Wednesday, September 3, 2014

ஐ.ஐ.டி. கவுன்சில்

ஐ.ஐ.டி. கவுன்சில் என்பது நாட்டிலுள்ள 16 ஐ.ஐ.டி.,களின் உச்ச நிர்வாக அமைப்பாகும். இந்த அமைப்பின் தலைவராக இருப்பவர், மத்திய மனிதவளத்துறை அமைச்சர். தவிர, நாடாளுமன்றத்தின் 3 உறுப்பினர்கள், அனைத்து ஐ.ஐ.டி.,களின் தலைவர்கள் மற்றும் இயக்குநர்கள், UGC தலைவர், CSIR தலைமை இயக்குநர், IISc தலைவர் மற்றும் இயக்குநர்கள், மத்திய மனிதவள அமைச்சகத்தால் நியமிக்கப்பட்ட ஒருவர் மற்றும் மத்திய அரசு மற்றும் AICTE -ஆல் நியமிக்கப்படும் 3 நபர்கள் ஆகியோரைக் கொண்டதுதான் ஐ.ஐ.டி. கவுன்சில் என்னும் நிர்வாக அமைப்பு.

Tuesday, September 2, 2014

ரேஷன்

'ரேஷன் அரிசி கடத்தல்..., ஊழியர்கள் உடந்தை' இது போன்ற தலைப்புகளில் செய்திகள் வராத நாட்கள் தமிழகத்தில் இல்லை என்ற நிலை உருவாகி விட்டது. என்ன தான் நடக்கிறது ?

தமிழகத்தில் ஒரு கோடியே 97 லட்சத்து 82 ஆயிரத்து 593 ரேஷன் கார்டுதாரர்கள் உள்ளனர்.
# இதில் ஒரு கோடியே 67 லட்சத்து 21 ஆயிரத்து 538 கார்டுகளுக்கு அரிசி சப்ளை செய்யப்படுகிறது.
# தவிர, 18 லட்சத்து 62 ஆயிரத்து 615 அன்னபூர்ணா கார்டுகளும் உள்ளன.
# 10 லட்சத்து 76 ஆயிரத்து 552 ரேஷன் கார்டுதாரர்கள் அரிசி வேண்டாம், எங்களுக்கு சீனி மட்டும் போதும் என்று வாங்குகின்றனர்.
# 61 ஆயிரத்து 61 கார்டுகள் போலீசார் வசம் உள்ளன.
# 60 ஆயிரத்து 827 கார்டுகள் எந்த பொருளும் வேண்டாம் எனக்கூறி, முகவரி பயன்பாட்டிற்கு மட்டும் 'ஒயிட் கார்டுகளாக' உள்ளன.

கார்டுகளுக்கு
* 1,269 சிவில் சப்ளை முழு நேர ரேஷன் கடைகள் மூலமும்,
* 125 பகுதி நேர ரேஷன் கடைகள்,
* 23 ஆயிரத்து 109 கூட்டுறவு முழுநேர ரேஷன் கடைகள்,
* 124 கூட்டுறவு அல்லாத முழுநேர ரேஷன் கடைகள்,
* பெண்கள் நடத்தும் 533 ரேஷன் கடைகள்,
* 14 மொபைல் ரேஷன் கடைகள்,
* 7967 பகுதி நேர கூட்டுறவு ரேஷன் கடைகள்,
* 18 கூட்டுறவு அல்லாத பகுதி நேர ரேஷன் கடைகள்,
* பெண்கள் நடத்தும் 63 பகுதி நேர ரேஷன் கடைகள் மூலமும் பொருட்கள் சப்ளை செய்யப்படுகின்றன.

மாதந்தோறும்
^ 2 லட்சத்து 96 ஆயிரத்து 453 டன் அரிசி,
^ 35 ஆயிரத்து 133 டன் சீனி,
^ 34 ஆயிரத்து 890 டன் கோதுமை,
^ 65 ஆயிரத்து 140 கிலோ லிட்டர் மண்ணெண்ணெய்
^ மற்றும் விற்பனை மற்றும் தேவைக்கேற்ப உளுந்து, துவரை பருப்பு வகைகள் சப்ளை செய்யப்படுகிறது.

முறைகேடு எப்படி :
இதில் முறைகேடு எங்கே தொடங்குகிறது? ரேஷன் கடைகளை வருவாய்த்துறை அலுவலர்கள், வட்டார கூட்டுறவு வருவாய் அலுவலர்கள், மாவட்ட கூட்டுறவு வருவாய் அலுவலர்கள், பொதுவிநியோகத்துறை கூட்டுறவு சார் பதிவாளர், பொதுவிநியோகத்துறை கூட்டுறவு துணை பதிவாளர், உணவு கடத்தல் தடுப்பு பிரிவு இன்ஸ்பெக்டர், சப்- இன்ஸ்பெக்டர், முத்திரை எடையளவு ஆய்வாளர் மற்றும் அலுவலர்கள், கூட்டுறவு தலைவர் மற்றும் நிர்வாகம், வருவாய்த்துறை பறக்கும் படை, கூட்டுறவு பறக்கும் படை மற்றும் தணிக்கை துறையினர் ஆய்வு செய்கின்றனர். தவிர உள்ளூர் தாதாக்கள், அரசியல்வாதிகள், வார்டு கவுன்சிலர்கள் கண்காணிப்பும் உண்டு. பெரிய வருத்தமான விஷயம். ஒவ்வொரு கண்காணிப்பிற்கும், ஆய்வுக்கும் தகுதிக்கு ஏற்ற விலையை ரேஷன் ஊழியர்கள் கொடுத்தே ஆக வேண்டும். அவர்கள் எத்தனை நியாயமாக நடந்து கொண்டாலும் ஆய்வு அதிகாரிகளுக்கு அதைப் பற்றிய கவலை இல்லை. அவர்களுக்கு தரும் தொகை தான் முக்கியம். ரேஷன் பொருட்கள் சப்ளையிலேயே இந்த முறைகேடு தொடங்குகிறது.

எடை குறைவு :
100 கிலோ எடை கொண்ட அரிசி மூடை, வரும் போதே 93 கிலோ எடையில்தான் ரேஷன் கடைக்கே வந்து சேருகிறது. (சீனி உட்பட எல்லாமும் தான்) மூடைக்கு ஏழு கிலோ காற்றில் பறந்து விட்டதா என்பது சப்ளை அதிகாரிகளுக்கும், அரசுக்கும் நன்கு தெரியும். ஆய்வுக்கு மாதந்தோறும் வரும் அதிகாரிகள் தொகை கேட்பது, எல்லோருக்கும் தெரிந்த உண்மை. இதனால் லஞ்சம் வாங்குபவர்களுக்கு எந்த கவலையும் இல்லை. தான் வாங்கா விட்டாலும் தன் மீது வாங்கியதாக முத்திரை விழும். எனவே வாங்கிக்கொண்டே முத்திரை பெற்றுக் கொள்வோம், என நினைத்தே எல்லா அதிகாரிகளும் வாங்கிக் கொள்கின்றனர். இப்படி மாதந்தோறும் நீளும் மாமூல் பட்டியல் உள்ளூர் தாதா, தெரு தாதா, ரவுடி, கவுன்சிலர் அவர்களின் டிரைவர்கள் வரை வந்து நிற்கிறது.

எம்.எல்.ஏ., எம்.பி.,க்கள் எப்படி :
இதில் சந்தோஷப்படும் ஒரே விஷயம் எம்.எல்.ஏ., எம்.பி.,க்களுக்கு ரேஷன் கடையை ஆய்வு செய்யும் அதிகாரம் இருந்தாலும், இதுவரை தமிழகத்தில் எந்த எம்.எல்.ஏ.,வும், எம்.பி.,யும் ரேஷன் கடையில் லஞ்சம் வாங்கியதாக புகார் இல்லை. மற்றபடி லஞ்சம் வாங்காத அதிகாரிகளே இல்லை. ஆனால் ஆடி மாதம் பெயரைச் சொல்லி ஆடு அறுத்து சாப்பிடுவது போல், அதிகாரிகள் பணத்தை வாங்கிக் கொண்டு, ரேஷன் ஊழியர்கள் மீது முத்திரை குத்தி விடுகின்றனர். பலியாகும் ஆடுகள் தான் ரேஷன் ஊழியர்கள். இப்படி மாதந்தோறும் இவர்கள் தரும் லஞ்சப்பணத்திற்கு வரும் ரேஷன் பொருட்களில் பாதியை கள்ள மார்க்கெட்டில் விற்றால் மட்டுமே சமாளிக்க முடியும். அது தான் தமிழகம் முழுவதும் உள்ள எல்லா ரேஷன் கடைகளிலும் நடந்து கொண்டுள்ளது. தமிழக அரசு நிர்வாகத்தில் இதை தெரியாத அதிகாரிகள் யாருமே இல்லை. ஆனாலும் ஏழைகளை ஏமாற்றவும், மக்களை ஏமாற்றவும் ஏதோ ரேஷன் ஊழியர்கள் மட்டும் தவறு செய்வது போலவும், அவர்களை தண்டிக்க நடவடிக்கை எடுப்பது போலவும் பேசி நாடகம் நடத்தி விடுகின்றனர்.

நேர்மை எங்கே ?
இதில் புதிதாக நடந்த நகைச்சுவை நாடகம். ரேஷன் பொருள் எடை குறைந்தாலோ, இருப்பு குறைந்தாலோ அபராதம் பல மடங்கு அதிகரிப்பு என்பது. ஆய்வு அதிகாரிகள் நேர்மையாக நடந்தால், ரேஷன் சப்ளை சீராகி விடும் என்பது எல்லோருக்குமே தெரியுமே. அடிப்படையை சரி செய்யாமல் கட்டடம் கட்டிக்கொண்டே போனால், இந்த பொய் எத்தனை நாள் தான் தாங்கும். அடித்தளம் இல்லாத அடுக்குமாடி கட்டடம் இடிந்தது போல் இடிந்து விடாதா? இதிலும் சிக்கி சாகப்போவது ரேஷன் ஊழியர்கள் தான்.எடை குறைவை சரி செய்ய பொருட்களை பாக்கெட்டில் தரலாம். பாக்கெட்டாக கடத்தினால் என்னவாகும் என்ற கேள்வி எழுகிறது. அடிப்படையை சரி செய்ய எல்லோருக்கும் தெரியும். ஆனால் பணம் வந்து கொண்டிருக்கும் பாதை அடைபட்டு விடும். இதற்கு பயந்து மற்றவர் மீது பழி போட்டு தாங்கள் சம்பாதித்து வருகின்றனர். இந்த நாடகம் எப்போது முடிவுக்கு வரும்.

Tuesday, August 26, 2014

என்ன ஆண்டி? பொன்னாண்டி.
என்ன பொன்? காக்காய்ப்பொன்.
என்ன காக்காய்? அண்டங்காக்காய்.
என்ன அண்டம்? பூஅண்டம்
என்ன பூ? பனம்பூ
என்ன பனை? தாளiப்பானை
என்ன தாளi? நாகதாளi
என்ன நாகம்? சுத்தநாகம்
என்ன சுத்தம்? வீட்டுச் சுத்தம்
என்ன வீடு? ஓட்டுவீடு
என்ன ஓடு? பாலோடு
என்ன பால்? நாய்ப்பால்
என்ன நாய்? வேட்டைநாய்
என்ன வேட்டை? பன்றிவேட்டை
என்ன பன்றி? ஊர்ப்பன்றி
என்ன ஊர்? கீரையூர்
என்ன கீரை? அறைக்கீரை
என்ன அறை? பள்ளiயறை
என்ன பள்ளi? மடப்பள்ளi
என்ன மடம்? ஆண்டிமடம்
என்ன ஆண்டி? பொன்னாண்டி

Monday, August 25, 2014

‘மின்னணு (டிஜிட்டல்) வழிக் கல்வி தான் எதிர்காலம்’

எதிர்காலத்தில் பள்ளிகளிலும் சரி, கல்லூரிகளிலும் சரி, பாடங்கள் அனைத்தும் மின்னணு (டிஜிட்டல்) தொழில்நுட்பத்தில் தான் வழங்கப்படும் என்று பலரும் நம்புகின்றனர். அந்தளவுக்கு தகவல் தொழில்நுட்பம் வளர்ச்சி அடைந்து வருகிறது. அதேசமயம், அதில் சில சவால்களும் உள்ளன.

நவீன தொழில்நுட்பம் எப்படி முறையாக பயன்படுத்தப்படுகிறது? அதை எப்படி முழுமையாக ஏற்றுக்கொள்ளப் போகிறார்கள்? மாற்றத்திற்கு ஏற்ப தங்களை எப்படி தயார்ப்படுத்திக்கொள்ளப் போகிறார்கள்? என்பவையே அவை.

ஆயுர்வேதம், வேளாண்மை மற்றும் கலைப் படிப்புகளில் நவீன தகவல் தொழில்நுட்பம் இன்னும் முக்கியத்துவம் பெறவில்லை. அதற்காக மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்துடன் இணைந்து தனித்துவமிக்க பாடத்திட்டத்தை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளோம். அதில் வெறும் தகவல் தொழில்நுட்பம் இடம்பெறாது; மென்திறன் (சாப்ட் ஸ்கில்ஸ்), தலைமைப் பண்பு உள்ளிட்டவையும் இடம்பெறும். நாடு முழுவதும் 29 பல்கலைக்கழகங்களுடன் இணைந்து செயல்படுகிறோம். வகுப்பறைகள் டிஜிட்டல் மயமாக்கப்படும் பட்சத்தில், போதிய அனுபவமிக்க ஆசிரியர்களும் தேவை என்பதால், அவர்களுக்கும் உரிய பயிற்சி அளிக்க உள்ளோம்.

பாலிடெக்னிக் கல்லூரிகளை எடுத்துக்கொண்டால், அங்கு மாணவர்களுக்கு தற்போது கற்பிக்கப்படும் பாடத்திட்டத்திற்கும், தொழில்நிறுவனங்களின் தேவைக்கும் மிகப்பெரிய இடைவெளி உள்ளது. இதனை அரசும் உணர்ந்துள்ளது. எனவே, மத்திய அரசுடன் இணைந்து சிறப்பு திட்டத்தில் பாலிடெக்னிக் மாணவர்களுக்கு கையாளுதல் (ஹேண்ட்ஸ் ஆன்) பயிற்சி அளிக்க உள்ளோம்.

பள்ளி மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு நவீன வகுப்பறை சூழலை உருவாக்கும் முயற்சியாக சென்னையைச் சேர்ந்த 4 பள்ளிகளில் விண்டோஸ் ஹைபிரிட் டேப்லெட்களை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. வகுப்பறைகளில் ஆசிரியர்கள் கற்பிப்பதை அப்படியே டிஜிட்டல் வடிவில் கொடுப்பதால், மாணவர்கள் தங்களுக்கு தேவையானபோதெல்லாம் அவற்றை திரும்ப பயன்படுத்தமுடியும். சுயமாக கற்றல் என்பது மிகவும் சக்திவாய்ந்தது.

வகுப்பறையில் கிடைக்கும் அதே அனுபவத்தை ஒரு டேப்லட் வாயிலாகவும் பெற வாய்ப்பு உண்டு. தற்போது அனைத்து பாடங்களையும் டேப்லட்டில் உருவாக்க சில சிரமங்கள் உள்ளன என்றபோதிலும், நவீன தொழில்நுட்ப வழிக் கல்வி தான் எதிர்காலம்.

- பிரதீக் மேத்தா, இயக்குனர் (கல்விப் பிரிவு), மைக்ரோசாப்ட் இந்தியா.

Thursday, August 21, 2014

‘குழுக்கற்றல்’ சரியா? தவறா?

‘குரூப் ஸ்டடி’ என்ற 'குழுக்கற்றல்' ஒரு விஷயத்தை, ‘படிப்பதாக கூறி ஏமாற்றும்‘ ஒரு வித்தை என்றே இன்றும் பலர் நினைக்கின்றனர். இன்றைய நிலையில் பல பெற்றோர்கள் தங்களின் பிள்ளைகள் ‘குரூப் ஸ்டடி’யில் ஈடுபடுவதை விரும்புவதில்லை. ஏனெனில் நண்பர்களுடன் சேர்ந்து படிக்கிறேன் என்ற போர்வையில், அரட்டை அடித்து நேரத்தை தங்களின் பிள்ளைகள் வீணாக்குகின்றனர் என்றே அவர்கள் கவலைப்படுகின்றனர்.

‘குரூப் ஸ்டடி’ என்ற வெற்றிகரமான பயிற்சியை சரியாக அமைத்துக்கொள்ளவில்லை எனில், பெற்றோர்களின் கவலை நிஜமாகிவிடும். ஆனால் ‘குரூப் ஸ்டடி’, அதன் உண்மை அம்சத்தோடு மிகச் சரியாக மேற்கொள்ளப்பட்டால், அதன்மூலம் கிடைக்கும் நன்மைகள் ஏராளம்.
‘குரூப் ஸ்டடி’ என்பது தேர்வு நேரத்தில் மட்டுமின்றி, எல்லா காலங்களிலும், மாணவர் பருவம் முழுவதும் கடைபிடிக்கத்தக்க ஒரு வெற்றிகரமான அம்சம். சிறந்த நன்மையைத் தரும் ‘குரூப் ஸ்டடி’யை எவ்வாறு மேற்கொள்வது என்று மாணவர்கள் மற்றும் பெற்றோருக்கு நிபுணர்கள் கூறும் முக்கிய வழிமுறைகள் இங்கே:

[#] ‘குரூப் ஸ்டடி’க்கு தகுந்த நபர்கள் அமைவது முதலில் மிக அவசியமானது. ஒரே வகுப்பில் அல்லது ஒரே பள்ளியில் படிக்கும் அல்லது அருகருகே வசிக்கும் மாணவர்களாக இருக்கலாம். ஆனால் அவர்களுக்குள் ஒரு நல்ல புரிந்துணர்வு இருக்க வேண்டும். படிப்பில் அக்கறையும், தேர்வில் நல்ல மதிப்பெண்கள் பெற வேண்டும் என்ற ஆர்வமும் இருக்க வேண்டும். அதிகபட்சமாக 5 மாணவர்கள் வரை பங்கேற்கலாம்.

[#] ஒரு நல்ல ‘குரூப் ஸ்டடி’ என்பது மற்றொரு வகுப்பறை போன்றது. ஏனெனில் பல மாணவர்கள் சேரும்போது ஒரு பாடத்தில் தங்களின் தனிப்பட்ட புரிந்துணர்வுகளை பரவலாக பகிர்ந்துகொள்கின்றனர். ஒரு பாடத்தை படிக்க எடுத்துக்கொள்ளும்போது, எத்தனை மாணவர்கள் இருக்கிறார்களோ அத்தனை பகுதிகளாக பிரித்துக்கொள்ள வேண்டும். அந்த பாடத்தை அனைவரும் முடிக்க ஒரு குறிப்பிட்ட நேரத்தையும் நிர்ணயித்துக் கொள்ள வேண்டும். முடிவில் பிரித்துக்கொண்ட ஒவ்வொரு பகுதியிலும் அவரவர்களுக்கு புரிந்த விஷயங்களை மற்றவர்களுடன் பகிர்ந்துகொள்ள வேண்டும். இதனால் ஒரே பாடத்தில் பரவலான புரிதல் ஏற்படும். அந்த பாடத்தைப் பற்றிய பயமும் போகும். ஒருவேளை அதுசம்பந்தமான ஏதேனும் குழப்பங்கள் தோன்றினால், ஆசிரியரிடம் கேட்டு சரிசெய்துகொள்ள வேண்டும்.

[#] பகுதிகளைப் பிரித்துக்கொண்டு படிக்கும்போது, தங்களின் பகுதியை நன்கு படித்து தெளிவாக விளக்க வேண்டும் என்ற ஆர்வம் ஒவ்வொருவருக்கும் ஏற்படும். எனவே ஒவ்வொருவரும் ஆழமாகவும், கவனமாகவும் படிப்பார்கள். இதனால் ஒரு ஆரோக்கியமான படித்தல் போட்டி அங்கே உருவாகும். ஒருவருக்கு சரியாக தெரியாத விஷயம் மற்றவருக்கு நன்றாக தெரிந்திருக்கும். இதன்மூலம் பாடத்தில் எழும் சந்தேகங்கள் தீர்க்கப்படும்.

[#] ‘குரூப் ஸ்டடி’க்கு தேர்ந்தெடுக்கும் இடம் பற்றி யோசிக்க வேண்டியதும் முக்கியம். எந்த தொந்தரவும், இரைச்சலும் இல்லாத, கவனம் சிதறும் வகையிலான விஷயங்கள் இல்லாத இடமாக இருந்தால் மிகவும் நல்லது. ஒரு நல்ல அறையாகவோ, மொட்டை மாடியாகவோ மற்றும் ஒதுக்குப்புறமான மரத்தடியாகவோ இருக்கலாம்.

[#] ‘குரூப் ஸ்டடி’யில் தேர்வுக்கான ஒரு மாதிரி கேள்வித்தாளை உருவாக்கி நண்பர்களுக்குள் எழுதிப் பார்க்கலாம். அவற்றை மாற்றி மாற்றி திருத்திக் கொள்ளலாம். தேர்வுக்கான நேரத்தையும் நிர்ணயித்துக்கொள்ள வேண்டும். இதனால் ஒரு பயிற்சி தேர்வை எழுதிய அனுபவம் உங்களுக்கு கிடைத்து, தேர்வு பயம் அகன்றுவிடும். விடைத் தாள்களை மாறி மாறி திருத்திக் கொள்வதால் உங்களின் தவறுகள் எளிதாக கண்டுபிடிக்கப்படும்.

[#] ‘குரூப் ஸ்டடி’யில் ஈடுபடும் முன்பாக ஒரு குழு தலைவரை தேர்வுசெய்து கொள்ளுதல் நல்லது. அவர் குழுவின் நடவடிக்கைகளை ஒருங்கிணைப்பார். ஒவ்வொரு மாணவரும் மாறி மாறி குழுத் தலைவராக இருக்கலாம். ஆனால் ஒழுக்கம் மற்றும் கட்டுப்பாடு என்பது மிகவும் முக்கியம்.

Tuesday, August 19, 2014

இந்தி: திணிப்பும் எதிர்ப்பும்


மத்திய உள்துறை அமைச்சகமும், அலுவல் மொழித்துறையும் (10-03-2014, 27-05-2014) ஆகிய நாட்களில் மாநில அரசுகளுக்கு அனுப்பிய சுற்றறிக்கைகள் எப்போதும் போல தமிழக அரசியலில் சலசலப்பை உண்டாக்கியிருக்கிறது. “அரசு அலுவலர்கள் அதிகாரப்பூர்வமாகக் கையாளும் சமூக வலைத்தளங்களில் (டுவிட்டர், ஃபேஸ்புக், பிளாக் முதலியன) கட்டாயம் இந்தியைப் பயன்படுத்த வேண்டும் அல்லது ஆங்கிலம், இந்தி ஆகிய இரண்டையும் பயன்படுத்தலாம். ஆங்கிலம், இந்தி ஆகிய இரண்டையும் பயன்படுத்தும்போது இந்திக்கே முன்னுரிமை கொடுக்க வேண்டும்” என்பதே சுற்றறிக்கைகளின் உள்ளடக்கம்.

மத்திய அரசு இது போன்ற உத்தரவுகளைப் பலமுறை பிறப்பித்திருக்கிறது. மத்திய அரசின் இந்திக்கு ஆதரவான பல்வேறு அரசாணைகளையும், சுற்றறிக்கைகளையும் தமிழ் ஊடகங்களும், தமிழ் மக்களும் அரசியல் கண்ணோட்டத்தில் மட்டுமே அணுகுகின்றனர். பல்வேறு மாநிலங்களில் ஒன்றாகத் தமிழகம் இருப்பதால் பெருவாரியான ஒரு சமூகம் சிறுபான்மையான ஒரு சமூகத்தின் மீது செலுத்தும் ஆதிக்கமாகவே இந்தித் திணிப்பை எதிர்கொள்கின்றது. அதனால் எதிர்ப்புகளும், போராட்டங்களும் பெருகின. இந்திக்கு எதிரான போராட்டத்தில் 1937களிலிருந்து தமிழகம் இழந்தவை கொஞ்சநஞ்சமல்ல. 1939 சனவரி 15இல் இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் முதல் உயிர் நீத்த நடராசன் முதல் எத்தனையோ உயிர்த் தியாகங்கள்; பெரியார் போன்ற தலைவர்களும் பெருந்திரளான மாணவர்களும் அனுபவித்த சிறைவாசம் எனத் துயரங்கள் நிறைந்தது தமிழகத்தின் இந்தி எதிர்ப்பு.

இந்தி எதிர்ப்பு என்னும் ஒற்றை முழக்கத்தைப் பிரதானப்படுத்தித் தமிழ்நாட்டில் 1967இல் திமுக ஆட்சியைப் பிடிக்கும் அளவிற்குத் தமிழர்களிடத்தில் தமிழுணர்வைத் தட்டி எழுப்பியது இந்தி. சாதி, மதம் போன்ற பாகுபாடுகளைக் களைந்து தமிழர்களை ஒன்றிணைக்கும் ஒரே சக்தி தாய்மொழி என்பதைத் தமிழக அரசியல் தலைவர்களுக்கு உணர்த்தியது இந்திதான். சுதந்திரப் போராட்டத்தில் இந்தியர்களை ஒருங்கிணைக்க காங்கிரஸுக்குப் பெரும் சவாலாக இருந்தவை இந்தியர்களின் பலதரப்பட்ட தாய்மொழிகளே. இவை திமுக போன்ற மாநிலக் கட்சிகளின் வளர்ச்சிக்கு நீர்பாய்ச்சின. அந்த விசுவாசமே இன்றளவும் தமிழக அரசியல் தலைவர்கள் இந்தியை எதிர்த்தும் தாய்மொழியை ஆதரித்தும் எழுதுகின்ற கடிதங்களுக்கும், விடுக்கின்ற அறிக்கைகளுக்கும் அடிப்படை. 1930களிலிருந்தே இந்த எதிர்ப்பை இந்தியா கண்டுகொண்டிருக்கிறது. இந்தியாவின் வடக்கு, மேற்கு, கிழக்குப் மாநிலங்களில் இருந்து வரும் எதிர்ப்பை விடத் தெற்கிலிருந்து வருவது வலிமையானதாகவும் உணர்வுபூர்வமானதாகவும் இருக்கும் என்பதை மத்திய அரசே அறியும்.

இந்திக்கு ஆதரவான மத்திய அரசின் நடவடிக்கைகளில் அரசியலைத் தவிர்த்து மொழி சார்ந்த கண்ணோட்டத்தில் அணுகினால் நமக்குக் கிடைக்கும் பிம்பம் முற்றிலும் புதிதானது. மேற்சொன்ன சுற்றறிக்கைகளை நடைமுறைப்படுத்துவது எவ்வளவு சவால் நிறைந்தது என்பதற்கு இந்தியாவில் ஏராளமான சான்றுகள் இருக்கின்றன. தமிழக அரசும் தமிழ் வளர்ச்சித்துறையும் தமிழர்களிடம் தமிழை வளர்க்கப் பட்டபாடுகள் இதற்குச் சிறந்த எடுத்துக்காட்டு. தமிழில் கையெழுத்திடுங்கள், முன்னெழுத்தைத் தமிழில் எழுதுங்கள், பெயரைத் தமிழில் எழுதுங்கள், அரசாணைகள், அறிவிப்புகள், சுற்றறிக்கைகள், கடிதங்கள் முதலியவற்றைத் தமிழில் அனுப்புங்கள் என்று 1956இல் தமிழ் ஆட்சிமொழிச் சட்டம் இயற்றப்பட்டு,
(23-1-1957)இல் ஆளுநரின் ஒப்புதலுடன் நடைமுறைக்கு வந்தது.

எத்தனையோ உத்தரவுகள் போடப்பட்டன. அவற்றையெல்லாம் நடைமுறைப்படுத்த முடிந்ததா? அவ்வுத்தரவுகளை இன்றைய நடைமுறையோடு பொருத்திப் பார்த்தால் ஏமாற்றமே மிஞ்சும். அரசு அலுவலர்கள் அனைவரும் தமிழைத்தான் பயன்படுத்த வேண்டும் என்று இந்திக்காரர்களிடம் கேட்கவில்லை, தமிழைத் தாய்மொழியாகக் கொண்ட தமிழர்களிடம்தான் தமிழக அரசு வேண்டியது. அதுவே சாத்தியப்படாதபோது, இந்தியைத் தாய்மொழியாகக் கொள்ளாதவர்களிடம் மத்திய அரசு போடும் இந்த உத்தரவுகள் சாரமற்றவை. தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, கர்நாடகா, ஒடிசா, குஜராத், மேற்குவங்கம், அஸ்ஸாம், மேகாலயா, நாகலாந்து, திரிபுரா, பஞ்சாப், காஷ்மீர் முதலிய மாநிலங்களில் பணியாற்றும் இந்தி அறியா மத்திய அரசு அதிகாரிகள் தங்கள் அதிகாரப்பூர்வ சமூக வலைத்தளங்களில் இந்தியைப் பயன்படுத்துவது நடைமுறையில் இயலாதது. சாத்தியப்படாத ஒன்றால் தன் அரசுக்கு ஏற்படும் அவப்பெயரை யாரும் விரும்புவதில்லை. எனவே, இந்தச் சுற்றறிக்கை வந்த சில நாட்களிலேயே, இந்தி பேசும் மாநிலத்தவர்களுக்கு (இந்தியைத் தாய்மொழியாகக் கொண்டவர்களுக்கு) மட்டுமே பொருந்தும் என மோடி அரசு பின்வாங்கியது.

இன்று தமிழுக்கு எதிரி இந்தியோ, சமஸ்கிருதமோ அல்ல. அதே போன்று இந்திக்கு எதிரி தமிழோ, பிற மாநில மொழிகளோ அல்ல. இந்திய மொழிகள் அனைத்திற்குமான பொது எதிரி ஆங்கிலம். ஆங்கிலேயரின் காலனி ஆதிக்கத்திலிருந்து விடுபட்ட பெரும்பாலான நாடுகள் தம் தாய்மொழியைத் தம் மக்களிடம் தக்கவைப்பதற்கே இன்று தடுமாறிக்கொண்டிருப்பதை மத்திய அரசு நன்கு உணர்ந்திருக்கிறது. அந்த அளவிற்கு ஆங்கிலத்தின் வீச்சு வேகமாகவும் ஆழமாகவும் இருப்பதால் மத்திய அரசு இந்திக்கு ஆதரவான திட்டங்களை விரிவுபடுத்த வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது.

தமிழ்நாடு பல்வேறு ஆட்சியாளர்களின் கீழ் இருந்தபோதெல்லாம் பல்வேறு மொழிகள் தமிழகத்தின் ஆட்சி மொழியாகவும் செல்வாக்குப் பெற்ற மொழியாகவும் இருந்திருக்கின்றன. சோழர் ஆட்சியில் சமஸ்கிருதம்; மொகலாயர் ஆட்சியில் பாரசீகம், அரபி, உருது; நாயக்கர் ஆட்சியில் தெலுங்கு; ஆங்கிலேயர் ஆட்சியில் ஆங்கிலம்; பிரெஞ்சுக்காரர் ஆட்சியில் (புதுச்சேரி) பிரெஞ்சு எனத் தமிழகத்தில் செல்வாக்குப் பெற்ற பிறமொழிகளின் வரலாறு நீளமானது. அந்தந்தக் காலகட்டத்தில் தமிழகத்தில் செல்வாக்குப் பெற்றிருந்த மொழிகள் தமிழின் மீதும் ஆதிக்கம் செலுத்தின. இன்று பயன்பாட்டில் உள்ள பொதுத்தமிழில் சமஸ்கிருதம், பாரசீகம், அரபு, உருது, தெலுங்கு, ஆங்கிலம், பிரெஞ்சு (புதுச்சேரித் தமிழ்) எனப் பிறமொழிச் சொற்கள் ஏராளம் கலந்திருக்கின்றன. இந்த நிலை இலங்கைத் தமிழிலோ, சிங்கப்பூர்த் தமிழிலோ, மலேசியத் தமிழிலோ, ஆப்பிரிக்கத் தமிழிலோ காணமுடியாதது.

பிற மொழியாளர்களின் ஆட்சியிலிருந்து நாம் விடுதலை பெற்றாலும், தமிழில் கலந்த பிற மொழிச்சொற்களைக்களைய முடியவில்லை. இந்த நிலை தமிழுக்கு மட்டும் நேர்ந்ததல்ல. இந்திய மொழிகள் அனைத்திற்கும் உண்டு. தமிழில் “மணிப்பிரவாளம்” என்று ஒரு புதிய நடையே உருவாகும் அளவிற்குச் சமஸ்கிருதத்தின் தாக்கம் இருந்திருந்தாலும் அதைவிடப் பலமடங்காக இன்று ஆங்கிலத்தின் தாக்கம் இருக்கின்றது. “தங்கிலிஸ்” என்று பரவலாக அழைக்கப்படும் ஆங்கிலமும் தமிழும் கலந்த நடை இன்று தமிழில் ஆழமாகக் வேரூன்றியிருக்கிறது. ஆங்கிலேயர் ஆட்சியில்கூட இந்த அளவிற்கு ஆங்கிலம் பரவவில்லை. தூய தமிழிலோ, தூய ஆங்கிலத்திலோ ஒரு தொடர்கூட அமைக்கத்தெரியாது இரண்டையும் கலக்கின்றனர். தமிழரிடையே மிகுந்த வரவேற்பைப் பெற்ற “தங்கிலிஸ்” சோழர்காலத்தில் மணிப்பிரவாளம் பெற்ற செல்வாக்கை விட, சுதந்திரத் தமிழகத்தில் மிகுந்த செல்வாக்கோடு திகழ்கின்றது.

ஆங்கிலம் தம் தாய்மொழியைச் சிதைத்துவிடும் என்பதை இந்திக்காரர்கள் உணர்ந்த அளவிற்குத் தமிழர்கள் உணர்ந்திருக்கிறார்களா என்று தெரியவில்லை. மத்திய அரசு எடுக்கும் இந்திச்சார்பு நடவடிக்கைகள் அனைத்தும் இந்தியா முழுமையும் இந்தியைப் பரப்ப வேண்டும் என்னும் நோக்கமுடையவை என்றாலும் அது நடைமுறைச்சிக்கல் நிறைந்தது. இந்திய மாநிலங்கள் முழுமையும் ஆங்கிலமொழிக்கு அடிமை. உண்மையைச் சொன்னால் ஆங்கிலம் இந்தியின் கழுத்தை நெரித்துக் கொண்டிருக்கிறது. இன்று இந்தி தன் கழுத்தை விடுவிப்பதற்குத்தான் போராட வேண்டியிருக்கிறதேயொழிய பாய்ச்சலுக்குத் தயாரில்லை. கழுத்தை விடுவிக்கும் முயற்சியாகவே மத்திய அரசின் இந்திச்சார்பு நடவடிக்கைகள் இருக்கின்றன. ஆனால், செத்த பாம்பைக் கண்டு பயப்படுவதைப்போல, இந்தியைக் கண்டு தமிழக அரசியல்வாதிகள் இந்திப்புலி பாயப்போகிறது பாயப்போகிறது எனக் கூச்சலிட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

அதே நேரத்தில் ஆங்கிலப்புலி தமிழர்களின்மீது பாய்ந்து துவம்சம் செய்து கொண்டிருக்கிறது. ஆங்கிலத்தின் ஆதிக்கத்தை ஏற்றுக்கொண்ட தமிழர்கள் இந்தியை எதிர்த்தனர். இந்தி தமிழகத்தில் மொழியிலும், கல்வியிலும், மக்களிடத்திலும் எத்தகையை விளைவுகளை ஏற்படுத்தும் என அசரீரி கேட்டு அஞ்சியவர்கள் அத்தகைய விளைவுகளை ஆங்கிலம் இழைத்தபோது கரவோசையோடு வரவேற்றார்கள், ஊக்கப்படுத்தினார்கள். தமிழின் அழிவு அண்ணனால் வரக்கூடாது, அடுத்தவனால் வரலாம் எனக் குடும்பப் புண்ணியம் காத்த தம்பிகள் தமிழர்கள். அரசியல், பொருளாதாரம், கல்வி முதலியவற்றின் அடிப்படையில் இந்தியால் தமிழகத்திற்குப் பின்னடைவு ஏற்படும் என்பதில் நியாயம் உண்டு. ஆனால், மொழி அடிப்படையில் இன்று ஆங்கிலத்தால் தமிழ் அடைந்திருக்கும் சிதைவும் அழிவும் இந்தியால் நிகழ்த்த முடியாதது. ஆங்கிலத்தின் வீச்சைப் புரிந்து கொண்டு மத்தியில் முரணான கொள்கையுடைய கட்சிகள் ஆட்சிக்கு வந்தாலும் இந்திக்காப்பில் ஒன்றிணைகின்றன.

ஆனால் தமிழகத்தின் நிலை? அய்யா தொடங்கிவைத்த தமிழ் நிறுவனம் அம்மா ஆட்சியில் உறங்கும், அம்மா கொண்டுவந்த தமிழ் அமைப்புகள், அய்யா ஆட்சியில் உறங்கும். திராவிடக் கட்சிகளின் ஆட்சி திராவிட மொழியான தமிழுக்கு ஆக்கப்பூர்வமாக என்ன செய்திருக்கின்றன?. அதிமுக ஆட்சியின் மூன்றாண்டு (2011-2014) சாதனைக்குறிப்பில் தமிழ் வளர்ச்சித்துறை ஆற்றியுள்ள பணிகளைப் பார்த்தால் ஓர் உண்மை புரியும். திராவிடக் கட்சிகளின் தமிழ் வளர்ச்சி, தமிழ் மேம்பாடு என்பது தமிழறிஞர்களுக்கு விருது கொடுப்பது, ஓய்வூதியம் அளிப்பது, தமிழ்த்தாய்க்குச் சிலை திறப்பது, தமிழ்ப் புத்தாண்டை மாற்றுவது, கொண்டாடுவது, தமிழாய்வு என்னும் பெயரில் சில நிறுவனங்களுக்கு நிதி அளிப்பது முதலியவற்றோடு நின்றுவிடுகின்றது. தமிழை வளப்படுத்தி அடுத்த தலைமுறைக்குக் கொண்டு செல்லும் எந்தத் திட்டமும் தமிழக அரசிடம் இல்லை. இருபதாம் நூற்றாண்டில் தனிநாயகம் அடிகள் போன்ற தமிழறிஞர்கள் தொலைநோக்குப் பார்வையில் தொடங்கிய உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் போன்றவை ஆய்வுத் தடத்திலிருந்து ஆட்சியாளர்களின் துதிபாடிகளாக மாறிவிட்டன. தமிழறி ஞர்கள் அலங்கரித்த இருக்கைகள் கறைபடிந்த கரைவேட்டிக்காரர்களின் கைக்களுக்குள் சிக்கியுள்ளன. மத்திய அரசு இந்தியைக் காப்பாற்ற எடுக்கும் முயற்சியில் சிறிதளவு கூட (மத்திய அரசுக்குப் போட்டியாகக்கூட) தமிழைக் காக்கத் தமிழகத்தை ஆண்ட/ஆளுகின்ற திராவிடக் கட்சிகள் எடுக்கவில்லை என்பதற்குத் தமிழ்நாட்டில் இருக்கும் கல்வி நிறுவனங்களே சாட்சி.

இந்தி: இந்தியாவின் ஆட்சிமொழி?

ஒரு மொழியுடைய நாடுகளைவிட இந்தியா போன்ற பன்மொழி கொண்ட நாடுகள் தனியொரு மொழியைத் தேசியமொழி, அலுவல்மொழி எனப் பிரகடனப்படுத்துவதில் நிறையச் சிக்கல்கள் இருக்கின்றன. மொழிகளின் தொட்டில் என மொழியியலாளர்களால் அழைக்கப்படும் இந்தியாவில் 1600க்கும் மேற்பட்ட மொழிகள் வழக்கில் இருக்கின்றன. அவற்றில் 22 மொழிகள் அரசு அலுவல் மொழியாக அங்கீகரிக்கப்பட்டுள்ளன. அந்தந்த மாநிலங்களில் அவை அலுவல் மொழியாக இருந்தாலும் ஒட்டுமொத்த இந்தியாவிற்கும் பொதுவான ஓர் அலுவல் மொழி இருந்தால் இந்தியாவின் வளர்ச்சி விரைவுபடும் என மத்திய அரசு நம்புகிறது. அதற்கு சீனா, ஜப்பான் போன்ற ஆசிய நாடுகளையும், பிரான்ஸ், ஜெர்மனி போன்ற ஐரோப்பிய நாடுகளையும் முன்னுதாரணமாகக் காட்டுகிறது.

பொது அலுவல் மொழியாக இந்தியை நிலைநிறுத்த மத்திய அரசு தொடர்ந்து முயல்கின்றது. இந்தி பொது அலுவல் மொழியாவதில், வடமாநிலத்தில் உள்ள உருது பேசும் பெருவாரி மக்களுக்கே உடன்பாடில்லை. அதனால் சுதந்திரப் போராட்டத்தை வலுப் படுத்த, 1920களில் இந்தியும் உருதும் கலந்த இந்துஸ்தானியைக் காந்தியும் நேருவும் ஊக்குவிக்க வேண்டிய நிலை வந்தது. ஆனால், அதுவும் சரியான தீர்வல்ல. இந்திக்கு இருக்கும் ஆதரவைப் போன்று அதற்கான எதிர்ப்பும் அதிகம். மத்திய அரசு தொடர்ந்து இந்தியை வலியுறுத்துவதற்கான காரணம் வாக்குப் பெரும்பான்மை. அதிக வாக்காளர்களைக் கொண்ட மொழி இந்தி என்ற எண்ணத்தை மத்திய அரசு மொழிக் கொள்கையிலும் கடைப்பிடிக்கின்றது. சுதந்திரத்திற்குப் பின் 1949இல் தேசத்தில் இந்தியை எப்படியாவது பிரதானப்படுத்த வேண்டும் என்று முயல்கையில் தேசியமொழி என்ற பாதை மூடப் பட்டதால், அலுவல்மொழி என்ற புதியபாதையில் பிற மாநிலங்களுக்குள்ளும் இந்தியைக் கொண்டு செல்ல மத்திய அரசு முடிவெடுத்தது.

இந்தி பேசாத மாநிலங்கள் அனைத்தும் ஆங்கிலத்தை உலகத் தொடர்பு மொழியாகப் பயன்படுத்துவதோடு, ஒட்டுமொத்த இந்தியாவின் அலுவல் மொழியாகவும் பயன்படுத்துவதையே விரும்புகின்றன. மத்திய அரசுக்கு அதில் உடன்பாடு இல்லாததால் இந்திக்கு எதிராக எழுந்த அத்தனை எதிர்ப்புகளையும் மீறி, பெரும்பான்மையான மக்கள் பேசும் இந்தியை இந்தியாவின் அலுவல் மொழியாக்கி 1963இல் அலுவல்மொழிகள் சட்டம் இயற்றியது. இந்த அலுவல் மொழிச்சட்டத்தை அடிப்படையாகக் கொண்டு மத்திய அரசு இந்திக்கு ஆதரவாகவும், பிராந்திய மொழிகளுக்கு எதிராகவும் தொடர்ந்து பல்வேறு திட்டங்களையும் அரசாணைகளையும் பிறப்பித்துக் கொண்டிருக்கிறது. அதை இந்தி பேசாத மாநிலங்கள் தங்கள் தாய்மொழியின் கழுத்தை நெரிக்கும் செயல் என்றும் இந்தித்திணிப்பு என்றும் அவ்வப்போது எதிர்க்கின்றன.

அண்ணா முதல்வராக இருந்த போது (23-01-1968) இல் மிக முக்கியமான ஒரு தீர்மானத்தைத் தமிழக சட்டமன்றத்தில் நிறைவேற்றினார். “தமிழகத்தில் தமிழ் பயிற்சி மொழியாகவும், பாடமொழியாகவும் எல்லாக் கல்லூரிகளிலும், நிர்வாக மொழியாகப் பல்வேறு துறைகளிலும் ஐந்தாண்டு காலத்துக்குள் நடைமுறைக்கு வருவதற்கான துரிதமான நடவடிக்கையை மேற்கொள்வது என்று இம்மன்றம் தீர்மானிக்கிறது”. அண்ணாவின் தமிழுக்கு ஆதரவான இந்தத் தீர்மானமும் (23-01-1968), இதற்கு முன்மாதிரியாக 1949ஆம் ஆண்டு, மத்தியில் நிலவிய தேசியமொழிப் பிரச்சினைக்கு கே.எம். முன்ஷி, கோபாலசாமி ஐயங்கார் ஆகியோரைக் கொண்டு உருவாக்கி மத்திய அரசு இந்திக்கு ஆதரவாகக் கொண்டுவந்த தீர்மானமும்- “தேசிய மொழி என்பதே வரையறுக்கப்படவில்லை. அதற்குப் பதிலாக ஒன்றியத்தின் அலுவலக மொழிகள் மட்டுமே வரையறுக்கப்பட்டன. தேவநாகரி எழுத்துருவில் அமைந்த இந்தி இந்திய ஒன்றியத்தின் அலுவலக மொழியாகத் தேர்வு செய்யப்பட்டது. பதினைந்து ஆண்டுகளுக்கு ஆங்கிலம் அனைத்து அலுவலக நடவடிக்கைகளிலும் பயன்படுத்தப்படும் (உட்பிரிவு 343). ஐந்து ஆண்டுகள் கழித்து இந்தியை வளர்க்கவும் ஆங்கிலத்தைப் படிப்படியாக விலக்கவும் வழிவகை காண ஒரு மொழி ஆணையம் ஏற்படுத்தப்படும்” (உட்பிரிவு 344) - அடிப்படையில், அடிமை மனநிலையில் ஆதிக்க மொழியை எதிர்ப்பது மட்டுமல்ல, மொழிப் பரவலாக்கத்தையும் முக்கியமாகக் கருதின. மத்திய அரசின் சமூக வலைத்தளத்தில் பயன்பாட்டு மொழி சார்ந்த தற்போதைய சுற்றறிக்கையும் அவ்வகையதே.

பிற மொழியால் தம் தாய் மொழி அழிந்துவிடக்கூடாது என்னும் பேரச்சத்தாலும், மொழிப்பரவலாக்க முயற்சியாகவும் பாராளுமன்றத்திலும், மாநில சட்டசபைகளிலும் பல்வேறு தீர்மானங்களும், சட்டங்களும் கொண்டுவரப்பட்டன. அவற்றை மத்திய மாநில அரசுகள் செயல்படுத்திய முறையைப் பார்த்தோமானால் மத்திய அரசு இந்தி மொழிச் செயலாக்கத்தில் உறுதியுடன் செயல்பட்டு வெற்றி பெற்றிருப்பதற்கும், மாநிலங்களின் மீது ஆதிக்கம் செலுத்திக் கொண்டிருப்பதற்கும் பின்வரும் களங்கள் தக்கச் சான்றுகளாக அமைகின்றன.

களம் - 1

மத்திய அரசு இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும் தொடங்கியிருக்கும் மத்தியப் பல்கலைக்கழகங்கள் அனைத்திலும் இந்தித்துறை கட்டாயமாக்கப்பட்டிருக்கிறது. ஆங்கிலம், ஜெர்மன், பிரெஞ்சு போன்ற வெளிநாட்டு மொழிகளுக்குக் கிடைத்த இடம்கூடப் பிற இந்திய மொழிகளுக்கு இல்லை. அந்தந்தப் பிராந்தியங்களில் உள்ள மத்தியப் பல்கலைக்கழகங்களில் மட்டுமே அந்தந்தப் மாநில மொழிகளுக்கு இடம் அளித்துள்ளது. மத்தியப் பல்கலைக்கழகங்களில் இந்தித்துறையை வைப்பதன் அடிப்படை நோக்கம் இந்திமொழி கற்றோருக்கு வேலைவாய்ப்பைப் பெருக்குதல்.
மத்தியப் பல்கலைக்கழகங்களின் இணைய தளம் ஆங்கிலத்தில் மட்டுமன்றி இந்தியிலும் உண்டு. மாநில மொழிகளில் கிடையாது. தமிழ்நாட்டைச் சார்ந்த மாணவர் திருவாரூரில் உள்ள மத்தியப் பல்கலைக்கழக இணையத்தளத்தில் ஆங்கிலம் அல்லது இந்தி மூலம் தான் தகவல்களைத் தேட முடியும். தமிழுக்கு அங்கே இடமில்லை. இந்தியைத் தாய்மொழியாகக் கொள்ளாத, இந்தி பேசும் மாநிலத்தைச் சாராத இந்தியர் அனைவரது நிலையும் இதுதான். ஆனால், இந்தியைத் தாய்மொழியாகக் கொண்ட ஒருவர் இந்தியாவில் உள்ள அனைத்து மத்தியப் பல்கலைக்கழகங்களின் இணையத்தளங்களிலும் தனக்குத் தேவையான தகவல்களைத் தன் தாய்மொழியான இந்தியிலேயே பெறமுடியும். இந்த நிலை மத்தியப்பல்கலைக் கழகங்களில் மட்டுமல்லை, ஹிநிசி, ழிசிணிஸிஜி, ழிஙிஜி, சாகித்ய அகாடமி போன்ற கல்வி, மருத்துவம், சுகாதாரம் முதலிய துறை சார்ந்த மத்திய அரசு நிறுவனங்கள் அனைத்திலும் தொடர்கிறது. அதுமட்டுமின்றி மத்திய அரசு நிறுவனங்கள் அனைத்தின் பெயரும் இந்தியில்தான் முதலில் இருக்கின்றன. ஆங்கிலம் அடுத்தபடிதான். இந்நிறுவனங்கள் வெளியிடும் அறிவிப்புகள், அறிக்கைகள், விண்ணப்பங்கள் முதலிய அனைத்தும் ஆங்கிலத்தோடு இந்தியிலும் உண்டு. வேறொரு இந்திய மொழியில் கிடையாது.

தமிழ்நாட்டில் உள்ள மாநிலப் பல்கலைக்கழகங்கள், கல்லூரிகள், அரசு, தனியார் நிறுவனங்களின் இணையத்தளங்கள் தமிழிலும் இருக்கின்றனவா? தமிழ் பல்கலைக்கழகத்தைத் தவிர, தமிழ் நாட்டின் தாய்ப்பல்கலைக்கழகமான சென்னைப்பல்கலைக்கழகம் உள்பட எந்தப் பல்கலை இணையத்தளத்திலும் தமிழ் இல்லை. விண்ணப்பங்களும், அறிவிப்புகளும் தமிழில் இல்லை. ஆனால், பனராஸ் இந்து பல்கலைக்கழகம் போன்ற வட இந்திய மாநிலப் பல்கலைக்கழகங்கள் தன் இணையத்தளத்தை இந்தியிலும் வைத்திருக்கின்றன.

களம் - 2

தமிழ்நாட்டில் உள்ள பல தனியார் கலைக் கல்லூரிகளில் தமிழ்த்துறையே கிடையாது. மருத்துவம், பொறியியல் போன்ற பாடங்களை யாரும் தமிழில் பயிற்றுவிக்கவில்லை. தனியார் கல்லூரிகள் பிறதுறை ஆசிரியருக்குக் கொடுக்கும் ஊதியத்தைவிடத் தமிழாசிரியருக்குத் சொற்பச் சம்பளமே கொடுக்கின்றன. தமிழராய்ப் பிறந்த எவரும் தமிழைச் சொல்லிக் கொடுக்கலாம் என்ற நிலை நம் கல்வி நிறுவனங்களில் சாதாரணம். தமிழ் எளிதானது, தமிழில் ஒன்றுமில்லை என்பது தமிழ் கற்பித்தல் பற்றிய தமிழர்களின் பொதுப்புத்தி. தாய்மொழியில் பேசினால் அபராதம் விதிக்கும் பள்ளிக்கூடங்கள் தமிழ்நாட்டில் தான் அதிகம்.

களம் - 3

மத்தியப் பொதுத்துறை நிறுவனங்களான இரயில்வே, தபால், வங்கி முதலிய பல்வேறு நிறுவனங்களில் அலுவல் மொழியாக இந்தி இந்தியா முழுமையும் பரவியிருக்கிறது. வட இந்தியாவிலிருந்து தமிழகத்திற்கு வரும் ஓர் இந்திக்காரருக்கு வாரங்கல், சென்னை, நாகர்கோவில் என எந்த இரயில்வே சந்திப்பாக இருந்தாலும் அங்கே வந்து செல்லும் இரயில்கள் பற்றிய அனைத்துத் தகவல்களும் அவரது தாய்மொழியான இந்தியிலேயே எழுத்து வடிவிலும், ஒலி வடிவிலும் கிடைக்கிறது. ஆனால் தலைநகர் தில்லிக்குச் செல்லும் ஒரு தமிழருக்குத் தில்லி இரயில்வே சந்திப்பிற்கு வந்து செல்லும் இரயில்கள் பற்றிய தகவல்கள் அங்கே தமிழில் கிடைக்கிறதா? இருவரும் இந்தியர்கள்தான்.

களம் - 4

மத்திய அரசின் வேலைவாய்ப்புச் செய்திகள் ணினீஜீறீஷீஹ்னீமீஸீt ழிமீஷ்s (வார இதழ்) இந்தி, உருது, ஆங்கிலம் மூன்றில் மட்டுமே வருகின்றது. பிற பிராந்திய மொழிகளில் இல்லை.

களம் - 5

தமிழ் நாட்டில் இருக்கும் நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனம், வங்கிகள், தொழில் நிறுவனங்கள் போன்ற பல்வேறு மத்திய அரசு நிறுவனங்களில் மொழிபெயர்ப்பாளர் பணி இருக்கிறது. அவை இந்தியும் ஆங்கிலமும் தெரிந்தவர்களுக்கு மட்டுமே கிடைக்கும். மத்திய அரசின் பல்வேறு போட்டித்தேர்வுகள் அனைத்தும் இந்தியிலும் ஆங்கிலத்திலும் மட்டுமே இருப்பது நாடறிந்தது.

மத்திய அரசின் நடவடிக்கைகள் அனைத்தும் இந்தியை அலுவல் மொழி என்ற பெயரில் ஆட்சி மொழியாக்குவதேயாகும். மேற்கண்ட களங்களில் இந்தி பெற்றுள்ள இடம் ஐரோப்பிய நாடுகளில் ஆட்சிமொழிகள் பெற்றுள்ள இடத்திற்குச் சமமானது. மத்திய அரசு இந்தியைத் தவிர பிற இந்திய மொழிகளை மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் அணுகுவது ஊரறிந்த ரகசியம். சமஸ்கிருதத்திற்கும் இந்திக்கும் ஒதுக்கும் நிதியில் 10 சதவீதம்கூட பிற இந்திய மொழிகளின் வளர்ச்சிக்கு மத்திய அரசு ஒதுக்கியதில்லை.
ஆங்கிலேயர் ஆட்சியில் ஆங்கிலம் ஆட்சி மொழியாக இருந்தாலும் ஒட்டுமொத்த இந்திய மொழிகளைப் பற்றிய புரிதலும், அக்கறையும் கொண்டவர்களாக ஆங்கிலேயர்கள் இருந்தார்கள். மாக்ஸ் முல்லர், எல்லீஸ், ராபர்ட் கால்டுவெல் போன்ற மிஷனரிகள் 18-19ஆம் நூற்றாண்டுகளிலேயே இந்திய மொழிகளின் மீதிருந்த தனிப்பட்ட ஆர்வத்தால் அவற்றை ஆராய்ந்து இந்தியாவில் உள்ள மொழிக்குடும்பங்களையும் அவற்றின் இயல்புகளையும் வேறுபாடுகளையும் உலகிற்கு உணர்த்தினர். இந்திய மொழிகள் பற்றிய அவர்களுக்கு இருந்த அறிவிலும் அக்கறையிலும் ஒரு சதவீதம்கூட இன்றைய ஆட்சியாளர்களுக்கு இல்லை என்பதற்கு மிகச்சிறந்த உதாரணம், தமிழகத்தில் 2014 ஜூனில் எழுந்த இந்தி எதிர்ப்பிற்கு, மத்தியில் ஆளும் பாரதிய ஜனதாவின் மூத்த தலைவர் முக்தர் அப்பாஸ் நக்வி ஆற்றிய எதிர்வினை. இந்தி என்பது தமிழ், தெலுங்கு, மலையாளம், குஜராத்தி, வங்காளம், அஸ்ஸாமி, உருது முதலிய பிராந்திய மொழிகளின் கலவைதான் என்கிறார் அவர். என்னவொரு அறியாமை.

ஆனாலும் மத்திய அரசு இந்தியர் அனைவருக்குமான பொது மொழியைக் கட்டமைப்பதில் தொடர்ந்து தோல்வியைத்தான் தழுவியிருக்கின்றது. அதற்குக் காரணம் பொதுமொழிக் கொள்கையில் அது கடைப்பிடிக்கும் ஒரு தலைபட்சமும் இந்திய மொழிகள் பற்றிய அறியாமையும். மொழிகளின் தோட்டமாக விளங்கும் இந்தியாவில் தனியொருமொழியை தேசியமொழி எனப் பிரகடனப்படுத்த முடியாது என்னும் யதார்த்த உண்மையை இந்திய அரசு 1949இல் தான் உணர்ந்தது. அதே போன்று 22 மாநில மொழிகள் வழங்கும் நாட்டிற்கு அலுவல் மொழியென்று தனியொரு மொழியைத் தீர்மானித்திருப்பது பிற பிராந்தியங்களின் உணர்வுகளையும் உரிமைகளையும் மறுப்பதன் அடையாளம். ஐரோப்பாவிலும் ஆசியாவிலும் உள்ள பல வளர்ந்த நாடுகள் ரயில் பயணச்சீட்டில்கூட ஐந்து முதல் ஆறு மொழிகளில் தகவல் அளிக்கின்றன. அங்கு அரசு நிறுவனங்களின் இணையத்தளங்களைத் தன் நாட்டு மக்களிடம் புழங்கும் பல்வேறு மொழிகளில் கட்டமைக்கின்றன. இந்திய மாநிலங்களில் தாய்மொழி கோஷத்தால் வளர்ந்த அரசியல் தலைவர்கள் தம் மொழியை வளர்ப்பதில் ஆக்கப்பூர்வமான செயல்பாடுகளை முன்னெடுக்க வேண்டும். மாநில மொழிகள் அனைத்தையும் அங்கீகரிக்கும் வகையில் மத்திய அரசை நெறிப்படுத்த வேண்டிய பொறுப்பு மாநிலக் கட்சிகளுக்கு உண்டு. இந்தியாவின் பலதரப்பட்ட தாய்மொழிகளின் உரிமைகளை நிலைநாட்ட இன்றைய நவீனத் தொழில் நுட்பம் தயாராகவே இருக்கிறது.

த. சுந்தரராஜ்

Monday, August 18, 2014

தமிழ்வழிக் கல்வியை சாத்தியமாக்க வழி என்ன?

இன்றைய மாணவர்களால் முறையாகத் தமிழில் பேச முடியவில்லை; பிழையின்றி எழுதத் தெரியவில்லை. ஊடகங்கள் பெரும்பாலும் ஆங்கிலம் கலந்த கலவைத் தமிழையே பயன்படுத்துகின்றன என, கண்டனக்குரல் ஒலிப்பதைக் காண முடிகிறது. இத்தகைய குறைகளை மிகைப்படுத்துவதைத் தவிர்த்து, இந்நிலையை மாற்றியமைக்க தமிழ் கல்வியாளர்கள், ஆக்கபூர்மான பணியில் ஈடுபட வேண்டும்.

தமிழ் வழியாகக் கல்வி பயின்றால், பிற மாநிலங்களிலும் பிற நாடுகளிலும் பணிபுரிய முடியாது என்னும் புனைந்துரையையும், தமிழில் இளங்கலை, முதுகலை கற்றவர்களால் ஆசிரியப் பணியினை மட்டுமே மேற்கொள்ள முடியும் என்னும் பரப்புரையையும் பொய்யுரையாக்க வேண்டியது, தமிழ்க் கல்வியாளர்களின் கட்டாயக் கடமை. தாய்மொழிவழிக் கல்வியின் உண்மை நிலையை உணர்ந்து கொள்ளாமையால், ஆங்கிலவழிக் கல்வியின் மீது பெரிதும் நாட்டம் கொண்டுள்ளோம். நம் கல்வித் திட்டத்தில் மொழிக்கல்விக்கு முதன்மை இடம் அளிக்காததால், நாட்டின் வளர்ச்சி தேக்க நிலையில் இருக்கிறது. பல ஆண்டுகள் தமிழைக் கற்றாலும், மாணவர்கள் படித்தவற்றின் உட்பொருளை உணர முடியாமலும், புதியன படைக்கும் திறன் இல்லாமலும், கருத்துக்களை வெளியிடும் திறன் இல்லாமலும் இருக்கின்றனர். இந்நிலையில், தமிழ்வழியாகக் கற்பிக்கப்படும் பிறபாடங்களின் நுண்பொருளை மாணவர்களால் எவ்வாறு உணர முடியும்?
மொழிக்கல்வியில் நம் பாடத்திட்டத்தில் முதன்மை இடம் பெறுவது இலக்கணக் கல்வி. இலக்கணம் என்பது, ஒரு குறிப்பிட்ட காலத்தில் பயன்படுத்தப் பெற்ற மொழியின் அமைப்பை விவரிக்கக் கூடியது என்பதால், அது காலந்தோறும் மாறிக் கொண்டே வருகிறது.

மொழியலகுகளில் ஏற்பட்டுள்ள முறையான மாற்றங்களை அறிஞர்கள் ஏற்றுக் கொள்ளாமையால், இன்றைய மாணவர்களுக்கு பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன் பேசப்பட்ட மொழியின் அமைப்பை விவரிக்கும் இலக்கணத்தைக் கற்பிக்கும் நிலை காணப்படுகிறது. இதனால் மாணவர்களுக்கு, இன்றைய பயன்பாட்டுத் தமிழில் பேசவும், எழுதவும் ஆற்றல் கிடைக்காமல் போய்விடுகிறது. மொழி கற்பித்தலுக்கும், இலக்கியம் கற்பித்தலுக்கும் இடையேயுள்ள வேறுபாடு கூட, கல்வியாளர்கள் மத்தியில் வரையறை செய்யப் பெறவில்லை. இலக்கியக் கல்வியையே மொழிக்கல்வியாகக் கருதும் போக்கு, கட்டாயம் மாற்றம் பெற வேண்டும். மொழிக் கல்வி பற்றிய தவறான எண்ணம், பாடத்திட்டம், கற்பித்தல் ஆகியவற்றில் காணப்பெறும் நிறைவின்மை காரணமாக, மொழிக்கல்வி மிகவும் பின்தங்கியுள்ளது. மாணவர்களிடம் மொழிக்கல்வியில் பெரிதும் ஆர்வம் குன்றியிருப்பதற்குப் பாடத்திட்டமே அடிப்படைக் காரணமாக அமைகிறது. நம் பாடத்திட்டம் மறுசீரமைப்பு செய்யப்பட்டுள்ளதே அன்றி, பெரிதும் மாற்றியமைக்கப் பெறவில்லை. இது வாழ்க்கைக்குத் தொடர்பின்றி, ஆசிரியர்களை மையமாகக் கொண்டே அமைந்துள்ளது. இது, மொழித்திறன்களை வளர்ப்பதைக் காட்டிலும், மொழி வரலாற்றைத் திணிக்கும் வகையில் தான் அமைந்துள்ளது.

மருத்துவம், தொழில் நுட்பவியல் போன்வற்றைப் பயிலவிருக்கும் மாணவர்களுக்கு மேனிலை வகுப்புகள் வரை மட்டுமே மொழிக்கல்வி பெற வாய்ப்புள்ளதால், பள்ளியிலேயே அனைத்து மொழித்திறன்களையும் தெரிந்து கொள்ளும் வகையில் பாடத்திட்டம் அமைய வேண்டும். இளங்கலை, முதுகலைத் தமிழ் பயிலும் மாணவர்களுக்கு வேலை வாய்ப்பைத் தரும் மொழிபெயர்ப்பு, மொழி கற்பித்தல், கணினி மொழியியல், மானுடவியல், மொழி அறிவியல், பண்பாட்டியல் போன்ற பாடங்களையும் அறிமுகம் செய்து, அனைத்துத் துறைகளிலும் பணிபுரியக் கூடிய வகையில் பாடத்திட்டம் அமைய வேண்டும். மாணவர்களுக்குத் தன்னம்பிக்கையை உருவாக்கும் ஆங்கில மொழிக் கருத்துப் பரிமாற்றக் கல்வியும், கணினிப் பயன்பாட்டுக் கல்வியும் பாடத்திட்டத்தில் கட்டாயம் இடம் பெற வேண்டும். ஆங்கிலக் கருத்துப் பரிமாற்றத்திறன் பெற்றால் தான், நம் இலக்கண, இலக்கியக் கோட்பாடுகளை உலகறியச் செய்தல் இயலும்.

உலகின் முதல் மொழி அறிவியல் பேராசான் என்று கருதப்படும் தொல்காப்பியரின் மொழி விளக்க மரபும், இலக்கணக் கோட்பாடும் மேலை நாடுகளைச் சென்றடையவில்லை என்பது வருந்தற்குரியது.கல்வி என்பது வாழ்க்கையை மேம்படுத்துவதற்காக; வாழ்க்கையைச் சீர்குலைத்துப் பொருள் ஈட்டுவதையே குறிக்கோளாகக் கொண்டது அல்ல கல்வி என்பதை தெரிந்து கொள்ளும் வகையில், பாடத்திட்டமும், பாடங்களும் அமைய வேண்டும். கற்ற கல்வியை மதிப்பீடு செய்வதே, தேர்வின் நோக்கம். கற்ற பாடம் முழுவதையும் மதிப்பீடு செய்யாமல், மனப்பாட ஆற்றலின் அடிப்படையில் நடத்தப்பெறும் நம் தேர்வுமுறை, மாணவர்களின் மொழித்திறனில் குறைபாட்டை உருவாக்கி, அவர்களைக் காயப்படுத்துகிறது. 1330 குறளை ஒப்புவிக்கும் மாணவனால், புதிதாக ஒரு திருக்குறளை உருவாக்க முடியவில்லை. மாணவர்களால் தமிழ் ஒலிகளை முறையாக ஒலிக்கத் தெரியவில்லை என்று கூறுவதைக் காட்டிலும், இவர்களுக்குத் தொடக்க நிலையில் முறையான ஒலிப்புப் பயிற்சி வழங்குவதே ஏற்புடையது.

இத்தகைய பயிற்சி அளிக்கும் அனுபவம் ஆசிரியர்களிடம் இல்லை. தொடக்க நிலையில் மொழி ஆசிரியர்களால் பள்ளியில் மொழிக் கல்வி கற்பிக்கப்படுவதில்லை என்பதும் உண்மை. மொழிக்கல்வியின் குறைபாட்டிற்கு மக்களின் மனநிலை அடிப்படைக் காரணமாக அமைந்துள்ளது. அன்று வடமொழிக்கு, மொழி முதன்மை கொடுத்தோம். இன்று ஆங்கிலத்திற்குக் கொடுக்கிறோம். ஆங்கிலம் பேசுகிறவர்களை அறிவாளிகளாகக் கருதும் நாடுகளில் ஒன்றான நம் நாட்டில், ஆங்கிலேயன் நம்மிடமிருந்து கடன் பெற்று மாற்றியமைத்த சொற்களை மீண்டும் அவனிடமிருந்து கடன் பெற்றுப் பயன்படுத்துவதைப் பெருமையாகக் கருதுகிறோம். தமிழ் மொழியமைப்பில் காணப்படும் சீர்மையின்மையைக் களைந்து, கணினிப் பயன்பாடு, மின்னணுவியல் உட்பட அனைத்துத் துறைகளிலும் கருத்துப் பரிமாற்றத்திற்குத் தேவையான அலகுகளை, தமிழில் தமிழ்க் கல்வியாளர்கள் உருவாக்க வேண்டும். இந்நிலையில் தமிழியற்கல்வி புதிய வரலாறு படைக்கும்.

- பேராசிரியர் ஏ. ஆதித்தன்
-மதுரை காமராசர் பல்கலைக்கழகம்