Monday, August 11, 2014

விடுகதை 1

பாலாற்றின் நடுவே கறுப்பு மீன் தெரியுது அது என்ன? கண்கள்

அள்ள முடியும், ஆனால் கிள்ள முடியாது அது என்ன? நீர்

வெட்டிக்கொள்வான் ஆனாலும் ஒட்டிக்கொள்வான் அவன் யார்? கத்தரிக்கோல்

படுத்துத் தூங்கினால் கண்முன் ஆடும், அடுத்து விழித்தால் மறைந்தே ஓடும் அது என்ன? கனவு

இலையுண்டு கிளையில்லை,பூ உண்டு மணமில்லை,காய் உண்டு விதையில்லை,பட்டை உண்டு கட்டை இல்லை,கன்று உண்டு பசு இல்லை அது என்ன? வாழை

அதட்டுவான், அலறுவான் ஆனால் கோட்டையை விட்டு வரமாட்டான் அவன் யார்? நாக்கு

கசக்கிப் பிழிந்தாலும் கடைசிவரை இனிப்பான். அவன் யார்? கரும்பு

வாயிலே தோன்றி வாயிலே மறையும் பூ அது என்ன? சிரிப்பு

எட்டுக்கால் ஊன்றி இருகால் படமெடுக்க வட்டக் குடைபிடித்து வாறாராம் வன்னியப்பு அது என்ன? நண்டு

ஏரியில் இல்லாத நீர்,தாகத்திற்கு உதவாத நீர், தண்ணீர் அல்ல அது என்ன? கண்ணீர்

கண்ணீர் விட்டு வெளிச்சம் தருவாள் அவள் யார்? மெழுகுதிரி

ஊரெல்லாம் சுத்துவான், ஆனால் வீட்டிற்குள் வரமாட்டான் அவன் யார்? செருப்பு

பற்கள் இருக்கும் கடிக்கமாட்டான் அவன் யார்? சீப்பு

தட்டச் சீறும் அது என்ன? தீக்குச்சி

காற்றைக் குடித்து காற்றில் பறப்பான், அவன் யார்? பலூன்

வீட்டிலிருப்பான் காவலாளி, வெளியில் சுற்றுவான் அவன் கூட்டாளி அவர்கள் யார்? பூட்டும் சாவியும்

எத்தனை தரம் சுற்றினாலும் தலை சுற்றாது, அது என்ன ? மின்விசிறி

அள்ள அள்ளக் குறையாது ஆனால் குடிக்க உதவாது அது என்ன ? கடல்நீர்

மீன் பிடிக்கத் தெரியாதாம் ஆனால் வலை பின்னுவானாம் அவன் யார் ? சிலந்தி

ஆனை விரும்பும், சேனை விரும்பும், அடித்தால் வலிக்கும், கடித்தால் சுவைக்கும் அது என்ன ? கரும்பு

பட்டுப்பை நிறைய பவுண் காசு அது என்ன ? மிளகாய்

பூக்கும், காய்க்கும், வெடிக்கும். ஆனால் பழுக்க மட்டும் செய்யாது. அது என்ன? இலவம்பஞ்சு

ஆடி ஆடி நடப்பான், அரங்கதிர வைப்பான். அவன் யார்? யானை

"உயிர் இல்லாத நீதிபதியிடம் ஒழுங்கான நியாயம்" அது என்ன? தராசு

"ஆயிரம் பேர் அணி வகுத்தாலும் ஆரவாரம் இராது" அவர்கள் யார்? எறும்புக் கூட்டம்
'மதிப்பெண்களை விட, மனிதப் பண்புகளே முக்கியம்'

பிரிட்டிஷ் ஆட்சிக்கு பிறகு நமது இந்திய கல்வி முறையில் பெரும் மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன. காலங்காலமாக நம் நாட்டில் கடைபிடிக்கப்பட்ட மனிதப் பண்புகளுக்கு முக்கியத்துவம் அளித்த கல்விமுறையை பிரிட்டிஷார் ஆங்கீகரிக்கவில்லை. மாறாக, அவர்களது கல்வி முறையை இங்கே புகுத்தினர். மேற்கத்திய கல்வி முறை, புத்தகத்திற்கு முக்கியத்துவம் அளிக்கிறது. இன்றைய கல்விமுறையால் மருத்துவர், வழக்கறிஞர், பொறியாளர், தொழிலதிபர் போன்ற படித்தவர்களுக்கு, மனிதருக்குள்ள பண்புகளையும், ஆற்றலையும் சரியாக புரியவைக்க முடியவில்லை. அதனால் தான், படித்த அவர்களால்கூட சமுதாயத்திற்கு எதிரான செயல்களில் ஈடுபடமுடிகிறது. இவ்வாறு அடிப்படை மனிதப் பண்பையும், ஆற்றலையும் மறந்து செயல்படுவதுதான் சரியான கல்வி முறையா?

எது சரியான கல்வி?

'அனைத்து அறிவும், புலமையும் ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் இயற்கையாகவே புதைந்துள்ளது' என்று ரவீந்திரநாத் தாகூர் கூறுகிறார். மனிதனுக்குள்ள ஆற்றலை வெளிக்கொணர்வது இந்திய கல்வி முறையாக இருந்தது. ஆனால், வெளியில் இருப்பவற்றை மனித மனதிற்குள் ஏற்றுவதுதான் பிரிட்டிஷ் கல்வி முறை. அது ஊக்கம் அளிக்கும் கல்வி முறையல்ல; தகவல் அளிப்பது மட்டுமே கல்வியாக உள்ளது. இதுதான் கல்விமுறையில், மனிதனின் புரிதலைப் பற்றிய அடிப்படை வேறுபாடு. நமது பண்பாட்டின்படி, அனைத்திற்கும் தெய்வீகத்தன்மை உண்டு. ஆன்மிகம் எந்த ஒரு தனிப்பட்ட மதம் அல்ல; மாறாக, மனிதப் பண்புகள். உடல்ரீதியாக, அறிவு ரீதியாக, ஆன்மிக ரீதியாக ஒவ்வொருவரும் சிறந்தவர்களே என்பதை புரிய வைத்தது முந்தைய இந்திய கல்வி முறை.

உண்மையை சரியாக புரிந்துகொள்வதும், எந்த செயலையும் தெளிவாக செய்வதும் தான் ஆன்மிக ரீதியிலான பரிமாண வளர்ச்சி. உதாரணத்திற்கு, சாலையில் விபத்தில் ஒருவர் காயமுற்று உயிருக்கு போராடிக்கொண்டிருப்பதை பார்க்கிறோம். அப்போது, அவரைக் காப்பாற்ற வேண்டும் என்று உள்ளுணர்வு சொல்லும்; ஆனாலும் 'அவருக்கு உதவும்பட்சத்தில், பல்வேறு பிரச்னைகளை சந்திக்க வேண்டியிருக்கும்' என்று மூளை அந்த நற்செயலை தடுத்துவிடுகிறது. அவசர நேரத்தில் உதவி செய்யும் அடிப்படை மனிதப்பண்பைக்கூட இன்றைய அறியாமைக் கல்வியால் இழந்துவிட்டோம் அல்லவா?

அறிவு ரீதியாகவும், உடல் ரீதியாகவும் வளர்ச்சியடைந்து, ஆன்மிக ரீதியாக வளர்ச்சி அடையாததும் தவறு. உடல் ரீதியாகவும், ஆன்மிக ரீதியாக வளர்ச்சியடைந்து, அறிவு ரீதியாக வளர்ச்சி அடையாததும் தவறு. எனவேதான், இன்றைய சூழலில் மனிதப் பண்புகளுக்கும் முக்கியத்துவம் அளிக்கும் விழுக்கல்வியை பள்ளி அளவில் ஒருங்கிணைக்க வேண்டும்.
வழிபாடு, குழுவாக பாடுதல், குழுச் செயல்பாடு, கதை சொல்லுதல் உள்ளிட்ட முக்கிய அம்சங்களை கொண்டுள்ள பாடத்திட்டத்தின் மூலம் எந்த நாட்டைச் சேர்ந்த மற்றும் எந்த பிரிவைச் சேர்ந்த குழந்தையையும் மேம்பாடச் செய்ய முடியும். ஏனென்றால் அமெரிக்கா, ஜப்பான், மலேசியா என எந்த நாட்டினருக்கும் உணர்வுகள், அறிவு, நட்பு என அனைத்து மனிதப் பண்புகளும் சமமானவையே.

இந்த உலகத்தில் நிலவும் அனைத்து பிரச்னைகளுக்கும் முக்கிய காரணம் அன்பு குறைந்துள்ளதே. விழுக்கல்வியின் மூலம் இதை சீரமைக்க முடியும். பள்ளிகளில் வகுப்புகள் முடிந்த பிறகு வாரத்தில் ஒரு மணிநேரம் இப்பாடத்திட்டத்தை பயன்படுத்தினால்கூட போதுமானது. இதனால், மொத்த கல்வி கற்கும் சூழலையே மதிப்பு மிக்கதாக உருவாக்க முடியும்.

மனிதப் பண்புகள்:

கணிதம், அறிவியல் என எந்த பாடத்தை கற்பித்தாலும், இதர திறன் வளர்ப்பு பயிற்சி அளித்தாலும், அதனுடன் மனித நேயத்தையும் ஒருங்கிணைக்க வேண்டும். குறிப்பாக, 5 முதல் 15 வயது வரையிலான குழந்தைகளுக்கு இதைப் போதிப்பதன்மூலம், சமுதாயத்திற்கு தேவையான நற்பண்புகள் கொண்ட மனிதர்களாக மாற்ற முடியும். இன்றைய சமூகத்திற்கு அவசியம் தேவைப்படுவது மனிதநேயம். சமுதாயம் மனிதநேயத்தை என்றும் மதிக்கும்; அங்கீகரிக்கும்.

தேர்வுகளிலும் சரி, பள்ளிகளில் நடைபெறும் விளையாட்டு போட்டிகளிலும் சரி, ஒவ்வொருவரும் வெற்றி பெற வேண்டும் என்ற முனைப்புடன் செயல்படுகின்றனர். அவற்றில் முக்கியமாக கற்றுக்கொள்ள வேண்டியது வெற்றி, தோல்விகளுக்கு சமநிலையில் உள்ள சந்தோஷம் தான். ஆனால், எதிர்பார்த்த வெற்றி கிடைக்கவில்லை எனில், வாழ்க்கையையே மாய்த்துக் கொள்ளமுயலுகின்றனர். மதிப்பெண்கள் அதிக முக்கியத்துவம் பெறுகின்றன. இதுசரியான கல்வி முறையாகுமா? மனிதப் பண்புகள் தான் முக்கியமே தவிர, மதிப்பெண்கள் அல்ல.

மனிதரை விட கார், வீடு, பொன் போன்ற பொருள்களுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்படுவதற்கு, மனிதப் பண்புகள் குறித்த பாடத்திட்டம் இன்றைய கல்வி முறையில் இடம்பெறாததே முக்கிய காரணம்.

வாழ்க்கைக்கான கல்வி 'விழுக்கல்வி'

எந்த குற்றம் செய்யும் முன்பும் மனசான்று கேள்வி கேட்கும். ஆனால், மனசான்றுக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையிலான பயிற்சித்திறனோ, வல்லமையோ இல்லை என்பதே முக்கிய காரணம். முன்பு மூளையை மனிதன் ஆண்டான். தற்போது மூளை மனிதனை ஆளுகிறது. இதுதான் இன்றைய கல்வி முறை. மனிதப் பண்புகள், குடும்ப உறவுகள் அனைத்தும் மூளையின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்டுவிட்டது. தந்தை மகன் இடையில் அன்பு வெகுவாக குறைந்துவிட்டது; இருந்தாலும் வெளிக்காட்டுவதில்லை. மனித உணர்வுகள் மங்கிவிட்டன.

வாழ்க்கை என்னவென்று இன்றைய கல்வி கற்றுக்கொடுப்பதில்லை. கல்வி வணிகமாகிவிட்டது. 'புரொபஷனல்' ஆவதைவிட, முதலில் மனிதருக்குரித்தான பண்புகளை பெறுவது தானே அவசியம். மருத்துவம், சட்டம், பொறியியல் என அனைத்து துறைகளிலும் 'புரொபஷனல்'கள் நிச்சயம் தேவை. ஆனால், மனிதப் பண்புகளுடன் அவர்கள் செயல்பட வேண்டியது அவசியமல்லவா... அப்போதுதானே அவர்கள் இந்த சமுதாயத்திற்கு பயனுள்ளவர்களாக இருப்பார்கள்.

நாட்டிற்கு, நற்பண்புகள் நிறைந்த ஒரு சிறந்த குடிமகனை உருவாக்க வேண்டியதே பெற்றோர்களின் முதல் கடமையாக இருக்கவேண்டுமே தவிர, அதிகம் சம்பாதிப்பவர்களாக உருவாக்குவதாக இருக்கக்கூடாது. ஆசிரியர்களும் மாணவ, மாணவிகளுக்கு ரோல்மாடலாக செயல்பட வேண்டும். அரசாங்கத்தை மட்டுமே நம்பிக்கொண்டிருக்காமல், நாட்டில் உள்ள அனைத்து அமைப்புகளும், சிறந்த புரிதலின் அடிப்படையில் ஒருங்கிணைந்து மாணவ, மாணவிகளிடம் நற்பண்புகளை வளர்க்கும் விழுக் கல்வியை கற்பிக்க முயற்சித்தால், சமுதாயத்தில் மாற்றத்தை நிச்சயம் உருவாக்க முடியும்.

Thursday, August 7, 2014

இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு சில அறிவுரைகள்

இன்றைய சூழலில், இருசக்கர வாகனங்களை பயன்படுத்துவோர் எண்ணிக்கை அதிகரித்து விட்டது. அதே நேரத்தில், இருசக்கர வாகன பராமரிப்பிலும் கவனம் செலுத்த வேண்டும். சில அடிப்படை விதிகள்:

* இருசக்கர வாகனத்தை ஓட்டும் முறையை நன்கு அறிந்து, பின் ஓட்ட வேண்டும்.

* ஒரே பெட்ரோல் பங்க்கில் பெட்ரோல் போட வேண்டும். நல்ல பெட்ரோல் பங்க் எது என்பதை, சுய அனுபவம் மூலமோ, நண்பர்களின் ஆலோசனையின் பேரிலோ அறிந்து கொள்ளலாம்.

* வாரத்திற்கு ஒருமுறை முன்சக்கரம், பின் சக்கரத்திற்கு காற்று நிரப்புவது அவசியம்.

* 2,500 முதல், 3,000 கிலோ மீட்டருக்கு ஒரு முறை, வாகனத்தை சர்வீஸ் செய்ய வேண்டியது அவசியம். சர்வீசின் போது, பழைய ஆயிலை எடுத்துவிட்டு, புதிய ஆயிலை ஊற்றுவதும் அவசியம்.

* 15 நாட்களுக்கு ஒரு முறை வண்டியை துடைக்க வேண்டும். இதனால், வாகனத்தில் படியும், தூசு மற்றும் கரையை அகற்ற முடியும்.

* வாகனத்தை ஓட்டும் போது கிளெச்சைப் பிடித்துக் கொண்டும், பிரேக்கை அழுத்திக் கொண்டும் ஓட்டக் கூடாது. அப்படி ஓட்டினால், வாகனம் மிக விரைவில் பழுதாகிவிடும்.

* கண்டிப்பாக, ‘ஹெல்மட்’ அணிந்து வாகனம் ஓட்டுங்கள்.

* மது அருந்தி விட்டு வாகனத்தை ஒட்டாதீர்கள்.

* வாகனத்தை ஓட்ட துவங்கும் முன், ஆயில், காற்று, ஹாரன் இயக்கம், பெட்ரோல் சரியாக இருக்கிறதா என, சோதிக்க வேண்டும்.

* வாகனத்தை இயக்குவதற்கு முன், சைடு ஸ்டாண்டை, எடுத்து விட வேண்டும்.

* மொபைலில் பேசிக் கொண்டு அல்லது பாட்டுக் கேட்டுக்கொண்டு வாகனம் ஓட்ட கூடாது; பின்னால் வரும் வாகனங்கள் எழுப்பும் ஹாரன் சத்தம் கேட்காது.

* சாலையின் நடுவே வாகனம் ஓட்ட வேண்டாம்.

* வாகனத்தின் சைடு கண்ணாடியைப் பார்க்காமல், இடது, வலது புறம் திரும்பாதீர்கள்.

* பகலில், வாகனத்தின் முகப்பு விளக்கு எரியாமல் பார்த்துக் கொள்ளுங்கள்.

* வாகன நிறுவன அவசர உதவி எண்களை குறித்து வைத்திருக்கவும்

* வண்டி தொடர்பான முக்கிய ஆவணங்களைப் பிரதி எடுத்து வைத்திருக்கவும்

Monday, August 4, 2014

மியூசியம் என்றால் அருங்காட்சியகம்

"நைட் அட் த மியூசியம்" என்ற பெயரில் ஒரு ஹாலிவுட் படம் வெளிவந்து பிரபலமடைந்தது.

நாமும் நம் வாழ்க்கையில் ஏதேனும் ஒரு அருங்காட்சியகத்திற்காகவாவது சென்றிருப்போம். சிறந்த முறையில் பராமரிக்கப்பட்டு, சிறப்பான வரலாற்று அம்சங்களைக் கொண்டிருக்கும் ஒரு அருங்காட்சியத்தில் நாம் நுழையும்போது, சிலருக்கு, முந்தைய வரலாற்று காலத்தில் நுழைவது போன்று ஒரு மாயை ஏற்படலாம்.
இந்த உலகம், இதுபோன்ற பல அம்சங்களைக் கடந்து வந்ததா? நமக்கு முன் மனிதர்கள் இப்படியெல்லாம் இருந்திருக்கிறார்களா? நாம் அவர்களின் வழிதோன்றல்கள்தானான? என்றெல்லாம் நமக்கு வியப்பும், மலைப்பும், ஆச்சர்யமும் ஏற்படும்.

இத்தகைய ஒரு அனுபவத்தை வழங்கும் மியூசியத்தை பராமரிப்பவர்கள், Curators அல்லது Museologists என்று அழைக்கப்படுகின்றனர். இத்துறை மியூசியாலஜி துறை என்று அழைக்கப்படுகிறது. இத்துறையில், Museum director, Conservation specialist, Educator, Archivist, Exhibit designer போன்ற பல்வேறு பணி வாய்ப்புகள் உள்ளன. பழமையை பராமரிக்கும் செயல்பாட்டில் ஆர்வமுள்ளவர்கள், இத்துறை சார்ந்த படிப்பை தாராளமாக மேற்கொள்ளலாம்.

இத்துறை படிப்பு

மியூசியாலஜி துறையில் முதுநிலைப் படிப்பை மேற்கொள்ள, அறிவியல், வரலாறு, கலை, நுண்கலை அல்லது தொல்பொருளியல் ஆகிய பிரிவுகளில் ஏதேனுமொன்றில், குறைந்தபட்சம் இளநிலைப் படிப்பை முடித்திருக்க வேண்டும். முதுநிலைப் படிப்பையும் நிறைவு செய்திருக்கலாம்.
மேலும், ஆன்த்ரோபாலஜி, விலங்கியல், மண்ணியல், வேளாண்மை, சுற்றுச்சூழல் அறிவியல் மற்றும் மரைன் சயின்ஸ் ஆகிய பிரிவுகளில், ஏதேனும் ஒன்றில் நீங்கள் ஒரு கூடுதல் பட்டப் படிப்பை மேற்கொண்டிருந்தால், உங்களுக்கு அதிக பலன்கள் கிடைக்கும். மேலும், பாரசீகம், தமிழ், அராபிக், சமஸ்கிருதம், கிரேக்கம், லத்தீன், ஜெர்மனி, பிரெஞ்சு மற்றும் இத்தாலியன் ஆகிய முக்கிய மொழிகளில் புலமைப் பெற்றிருந்தால், உங்களின் மதிப்பே தனி.

பணி பொறுப்புகள்

ஒரு மியூசியாலஜிஸ்ட் என்பவர், பல்வேறான பொறுப்புகளை சுமக்கிறார். குறிப்பிட்ட பொருட்களை சேகரித்தல் தொடங்கி, பொதுமக்கள் தொடர்பு, மார்க்கெட்டிங், நிதி உயர்த்தும் நடவடிக்கை மற்றும் கல்விசார் செயல்பாடுகள் உள்ளிட்ட பலவித பணிகளை அவர் மேற்கொள்கிறார்.
இவைதவிர, மியூசியம் கண்காட்சி அதிகாரி பணியும், அவரின் பொறுப்புகளில் பகுதியாகவோ அல்லது முழுமையாகவோ அடங்கலாம். மேலும், பட்ஜெட் தயாரித்தல், பணியாளர்களை மேலாண்மை செய்தல், உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு பங்குதாரர்கள் மற்றும் பொறுப்பாளர்களுடன் உறவுகளை பராமரித்தல் உள்ளிட்ட பொறுப்புகளும் அடக்கம்.

இத்தொழிலில் கிடைக்கும் மகிழ்ச்சி

* புதிய பாடங்கள் மற்றும் கலைப் பொருட்களுடன் கிடைக்கும் அறிமுகம்.
* ஒரே வேலையை திரும்ப திரும்ப செய்யாமல் இருக்கும் வாய்ப்பு
* தேசிய மற்றும் சர்வதேச அளவில், இதர அருங்காட்சியகங்களுடன் இணைந்து செயல்படும் வாய்ப்பு.
சவால்கள்
* சமத்துவமற்ற சூழல் மற்றும் அனைத்து மியூசியாலஜிஸ்டுகளுக்கும், அவர்களின் திறமை மற்றும் அனுபவத்திற்கேற்ற ஊதியம் கிடைக்காமை.
* இத்துறை பற்றி அதிக மக்களுக்கு விழிப்புணர்வு இல்லை.

வேலை வாய்ப்பு

இந்தியாவில், நூற்றுக்கணக்கான மியூசியம்கள் இருக்கின்றன மற்றும் அவை ஏராளமான பட்டதாரிகளுக்கு வேலை வாய்ப்புகளையும் அளிக்கின்றன. Archaeological Survey of India(ASI) என்ற அமைப்புடன் affiliation பெற்றுள்ள கல்வி நிறுவனத்தில் ஒருவர் இத்துறை சார்ந்த படிப்பை மேற்கொள்வதற்காக சேரலாம்.

UPSC அமைப்பால் நடத்தப்படும் எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு ஆகியவற்றின் மூலம், ASI அமைப்பின் ஏதேனுமொரு உறுப்பு நிறுவனத்தில் இடம் பெறலாம்.

எதிர்கால வாய்ப்புகள்

அருங்காட்சியகம் தொடர்பான விழிப்புணர்வு அதிகரித்து வருவதால், இத்துறைக்கான எதிர்காலம் சிறப்பாக இருக்கும். இத்துறையில் தேவையான மேம்பாட்டு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டால், இத்துறை ஒரு முக்கிய வேலைவாய்ப்பு துறையாக திகழும் என்பதே இத்துறை ஆர்வலர்களின் ஏக்கம்.

மியூசியாலஜி படிப்பில் M.A. மற்றும் M.Sc., பட்டங்கள்

* M.A. படிக்க, ஒருவர், கலை மற்றும் மானுடவியல் துறையில் இளநிலைப் படிப்பை முடித்திருக்க வேண்டும்.
* M.Sc., படிப்பானது, வாழ்க்கை அறிவியல்களுக்கு மிகுந்த முக்கியத்துவம் அளிக்கிறது. எனவே, Life Sciences தொடர்புடைய ஏதேனும் ஒரு இளநிலைப் படிப்பை நிறைவு செய்திருக்க வேண்டும்.

பாடத்திட்டம்

இத்துறையின் முதுநிலைப் படிப்பு, பொதுவாக, ஒரு மியூசியத்தின் மேலாண்மை தொடர்பானது. ஒரு மியூசியத்தின் இயக்கம் தொடர்பான தியரி மற்றும் நடைமுறை அம்சங்கள் ஆகியவை, இரண்டு பிரிவுகளாக பிரிக்கப்பட்டிருக்கும்.

பாடத்திட்டத்தின் சில அம்சங்கள்

* மியூசியத்தின் வரலாறு
* கலெக்ஷன் மேலாண்மை
* ஆவணப்படுத்தல்
* பிரசன்டேஷன் அன்ட் இன்டர்பிரிடேஷன்
* மியூசியம் கட்டடக்கலை
* இந்திய வரலாறு மற்றும் தொல்லியல்
* வரலாற்று கலை
* நாட்டுப்புறக் கலைகள் மற்றும் இந்தியப் பண்பாடு
* இயற்கை வரலாற்றுப் படிமங்களை பாதுகாத்தல்
* பண்பாட்டு செல்வங்களைப் பாதுகாத்தல்

இத்துறையில் ஈடுபட விரும்பும் ஒருவர், பின்வரும் அம்சங்களில் மேலாண்மை, சேகரிப்பு மற்றும் பராமரிப்பு துறையில் நிபுணத்துவம் பெற வேண்டும். அவை,

* ஆன்த்ரோபாலஜி(மனிதனின் தோற்றம் மற்றும் அவனது சமூக வளர்ச்சி பற்றிய படிப்பு)
* ஆயுதங்கள் மற்றும் ஆயுத தளவாடங்கள்
* பண்டைய நாணயங்கள்
* கல்வெட்டுக்கள்
* நகைகள்
* கலை
* தாவரங்கள்

வருமானம்

ஆரம்ப சம்பளம் ரூ.15,000 முதல் ரூ.30,000 வரை இருக்கும்.

தேவையான திறன்கள்

மேலாண்மைத் திறன், தகவல்தொடர்பு திறன், காட்சிப்படுத்தும் திறன், அமைப்பாக்கத் திறன், விபரங்களை கவனிக்கும் திறன், பயணம் செய்வதில் ஆர்வம் மற்றும் ஒரு பட்டப் படிப்பை முடித்திருத்தல்.

எங்கே படிக்கலாம்?

தேசியளவிலான கல்வி நிறுவனங்கள்

* புதுடில்லி நேஷனல் மியூசியம்
* பரோடாவிலுள்ள மகாராஜா சயாஜிராவ் பல்கலை
* கொல்கத்தா பல்கலை
* பனாரஸ் இந்து பல்கலை
இன்டர்ன்ஷிப் பெறுவதற்கான அருங்காட்சியகங்கள்
* புதுடில்லி நேஷனல் மியூசியம்
* ஐதராபாத் சலர்ஜங் மியூசியம்
* அசிஸ் பாட் மியூசியம் - கார்கில்
* இந்தியன் மியூசியம் - கொல்கத்தா.

Wednesday, July 30, 2014

மரபணு மாற்று பயிர் ஆய்வுக்கு அஞ்சும் அமெரிக்கா, ஐரோப்பா: ஆபத்தை உணராமல் அவசரம் காட்டும் இந்தியா

மரபணு மாற்று பயிர்களுக்கு வயல்வெளி ஆய்வு நடத்துவதில், அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள், 'அடக்கி' வாசிக்கும் நிலையில், இந்தியாவில் அதற்கு அவசரம் காட்டுவது ஏன்?' என, சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். இதுகுறித்து, தமிழக சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் சிலர் கூறியதாவது:கடந்த ஆண்டு, மே மாதம், அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட கோதுமையில், மரபணு மாற்று கோதுமை கலந்திருப்பது கண்டறியப்பட்டு, அதை, ஜப்பான் திருப்பி அனுப்பியது. அமெரிக்காவில் இருந்து அதிகளவில், கோதுமை இறக்குமதி செய்யும் ஜப்பான், அதற்கான தன் ஒப்பந்தத்தையும் ரத்து செய்தது.அமெரிக்க கோதுமையை அதிகளவில் இறக்குமதி செய்யும், சீனா, பிலிப்பைன்ஸ், தென்கொரியா நாடுகளும், இதனால், கடும் அதிர்ச்சி அடைந்தன.அமெரிக்காவின், ஓரிகான் மாகாணத்தில் உள்ள, 'மான்சான்டோ' நிறுவன மரபணு மாற்று பரிசோதனை நிலத்தில் இருந்து வெளியேறி, மற்ற விவசாயிகள் விளைவித்த கோதுமையில், இக்கலப்படம் நடந்தது கண்டறியப்பட்டது.

ஐரோப்பிய துறைமுகங்களுக்கு, மரபணு மாற்று உணவு பொருட்கள் வருகிறதா என்பதை கண்காணிக்கவும், அந்நாடுகள் உத்தரவிட்டன. அமெரிக்காவில் இருந்து வரும் கோதுமை, தீவிர ஆய்விற்கு உட்படுத்திய பின்னரே அனுமதிக்கப்படும் எனவும், ஐரோப்பிய நாடுகள் தெரிவித்தன. 'கலப்படம் கண்டறியப்பட்டால், கப்பல் அப்படியே திருப்பி அனுப்பப்படும்' எனவும் எச்சரிக்கை செய்யப்பட்டது.இதனால், அமெரிக்காவிற்கு அன்னிய செலாவணி இழப்பும், விவசாயிகள், ஏற்றுமதியாளர்களுக்கு நஷ்டமும் ஏற்பட்டது. இதேபோல, 2006ல், 'பேயர்' என்ற நிறுவனம் மரபணு மாற்று நெல்லை பயன்படுத்தி, வயல்வெளி ஆய்வுக்கு உட்படுத்தியது. அதுவும், மற்ற நிலங்களுக்கு பரவி, வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டது. அதில் கலப்படம் உள்ளது, ஜப்பானில் கண்டறியப்பட்டது.

இதனால், அமெரிக்க நெல் இறக்குமதிக்கு, பல நாடுகள் தடை விதித்ததால், அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாண விவசாயிகளுக்கு, பெரிய அளவில் நஷ்டம் ஏற்பட்டது. பாதிக்கப்பட்ட அமெரிக்க விவசாயிகள், 'பேயர்' நிறுவனம் மீது, வழக்கு தொடர்ந்தனர். 75 கோடி டாலர்களை நஷ்ட ஈடாக வழங்கி, இந்த வழக்கை கோர்ட்டிற்கு வெளியே, 'பேயர்' நிறுவனம் முடித்துக் கொண்டது.மரபணு மாற்று பயிர்களில் நடந்த கலப்படம் அமெரிக்காவிற்கு மிகப்பெரிய பாடத்தை கற்று தந்துள்ளது. இது ஒருபுறம் நடக்க, 2011 டிசம்பரில், மத்திய அரசின் மரபணு மாற்று தொழிற்நுட்ப அனுமதிக் குழு, 'மான்சான்டோ-' நிறுவனம் தயாரித்த மரபணு மாற்று கோதுமைக்கு வயல்வெளி ஆய்வு நடத்த அனுமதி அளித்தது.

ஆனால், மகாராஷ்டிர மாநில அரசு அதற்கு இதுவரை அனுமதி சான்றிதழ் வழங்கவில்லை. கடந்த ஆண்டு மார்ச் மாதம், தன் மற்றொரு மரபணு மாற்று கோதுமையை, வயல்வெளி ஆய்வு செய்யவும், அந்நிறுவனம் அனுமதி கேட்டது.ஆட்சி மாறிய நிலையில், தற்போது மத்திய அரசின் மரபணு மாற்று தொழிற்நுட்ப அனுமதிக் குழு, வயல்வெளி ஆய்வு நடத்துவதற்கு அனுமதி வழங்கியுள்ளது.சோதனைகளையும், கட்டுபாடுகளையும் முறையாக வைத்துள்ள அமெரிக்காவிலேயே, மரபணு மாற்று கலப்படம் நடந்தது, அந்நாட்டிற்கு மிகப்பெரிய பொருளாதார இழப்புகளை ஏற்படுத்தியது.ஐரோப்பிய நாடுகளில், மக்களின் எதிர்ப்பு காரணமாக, மரபணு மாற்றுப்பயிர் உருவாக்கப்பட்ட ஆய்வுகூடங்களை, மரபணு மாற்று விதைகளை உருவாக்கும் நிறுவனங்கள், மூடிவிட்டன.

ஆனால், அதிநவீன தொழிற்நுட்பமும் இல்லாமல், சாதாரண முறையில், விவசாயம் நடக்கும் இந்தியாவில், மரபணு மாற்று பயிர்களை வயல்வெளி ஆய்வுசெய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது, நல்ல முடிவாக தெரியவில்லை. இவ்விஷயத்தில், பிரதமர் நரேந்திர மோடி தலையிட்டு, மரபணு மாற்று வயல்வெளி ஆய்வுக்கு தடை விதிப்பார் என, நாடு முழுவதும் உள்ள விவசாயிகள் நம்புகின்றனர். தமிழக முதல்வர் ஜெயலலிதாவும், தன் கட்சியின் தேர்தல் அறிக்கையில் தெரிவித்தபடி, மரபணு மாற்று பயிர்களுக்கான வயல்வெளி பரிசோதனைக்கு நிச்சயம் அனுமதிக்கமாட்டார் எனவும் மக்கள் எதிர்பார்க்கின்றனர்.இவ்வாறு, அவர்கள் தெரிவித்தனர்.
வேளாண் பொருளாதாரம் என்ற படிப்பை அறிவோமா?

அக்ரிகல்சுரல் எகனாமிக்ஸ் என்ற பெயரை கேட்டதும், பலருக்கும் ஒரு விஷயம் புரிந்திருக்கும். வேளாண்மை மற்றும் பொருளாதாரம் ஆகிய இரண்டு துறைகளின் அம்சங்களும் கலந்த ஒரு துறை என்பதுதான் அது.

வேளாண் வணிகத்தில் சிறப்பான முடிவுகளை மேற்கொள்வது, உற்பத்தி முறைகள் மற்றும் வேளாண் வணிகத்தில் நிலவும் சிக்கல்களை தீர்ப்பது போன்றவற்றில், பொருளாதார கோட்பாடுகளை பயன்படுத்துவதுதான் அக்ரிகல்சுரல் எகனாமிக்ஸ். இப்படிப்பு, அக்ரோனாமிக்ஸ் என்றும் அழைக்ப்படுகிறது. இது ஒரு முதுநிலைப் பட்டப் படிப்பு.

இருபதாம் நூற்றாண்டின் திருப்பத்தில், அக்ரோனாமிக்ஸ் படிப்பு பிரபலமடைந்தது. வேளாண் பொருட்களுக்கான சந்தை மதிப்பு மற்றும் தேவையை கணித்தல், பயிர்களை மேற்பார்வையிடுதல், விலைகளை நிர்ணயித்தல், கால்நடைகளின் நலனை கவனித்தல் ஆகிய பணிகளோடு,
உபகரணங்கள், ஏற்றுமதி - இறக்குமதி மற்றும் உற்பத்தி தொடர்பான புதிய முறைகள் போன்றவற்றையும் வேளாண் பொருளாதார நிபுணர் (Agricultural Economist) கவனிக்கிறார்.

தற்போதைய காலகட்டத்தில், இத்துறைக்கான வாய்ப்புகள் மிகவும் அதிகம்.
கிராமப்புற நிதி மற்றும் நிறுவனங்கள், உணவு மற்றும் ஊட்டச்சத்து பொருளாதாரம், சுற்றுச்சூழல் மற்றும் இயற்கை வள பொருளாதாரம் ஆகியவை பல்வேறு பிரிவுகளை இத்துறை உள்ளடக்கியுள்ளது. வேளாண் உற்பத்தி சார்ந்த அறிவோடு, நன்கு பயிற்சிபெற்ற மாணவர்களின் தேவை, இத்துறையில் பெரியளவில் அதிகரித்து வருகிறது. இதன்மூலம், இத்துறையில் கூடுதல் பணி வாய்ப்புகள் ஏற்படுகின்றன. வேளாண் உற்பத்தி, சந்தைப்படுத்தல், நிதி, பாதுகாப்பு உள்ளிட்ட பிரிவுகளில், பப்ளிக் சர்வீஸ் பணி வாய்ப்புகள், தேசிய, மாநில மற்றும் உள்ளூர் நிலைகளில் கிடைக்கப் பெறுகின்றன.

அக்ரிகல்சுரல் எகனாமிக்ஸ் படித்த மாணவர்கள், கமர்ஷியல் மற்றும் பண்ணை வங்கிகள் போன்ற கடன்தரும் நிறுவனங்களிலும் பணி வாய்ப்புகளைப் பெறலாம். பொருளாதார தாராளமயமாக்கல் உலகில், சர்வதேச நிறுவனங்கள் பெருகி வருவதால், சர்வதேச வேளாண்மை மற்றும் மேம்பாட்டு துறையில் கிடைக்கும் பணி வாய்ப்புகள் அதிக சம்பளம் நிறைந்தவை. எனவே, இந்த வாய்ப்புகளைப் பெறுவதற்கு மாணவர்கள் பெரிதும் விரும்புகிறார்கள்.

சில முக்கிய இந்திய கல்வி நிறுவனங்கள்
தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம் - கோயம்புத்தூர்
பிர்சா வேளாண் பல்கலை - ராஞ்சி, ஜார்க்கண்ட்
சந்திரசேகர் ஆசாத் வேளாண் மற்றும் தொழில்நுட்ப பல்கலை - கான்பூர், உத்திரப் பிரதேசம்
வேளாண்மை கல்லூரி - பீகானீர், ராஜஸ்தான்
கேரள வேளாண்மை பல்கலை - திருச்சூர்
சர்தார் வல்லபாய் பட்டேல் வேளாண்மை மற்றும் தொழில்நுட்ப பல்கலை - மீரட், உத்திரப் பிரதேசம்
வேளாண் அறிவியலுக்கான பல்கலை - பெங்களூர்
சத்ரபதி சாகுஜி மகராஜ் பல்கலை - கான்பூர், உத்திரப்பிரதேசம்
இந்திரா காந்தி வேளாண் பல்கலை - ராய்ப்பூர்
அலகாபாத் பல்கலை - அலகாபாத், உத்திரப் பிரதேசம்
இந்திய வேளாண் ஆராய்ச்சி கல்வி நிறுவனம் - டில்லி
பனாரஸ் இந்து பல்கலை - பனாரஸ்
ஆச்சார்யா என்.ஜி. ரங்கா வேளாண் பல்கலை - ஐதராபாத்.

Tuesday, July 22, 2014

இந்தியாவின் தேசிய மொழி என்ன ?

இந்த கட்டுரை ஹிந்தி மொழிக்கு எதிரானது அல்ல. நான் ஹிந்தியை வெறுப்பவனும் அல்ல. அதே சமயம் தமிழ் மொழி வெறி பிடித்தவனும் அல்ல.நாளைக்கே அஸ்ஸாமி படித்தால்தான் சோறு கிடைக்கும் என்றால் இன்றைக்கே அஸ்ஸாமி படிக்க துவங்கும் ஆசாமிதான் நான்..!!, இந்த கட்டுரையின் நோக்கமே தவறாக புரிந்து கொண்டிருக்கும் விஷயங்களை தெளிவுபடுத்துவதுதான்.

இந்தியாவின் தேசிய மொழி எது? என்ற கேள்விக்கு உடனே எல்லோரும் சொல்லும் பதில் ஹிந்தி. அதுவும் நீங்கள் ஹிந்தி பேசும் மக்களுடன் இருக்கும் போது , அவர்கள் ஹிந்தியில் பேச்சை துவங்க நீங்கள் உங்களுக்கு ஹிந்தி தெரியாது என சொல்ல " அரே..!! ஹிந்தி... ராஷ்டிர பாஷா.!! As a Indian.. you should learn our national language.. " என்ற அறிவுரை உங்களுக்கு இலவசமாக வழங்கப்படும். நானும் ரொம்ப நாட்களாக இந்த பாழாய் போன தமிழ் நாட்டு அரசியல்வாதிகள் இப்புடி செஞ்சிபுட்டான்களே என்று திட்டிக் கொண்டிருந்தேன். சமீபத்தில் Wikipedia வில் இந்தியாவை பற்றி படிக்க நேர்ந்தது. விக்கிபீடியா என்ன சொல்கிறது என்றால் இந்தியாவிற்கு தேசிய மொழி எதுவும் கிடையாது. அதாவது இந்திய அரசியல் அமைப்பு சாசனம் எந்த மொழியையும் தேசிய மொழியாக அங்கீகரிக்கவில்லை, அதனால் இந்தியாவிற்கு தேசிய மொழி என்று ஒன்று கிடையாது. அதே சமயம் ஹிந்தியும், ஆங்கிலமும் Official Language என்று வரையருக்கப்பட்டுளன. இதன் அர்த்தம் என்னவென்றால் மத்திய அரசாங்கத்திற்கும் அதன் சார்ந்த துறைகளுக்கும், மத்திய அரசால் நடத்தப்படும் நிறுவனங்களுக்கும் இந்த இரண்டு மொழிகளும் Official Language ஆகும்.

ஒவ்வொரு மாநிலத்திற்கும் Official Language தேர்வு செய்யும் அதிகாரம் அந்தந்த மாநிலங்களுக்கே கொடுக்கப்பட்டுள்ளது. அதன்படி 5 மாநிலங்களே (உத்தர பிரதேசம், மத்திய பிரதேசம் , பீகார் , டெல்லி, ராஜஸ்தான் ) ஹிந்தியை அந்த மாநில Official Language ஆக தேர்வு செய்துள்ளன. ஆக இந்த 5 மாநிலங்களை தவிர மற்ற மாநில அரசுகளுடனோ அல்லது அந்த அரசு சார்ந்த துறைகளுடனோ நடைபெறும் பரிவர்த்தனம் ஆங்கிலமோ அல்லது அந்த மாநில Official Language -லோ நடைபெற வேண்டும். உதாரணமாக மகாராஷ்டிரா அரசுடன் நடைபெறும் communication மராட்டியிலோ அல்லது ஆங்கிலத்திலோ இருக்க வேண்டும். இதன்படி பார்த்தாலும் மத்திய அரசின் Official Language இல் ஒன்றான ஹிந்தியின் மூலம் மேற்சொன்ன 5 மாநில அரசுகளுடன்தான் பரிவர்த்தனம் செய்யமுடியும். ஆனால் ஆங்கிலத்தின் மூலம் அனைத்து மாநில அரசுகளுடனும் பரிவர்த்தனம் செய்ய முடியும் என்பது உள்ளங் கை நெல்லிக்கனி போல் தெள்ளத் தெளிவாக புரிகிறது.

இதில் நீதித் துறை சற்றே வித்தியாசமானது. ஒவ்வொரு மாநிலத்தின் உயர் நீதிமன்றத்தில் எந்த மொழியில் வாதிடலாம் என்பதை முடிவு செய்யும் அதிகாரம் டெல்லி உச்ச நீதி மன்றத்திடம் கொடுக்கப்பட்டுள்ளது. அதன்படி தமிழ் நாடு உயர் நீதி மன்றம் தமிழில் வாதிட உச்ச நீதி மன்றத்திடம் அனுமதி கேட்டு அதுவும் அங்கீகரிக்கப் பட்டுள்ளதால் சென்னை உயர் நீதி மன்றத்தில் தமிழிலேயே வாதிடலாம்.

சமீபத்தில் குஜராத் மாநிலத்தில் ஒரு பிரபல கம்பனியின் பிஸ்கட் பாக்கெட்டில் விபரங்கள் அனைத்தும் ஆங்கிலத்தில் மட்டுமே அச்சடிக்கப் பட்டு உள்ளதை எதிர்த்து ஒருவர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார்.
வழக்கின் விபரம்:
 " இந்தியாவில் விற்பனை செய்யப்படும் ஒரு பொருளில் இந்தியாவின் தேசிய மொழியான ஹிந்தியில் விபரங்களை அச்சடிக்காமல் ஆங்கிலத்தில் அச்சடித்திருப்பது தண்டனைக்குரியது..!!"
வழக்கினை விசாரித்த நீதி மன்றம் கீழ் கண்ட தீர்ப்பை வழங்கியது,
 "இந்திய அரசு ஆணைப்படி எந்த ஒரு மொழியும் தேசிய மொழியாக அங்கீகரிக்கப்படவில்லை.. பொதுவாக எல்லோரும் ஹிந்தியை தேசிய மொழி என்று சொன்னாலும் சட்டப்படி அதற்கு எந்தவொரு ஆதாரமும் இல்லை.. ஹிந்தி இந்தியாவின் தேசிய மொழி அல்ல ..ஆகவே வழக்கு தள்ளுபடி செய்யபடுகிறது..".

இது என்னுடைய சொந்த புனைவு அல்ல. இதற்கான ஆதாரம் இதோ இங்கே:

Times Of India:
http://articles.timesofindia.indiatimes.com/2010-01-25/india/28148512_1_national-language-official-language-hindi

The Hindu:
http://www.thehindu.com/news/national/article94695.ece

உண்மை இப்படி இருக்க அனைத்து பள்ளிகளிலும் ஹிந்தி இந்தியாவின் தேசிய மொழி என்று தவறாக சொல்லிக் கொடுக்கப்படுகிறது. ஏன் இவ்வாறு தவறாக சொல்லித் தரப்படுகிறது? என்ற கேள்விக்குப் பதில் இல்லை.
இதே போல இந்தியாவின் தேசிய கீதம் "ஜன கன மன கதி .." நிறையபேர் ஹிந்தியில் எழுதப்பட்டது என்று நினைத்துக்கொண்டு இருக்கிறார்கள். ஆனால் இது பெங்காலி மொழியில் எழுதப்பட்டது என்பதுதான் உண்மை.
இன்னொரு கொசுறு உண்மை, அமெரிக்காவுக்கும் தேசிய மொழி இல்லை. ஏனென்றால் அமெரிக்ககா விடுதலை அடைந்த போது அப்போது இருந்த ஸ்பானிஷ் மற்றும் பிரெஞ்சு சிறுபான்மை மக்களை கருத்தில் கொண்டு
 ஆங்கிலத்தை தேசிய மொழியாக அங்கீகரிக்கவில்லை.
இனி உங்களை யாராவது இந்தியாவின் தேசிய மொழி எது? என்று கேட்டால் அதற்கு என்ன பதில் சொல்லவேண்டும் என்பது தெளிவாகியிருக்கும் என்ற எண்ணத்துடன் இந்த பதிவை முடிக்கின்றேன்.