Tuesday, November 18, 2014


புவியியல் குறியீட்டு எண்
 
காப்புரிமை :: புவியியல் சார்ந்த குறியீடு

புவியியல் சார்ந்த குறியீடு: (Geographical Indication)
ஒரு குறிப்பிட்ட இடத்தையோ, நாட்டையோ சார்ந்த தனித்தன்மை வாய்ந்த பொருட்களுக்கு அளிக்கப்படுவதே புவியியல் சார்ந்த குறியீடாகும். அக்குறிப்பிட்ட இடத்தின் தனித்தன்மை பெற்றதாக அப்பொருள் விளங்கும். பொதுவாக, அத்தகைய பெயர் பொருட்களின் தரத்திற்கான உத்திரவாதம் அளிக்கிறது மற்றும் பொருளின் தனித்தன்மை, அப்பொருளின் பிறப்பிடம், அதாவது அதன் நாடு போன்றவற்றை அறிய உதவுகிறது. பொது விதிகள் 1(2) மற்றும் 10 பாரிஸ் நடைமுறைப்படி தொழில் உடமை பாதுகாப்பு மற்றும் புவியியல் குறியீடுகள் ஆகியவை IPRன் கூறுகளாகும். இந்தியா, உலக வர்த்தக அமைப்பின் உறுப்பினரான பிறகு பொருட்களின் புவியியல் குறியீடுகள் (பதிவு மற்றும் பாதுகாப்பு) சட்டம் இயற்றப்பட்டு, 1999-ம் ஆண்டு செப்டம்பர் 15ம் நாள் முதல் நடைமுறைப்படுத்தப்பட்டது.
 

புவியியல் குறியீடு என்பது ஓர் வரையறுக்கப்பட்ட புவியியல் எல்லைக்குள், குறிப்பிட்ட இடத்துத்துக்கே உரித்தான சிறப்பு அம்சங்களுடன் உருவாகும் ஒரு தரமான பொருளுக்கு அல்லது கலைக்கு வழங்கப்படும் சிறப்புக் குறியீடு ஆகும். இக்குறியீட்டை பெறுவதன் மூலம் அந்த குறிப்பிட்ட பொருளை அல்லது கலையை, வேறுயாரும் வியாபார நோக்கத்துடன் போலியாகவோ அல்லது, அதன் சிறப்பு அம்சங்களை வேறு வகையிலோ உபயோகப்படுத்த முடியாது. இக்குறியீட்டின் கீழ் தங்கள் பொருள் அல்லது கலையை பதிவு செய்யும் கலைஞர்களுக்கு மட்டுமே இந்தக் குறியீட்டை உபயோகிக்கும் உரிமை உண்டு. இதனை தவறாக பயன்படுத்துபவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க முடியும்.

 
தமிழகத்தின் பல கலைப்பொருட்களும் புவியியல் குறியீட்டு எண்ணைப் பெற்றுள்ளன. கலைவேலைப்பாடுள்ள தஞ்சாவூர் தலையாட்டி பொம்மை, தஞ்சாவூர் தட்டும், தஞ்சாவூர் வீணையும் புவியியல் குறியீட்டு எண்ணைப் பெற்றுள்ளன. துணி வகைகளில் காஞ்சிபுரம் பட்டு, மதுரை சுங்குடி, கோவை கோரா காட்டன், ஆரணி பட்டு, சேலம் வெண்பட்டு ஆகியன புவியியல் குறியீட்டு எண்ணைப் பெற்றுள்ளன. நாச்சியார் கோயில் குத்துவிளக்கு, நாகர்கோயில் கோயில் நகைகள், செட்டிநாட்டு கொட்டான், சுவாமிமலை வெண்கல சிலைகள், பத்தமடை பாய்,  ஆகியனவும் தமிழகத்தில்புவியியல் குறியீட்டு எண்ணைப் பெற்றுள்ளன. சமீபத்தில், ஊட்டியில் உள்ள தோடர் இன பெண்களின், 'எம்ப்ராய்டரி' துணி வேலைப்பாடுகளுக்கு, இந்த குறியீடு வழங்கப்பட்டது.

 

 

No comments:

Post a Comment