாதி மற்றும் மதிப்பெண் ரீதியிலான ஒதுக்கீடுகளை ஒதுக்கீடு செய்ய வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம்.

பலன் தரும் மதிப்பீட்டுக் கல்வி :

மாணவன் வாழும் சமுதாயச் சூழலுக்கேற்ப நல் மதிப்பீட்டுக் கல்வியை வரையறுக்கலாமே. கிராம சுகாதார திட்டங்கள், பசுமை புரட்சி திட்டம், விழிப்புணர்வு செயல்பாடு, மாசு கட்டுப்பாடு, நுாலகங்களில் பணியாற்றும் வாய்ப்பு, சாலை பாதுகாப்பு, ஆய்வுக் கட்டுரை சமர்ப்பித்தல், முதியோர், மாற்றுத் திறனாளிகள், மனநலம் குன்றியவர்கள், எய்ட்ஸ் நோயாளிகள், ஒதுக்கப்பட்ட குழந்தைகளுக்கான இல்லங்களில் பணியாற்றும் வாய்ப்பு, தற்காப்புப் பயிற்சி, பொது இடங்களை துாய்மை செய்தல், உடற்பயிற்சி, யோகா பயிற்சி, படிக்கும் காலத்தில் உழைத்து வேலை செய்தல். இதுபோன்ற திட்டங்களில் மாணவனை பங்கேற்கச் செய்யும் போது அவன் மனிதநேயத்தோடு சமூகத்தை நேசிக்கக் கற்றுக் கொள்கிறான். சட்ட திட்டங்களை மதிக்கக் கற்றுக் கொள்கிறான். சமுதாய நலனுக்காக முயற்சி எடுக்கும் சமூகத் தொண்டனாகும் வாய்ப்புகளைப் பெறுகிறான். தன்னம்பிக்கையோடு ஆரோக்கிய வாழ்விற்கு அடித்தளமிடுகிறான்.
இச்செயல்பாடுகளை மாணவச் சமுதாயத்திற்கு அளிக்க வேண்டிய கட்டாயச் சூழலில் இருக்கின்றோம்.

-மி.மரிய அமலி

No comments:

Post a Comment